தன்னை மறந்து தலைவிரித்து ஆக்ரோஷமாக ஆடிக் கொண்டிருந்த அந்த இளம் பெண் முகத்தில் ஒரு பணக்காரிக்குரிய களை இருந்தது. ஏதோ ஒரு பெரும் துன்பத்தில் பலகாலம் கஷ்டப்பட்டவள் போல் அவளது கண்கள் சோகத்தை வெளிக்காட்டியது. நன்றாக கல்வி கற்ற களை தெரிந்தது.
என்னை கண்டதும் "அய்யா, நீங்கள்தான் என்னை காப்பாற்ற வேண்டும்" என்று சொல்லியபடி விக்கி விக்கி அழ ஆரம்பித்தாள். அவளை கெட்டியாக பிடித்துகொண்டு இருந்தவர்களை அழைத்து, அந்த பெண்ணை விடுவிக்கச் சொன்னேன்.
"விட்டா ஓடி போய்டுவா!" என்றார் ஒருத்தார்.
"அவள் போகமாட்டாள். கையை விடுங்கள்" என்றேன்.
"சாமி இவளுக்கு பேய் பிடிச்சிருக்கு. கொஞ்ச நேரத்துக்கு முன்னால என்ன ஆட்டம் போட்டா இவ..."
"இருக்கட்டும். இப்போ அவளை சுதந்திரமாக விட்டு விடுங்கள். எங்கும் ஓடி போக மாட்டாள்", நான் சொன்னேன்.
அரைகுறை மனதோடு கையை விட்டனர். அந்த பெண் என்னை நன்றியோடு பார்த்தாள்.
எல்லோரையும் அமரச்சொன்னேன். மவுனமாக சில நிமிடங்கள் கழிந்தது.
மௌனத்தை கலைத்தபடி நான் பேசத்தொடங்கினேன்.
"சரி, இப்போ சொல்லுங்க. என்ன நடந்தது?"
"நல்ல படிச்சிட்டு இருந்த இந்த பொண்ணுக்கு எப்படியோ பேய் பிடிச்சிருக்கு. அதை விரட்டணும். அதுக்காகத்தான் உங்க கிட்ட வந்திருக்கோம்" என்று வந்தவர்களில் ஒருவர் சொன்னார்.
"இந்த பொண்ணுக்கு பேய் பிடிச்சிருக்குன்னு யார் சொன்ன?"
"படிக்க போயிட்டிருந்த பொண்ணு திடீர்னு, படிக்க போக மாட்டேன்னு சொல்லிச்சு. சரி, அது இஷ்டம்னு விட்டுடோம். அப்புறம் அடிக்கடி எதையாவது நினைச்சுட்டு தானே சிரிக்கும். தனக்கு தானே பேசிக்கும். டாக்டர் கிட்ட கூட்டிட்டு போனோம். மருந்து மாத்திரை வாங்கிக் கொடுத்தோம். அதை சாப்பிட மாட்டேன்னு தூக்கி எரிஞ்சா"
அப்புறம்
"ஜோசியர் கிட்ட போய் இவ ஜாதகத்தை காட்டினோம். என்னவெல்லாமோ பரிகாரம் செய்தும் பார்த்துட்டோம். இவ மாறவே இல்லை. அப்புறமா சூளைமேட்டுல ஒரு மந்திரவாதிகிட்டே கூட்டிட்டு போய் காட்டினோம்"
"அவரு என்ன சொன்னாரு?"
அவர் தான் கரக்டா சொன்னாரு. இவளுக்கு துஷ்ட தேவதை ஒண்ணு பிடிச்சுட்டு ஆட்டுதுன்னு"
"சரி, அதுக்கு என்ன பரிகாரம் சொன்னாரு?"
"சோற்றனிக்கரை பகவதி அம்மன் கிட்டே கூட்டிட்டு போ, நாற்பது நாள் அங்கே தங்கணும்னு சொன்னாரு. அப்படி போக முடியலன்னா, நானே இந்த பொண்ணை குணபடுத்திக் காட்டறேன்னு சொன்னாரு".
நீங்க என்ன முடிவு எடுத்தீங்க?
"சோற்றனிக்கரை போய் நாற்பது நாள் தங்கணும்னா, பத்தாயிரம் ரூபாய் வரை செலவாகும்.
இவரு ஆறு ஆயிரம் ரூபாய் கொடுத்தா போதும் குணப்படுத்திடறேன்னு சொன்னாரு. இதுக்கிடையிலே தான் உங்களை பத்தி கேள்விப்பட்டோம். சரி, அகத்தியர் கிட்டே கேட்போம். அவர் என்ன தான் சொல்றரார்னு கேட்டு அப்புறம் முடிவு எடுக்கலாம்னு முடிவு செஞ்சோம். அதுதான் உங்களைத்தேடி இங்கே வந்திருக்கோம்."
"இப்ப நான் என்ன செய்யணும்?"
"இவளுக்கு நாடி படிக்கணும். சோற்றனிக்கரைக்கு போறதா? இல்லை மந்திரவாதிகிட்டே போறதான்னு அகத்தியர் கிட்டே கேட்டுச் சொல்லணும்."
அவர்கள் சொல்வதையும் நான் கேள்வி கேட்பதையும் கூர்மையாக கவனித்து கொண்டிருந்தாள், அந்த பெண். கூச்சல் போடவில்லை. சாமியாடவில்லை, கைகால்களை அசைக்கவில்லை. அவளது கண்களை பார்த்தேன். எப்படியாவது இவர்களிடம் இருந்து என்னைக் காப்பாற்றுங்கள் என்று அந்த கண்கள் என்னை நோக்கி கெஞ்சுவது போலிருந்தது.
அகத்தியர் ஜீவ நாடியை கையில் வைத்திருப்பதால், தினமும் நாடி பார்க்க பல்வேறு குணம் உள்ள நபர்களைச் சந்திக்க வைப்பு உண்டு. இதில் மிகப் பெரிய ஆச்சரியம் என்னவென்றால் அவர்களது பிரச்சினைகள் மிக மிக சாதாரணமாக இருக்கும். அதை அவர்களே சமாளித்தும் விடலாம்.
ஆனால், அகத்தியர் அருள்வாக்கு கேட்க வருபவர்கள் தங்களது எல்லா பிரச்சினைகளுக்கும் அகத்தியரே தீர்வு சொல்ல வேண்டும் என்று பிடிவாதமாக இருப்பதுண்டு.
அகத்தியரை மனதார பிரார்த்தனை செய்து கொண்டு, ஜீவ நாடியை படிக்க ஆரம்பித்தேன். "தெய்வ ரகசியமாக" எனக்கு மட்டும் முதலில் தகவல்களை தெரிவித்தார் அகத்தியர்.
"உண்மையில் இந்த பெண்ணுக்கு பேயும் பிடிக்கவில்லை, பிசாசும் பிடிக்கவில்லை. இவள் புத்திசாலிப் பெண். கல்லூரியில் படித்துகொண்டு இருந்தாள். தாத்தாவின் சொத்து அனைத்தும் இவளுக்கு என்று இருந்ததால், இந்த சொத்தை அடைய ஒரு கும்பல் திட்டமிட்டது. இதன்படி இந்த பெண்ணை பலவந்தப்படுத்தி இவளது வயதான மாமனுக்கு மூன்றாவது தாரமாக திருமணம் செய்து வைக்க முயற்சி நடக்கிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த இந்த பெண் அவர்களிடம் இருந்து தப்பித்துச் செல்ல முயன்றாள். அது முடியாமல் போனதால் அவர்களிடம் மாட்டிகொண்டு இப்போது அவஸ்தைப் படுகிறாள். இவளை தன் மகள் போல் எண்ணி அகத்தியன் யாம் காப்போம்", என்றார்.
தொடர்ந்து அவர் " அந்த கொடுமைக்கார மாமன் இப்போது எதிரேதான் இருக்கிறான். அவனை விதி இன்னும் சற்று நேரத்தில் என்ன பாடு படுத்த போகிறது என்பதை நீயும் வேடிக்கை பார்" என்று என்னிடம் கூறினார்.
அகத்தியர் இதை சொல்லி முடிக்கவும், அந்த பெண் திடீரென்று "ஒ" என்று அலறவும் சரியாக இருந்தது. அந்த அலறல் சத்தம் அங்கிருந்தவர்களை பயமுறுத்துவதாக இருந்தது.
அகத்தியர் ஏதோ திருவிளையாடல் நடத்தி அந்தப் பெண்ணுக்கு ஒரு நல்லது செய்ய போகிறார் என்பதை நான் உணர்ந்து கொண்டேன்.
அமைதியாக இருந்த அந்தப்பெண் திடீரென்று "ஒ" என்று அலறியதைக் கண்டு நானே திகைத்துப்போனேன். சில நிமிஷத்துக்கு முன்புதான் அகத்தியர் நாடியில் இவளுக்கு பேயும் பிடிக்கவில்லை, பிசாசும் பிடிக்கவில்லை என்று சொல்லி இருந்தார். ஆனால், இது பொய்யாகிவிடுமோ என்று எண்ணத் தோன்றியது.
அவளது அலறல் ஓய்ந்த பிறகு, அவளை நிதானமாக பார்த்தேன்.
எதையோ வாய்விட்டு சொல்லவேண்டும் என்று அவளுக்கு தோன்றியது. ஆனால் அவள் சத்தம் போட்டதும் ஆவலுடன் வந்தவர்கள் அவளை ஓங்கி அடித்து, அடக்கி வைத்தனர். அதனால் அவள் மயக்கம் அடைந்தாள்.
இந்த சூழ்நிலை எனக்கு மிகவும் சங்கடத்தை தந்தது. கசப்பாகவும் இருந்தது. அந்த மனிதர்களை வெறுப்புடன் பார்த்தேன். அவர்கள் விடாப்பிடியாக என்னை கேள்விகள் கேட்டனர்.
"அகத்தியர் அய்யா என்ன சொல்றாரு?"
"இந்த பொண்ணுக்கு பேயும் பிடிக்கவில்லை, பிசாசும் பிடிக்கவில்லை" என்கிறார்.
"அப்போ அந்த மந்திரவாதி சொன்னது....?"
"அப்பட்டமான பொய்."
"அப்போ நாங்க கோவிலுக்கு போக தேவை இல்லையா?"
"இல்லை"
"அந்த மந்திரவாதி கிட்டே போகலாமா?"
"அதுவும் வேண்டாம்"
"அய்யா ஒரு சின்ன சந்தேகம். இதை நீங்களா சொல்லறீங்களா? அல்லது அகத்தியரே சொல்லறார?
"நான் எதுவும் சொல்வதில். நாடியில் என்ன வருகிறதோ, அதை தான் படிக்கிறேன்"
"அப்பா என்னதான் நாங்க செய்வது?"
"ஒண்ணும் செய்யவேண்டாம். இந்த பெண்ணை சுதந்திரமாக விட்டு விடுங்கள். இனிமேல் இவளுக்கு பேய் பிடிச்சிருக்கு பிசாசு பிடிச்சிருக்குன்னு யாரு கிட்டேயும் சொல்லவேண்டாம்".
"இல்லைங்க. நீங்க வீட்டுக்கு வந்து பார்த்தா தெரியும். இவ படுத்துற பாடு என்னனு. இவளுக்கு பேய் பிடிச்சிருக்குன்னு அப்பத்தான் நம்புவீங்க" என்றார் வந்தவர்களில் ஒருவர்.
"அகத்தியர்தான் அடிச்சு சொல்றாரே, இந்த பொண்ணுக்கு எதுவுமே, இல்லைன்னு", நான் அழுத்தமாக சொன்னேன்.
அவர்களில் சிலருக்கு நான் சொன்னதில் உடன்பாடு இல்லை என்று தோன்றியது. இவர்களிடம் இருந்து அந்த பெண்ணை எப்படியேனும் காப்பாற்ற வேண்டும் என்று மட்டும் என் உள்ளுணர்வு எச்சரித்தது.
"இந்த பொண்ணுக்கு "மாமா" ன்னு யாரேனும் வந்திருகீங்களா?" என்று கேட்டேன்.
லேசாக நரைத்த மீசை, சவரம் செய்யாத முகம், முன் வழுக்கை சகிதம் தோளில் நீண்ட துண்டு போட்டுக் கொண்டு, முரட்டுத்தனமான பார்வை கலந்த ஒருவர் என் முன்னால் வந்து நின்றார்.
"நான்தான் அந்த பொண்ணுக்கு மாமன்"
"கொஞ்சம் உள்ளே வரீங்களா?" என்று வீட்டிற்குள் அழைத்தேன்.
வந்தார்.
அவரிடம் "உங்களுக்கு அகத்தியர் ஜீவநாடியில் நம்பிக்கை இருக்கிறதா?" என்றேன்.
"ஆமாம்" என்றார்.
என்னிடம் அகத்தியர் சொன்ன தகவலை அப்படியே சொன்னேன். "இந்த பெண்ணை மூன்றாம் தாரமாக கல்யாணாம் செய்ய விரும்பறீங்க. அது உண்மையா?" என்றேன்.
"ஆமாம்"
"எதுக்கு?"
"என் தங்கச்சி மக இவ. இவளோட தாத்த இவ பேர்ல நிறைய சொத்தை எழுதி வச்சிட்டு செத்து போயிட்டாரு. என் தங்கச்சிக்கு புருஷன் கிடையாது. இவளுக்கு நான்தான் எல்லாம். இவளை நான்தான் படிக்க வச்சேன். என் மூத்த சம்சாரத்துக்கு ஒரு பையன். அவனுக்கு கால் ஊனம். ஊமையும் கூட. அவனுக்கு வைத்தியம் பார்த்து, பார்த்து என் சொத்தெல்லாம் அழிஞ்சு போச்சு. இரண்டு சம்சாரமும் தவறிட்டாங்க. இப்ப நான் கடனாளி. இவளை கல்யாணம் செய்துகிட்டா சொத்து வரும், கடன் அடையும், என் பையனுக்கு வைத்தியம் பார்க்கவும் முடியும்."
"உங்க நிலை எனக்கு நன்றாக புரிகிறது. ஆனா உங்க வயசு...?
"ஐம்பத்து அஞ்சுங்க"
"இந்த வயசில, அந்த இளம் பெண்ணை கல்யாணம் செய்ய ஆசை படறீங்களே. இது நியாயமா?"
"இது எங்க ஜாதியிலே நடக்கிற சாதாரண விஷயங்க" என்றார் அலட்சியமாக.
நான் மவுனமாக ஜீவ ஏட்டை, மறுபடியும் திருப்பினேன். அதில் அகத்தியர் சொன்ன சொற்கள் எனக்கு பதட்டத்தை ஏற்படுத்தியது.
"பெரியவரே, நீங்க எவ்வளவு பெரிய தப்பை பண்ணி இருக்கீங்க? அப்படி செய்யலாமா?" என்று அகத்தியர் கேட்கிறார்" என்றேன்.
"என்னங்க பண்ணிட்டேன்?", ஒன்றும் புரியாதவர் போல் கேட்டார்.
"இந்த பொண்ணு, உங்களுக்கு மசியவில்லை என்கிறதுக்காக, யாரோ ஒருத்தன் கிட்டேன் போய், பணத்தை கொடுத்து இவளை வசியம் பண்ண மருந்து வாங்கி இவளுக்கு தெரியாமல் காப்பியிலே கலந்து கொடுத்தது உண்மை தானே..?"
ஏதோ போலீஸ் விசாரணை செய்வதுபோல விசாரித்தேன்.
தலையை தாழ்த்திக்கொண்டு "ஆமாங்க" என்றார் அவர்.
"அவன் கொடுத்தது வசிய மருந்தல்ல. புத்தியை பேதலிக்கும் விஷம் கலந்த மருந்து, அதை அந்த பொண்ணு சாப்பிட்ட பிறகு அவ கதியே வேறு மாதிரியாயிடுச்சு, இல்லையா?"
"அப்படின்னு அகத்தியர் கேட்கிறார். உண்மையை மறைக்காமல் சொல்லுங்க என்றேன்".
சித்தன் அருள்............. தொடரும்!
சித்தன் அருள்............. தொடரும்!
ஐயா வணக்கம்
ReplyDeleteஎனது பெயர் ராஜேஷ் 31 வயது நடந்து கொண்டு இருக்கிறது நான் இது வரையிலும் யாருக்கும் கெடுதல் நினைத்து இல்லை என் வாழ்கையை பற்றி அகத்தீசரிடம் கேட்கமுடியுமா
Om Agatheesaya Namah
ReplyDelete