திடீரென்று காரில் இருந்து எழுந்த அலறல், பக்கவாட்டில் வந்து கொண்டு இருந்த எங்கள் போலீஸ் வாகனத்தில் இருந்த அனைவருக்கும் கேட்டதால், வாகனம் நிறுத்தப்பட்டது.
என்ன நடந்தது என்பதை அறிய வண்டியை விட்டு கீழே இறங்கினேன். அந்த கார் பக்கம் சென்றேன். காரின் பின்பக்கம் அமர்ந்திருந்த அந்த கோடீஸ்வரரின் இரண்டு பெண்களில் ஒருவள் வயிற்றுவலி தாங்காமல் துடித்து கொண்டிருந்தாள்.
நிமிடத்திற்கு நிமிடம் வலி அதிகமாகவே, அவள் தாங்க முடியாமல் வீரிட்டு கொண்டிருக்க, மற்றவர்கள் அவளுக்கு சமாதானம் சொல்லிக்கொண்டு இருந்தனர். அருகில் ஏதாவது ஆஸ்பத்திரி இருக்கிறதா என்று விசாரித்தபோது, அதற்கு இன்னும் இருபது மைல் தள்ளிப்போக வேண்டும் என்றும், விஷயம் தெரிந்த போலீசார் சொன்னார்.
அதுவரைக்கும் அந்தப் பெண்ணால் வயிற்று வலியைத் தாங்கிக்கொள்ள முடியுமா என்று எல்லோருக்கும் ஒருவித பயம் ஏற்பட்டது. இதுவரை மிக நன்றாக இருந்த அந்த பெண்ணுக்கு இப்படியோரு வலி திடீரென்று எப்படி ஏற்பட்டது என்று யாருக்கும் புரியவில்லை.
நான், அந்த அந்த பெண்ணின் தந்தையை அழைத்து, நாடியில் வந்த விஷயத்தை சொல்லி, முதலில் அந்த பெண் தனது இடுப்பில் மறைத்து வைத்த சில ஓலைச்சுவடிகளை எடுத்து வெளியில் போடும்படி சொன்னேன்.
"அப்படியா செய்தாள் அவள்?" என்று முதலில் கோபப்பட்ட அவர், பின்னர் செய்கையில் இறங்கினார்.
"என்னை மன்னிச்சுடுங்கோ" அகத்தியரின் ஜீவநாடி ஓலைச்சுவடி ஏதாவது ஒன்று என்னோடு இருக்கட்டுமே என்று உங்களுக்குத் தெரியாமல் எடுத்து வைத்துக் கொண்டேன். அதற்குப் பிறகு தான் படிப்படியாக எனக்கு வயிற்றுவலி வந்தது" என்று அழுதுகொண்டே என்னிடம் கொடுத்தாள் அந்த பெண்.
அவள் அந்த ஓலைச்சுவடிகளை கொடுத்த ஐந்தாவது நிமிடத்தில் அவளது வயற்றுவலி குறைந்தது.
அகத்திய பெருமானுக்கு நன்றி சொல்லிக்கொண்டேன். இருப்பினும், அந்த ஓலைச்சுவடியால் எந்தவிதப் பயனும் இல்லை என்பதால் அதை அப்படியே விட்டு விட்டேன்.
அந்த பெண்ணிற்காக நடு ரோட்டில் போலீஸ் வண்டியும், காரும் நின்றதால் சிறுது நேரம் ஓய்வு கிடைத்தது.
நான் ஏற வேண்டிய ரயில் நிலையம் அங்கிருந்து பார்க்கும்போது லேசாக மின் விளக்கு வெளிச்சத்தில் தெரிந்தாலும், சுற்றி வளைத்து போகும்போது சுமார் இருபது மைல் இருக்கும் என்று தெரிந்ததால், அங்கிருந்தவாறே அந்த கோடீஸ்வரரை அனுப்பிவிட்டு, நான் மட்டும் அந்த போலீஸ் வண்டியில் அந்த ரயில் நிலையத்திற்கு வந்து சேர்ந்த போது இரவு பன்னிரண்டு மணி.
ரயில் நிலையத்தில் ஒன்றிரண்டு பிச்சைகாரர்களைத் தவிர வேறு யாரும் இல்லை. சென்னைக்குச் செல்லும் ரயில் இரவு ஒரு மணிக்கு வரும் என்று தூக்க கலக்கத்தில் டிக்கெட்டை கொடுத்துவிட்டு டிக்கெட் கவுன்டரில் இருந்தவர் சொன்னார்.
முன் ஜென்ம தொடர்போ என்னவோ, என்னிடம் நாடி பார்த்த அந்த தமிழ்நாட்டு போலீஸ்காரரும், அவரது நெருங்கிய நண்பரும் எனக்குத் துணையாக பிளாட்பாரத்தில் அமர்ந்தனர்.
ஆசையோடு ஏதாவது டி வாங்கி குடிக்கலாம் என்றால் அங்கு எந்த டி கடையும் இல்லை. வெற்றிலை, பாக்கு கடை மட்டும் இருந்தது.
ஏறுவோர் இறங்குவோர் அதிகம் இல்லாத ரயில் நிலையம் அது என்பதால், எந்த ரயிலும் இரண்டு நிமிடத்திற்கு பின்னர் நிற்பதில்லை என்றும், பத்ராசலம் கோயில் திருவிழாவின்போது மாத்திரம், அருகில் உள்ள சிற்றூரில் இருந்து ஒன்றிரண்டு பயணிகள் ரயில் வந்து நிற்கும் என்றும் தெரிந்து கொண்டேன்.
அந்த ரயில் நிலையம் எதற்காகக் கட்டப்பட்டது என்று யோசித்தால், மற்ற எக்ஸ்பிரஸ் ரயில்கள் வந்தால், அவற்றிற்கு வழிவிட்டு ஒதுங்கிக்கொள்ள பயணிகள் ரயில்களுக்காகக் கட்டப்பட்டது என்று தான் தோன்றும். ஒன்றிரண்டு எக்ஸ்பிரஸ் ரயில்கள் நள்ளிரவில் அங்கு வருவதால், அதில் ஒன்றில் ஏறி சென்னைக்கு வருவதாக எண்ணி இருந்தேன்.
ஏற்கனவே மழையும் பெய்து, வெள்ளமும் கோதாவரியை அணைத்து கொண்டதால், அந்த நள்ளிரவு நேரத்தில் உடம்பு குளிரால் நடுங்க ஆரம்பித்தது. எனக்காக அந்த போலீஸ் அதிகாரி இருவரும் காத்துக்கொண்டிருந்தது, மனதுக்கு கஷ்டமாகவும் இருந்தது. அதே நேரத்தில் ஆறுதலாகவும் இருந்தது.
கொஞ்சநேரம் தமிழ்நாட்டு கதைகள், அரசியல், சினிமா மற்றும் நட்டு நடப்புகள் பற்றி பேசி கொண்டிருந்தபோது அரைக்கால் சட்டை அணிந்திருந்த நான்கு பேர் கம்பு தடிகளுடன் வெகு வேகமாக திடீரென்று பிளாட்பாரத்தினுள் வந்தனர்.
என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ளும் முன், ரயில்வே டிக்கெட் கவுண்டரின் கதவுகள் இழுத்து சார்த்தப்பட்டன. எரிந்து கொண்டிருந்த மங்கிய விளக்குகளும் அணைக்கப்பட்டன. மெல்லிய நிலவு வெளிச்சம் மட்டுமே இருந்தது.
வந்தவர்கள், ஓரிடத்தில் நின்று கொண்டு இப்படியும், அப்படியும் வர ஆரம்பித்தனர். எதோ ஒரு விபரீதம் நடக்கப்போவது போல் தோன்றியது. எனினும், அகத்தியர் இருக்க பயம் ஏன் என்று விட்டுவிட்டேன்.
அவர்கள் எங்கள் பக்கம் வந்ததும், என் அருகே இருந்த போலீஸ் அதிகாரிகளை சீருடையில் பார்த்ததும் மிரண்டு ஓட ஆரம்பித்தனர். உஷாரான போலீஸ்காரர்கள் அவர்களை துரத்தினார்கள். ஒரு கண்ணாமூச்சி விளையாட்டு அங்கு நடந்தது.
கால் மணி நேரம் கழிந்தது.
அந்த தமிழ்நாட்டு போலீஸ்காரரும், அவரது நண்பரும் ஒரே ஒருவனை பின் கை இரண்டும் கட்டிப்போட்டு தர தரவென்று இழுத்து கொண்டு வந்தார்கள்.
அவர்கள் என் அருகே வருவதற்கும், நான் சென்னைக்கு செல்ல வேண்டிய எக்ஸ்பிரஸ் ரயில் வருவதற்கும் சரியாக இருந்தது.
"யார் இவன்?"
"நக்சலைட் இயக்கத்தை சேர்ந்தவன். கூட வந்த மூன்று பேரும் தப்பிவிட்டார்கள். இவன் கீழே விழுந்து அடிபட்டதால் இவனை மாத்திரம் பிடிக்க முடிந்தது" என்றவர்கள், வாசலில் இருக்கும் போலீஸ் வேனில் அவனை கொண்டு செல்வதாக கூறி என்னிடம் இருந்து விடை பெற்றார்கள்.
ஏறுவதற்கு கூட முடியாமல் படியில் அமர்ந்து இருந்த சிலரை மிதித்து அவர்களது எரிச்சலுக்கும் கோபத்துக்கும் ஆளாகி, முண்டியடித்து கொண்டு ரயிலில் ஏறினேன். எங்கு பார்த்தாலும் மனித தலைகள். நிற்க கூட இடம் இல்லை.
நான் "ரிசர்வ்" செய்யவில்லை. எனவே "அன்ரிசர்வ்" கம்பார்ட்மெண்டில் ஏறினேன். எங்கிருந்தோ வந்த ஒரு டிக்கெட் பரிசோதகர், நான் இருந்த கம்பார்ட்மென்ட் அருகே வந்தார். "இங்கே வா" என்று தெலுங்கில் என்னை அழைத்தார்.
ஜன்னல் வழியே எட்டிப்பார்த்து, "என்னையா?" அழைக்கிறீர்கள் என்று கேட்டேன், ஒரு சிறு பதைப்போடு.
"அமாம்! பக்கத்து ரிசர்வ் கம்பார்ட்மெண்டில் ஒரு பெர்த் காலியாக இருக்கிறது. வருகிறாயா?" என்றார்.
சந்தோஷமாக ஒப்புக்கொண்டேன். அந்த கம்பார்ட்மெண்டில் ஏறி படுக்கையில் சாய்ந்துகொண்டேன். டிக்கெட் பரிசோதகர் வந்தார், பணத்தை நீட்டினேன்.
"ரிசர்வ் கம்பார்ட் மென்டிற்கு உரிய பணத்தை மாத்திரம் கொடுத்தால் போதும்" என்று, சற்று அதிகமாக நான் கொடுத்த பணத்தை மீண்டும் என்னிடமே திருப்பி கொடுத்தார்.
இப்படி கூட நல்லவர்கள் இருக்கிறார்களா இந்த உலகத்தில், என்று எண்ணிக்கொண்டேன். அந்த டிக்கெட் பரிசோதகருக்கும் தூக்கம் வரவில்லை. எனக்கும் நல்ல படுக்கை வசதி கிடைத்தாலும் கூட தூக்கம் வர மறுத்தது. அவரிடம் மெதுவாக ஊர் கதை, உலக கதை பற்றி பேச்சுக் கொடுத்தேன். கடைசியாக ஆந்திர மாநிலத்து நக்சலைட்டுகள் பற்றி பேச்சு வந்தது. டிக்கெட் பரிசோதகர் பெரிய ஆளாக இருப்பார் போலிருக்கிறது. நிறைய விஷயத்தைச் சொன்னார். அதில் ஒன்று.
"உங்களுக்கு தெரியாதா? கொஞ்ச நேரத்திற்கு முன்னால கொள்ளையடிக்க வந்த நக்சலைட்டுகளில் ஒருவன் போலீசில் பிடிபட்டுவிட்டான். டிக்கெட் கவுண்டரில் கொள்ளையடிக்க வந்திருப்பார்கள் போலிருக்கு. சரியாக போலீசில் மாட்டிக் கொண்டான். அவன் பெயர் நாகி ரெட்டியாம். பெரிய ஆளாம்."
"நாகி ரெட்டியா?" என்றேன் ஆச்சரியத்துடன்.
"ஏன்? அவனை பற்றி உங்களுக்கு தெரியுமா?" என்று என்னிடம் கேட்டார்.
"தெரியாது" என்றேன், சட்டென்று.
அவன், காணாமல் போன அந்த போலீஸ்காரரின் தம்பியாக இருக்ககூடும் என்று நான் நினைத்தேன். அது உண்மை என்று பின்னர் அகத்தியரே உறுதியாக சொன்னார். வியந்து போனேன்.
Om Agatheesaya Namah
ReplyDelete