​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Friday, 25 March 2011

சித்தன் அருள் - 29

ஒரு நண்பகல் பொழுது.  எல்லா பிரார்த்தனைகளையும் முடித்துவிட்டு வெளியே கிளம்பலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கும் பொழுது அரக்க பரக்க ஓடி வந்தார் ஒருவர்.  அவர் வந்த வேகத்தைப் பார்த்தால் மிகப் பெரிய சங்கடத்தில் மாட்டிக் கொண்டிருக்கிறார் என்று தோன்றியது.

நடுத்தர வயது இருக்கும்.  ஆஜானுபாகுவாக இருந்தார்.  முகத்தில் ஆரோக்கியம் இருந்தது.  வசதியுள்ளவர் போல் தோன்றியது.  வந்தவரை உட்காரச் சொன்னேன்.  பிறகு அவரை விசாரித்தேன்.

நன்றாக இருந்த அவரது மனைவிக்கு திடீரென்று மேனிஎல்லாம் வெள்ளை வெள்ளையாகப் புள்ளிகள் தோன்றிற்று. பல்வேறு தோல் நோய் சிறப்பு டாக்டர்களிடம் சிகிச்சை செய்து பார்த்திருக்கிறார்.  தோல் நிறம் மேலும் வெண்புள்ளியாக மாறிக் கொண்டிருந்ததே தவிர சிறிதும் குணமாகவில்லை.

மிகவும் செக்கச் சிவப்பாக இருந்த உடம்பு இப்பொழுது வெண் புள்ளிகளாக மாறியதால் தனக்கு குஷ்டம் வந்து விட்டது என்று எண்ணி, தன்னம்பிக்கை இழந்து இரு முறை தற்கொலைக்கும் முயற்சி செய்து இருக்கிறார் அவரது மனைவி.

இது தொழுநோய் அல்ல.  தோலில் ஏற்பட்ட ஒரு வகையான அலர்ஜி.  மருந்துகளைத் தொடர்ந்து உபயோகித்து வந்தால் படிப்படியாகக் குணமாகிவிடும் என்று தைரியம் சொல்லி இருக்கிறார்கள். அதோடு இல்லாமல் யாரோ ஒருவர் அவரது வீட்டில் வாஸ்து சரி இல்லை; அதனால் தான் இத்தனை தொல்லை என்று சொல்லி இருந்ததால் தன் மனைவின் தோல் நோய்க்கும், வாஸ்து பற்றிய சந்தேகத்திற்கும் அகத்தியர் நாடியில் விளக்கம் கேட்க, பதறி அடித்துக் கொண்டு வெளியூரிலிருந்து வந்திருக்கிறார்.

அகத்தியர் நாடியில் நல்ல பதில் வரவில்லை என்றால் அந்த நபரும், அவரது மனைவும் தற்கொலை செய்து கொள்ள தயாராக இருப்பதாக பின்னர் அவரது பேச்சில் தெரிந்தது.

அவரது உள்ளத்தை நன்றாக அறிந்த நான் முதலில் அகத்தியரை மனதார வேண்டிக் கொண்டேன்.  அய்யா நல் வாக்கு தாருங்கள்.  ஏதேனும் ஒன்றைச் சொல்லி அவர்கள் இருவரது உயிர்களையும் பறித்து விடாதீர்கள் என்ற பிரார்த்தனை செய்தேன்.

எனது மவுனமான பிரார்த்தனையை அறியாத அவர், என்ன சார் எனக்குப் படிக்க மாட்டீங்களா என்று கெஞ்சுவது போல பேசினார்.

கண்டிப்பாக படிக்கிறேன்.  கொஞ்சம் பொறுமையாக இருங்கள் என்று சொல்லி விட்டு, பூசை அறையிலிருந்து அகத்தியர் ஜீவ நாடியை எடுத்து வந்தேன்.

முதலில் தெய்வ ரகசியமாக, வந்தவரைப் பற்றி அப்படியே புட்டு வைத்தார் அகத்தியர்.  அதைப் படித்துவிட்டு அதிர்ந்து போனேன்.  பின்பு அவரைப் பார்த்து உங்களுக்கு நாடியில் நம்பிக்கை இருக்கிறதா என்றேன்.

எனக்கு கொஞ்சம் கூட நம்பிக்கை இல்லை.  ஏனெனில் நிறைய பேரிடம் நாடி பார்த்தேன், கடந்த காலத்தைப் பற்றி நன்றாகச் சொல்கிறார்கள்.  எதிர்காலத்தைப் பற்றிச் சொன்னது எதுவும் நடக்கவில்லை என்றார் அவர்.

ஏன்? - நான் கேட்டேன்.

அவர்கள் பரிகார காண்டம், தீட்சை காண்டம், சாந்தி காண்டம் என்று சொல்லி எனக்குள்ள தோஷம் போக ஏராளமான பரிகாரங்கள் சொன்னார்கள்.  இந்த பரிகாரங்களுக்காக நாடி படிப்பவர்களுக்கு பத்தாயிரம், இருபதாயிரம் என்று நான் கொடுக்க வேண்டும் என்கிறார்கள்.  இதில் எனக்கு கொஞ்சமும் உண்டன்பாடில்லை.  அதே நேரத்தில் என் மனைவிக்கு நோய் குறையாமல் போய் விடுமோ என்ற பயமும் ஏற்பட்டது.  எனவே வேறு வழி இல்லாமல் தலையெழுத்தே என்று கொடுத்தேன்.  அப்படி கொடுத்தான் இன்று வரை என் மனைவிக்கு நோய் குறையவே இல்லை என்றார் வெறுப்புடன்.

ஒருவேளை அகத்தியர் ஜீவநாடியில் சில பிரார்த்தனைகள் வந்தால் அதை முழுமனதோடு செய்ய வேண்டும்.  எந்த பரிகாரம் அல்லது பிரார்த்தனைகள் ஆனாலும் நீங்கள் தான் செய்யவேண்டும்.  செய்யத் தயாரா? என்றேன்.

எது முடியுமோ அதை தான் செய்ய முடியும்.  எல்லாவற்றையும் செய்ய முடியுமா? என்றார்.

உங்கள் மனைவிக்கு நோய் குணமாக வேண்டாமா?  அதற்குத்தானே என்னைத் தேடி இங்கு வந்திருக்கிறீர்கள் - என்றேன்

எல்லாரும் உங்களைப் பற்றிச் சொன்னார்கள்.  கடைசி முயற்சியாக ஒரு தடவை பார்க்கலாமே என்று தான் வந்தேன்.  ஏற்க்கனவே பரிகாரங்களைச் செய்து வெறுத்துப் போனதால் மனது வெம்பிப் போய் விட்டது. இருந்தாலும் அகத்தியர் என்ன சொல்கிறாரோ அதைச் சொல்லுங்கள்.முடிந்தவரை செய்கிறேன் என்று ஒரு வழியாக இயல்பான நிலைக்கு வந்தார்.

அகத்தியர் நாடி மூலம் வாய் திறந்தார்.

தஞ்சாவூரில் ஒரு பெரு நிலகிழாராக வாழ்ந்து வந்த குடும்பத்தைச் சேர்ந்தவன் இவன்.  சொத்து அதிகம்.  நன்செய், புன்செய், தோப்பு, துறவு என்று செழிப்பான மண் வளம் மிக்க சொத்துக்களை வைத்து அதிகார போதையில் செல்வாக்கு புகழோடு வாழ்ந்து வந்தான்.

தெய்வ நம்பிக்கை என்பது இவனுக்கு ஒரு போதும் கிடையாது.  பெரியவர்கள், பெற்றோர் சொன்ன அறவழிக்கு எதிராகச் செயல்பட்டவன்.  இறை நம்பிக்கை இல்லாத அரசியல் கட்சியில் கொடி கட்டி பறந்தான்.  ரத்தக் கொழுப்பும், பணத்திமிரும் அட்டிப் படித்ததால் தன்னை எதிர்த்துப் பேசிய பலமில்லாத பெண்கள், சிறுவர், சிறுமியரை பலர் மத்தியில் அவமானப்படுத்தினான்.  மொட்டை அடித்து அவர்கள் உடலில் கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி, கழுதை மேல் ஏற்றி கிராமத்தை சுற்றி வரச் செய்தான்.  இந்தக் கொடுமையை முன் ஜென்மத்தில் செய்திருந்தாலும், அந்த ஊழ்வினை தான் இந்த ஜென்மத்தில் இவன் மனைவிக்கு தோல் நோயாக மாறி மனதைத் துடிக்க வைத்திருக்கிறது.

எனினும் அகத்தியனை நோக்கி வந்ததாலும், இவனை ஈன்றோர் செய்திட்ட பெறும் புண்ணியம், அன்னதானம் ஆகியவற்றாலும் இவனது மனைவிக்கு வந்த தோல் நோயைக் குணப்படுத்த ஒரு வாய்ப்பு உண்டு.  என்றாலும், விட்ட குறை தொட்ட குறை போல் இவனுக்கு இன்னமும் முழுமையான தெய்வ பற்று இல்லை.  அகத்தியன் சொல்வதை ஒரு போதும் இவன் செய்யமாட்டான்.  இன்னும் சொல்லப்போனால் அகத்தியனை சோதிக்கவே இவன் இங்கு வந்துள்ளான்.  அதுதான் உண்மை என்று சட்டென்று முடித்துகொண்டார்.

கடைசி நான்கு வரியை மாத்திரம் அவரிடம் சொல்லாமல் அகத்தியர் சொன்ன பரிகாரங்களைச் செய்தால் உங்கள் மனைவிக்கு தோல் நோய் குணமாகும் என்றேன்.

அகத்தியர் சொன்னதை தான் செய்வதாகச் சொல்லி தலையை ஆட்டினார்.

சதுரகிரி மலைக்குச் சென்று எட்டு காததூரத்தில் வலப்புறம் திரும்பினால் அங்கு ஒரு சிறுகுகை இருக்கும். அந்த குகைக்கு இடப்புறத்தில் ஒரு வித்யாசமான மரம் இருக்கும். அந்த மரத்தின் பூவை (பதினெட்டு) பறித்து குப்பைமேனி, மிளகு, ஆவாரம்பூ, குமரிப்பூ, மாதுளம் பூ, சரக்கொன்றை பூ, செம்பரத்தம் பூ இவற்றை ஒன்றாகச் சேர்த்து நன்றாக இடித்து பொடி செய்து, செக்கில் ஆட்டிய நல்லெண்ணையோடு கலந்து மேனியில் தடவி வந்தால், வெண்புள்ளி மறையும். தோல் நோய் முற்றி குஷ்ட நிலைக்கு செல்லாமல் தடுக்கும். சுமார் மூன்று மாதங்கள் இந்த மருத்துவச் சிகிச்சை தொடரவேண்டும் என்றார் அகத்தியர்.

இதக் கேட்டதும் வந்தவருக்கு சந்தோசம் வரவில்லை.வெறுப்போடு சதுரகிரிமலைக்கு நான் எங்கே போவது?  எது எது எந்த பூ என்று எனக்கு எப்படித் தெரியும்? இதெல்லாம் போகாத ஊருக்கு வழி என்று நேரிடையாகவே பட்டென்று சொல்லி விட்டார்.

மறுபடியும் அகத்தியரிடம் இதை சொல்லி இதை விட எளிய வைத்தியம் சொல்லக்கூடாதா என்று கேட்டேன்.

உண்டு அதையும் உரைத்திருப்பேன். இவனுக்குத்தான் எதிலும் நம்பிக்கை இல்லையே. இவன் அந்த மருந்தைப் பெற வைப்பேன். அகத்தியன் மீது நம்பிக்கை வைத்து முதலில் இவன் சதுரகிரிக்கு போகட்டும் - என்று மறுபடியும் உரைத்தார்.

இதை தவிர வேறு வழியே இல்லையா? என்றார்.

அகத்தியன் சொன்னபடி செய்.இலையெனில் முன் ஜென்ம கர்ம வினையிலிருந்து நீ தப்ப முடியாது. உனக்கும் அந்த மாதிரி நோய் வரும் என்றார்.  அதை கேட்டு அமைதியாக திரும்பினார்.

நாற்பத்தைந்து நாட்களுக்குப் பின் என் வீட்டு வாசலில் தன் மனைவியோடு வந்து நின்றார் அவர். அவரைக் கண்டு ஆச்சரியப்பட்டு போனேன். பின்னர் விசாரித்தேன்.

சதுரகிரி மலைக்குச் சென்று இருக்கிறார். அங்கு யாரோ ஒருவர் அகத்தியர் அனுப்பி வைத்தாரா? என்று கேட்டு தோல் நோய்க்குரிய அகத்தியர் சொன்ன அத்தனைப் பூக்களையும் தன் கைபடவே கொடுத்திருக்கிறார். அந்த பூக்களை கொண்டு தன் மனைவிக்கு மருத்துவச் சிகிச்சை செய்திருக்கிறார். நாற்பத்தைந்து நாளில் தன் மனைவி பூரண குணத்தோடு மாறியதை என்னிடம் காட்ட தன்னோடு அழைத்து வந்திருக்கிறார், சந்தோஷத்தோடு.

அவரது நெற்றியில் திருநீறும், குங்குமப் பொட்டும் பளிச்சென்று தெரிந்தது.

1 comment: