​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Thursday, 17 March 2011

சித்தன் அருள் - 16

அகத்தியர் சொல்வதைக் கேட்டுகொண்டிருந்த எனக்கு அப்படி கொடுமை செய்த நபருக்கு நாம் ஏன் உதவி செய்ய வேண்டும்? அவரவர் விதியை அவரவர் அனுபவித்துப் போகட்டுமே என்று நினைக்க தோன்றியது.

"அந்தப் பையன் இறந்துவிட்டானா?" என்று கேட்கத் தோன்றியது.  ஆனாலும் மனதை அடக்கிக் கொண்டேன்.  அகத்தியர் மேலும் சொல்லலானார்.

"இதை எல்லாம் ஏன் உனக்கு முன்கூட்டியே சொல்கிறேன் தெரியுமா?  பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தச் சமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது.  சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்".

"எனக்கு தெரிந்ததை உன்னிடம் சொல்வதற்கு இன்னொரு காரணமும் உண்டு.  இது தெய்வ ரகசியம் இதனை மனதில் வாங்கிக்கொள்.  நான் அனுமதி தரும் வரை யாரிடமும் எதையும் வெளியில் சொல்வது நல்லதல்ல. அப்படி மீறி வெளியே சொன்னால், என் ஜீவநாடி உன்னிடம் இருக்காது" என்று எனக்கும் கட்டளை இட்டார்.

"நான் ஏன் இனிமேல் வாய் திறக்கப் போகிறேன். "சரி" என்று தலையாட்டினேன். இது தான் சமயமென்று அகத்தியரிடம் நான் ஒரு வேண்டுகோளை விடுத்தேன்.

"எல்லா ஓலை சுவடிகளிலும் வெண்பா போன்று தூய தமிழில் சொல்லுகிறீர்கள்.  வெண்பா அறிந்தவர்கள் சிலர் தான். எல்லோருக்கும் தாங்கள் சொல்வதும் தூயத் தமிழில் சொன்னால் ஒன்றுமே புரியவில்லை என்கிறார்கள்.  அவர்களுக்கு வேறு ஒரு "அகராதியை" வைத்துதான் விளக்கம் அளிக்க வேண்டி இருக்கிறது.  அந்த விளக்கம் கூட சரியா - அல்லது தவறா? என்று சொல்வது கூட சந்தேகம்தான்" என்றேன்.

"என்னை என்ன செய்ய சொல்கிறாய்?"

"நான் தங்களின் சார்பாக நாடி படிக்கும் பொழுது இப்போதுள்ள தமிழில் செய்திகள் வெளி வருவதைப் போல என் கண்ணில் தங்கள் அருள்வாக்கு தென்படவேண்டும்.  இதற்கு தங்கள் அனுமதி தரவேண்டும்" என்றேன்.

"நல்ல தமிழுக்காக இலக்கணம் எழுதியவன் நான்.  என்னிடமே இப்படிக் கேட்கலாமா?" என்றார் அகத்தியர்.

"தயவு செய்து ஏற்று கொண்டு எல்லோருக்கும் புரியும் வண்ணம் எளிய தமிழில் தங்கள் அருள் வகைப் படிக்க அனுமதி தாருங்கள்" என்று மறுபடியும் கேட்டேன்.  சில நிமிடங்கள் மவுனமாக கழிந்தது.

பின்னர், என் வேண்டுகோளுக்கு அகத்தியரும் செவி சாய்த்தார்.  இதை விட வேறு பெருமை எனக்கு என்ன வேண்டும்.

"ஆகட்டும்.  இந்த சோமசுந்தரனில் இருந்து என் அருள் வாக்கை எளிய தமிழில் நீ காண்பாய்" என்று ஆசிர்வாதம் வழங்கினார்.

இதற்குள் - வெகு நேரமாக காணவில்லையே என்று வாசலில் இருந்த கார் டிரைவர் வீட்டுக்குள் வந்து விட்டார்.

கையில் நாடிக் கட்டைத் தூக்கி கொண்டு காரினுள் ஆவலோடு அமர்ந்திருக்கும் அந்த நபரிடம் சென்றேன்.

"நல்ல செய்தி" ஏதேனும் உடனே நான் சொல்வேன் என்று ஆவலோடு எதிர்பார்த்தார்.

"அகத்தியரிடம் கேட்டிர்களா?" என் கால்கள் இரண்டும் குணமாகும்னு அருள் வாக்கு சொன்னாரா?" என்று கேட்டார்.

"நிறைய விஷயங்களை சொன்னார்.  அதிருக்கட்டும்.  சமீபத்தில் நீங்கள் யாரயாவது கோபத்தில் காலால் உதைத்தீர்களா?" என்றேன்.

"இல்லையே"

"பெற்ற தாயை உதைத்திருக்கிறீர்கள்"

 "இல்லை"

"நன்றாக யோசித்து சொல்லுங்கள்.  தன்னை மறந்த நிலையில் "தவறி" காலால் உதைதீர்களா?" என்று மீண்டும் வற்புறுத்தி கேட்டதும் அவருக்கு என்னவோ போலாயிற்று.

வெகு நேரம் யோசித்தார்.

பின்னர், கோபத்தில் சில சமயம் இப்படி எட்டி உதைப்பதுண்டு.  ஆனால் யாரும் பதிக்கபட்டதில்லை என்று அழுத்தம் திருத்தமாக சாதித்தார்.

இனியும் நேரம் கடத்துவது சரியில்லை என்று அகத்தியர் என்னிடம் சொன்னதை மேலோட்டமாகச் சொல்லி, "அந்தப் பையன் உயிரோடு இருக்கிறானா இல்லையா?" என்று ஒரு போடு போட்டேன்.

அவரால், பேச முடியவில்லை.  அதிர்ந்து போனார்.  தலை குனிந்தபடியே பேசினார்.  "இருக்கிறான் ஆனால் எங்கிருக்கிறான் என்று தெரியவில்லை".

"சரி.  இப்போது அந்தப் பையனை கண்டுபிடித்து அவனது எதிர்காலம் கடைசி காலம் வரை வேண்டிய உதவியைச் செய்யத் தயாரா?" என்றேன்.

"எதற்காக நான் அவனுக்கு கடைசி வரை உதவி செய்யணும்? அவனுக்கும் ஏன் கால் நோய்க்கும் என்ன சம்பந்தம்? என்று திகைத்து கேட்டார்.

தங்களது கேள்வியை அகத்தியரிடமே கேட்போமென்று அவர் முன்னால் நாடியைப் படிக்க ஆரம்பித்தேன்.

இது வரையிலும் கடினமான வெண்பா முறையில் அருள் வகைச் சொல்லிக் கொண்டிருந்த அகத்தியர் முதன் முதலாக எளிய தமிழில் சோமசுந்தரன் என்கிற நபருக்கு அருள் வாக்கு சொல்ல ஆரம்பித்தார்.

"கடக ராசியில், ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்த நீ குறுக்கு வழியில் பணம் சம்பாதித்து பணக்காரனாக மாறினாய்.  பணம், பதவி, சுகம் வர வர பழங்கதையை அறவே மறந்தாய்.  மதுரை மீனாக்ஷி அம்மன் கோவிலில் நான்கு அணாவுக்கு பட்டை சோறு வாங்கிச் சாப்பிட்டு, பாதி நாட்கள் பட்டினியாய் கிடந்தது எமக்குத் தெரியும். ஆனால் நீ இதை அடியோடு மறந்து விட்டாய்."  என்று சொன்னவர் மேலும் தொடர்ந்தார்.

"பணம் கொழுத்தது" உன் ஊளைச் சதையும், கெட்ட நண்பர்களுடன் சேர்ந்து புத்தியும் வேறு விதமாக கொழுத்தது.  மதி மயக்கத்தால் நல்லது சொல்ல வந்த பெற்ற தாயை ஒரு சமயம் எட்டி உதைத்தாய்.  அவளோ பொறுத்து கொண்டாள்.  ஆனால் அந்த வேலைக்காரச் சிறுவனை காலால் எட்டி உதைத்தது என்ன நியாயம்?"

"வறுமை கொடுமையால் அன்றாடம் கஞ்சி சாப்பிட்டுக் கொண்டிருந்த முருகனை வேலைக்கு சேர்த்தாய்.  மிலேச்சன் நாட்டிற்கு "சாமி" சிலை கடத்தவும் உன்னை சிலர் நிற்பந்தப்படுத்தினர்.  மது போதையில் நீயும் இதற்கு இணங்கினாய்.  இதற்கு வேலையாளாக முருகனை நியமித்தாய்".

"முருகன், எந்த முருகன் கோவிலுக்கு தினமும் சென்று பிரார்த்தனை செய்து வருவானோ அந்தக் கோவில் உள்ள முருகன் சிலையைக் கடத்த வேலைக்காரன் முருகனை நிர்பந்தபடுத்தினாய்.  இதற்கு அவன் உடன்படவில்லை.  ஆத்திரத்தில் அவன் வயிற்றில் காலால் எட்டி உதைத்தாய்."

"அவன் சுருண்டு விழுந்தான்.  உடனே மருத்துவமனையில் கொண்டு சேர்த்து, அவன் எங்கோ தவறி விழுந்து அடிபட்டதாக, பொய் சொல்லி தப்பித்தாய். உனக்கு பயந்து "முருகன் அங்கிருந்து ஓடிப்போனான். இதனால் அவன் குடும்பமே சீரழிந்தது."

"வறுமையின் உச்சத்தில் இருந்த முருகனின் பெற்றோர், மகன் தங்களைக் கை விட்டு ஓடிப்போனான் என்பதை நினைத்து, அந்தத் துக்கத்திலே மன நலம் பாதிக்கப்பட்டு, தெருவில், நடை பாதையில் அலைந்து கொண்டிருக்கிறார்கள்.  அவர்களது பாவமும் உன்னை வந்து சேர்ந்தது.

அவர்கள் இட்ட சாபம், முருகனின் சாபம், தெய்வ சிலையில் கை வைக்க முயன்றது, இதனால் தான் உன் கால்கள் சுவாதீனம் இல்லாமல் தொங்கிக் கொண்டிருக்கிறது.  இன்னும் நான்கு நாட்களுக்குள் முருகனை தேடி கண்டு பிடித்து தவறுக்கு மன்னிப்பு கேட்டால், உன் கால் நோய் அகன்றுவிடும்.

அவனிடம் காலில் விழுந்து மனிப்பு கேள். அவனுக்கு கடைசி வரை வாழ உதவி செய்.  மனநலக் குறைவால் பிச்சைகாரகள் போல் அலைந்து கொண்டிருக்கும் அவனது பெற்றோருக்கு சிகிச்சை அளித்து காப்பாற்று." இவ்வாறு அகத்தியர் நடந்த சம்பவங்களை புட்டு புட்டு வைக்க ... இதை கேட்டு பயந்து போனார் அவர்.

"முருகனை எப்படி கண்டுபிடிப்பது? எங்கே போய் தேடுவது?" கேட்டார் அவர்.

இதற்கும் அகத்தியர் பதில் சொன்னார்.

"சொல்கிறேன் கேள்.  முருகன், சிவகங்கை சீமையில் உள்ள காளையார் கோயிலில் வெளி மண்டபத்தில் நான்கு நாட்களாக குளிர் ஜுரத்தில் நடுங்கிப் படுத்துகொண்டிருக்கிறான்.  அவனைக் கண்டு பிடித்து காப்பாற்று.  அப்படி செய்ய முடியாமல் போனால் ... என்ற அகத்தியர் நிதானமாக "உன் கால்களுக்கு ஏற்பட்ட கதி கைகளுக்கும் பரவும்" என்று முடித்தார்.

"இது தான் பரிகாரமா?" - என்றார் அவர்.

"ஆமாம், முருகனை நீ காப்பாற்று.  உன்னை நான் காப்பாற்றுகிறேன்" என்று அவருக்கு அகத்தியர் தைரியம் கொடுத்தார்.

1 comment: