​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Friday, 18 March 2011

சித்தன் அருள் - 18

"பத்ராசலம் செல் அங்கு உனக்கு ஸ்ரீராமனின் தரிசனம் கிடைக்கும் " என்று அகத்தியர் சொன்னதால் அதற்குரிய ஏற்பாடுகளைச் செய்து கொண்டு இருந்தேன்.

இதற்கிடையில் என் மனதில் கொல்லிமலைக்கு சென்ற அந்த இருவருக்கும் மருந்து கிடைத்ததா இல்லையா? என்று ஒரு உணர்வு இருந்து கொண்டே இருந்தது.

எப்படி சோமசுந்தரத்திற்கு செயல்படாமல் இருந்த இரு கால்களும் அகத்தியர் அருளால் மீண்டும் செயல்படத் தொடங்கியதோ அதே போல் கொல்லிமலைக் காட்டிற்குச் செல்வதாகச் சொன்னவர்கள் நல்ல பலன் பெற்றிருக்க வேண்டும்.  அனால் எந்த தகவலும் வரவில்லையே என்று நினைத்தேன்.

நான் நினைத்து முடிக்கவும் "அய்யா" என்று வாசலில் குரல் கேட்டது.

கதவை திறந்தேன்.

மாடசாமியும், அவனது தலைவனும் வாசலில் நின்று கொண்டிருக்க, அவர்களுக்கு பின்னால் ஆணும் பெண்ணுமாய் சிறு குடும்பமே வந்து கொண்டிருந்தது.

எதோ நல்ல சம்பவம் தான் நடந்து இருக்கவேண்டும், என்று தோன்றியது.

அவர்களை உள்ளே வரச்சொன்னேன்.

வந்தவர்கள் அத்தனை பேர்களும் சட் சட் என்று காலில் விழுந்தனர்.  அதோடு ஒரு தார் வாழைப்பழம், அவர்கள் ஊரில் பிரசித்திப் பெற்ற லாலா மிட்டாய் கடையில் வாங்கிய ஜிலேபி, வெற்றிலை - பாக்கு உட்பட, எதோ கல்யாண சீர் போல் அடுக்கி வைத்து தரையில் என் முன் அமர்ந்தனர்.

குழந்தையை என்னிடம் காட்டினார்கள்.  கண்களில் எதோ மூலிகைச்சாறு வழிந்து கொண்டிருந்தது.  தொடர்ந்து மாடசாமி பின்னால் வந்தான்.  தன் மனைவியை எனக்கு அறிமுகபடுத்தினான்.

"என்ன நடந்தது.  விவரமாய்ச் சொல்லேன்" என்றேன் மாடசாமியிடம்.

கொல்லி மலையில் நடந்ததை மாடசாமி சொல்ல ஆரம்பித்தான்.

"அய்யா, நாங்கள் ரெண்டு பேரும் கொல்லிமலைக்குப் போனோம்.  முதல்ல எங்களுக்கு கொல்லி மலைச்சித்தர் யாருன்னு அடையாளம் காண முடியவில்லை.  பலர் கிட்டே விசாரிச்ச போது ஒரு மைல் தூரம் மலை மேல் ஏறினா அங்கே இருப்பாரு, போய் பாருங்கன்னு சொன்னாங்க."

"நாங்க ரெண்டு பெரும் ஆளுக்கொரு பக்கமாக தேடிபார்த்தோம்.  அங்கேயும் சித்த வைத்தியரைக் காணவில்லை.  எங்க மனசு உடைஞ்சு போச்சு.அகத்தியர் சொன்னா அது சரியாக இருக்குமேன்னு நெனச்சுட்டு அலைச்சல் காரணமாக அப்படியே ஒரு மரத்தடியிலே துண்டைப் போட்டுட்டு தூங்கிட்டோம்."

"அப்போ பாருங்கோ.  ஒரு வயதான பெரியவர் என்னை தட்டி எழுப்பி "நீ தானே மாடசாமி?" ன்னு கேட்டார்"

"அமாம். அய்யா.  நீங்க யாருன்னு கேட்டேன்".

"என்னை பத்தி அப்புறமா சொல்லறேன்.  நீங்க ரெண்டு பேரும்தானே சேர்ந்து வந்தீங்கன்னு " கேட்டார்.

"ஆமாங்க" என்றேன்.

"சரி சரி என் கூட வா.  உன் பொண்டாட்டிக்கும், மருந்து தர்றேன். அதோட இவருடைய மகனுக்கும் தர்றேன். இதை வாங்கிட்டு, நான் சொல்றபடி வைத்தியம் செய்யுங்க, ஒம்பொண்டாட்டி குணமடஞ்சுடுவா,அவருடைய பையனுக்கும் கண் பார்வை வந்திடும்னு, அவராகவே சொன்னாருங்க"

"இவர் தான் அகத்தியர் சொன்ன கொல்லிமலை சித்தர்னு எனக்கு தெரிஞ்சு போச்சு.  ஆனா இவருக்கு எப்படி எம் பெயர் தெரிஞ்சுதுன்னு தான் ஒரே ஆச்சரியம்."

சரின்னு அவரைக் கும்பிட்டுட்டு என் பக்கத்திலே தூங்கிக் கொண்டிருந்த எங்க அண்ணனை எழுப்பினேன், அப்பால நாங்க ரெண்டு பெரும் அவரு பின்னாலே போனோம்க."

ஒரு குடிசை வாசல்ல எங்களை உட்கார வச்சிட்டு, உள்ளே போன அந்த சித்தர் கொஞ்ச நேரம் கழிச்சு வந்தாரு".

குழந்தை கண்ணில இந்த மூலிகைச்சாற்றை தினமும் மூணு வேளைக்கு விட்டுட்டே இருக்கணம்.  முப்பதாவது நாள்ல பார்வை தெரிய ஆரம்பிச்சுடும். அதுக்கப்புறம் முழு பார்வை தெரியணும்னா, இங்கே வந்து மேற்கொண்டு இந்த மூலிகைச் சாற்றை வாங்கிட்டு போ. கண்டிப்பா அந்த குழந்தைக்கு கண் பார்வை வந்திடும்னு, சொல்லி எங்க அண்ணன் கையிலே ஒரு பெரிய பாட்டில் நிறைய மூலிகைச்சாறு கொடுத்தார்".

"எனக்குன்னு" நான் கேட்டேன்.

"என்ன அவசரம். கொஞ்சம் பொறுமையாகத்தான் இரேன்னு என்னை சத்தம் போட்டுட்டு, இந்தா இதை பிடின்னு நிறைய பொடி கலந்த ஒரு பாக்கட்டை என்கிட்டே கொடுத்தாரு. பத்திரமா வாங்கிகிட்டேன்".

இதை எப்படி சாப்பிடணம்னு கேட்டேன்.

இதுல செந்தூரம், தேன் கலந்து மூணுவேளை சாப்பிடணம். உப்பு சேர்க்க கூடாது.  மோர் சேர்க்கலாம். காப்பி, டி குடிக்க கூடாது. இதை சாப்பிட்ட ரெண்டு நாளைக்கு லேசா காய்ச்சல் வரும்.அப்படி காய்ச்சல் வந்தால் இந்த மாத்திரையை சிறு கடுக்காயுடன் அரைச்சு சாப்பிட்டு வரட்டும். இருபத்தேழாவது நாள்ல அவளது இருதய நோய் விலகிவிடும். அப்புறமா, எதை வேண்டுமானாலும் சாப்பிடலாம். அவளுடைய உயிருக்கு எந்த ஆபத்தும் வராது" என்றார்.

நாங்க ரெண்டு பேரும் அவர் கால்ல விழுந்து வணங்கி, "அய்யா இந்தாங்கன்ன்னு" பணம் கொடுக்க முன் வந்தோம்.

"இது பாவப்பட்ட பணம், யாரையோ கொலை செய்ய வாங்கின முன்பணம். இதை வாங்கமாட்டேன்.நீங்க போயிட்டு வாங்கன்னு குடிசைக்குள்ளே போனாரு. அப்புறம் அவரு வரவே இல்லைங்க.

குடிசைக்குள்ளே எட்டி பார்த்தோம். அங்க யாரும் இல்லைங்க. ரொம்ப நேரம் நின்னு பார்த்துட்டு ஊருக்கு திரும்பிட்டோம்" என்றான் மாடசாமி.

"சந்தோசம். உன் மனைவிக்கு இருதய நோய் எப்படி இருக்கு?" நான் கேட்டேன்.

"ரொம்ப நல்ல இருக்காங்க. நோயும் மறஞ்சு போச்சுன்னு தோணுது. நீங்களே பாருங்களேன்" என்றான் மாடசாமி மிகுந்த மகிழ்ச்சியுடன்.

1 comment: