​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Friday, 22 December 2023

சித்தன் அருள் - 1544 - லோபாமுத்திரா அம்மாவின் திரு நட்சத்திர நாள்!

















வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

தொகுப்பு 1524 ன் தொடர்ச்சியாக!

நம் லோபாமுத்திரா அம்மாவின் திருநட்சத்திர நாள், அகத்தியப்பெருமானின் உத்தரவின் பேரில், மதுரை சக்தி மாரியம்மன் கோவிலில் அமைந்துள்ள ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியப்பெருமானின் சன்னதியில் 18/12/2023 திங்கள் கிழமை அன்று மாலை 5.30 மணிக்கு அபிஷேக பூஜைகளுடன் சிறப்பாக நடந்தேறியது.

சிலநாட்களுக்கு முன் குருநாதரிடம் இந்த முறை, இருவருக்கும் உள்ள  அபிஷேக பூஜைகளை எங்கு நடத்தலாம் என்று கேட்ட பொழுது, மதுரையில் எம் கோவிலில் வந்து நடத்து என்று உத்தரவிட்டார். ஆகவே கோவில் நிர்வாகத்திடமும், மதுரையில் உள்ள அகத்தியர் இறையருள் அன்ன சேவை மன்றம் குழு நண்பர்களிடமும் பேசி அனைவரும் ஒன்று சேர்ந்து நடத்திவிடலாம் என்று தீர்மானித்தோம். ஆனால் அகத்தியப்பெருமான் சோதனைகளை வைத்துக்கொண்டு காத்திருந்தார் என்று பிறகுதான் புரிந்தது.

16/12 சனிக்கிழமை அன்று கிளம்பி மதுரை சென்று விடலாம் என்று முன்னரே தீர்மானித்திருந்தாலும், அன்று வீட்டை விட்டு கிளம்ப முடியவில்லை. சரி! 17/12 என்று மாற்றி வைத்தேன் பயணத்தை. 17/12 அன்று பூசையில் இருந்த பொழுது, "இன்று கிளம்பினால் உன்னால் போய் சேரமுடியும்!" என்றார் அகத்தியப்பெருமான். இப்படி குருநாதர் தகவல் தந்தால், நிச்சயம் ஏதோ ஒரு விஷயம் இருக்கும், எல்லாவற்றையும் சுருட்டி எடுத்துக்கொண்டு கிளம்பி விடுவோம் என்று தீர்மானித்தேன்.

அன்று தான் புயலால், மிக பலமாக மழை, எல்லா இடத்தையும் தாக்கிக் கொண்டிருந்தது. ஆறு மணிநேர யாத்திரைக்குப்பின் மதுரையை அடைந்த உடன் நன்றாக மழையில் நனைந்து (ரயிலுக்குள் அவ்வளவு மழை வெள்ளம்) வந்து சேர்ந்தேன். மழை பெய்து கொண்டே இருந்தது.

சரி! நாளை தானே அபிஷேக பூஜை! அகத்தியர் அடியவர்கள் எப்படி வந்து பூஜையில் சேர்வார்கள்? மழை மேகம் விலகுவதாக தெரியவில்லையே! குருநாதர்தான் ஏதேனும் வழி காட்டவேண்டும் என மனதுள் நினைத்துக் கொண்டேன்.

மறுநாள், திங்கட்கிழமை, மழை விடாமல் பெய்து கொண்டிருந்தது.

மதியம் 12 மணி ஆகியும் மழை நிற்காததால், அகத்தியப் பெருமானை வேண்ட, "வேண்டுதலை வை! எல்லாவற்றையும் நன்றாக நடத்தி தருகிறேன்" என்று வாக்கு வந்தது. விறு விறுவென மாடிக்கு சென்று அகத்தியப்பெருமான் திருவடியை நினைத்து, ஆகாயத்தை பார்த்தேன். நல்ல மழை மேகம்!

கைகூப்பி மனதுள் வேண்டிக்கொண்டேன். "போதும்! நீங்கள் எல்லோரும் கொண்டாடியது போதும். இனி நாங்கள் கொண்டாட வேண்டும்! விலகி செல்லுங்கள்! கலைந்து செல்லுங்கள்! " என்று வேண்டுதலை வைத்துவிட்டு கீழே வந்துவிட்டேன். 

இப்படி முன் காலங்களில் பலமுறை செய்த பொழுது, சூழ்நிலை சாதகமாக மாறுவதை கண்டு, இயற்கையை பல புண்ணிய காரியங்களுக்கும் உபயோகப்படுத்தியுள்ளேன். பின்னர் ஒரு பெரியவர் "இப்படி எல்லாம் இயற்கைக்கு எதிராக செய்யக்கூடாது! அது மிக பாபம்!" என்று திட்டியவுடன் நிறுத்திக் கொண்டுவிட்டேன். அது முதல், நடக்கிறபடி நடக்கட்டும் என்பதே அடியேன் மனநிலை ஆகிப்போனது.

அடுத்த 30 நிமிடங்களில் மழை நின்றது, மேகம் கலையத் தொடங்கியது. வெளிச்சம் பரவத்தொடங்கியது.

இன்று என்ன கேட்டாலும் கொடுப்பார் போலிருக்கிறது. சரி! அடுத்த வேண்டுதலை வைப்போம் என்று தீர்மானித்து, "அய்யனே! இன்று வந்து பூஜையில் பங்கெடுக்கும் அனைவரையும் பெற்றோர் நீங்கள் இருவரும் வந்திருந்து ஆசீர்வதித்து அவர்கள் மனோபீஷ்டங்களை நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும்" என வேண்டிக்கொண்டேன்.

இருந்தாலும், மனது என்னவோ, "இந்த மழைக்கு, அதுவும் புயல் காற்றில் யார் தூரத்தில் இருந்தெல்லாம் வரப்போகிறார்கள்?" என்று நினைத்தது. நீ என்னடா நினைப்பது? என்று அகத்தியப்பெருமான், அடியவர்களை, வேலூர், கோவை, திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், சென்னை, ஈரோடு என பல இடங்களிலிருந்து அழைத்து வந்திருந்தார்.

வந்திருந்த அகத்தியர் அடியவர்கள் அனைவரும், ஒவ்வொரு உழவாரப்பணியாக செய்தனர். ஒரு பக்கம் அபிஷேகத்துக்கு பஞ்சாமிர்த பழங்கள் தயாரானது. மறுபக்கம் பூக்கள், துளசி போன்றவை அர்ச்சனைக்கு ஆய்ந்து/ஆராய்ந்து வைக்கப்பட்டது.சன்னதியை சுற்றி சுத்தப்படுத்திய ஒருவர், வித விதமான அபிஷேக சாமான்களை வாளிகளில் கரைத்து சன்னதி முன் வைத்தனர்.

இப்படிப்பட்ட மழையிலும் வந்து, என் சேய்கள் பூசைக்காக இவ்வளவு செய்கிறார்களே என்று நினைத்தோ என்னவோ, அபிஷேகம் தொடங்குவதற்கு முன்னரே, அகத்தியப்பெருமான், லோபாமுத்திரா இருவரின் கண்களிலும் ஆனந்த கண்ணீர் தேங்கி நின்றது. ஒரு நிமிடத்தில், அபிஷேகம் தொடங்கியவுடன் அது நீருடன் கலந்து சென்று விட்டது.

ஒரு மணிக்கூருக்கும் மேல், விதவிதமான அபிஷேகங்கள். முதலில் எண்ணெய் காப்பு போடப்பட்டு, பால், தயிர், மஞ்சள்பொடி, மூலிகைகள் பொடி, சந்தனப்பொடி, வாசனாதி திரவியங்கள், அரிசி மாவு, தேன், நெய், பஞ்சாமிர்தம், கடைசியாக விபூதி அபிஷேகம் நடைபெற்றது.  ஒவ்வொரு அபிஷேகத்தையும், மிகுந்த சந்தோஷத்துடன், ஆர்வத்துடன் அம்மையப்பன் ஏற்றுக் கொண்டனர். கடைசியில், சுத்த நீரினால் அபிஷேகம் செய்யப்பட்டு, அலங்காரத்துக்காக திரை போடப்பட்டது, கதவு சார்த்தப்பட்டது.

அலங்காரத்துக்கு, இருவருக்கும் நிறைய வஸ்த்திரங்களும், ஆபரணங்களும், பூக்களும், மாலைகளும், அடியவர்கள் கொண்டு வந்திருந்தனர். யாருக்கு திரு நட்சத்திரம் என்று கேட்கின்ற அளவுக்கு அலங்காரத்துடன், அகத்தியப்பெருமான் நின்றிருந்தார். அம்மாவுக்கும் அலங்காரம், மிக சிறப்பாக அமைந்தது. அடியவர்கள் கொண்டு வந்த நான்கு புடவைகள் சார்த்தப்பட்டு, நிறைய தாமரை, மல்லிகை, போன்ற பலவிதமான பூக்கள் அலங்காரத்துடன் அருள் பாலித்தார்கள்.

நிமிர்ந்து பார்க்க, சந்திரனே மேகத்தை கலைத்து வந்து எட்டிப்பார்த்தார். 

பல அகத்தியர் அடியவர்களிடம் பேசுகிற வாய்ப்பு கிடைத்தது. ஒவ்வொருவரும், அகத்தியப்பெருமான், லோபாமுத்திராவிடம் எத்தனை அன்பு பூண்டுள்ளார்கள் என புரிந்து கொள்ள முடிந்தது. அனைவரிடமும் அகத்தியப்பெருமானின் திரு நட்சத்திர பூசைக்கு (30/12/2023), இங்கு வந்து இயன்ற உழவார பணியை செய்யுங்கள் என வேண்டிக் கொண்டேன். 

அகத்தியர் இறையருள் மன்ற அடியவர்களிடம் பேசிய பொழுது, எல்லா வியாழனன்றும், இங்கு குருவருளால், இரவு அடியவர்கள் பங்கு பெற்று, அன்னதானம் சிறப்பாக நடக்கின்றது என தெரிய வந்தது. அவர்களே ஏற்பாடு செய்திருந்த விதவிதமான அன்னமும், கனி வகைகளும் சன்னதிக்குள் நிவேதனத்துக்காக அனுப்பப்பட்டது. மன்றம் சார்பாக திருவாசகம் முற்றோதல் நடந்தது. வந்திருந்த அடியவர்கள் பங்குபெற்றனர். 

சற்று நேரத்தில், அலங்காரம் முடிந்து மஹா ஆரத்தி எடுக்கப்பட்டது. உடல் முழுவதும் மாலைகளால் மறைக்கப்பட்டு, அம்மா தலையில் தாழம்பூ கிரீடம் வைக்கப்பட்டு, அய்யன் பட்டு கிரீடம் சுமந்து அனைவருக்கும் ஆசீர்வதித்தார்கள். அம்மை அப்பனுக்கு அனைத்தும் செய்துவிட்ட திருப்தியில், அனைவரும் அவர்கள் அருள் பெற்று நின்றனர். எல்லாம் நிறைவாக நடந்தது, மன அமைதியை தந்தது.

வந்திருந்த அனைவருக்கும், பூஜாரி, அம்மையப்பன் சார்பாக, பிரசாதம் வழங்கினார். அகத்தியர் இறையருள் மன்றத்தினர், விதவிதமான உணவு பிரசாதத்தை (தக்காளி சாதம், புளிஹோரை சாதம், சாம்பார் சாதம், சர்க்கரை பொங்கல்) விநியோகித்தனர். அகத்தியப்பெருமான், லோபாமுத்திரா தாயார் சார்பாக வந்திருந்த அனைவருக்கும், அகத்தியப்பெருமானின் படம் பதித்த ஐந்து ரூபாய் நாணயம், பூசையில் வைத்து கொடுக்கப்பட்டது.

அம்மாவிடம் நேரடியாக, அனைத்தும் திருப்திதானே என்று வினவிட, சற்றுநேரத்தில், லேசாக மழை தூறல் போட்டு ஆம்! என்றது. ஆச்சரியம் என்னவெனில், பின்னர் மழை கடைசிவரை பெய்யவே இல்லை. எல்லாம் அவர் அருள். 

அம்மாவின் திரு நட்சத்திர பூசை அடியவர்கள் பங்குபெற்று மிக சிறப்பாக நிறைவு பெற்றது. மேலும் வருகிற 30/12/2023 (சனிக்கிழமை)  அன்று அகத்தியப்பெருமானின் ஆயில்ய நட்சத்திரம் பூசை நடை பெற உள்ளது, என்பதை தெரிவித்து, அனைவரும் வருக என அழைத்து இந்த பதிவை,

ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பிக்கிறேன்.

சித்தன் அருள்.....தொடரும்!  

7 comments:

  1. 30/12/2023 (சனிக்கிழமை) அன்று அகத்தியப்பெருமானின் ஆயில்ய நட்சத்திரம் பூசை எந்த நேரத்தில் நடை பெறும்

    ReplyDelete
  2. 30/12/2023 (சனிக்கிழமை) அன்று அகத்தியப்பெருமானின் ஆயில்ய நட்சத்திரம் பூசை எந்த நேரத்தில் நடை பெறும்

    ReplyDelete
  3. அகத்தீசாய நம நன்றி ஐயா 🙏🙇‍♂️

    ReplyDelete
  4. ஓம் நமசிவாய ஓம் ஶ்ரீ அகத்தீசாய நம

    ReplyDelete
  5. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete