வணக்கம் அகத்தியர் அடியவர்களே!
"கல்யாண தீர்த்தம்" (பாபநாசம்) என்கிற பெயரை கேட்கும் பொழுதே அனைவருக்கும், அங்கு உறையும் "அகத்தியப்பெருமான் லோபாமுத்திரா தாயின்" சன்னதி ஞாபகத்துக்கு வரும். அங்கு சென்று அமர்ந்து த்யானம், பூசை செய்தவர்களுக்கு அமைதி என்றால் என்ன என்று உணரமுடியும். அத்தனை அருமையான சூழலை கொண்ட இடம்.
கடந்த 10-15 வருடங்களாகவே, அடியவர்கள் மனது வருத்தப்படும் அளவுக்கான விஷயங்கள் பல அங்கு நடந்தேறியுள்ளது. அங்கு பிரதிஷ்டை செய்யப்பட லோபாமுத்திரா, அகத்தியப்பெருமான் சிலைகள் சேதமடையவோ அல்லது பெரு வெள்ளத்தினால் பெயர்த்து செல்லப்படுவது வாடிக்கையாகிவிட்டது. கடந்த ஒரு வருடத்துக்கு முன் நீர் வரத்தினால் பாதிப்பு வராமல் இருக்க, பலமான கற் சுவர்களுடன் அம்மை/அப்பனின் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
இந்த 18/12/2023 அன்று அகத்தியர் அடியவர்கள் பல இடங்களிலும் அகத்தியப்பெருமான், லோபாமுத்திரை தாய்க்கு அபிஷேக பூஜைகள் நடத்திய அன்று, அங்கு(கல்யாணதீர்த்தத்தில்) வந்த பெருவெள்ளம் அம்மை, அப்பனின் சிலைகளை கோவில் மதிற் சுவர்களை உடைத்து, பெயர்த்து எடுத்து சென்று விட்டது.
அகத்தியப்பெருமானிடம், ஏன் இப்படி என்று பலமுறை கேட்ட பொழுது, "எமக்கு அங்கு சிலை வைத்து ஆலயம் எழுப்புவதில், விருப்பமில்லை" என்று மட்டும் கூறி நிறுத்தி கொள்வார். "யார் முயற்சி செய்தாலும் ஒரு அல்லது இரு வருடங்களில், தாமிரபரணி கொண்டு போய்விடுவாள்" என்பார். அப்படித்தான் ஒவ்வொரு முறையும் நடக்கும். அடியேனுக்கு தெரிந்து, இது நான்காவது முறை இப்படி நடக்கிறது.
முன்னர் ஒருமுறை, குருநாதருக்கும், குருபத்னிக்கும் பூஜை செய்து வரலாம் என்று சென்று அபிஷேகம் எல்லாம் முடித்து அம்மாவின் கழுத்தில் பூமாலையை போட, தலை மட்டும் தனியாக ஆடி நின்றது. என்ன இது என்று பார்த்த பொழுது, அம்மாவின் சிலை கழுத்தருகே உடைக்கப்பட்டு, பின் யாரோ ஒட்டி வைத்திருந்தார்கள். ஒட்டிய பசை விட்டு கொடுத்ததினால் தலை மட்டும் ஆடியது என்று உணர்ந்த பொழுது, அடியேனுக்கு கண்ணீரே வந்துவிட்டது. "அம்மா! உனக்கே இந்த கதியா?" என மனதுள் அதிர்ந்துவிட்டேன். அத்தனை வருத்தம்.
திரும்பி வந்து நாடியில் அகத்தியப்பெருமானிடம், என்ன நடந்தது? என்ன செய்யலாம் என்று கேட்ட பொழுது, கிடைத்த விடைகள் அதிர்ச்சியை அளித்தது. அன்று அகத்தியப்பெருமானிடம் கூறினேன், இனி அடியேன் அங்கு வந்து தங்களுக்கும் தாயாருக்கும் பூசை அபிஷேகம் செய்யமாட்டேன். வேறு எங்கேனும் வந்து தங்களை தரிசிக்கிறேன், என்று விலகிவிட்டேன். அதற்குப்பின், இன்று வரை, கல்யாண தீர்த்தம் செல்வதில்லை. அவரும் அடியேனை ஏன் வருவதில்லை என்று வினவுவதில்லை. அம்மாவின் ஒடிந்த கழுத்து சில தினங்களில் காணாமல் போக, அதை ஒரு பொருட்டாகவே நினைக்காத அடியவர்கள் சிலர், கழுத்தில்லா சிலைக்கு அலங்காரம் செய்து அபிஷேக பூஜைகள் செய்த கொடுமையும் பல நாட்கள் நடந்தது. ஒரு அடியவர், அப்பொழுது எடுத்த படத்தை அனுப்பி தந்தார். அவரை "உனக்கெல்லாம் அறிவிருக்கா?" என்று திட்டி தீர்த்துவிட்டேன்.
இன்று இந்த தொகுப்பின் அவசியம் என்ன என்று நீங்கள் நினைக்கலாம். அகத்தியப்பெருமானின், உத்தரவை மதிக்காமல், யாரோ, மறுபடியும் ஒரு சிலரை ஒன்று சேர்த்து, அகத்தியர் லோபாமுத்திரை சிலையை நிறுவுகிறார்கள். உங்களில் யாருக்கேனும் அவரை தெரிந்தால், "அகத்தியப்பெருமானுக்கு, இதில் விருப்பம் இல்லை" என்பதை தெரிவித்து விடுங்கள். நீங்களும் பங்கு பெற வேண்டாம்! மேலும் மேலும் பாபத்தை, சித்தர் சாபத்தை சேர்த்துக் கொள்வதை தவிர்க்கலாம்.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha
ReplyDelete