உன் குழந்தைக்கு கண் பார்வை வர வேண்டுமானால் மூணு வழி உண்டு, என்று ஒவ்வொன்றாகச் சொல்லி கொண்டு வந்த போது, முதல் இரண்டு வழிகளை பொறுமையாகக் கேட்ட அந்தத் தலைவன், மூன்றாவது கட்டளையை கேட்டதும், ஏற்று கொள்ள மறுத்தான்.
பணக்காரர்களுக்கு வேண்டிய காரியத்தை முடிக்க பணம் வாங்கிக்கொண்டு மற்றவர்களை மிரட்டி, ஓட ஓட விரட்டி அடித்து நொறுக்கி, பிழைத்து வந்த அந்த தலைவனுக்கு, குழந்தை பாசம் எக்கச்சக்கமாக இருந்தது. இதனால் குழந்தைக்காக அந்த படுபாதகமான கொலை செயலைக் கூட நிறுத்த முன் வந்தான். இது எனக்கு மகிழ்ச்சியை தந்தது.
இரண்டாவது, கொல்லி மலைகாட்டிலுள்ள சித்த வைத்தியரிடம் சென்று மூன்று மாதம் குழந்தைக்குச் சிகிச்சை அளிக்கவும் தயாரானான்.
அனால் மூன்றாவதாக, "இதுவரை நீ செய்த பாவத்திற்கெல்லாம் பரிகாரமாக ஒரு அநாதை ஆஸ்ரமத்திற்குச் சென்று, கடைசி வரை இலவசமாக சேவை செய்யணும்" என்று அகத்தியர் சொன்னதை தான் அவனால் ஏற்றுகொள்ள முடியவில்லை.
"மொதல்ல சொன்ன ரெண்டும் என்னால செய்ய முடியும். கடைசியிலே சொன்ன வேலையை மாத்திரம் என்னால செய்ய முடியாதுங்க. எனக்கு மூணு சம்சாரங்க. வரும்படி வேறு ஏதும் கிடையாது. எங்க குடும்பத்தைக் காப்பாத்தவே என்னால முடியல. நான் போய் அநாதை ஆஸ்ரமத்திலே சேவை செய்யணுமா?" என்று முணுமுணுத்தான்.
பின்பு என்னிடம் திரும்பி "சென்னை தமிழில்" பேசினான்.
"என்னா நைனா? நீ கப்சா விடறியா? இல்லை மெய்யாலுமே இதச் சொல்றியா, அதை மொதல்ல சொல்லு?" என்று அதிகாரத்தோடு கேட்டான்.
இன்னமும் இவன் முரட்டுத்தனம் இவனை விட்டு போகவில்லை என்பதை உணர்ந்து "இது அகத்தியர் அருள்வாக்கு" என்றேன்.
"மொதல்ல என் குழந்தைக்கு எந்த சித்தர் கிட்ட போகணும். என்ன என்ன வைத்தியம் செய்யணும்னு சொல்லு. அதை செஞ்சு, என் குழந்தைக்குப் பார்வை வந்துட்டா போதும். அப்புறமா மத்ததை யோசிக்கலாம்னு" ஒரு முடிவுக்கு வந்தான்.
"நேத்திர தோஷ நிவர்த்தி புஷ்பம்" என்று ஒன்று மூணு வருஷத்துக்கு ஒரு முறை கொல்லி மலை காட்டில் விளையும். அந்த புஷ்பத்தை எடுத்து அதன் சாற்றை பிழிந்து தினமும் ஒரு சொட்டு கண்ணில் விடவும். தலையிலும் தேய்க்கணும். இதோடு வேறு சில மூலிகைச் சாற்றையும் அந்த கொல்லிமலைச் சித்த வைத்தியர் கொடுப்பார்.
இந்த வைத்தியத்தை சரியா தொண்ணூறு நாட்கள் செய்து வந்தால் போதும், கண் பார்வை துல்லியமாக தெரியும். கடைசிவரை ஆபரேஷன் செய்ய வேண்டிய அவசியமே இருக்காது. உடனே கொல்லி மலை நோக்கிச் செல்க" என்று அகத்தியர் ஜீவ நாடியில் கூறினார்.
"உடனே கிளம்பணுமா?"
"ஆமாம்"
"அப்போ அந்த வேலையை எப்போ முடிக்கறது?" என்று தனக்கு தானே பேசிக்கொண்டான். மற்றவர்கள் விழியைப் பிதுக்கினார்கள்.
"வந்த வேலைய.... அதை விட்டு விட்டு உன் குழந்தையைப் போய் கவனி" என்றேன். அவன் புத்தியை மாற்றுவதற்காக.
தலைவன் யோசித்தான்.
இதற்குள் அவனை சேர்ந்தவர்கள் ஒன்று சேர்ந்தது "உனக்கு புத்திகித்தி கெட்டுப்போயிருச்சா...கை நீட்டி பணத்தை வாங்கி இருக்கே...வாங்கின பணத்துக்கு காரியத்தை முடிச்சிட்டு பிழைக்கிற வழியை தேடுவியா? ஜோசியம் பார்த்துக்கினு நேரத்தைக் கெடுத்திட்டிருக்கே..வாப்பா... நமக்கெல்லாம் நாடியும், ஜோசியமும் எதுக்கு. அட வாப்பா." என்று தலைவனை உசுப்பி விட்டனர்.
"டேய்.... மாடசாமி...உனக்கும் பிரச்சினை இருக்குனு சொன்னியே...கேட்டு பாரு", என்று தலைவன் சொன்னனே தவிர அவர்கள் சொன்னதை காதில் வாங்கவே இல்லை.
"அதெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம்..முதல்ல அந்த பெரியவரை கண்டுபிடிப்போம் வா" என்று தலைவன் கையை பிடித்து இழுத்தான்.
நான் பொறுமையாக அவர்களை பார்த்தேன்.
"அய்யா. இவன் பெயர் மாடசாமி. என் தம்பி மாதிரி. இவனுக்கும் சில பிரச்சினை இருக்கு. நாடி பார்த்து சொல்லுங்க" என்றான் தலைவன்.
"பார்க்கலாமா?" என்று மாடசாமியை பார்த்து ஒப்புதல் கேட்டேன்.
"அதென்ன ஜோசியமோ.......நாடியோ.......சரி, ஏதாவது சொல்லுங்க, அண்ணனுக்காக கேட்டுக்கிறேன்" என்று முணு முணுத்தான்.
"மூதையர் சொத்துக்காக அண்ணன் தம்பி இருவரும் விரோதம் வந்தது. அண்ணனை ஆள் வைத்து வயல் வரப்பிலே தம்பியைக் கொன்றான். தம்பியை கொல்ல அண்ணன் மகன்கள் முயலுகின்றனர். ஆனால் உயிருக்கு பயந்து, அந்த தம்பி ஊரை விட்டே ஓடிவிட்டான். இப்போ அவன் காசியிலே ஒரு ஆதின மடத்திலே பயந்து பயந்து வாழ்ந்து கொண்டிருக்கிறான். அண்ணனை அநியாயத்துக்கு கொலை செய்து விட்டோமே, என்று தினம் நினைத்து, நினைத்து குமறிக் கொண்டு இருக்கிறான் அந்த தம்பி. இப்போது அவனுக்கு பக்க வாதம் வந்து விட்டது. உயிருக்கு அணு அணுவாக போராடிக் கொண்டிருக்கிறான். அவனை அழைத்து மருத்துவ உதவி செய்தால் அவன் பிழைப்பான். அதோடு அவனுடைய சொத்து எல்லாம் அண்ணன் மகனான இந்த மாடசாமிக்கே வந்து சேரும்.
மாடசாமிக்கு ஒரு மனைவி உண்டு. அவள் ஒரு இருதய நோயாளி. நோயோடு அவள் தினம், தினம் போராடிக் கொண்டு இருக்கிறாள். அந்த நோய் இன்னும் ஐந்து நாள் நீடித்தால் தீவிரமான நோயாக மாறிவிடும். அவளது உயிர் பிழைக்க வேண்டுமானால், மாடசாமியும் கொல்லி மலைச் சித்தர்கிட்டே அவளை அழைத்துச் செல்லட்டும். "நம்பிக்கை இருந்தால்"" என்று அகத்தியர் சொன்னார்.
பின்னர் "மாடசாமியின் மனைவி நோய் குணமாக இலையிலிருந்து மலரும் ஒரு பூவின் இதழை செந்தூரம் தேன் கலந்து மூன்று வேளை, பத்தியத்தோடு சாப்பிட வேண்டும். இதை அந்த கொல்லிமலை சித்தரிடம் அகத்தியர் சொன்னதாக சொல்" என்று அருள் வாக்கு அருளினார்.
மாடசாமியை பற்றி வந்த செய்தி, நிச்சயம் அவனை மட்டுமில்லாது, அவர்கள் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்க வேண்டும்.
இல்லையென்றால் அவர்கள் அனைவரும் ஒருவருக்கு ஒருவர் தங்களை தாங்களே ஆச்சரியத்தோடு பார்த்து கொண்டிருக்க மாட்டார்கள்.அல்லது மாடசாமியும் தேம்பி தேம்பி அழுதிருக்க மாட்டான்.
எல்லாரும் மாடசாமியை சமாதனப்படுத்தினார்கள்.
"அய்யா! நாடியில் வந்த செய்தி உண்மை தானுங்க. இவன் தகப்பனை சொந்த தம்பியே பத்து வருஷத்துக்கு முன்னால சொத்துக்கு ஆசை பட்டு கொன்னுட்டாங்க. அன்னியிலிருந்து மாடசாமியும் அவன் தம்பியும் சித்தப்பனை தேடிகிட்டு, பழிக்கு பழி வாங்க அலையுறாங்க. சித்தப்பா தான் கிடைக்கலீங்க."
"இப்போ அவரு உயிரோடு இருக்காருன்னு நீங்கள் சொல்லித்தாங்க தெரியுது. அவரு எப்படியும் போகட்டும், முதல்ல இவன் சம்சாரம் உயிர் பிழைச்சா போதுங்க. நாங்க கொல்லிமலைக்கு புறப்பட்டு போறோம்க. அப்புறமா உங்களை வந்து பார்க்கிறோம்" - தலைவனும் மற்றவர்களும் மாற்றி மாற்றி இதை சொன்னார்கள்.
கண்டிப்பா குழந்தைக்கு கண் பார்வை வரும், மாடசாமியின் மனைவி உடல் நிலையும் தேறும் என்று வாழ்த்தினேன்.
எதற்காக வெகு வேகமாக ஆக்ரோஷத்தோடு அந்த பெரியவரைத் தேடி கண்டு பிடித்து கொலை செய்யும் முயற்சியோடு வந்தார்களோ அந்த எண்ணத்தை அடியோடு கை விட்டு விட்டு, கொல்லி மலைச் சித்த வைத்தியரை நோக்கி தலைவனான ஏழுமலையும், மனைவியை அழைத்துகொண்டு மாடசாமியும் சென்றார்கள்.
அப்பாடா என்று அவசர அவசரமாக தண்ணீர் குடித்து விட்டு அமர்ந்தேன்.
எப்படியோ அகத்தியர் அருளால் அந்த கோடீஸ்வர சாமியார் உயிர் தப்பித்தார். அவரைத்தேடி வந்த இருவருக்கும் அகத்தியர் நல்ல வழியைக் காண்பித்து விட்டார் என்று ஒரு அல்ப சந்தோஷம் எனக்கு ஏற்பட்டது.
ஒரு வேளை அந்த கொல்லிமலை சித்த வைத்தியர் கொடுக்கும் மருந்தில் நோய் குணமாகவில்லை என்றால் என்ன செய்வது? அவர்கள் நம்மை பதம் பார்த்துவிடுவார்களே என்று அச்சம் வரத்தான் செய்தது.
எல்லாவற்றையும் அகத்தியர் பார்த்துகொள்வார் என்று விட்டுவிட்டேன்.
வாசல் கதவு தட்டப்பட்டது. தொடர்ந்து "காலிங் பெல்" ஒலிக்க, யாராக இருக்கும் என்று நினைத்தபடி வாசல் கதவை திறந்தேன்.
அங்கே கண்ட காட்சி என் சப்த நாடியையும் உறையவைத்தது. நான்கு பேர் அமுக்கி பிடித்தும், தலைவிரித்த கோலத்தோடு பேயாடிக் கொண்டு இருந்தாள் ஒரு பெண்.
சித்தன் அருள்.................... தொடரும்!
சித்தன் அருள்.................... தொடரும்!
_/\_Om SivaSiva Om_/\_ Iraivan Miga miga periyavan enbathai therinthu kolla mudikirathu! Ellam avan karunai Mazahi! _/\_Om SivaSiva Om_/\_
ReplyDeleteOm Agatheesaya Namah
ReplyDelete