எல்லோருக்குமே எதிர்காலத்தைப் பற்றித் தெரிந்து கொள்வதில் ஆசை இருக்கும். இதில் தவறே இல்லை. ஆனால் இதெற்கென்று நேரம், காலம் ஒன்று இருக்கிறதே. அதை பார்க்க வேண்டாமா?
எதற்காக தீவிரவாதிகளிடம் மாட்டிக்கொண்டோம்? இதை ஏன் அகத்தியர் முன்கூட்டியே என்னிடம் சொல்லவில்லை? அப்படி என்ன தவறு செய்து விட்டேன் என்று மனதில் ஒரு வருத்தம் இருந்தது.
நான், நாடிகட்டை எடுக்கப்போய், அது அந்த தீவிரவாதி கண்ணில் துப்பாக்கி போல் எப்படித் தோன்றியது? என்பதையும் அகத்தியரிடம் கேட்க ஆவல்.
அதற்குள் ரெண்டு வண்டிகள் அங்கு வர, அவர்கள் ஓடிப்போனது எல்லாம் கனவாகத் தோன்றியது. எல்லாமே நன்மைக்குத்தான் என்றாலும், இதுவும் அகத்தியர் திருவிளையாடல் என்று எண்ணிக்கொண்டேன்.
இந்த நிலையில் போலீஸ்காரர் ஒருவர் எனக்கு நாடி படிக்க முடியுமா என்று கேட்ட போது "இந்த நள்ளிரவு நேரத்தில், நடு ரோட்டில் நாடி பார்ப்பது அவ்வளவு சரியாக இருக்காதே" என்று மழுப்பினேன். நான் தயங்குவதையும் எதையோ சொல்லி வாயில் முணுமுணுப்பதையும் கண்ட அந்த போலீஸ்காரர் "சார்! நான் தமிழ்நாட்டை சேர்ந்தவன் தான். உங்களுக்கு பிடித்தமில்லை என்றால் படிக்கவேண்டாம்" என்று தமிழில் பேசினார்.
தமிழ்நாட்டை சேர்ந்தவன் என்று சொன்னதும் என்னையும் அறியாமல் ஒரு பூரிப்பு ஏற்பட்டது. மொழி தெரியாத இடத்தில் வந்து மாட்டிக் கொண்டிருக்கிறோம். எப்படியும் இவரது உதவி தேவைப்படும் என்பதாலும், சுயநலத்தின் காரணமாக நாடி படிக்க ஒப்புக் கொண்டேன்.
அப்பொழுது தான் அந்த போலீஸ்காரர் ஒரு குண்டை தூக்கிப் போட்டார். "சார்! உங்களுக்கு விஷயம் தெரியுமோ தெரியாதோ. இந்த நேரத்தில் இந்த வழியில் தனியாக வந்திருக்க கூடாது" என்றார்.
"ஏன்?"
"பல கொலைகளைச் செய்த நக்சலைட்டுகள் இங்கு தான் மறைந்திருக்கிறார்கள். தினமும் வழிப்பறிகள், கொள்ளைகள், ஏன் சில சமயம் கொலைகளும் இங்கு நடக்கிறது. அதற்காகத்தான் நாங்கள் பாதுகாப்பிற்காக வருகிறோம். இப்போது நாங்கள் இங்கு வந்ததே இந்த வண்டி பயணிகளுடைய பாது காப்புக்குகாக தான்" என்றார்.
இதை கேட்டு பதறிப்போனோம். தக்க சமயத்தில் பகவானாகப் பார்த்துத்தான் இவர்களை அனுப்பி இருக்கிறார் போலும் என எண்ணி, பத்ராசலம் ராமருக்கு ஆயிரம் நன்றிகளைச் சொன்னேன்.
"எங்கள் கூடவே காரை எடுத்துக் கொண்டு வாருங்கள். நீங்கள் எங்கு போக வேண்டுமோ, அந்த இடம் வரை பாதுகாப்புக்கு வருகிறோம்" என்று அவர் உற்சாகமாக சொன்னது எங்கள் வயிற்றில் பாலை வார்த்தது போல் இருந்தது. அதோடு அந்த போலீஸ்காரருக்கு இப்பொழுது கண்டிப்பாக நாடி பார்க்க வேண்டும் என்று உறுதியாகத் தோன்றியது.
சில மாற்றங்களை ஏற்பாடு செய்து கொண்டோம். நான் போலிஸ் வண்டியில் அந்த போலீஸ்காரருடன் ஏறிக் கொண்டேன். அந்த கோடீஸ்வரர் தன் குடும்பத்தோடு பின்னால் காரில் வந்து கொண்டிருந்தார்.
நாடியை பிரித்து அந்த போலீஸ்காரருக்கு படிக்க ஆரம்பித்தேன்.
"உன் குடும்பத்தில் பிறந்த ஒரு தம்பி, சிறு வயதில் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளி ஏறிவிட்டான். அவன் இப்பொழுது கூடாத நட்புடன் சேர்ந்து தீவிரவாதியாக மாறி கொலை கொள்ளை செய்கிறான். அந்த தம்பி இறந்து விட்டான் என்று நீயும், உன் வீட்டாரும் எண்ணிக் கொண்டிருகிறீர்கள். அவன், தன் பெயரை நாகி ரெட்டி என்று மாற்றி கொண்டு அலைகிறான். முடிந்தால் அவனை பிடித்துக் கொள்" என்று மிக சுருக்கமாக அகத்தியர் அருள் வாக்கைத் தந்தார்.
இதை கேட்டதும் அந்த அதிகாரியால் நம்பவே முடியவில்லை. வியப்பால் அதிர்ந்து போனார்.
"அவன் இப்பொழுது எந்த இடத்தில் இருக்கிறான் என்று அகத்தியர் சொல்லமுடியுமா?" என்று கேட்டார்.
"இலக்கை காட்டி விட்டோம். இனி எடுக்கிற முயற்சியால் அவன் தென்படுவான்". என்று முடித்து கொண்டார்.
அவருக்கு கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. அதே சமயம், இந்த விஷயத்தை மற்ற போலிஸ் நண்பர்களிடமும் சொல்ல முடியாமல் தவித்தார். இந்த செய்தி அவருக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி விடக்கூடாதே என்று நானும் அப்படியே விட்டு விட்டேன்.
என் நல்ல காலமோ - அல்லது அந்த போலிசின் நல்ல காலமோ - எங்கள் இருவரையும் தவிர வேறு போலீஸ்காரர்களுக்குத் தமிழ் தெரியவும் இல்லை. அவர்கள் இந்த நாடி பற்றிய விவரம் தெரிய ஆசைப்படவும் இல்லை.
இதற்குள் நான் ஏன் நக்சலைட் கூட்டத்தில் மாடிக் கொண்டேன்? என்பதை அகத்தியரிடம் கேட்ட பொழுது,
"காரில் வந்த பணக்காரப் பெண்களில் ஒருத்திக்கு "தீட்டு" வந்தது. அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல், நீ காரில் வைத்திருந்த அகத்தியரின் ஜீவ நாடியைப் பிரித்து பார்த்திருக்கிறாள். அது மட்டும் செய்திருந்தால் கூட பரவாயில்லை. அகத்தியரின் ஜீவநாடி ஓலைச் சுவடிகளில் சிலவற்றை திருட்டுத்தனமாக எடுத்து தனது இடுப்பிலும் சொருகிக் கொண்டு விட்டாள். இது எதோ ஓர் ஆசையில் செய்தாளே தவிர, உண்மையில் திருட வேண்டும் என்ற எண்ணத்தோடு செய்யவில்லை. அவளுக்கு ஓர் அதிர்ச்சியை உண்டு பண்ண வேண்டும் என்பதற்காக இப்படி ஒரு சம்பவம் நடந்தது. இது அகத்தியனின் மைந்தனான உனக்குத் தெரியாது. அதனால் தான் அந்த தீவிரவாதிகள் யாரும் உன்னை நெருங்கவில்லை" என்று கடகடவென்று சொல்லி முடித்தார்.
இது என் மனதை மிகவும் சங்கடத்தில் ஆழ்த்தியது.
இப்போது என்ன செய்வது? காரை நிறுத்தி இந்த பெண்ணிடமிருந்து ஓலையைப் பெற்றுக் கொள்வதா? என்று கேட்டேன். "வேண்டாம். அந்த ஓலைச் சுவடியில் அகத்தியன் இல்லை. அது பழுதுபட்ட ஒலைச்சுவடியாக மாறிவிட்டது. அதனால் அவளுக்கு எந்தவிதப் பலனும் இல்லை. உனக்கும் லாபமில்லை" என்றார், அகத்தியர்.
இப்படி ஜீவநாடியில் ஓலைச்சுவடிகள் காணாமல் போவது இதுதான் எனக்குக் கிடைத்த முதல் அனுபவம். இப்படி ஆளாளுக்கு, அகத்தியர் மேலுள்ள பற்றுதல் காரணமாக எனக்குத் தெரியாமல் சில ஓலைச்சுவடிகளை எடுத்து கொண்டு சென்று விட்டால் என்ன செய்வது என்ற பயம் ஏற்பட்டது.
அப்பொழுது அகத்தியரே ஒரு அற்புதமான வழியைச் சொன்னார்.
பொதுவாக, அகத்தியன் அஷ்டமி-நவமி-பரணி, கார்த்திகையில் எந்தவிதமான வாக்கும் சொன்னதில்லை. இப்பொழுது அந்தப் பெண்ணால் நாடி முழுவதுமே தீட்டுப்பட்டதால் - இன்னும் ஒன்றரை மாதத்திற்குள் இந்த ஜீவநாடியை எடுத்துக் கொண்டு "கோமுக்" சென்று அங்குள்ள கங்கை நதி நீரால் புண்ணியாச்ச வசனம் செய்து விட்டு வா. அதற்குரிய வாய்ப்புகள் உனக்கு தானாக தேடி வரும்.
வட புலத்தைச் சேர்ந்த ஒரு ராணுவ அதிகாரியின் தொடர்பு உனக்குக் கிடைக்கும். அவன் குடும்பத்திற்கு மிகப் பெரிய பிரச்சினை ஏற்படும். அதை இந்த அகத்தியன் தீர்த்து வைப்பான். பின்னர் அவன் மூலம், நீ, இந்த "நாடியை" எடுத்து கொண்டு, ஹரித்வார், ரிஷிகேஷ், பத்ரிநாத், கேதார் நாத், பின்பு கங்கை அன்னை தோன்றும் "கோமுக்" செல்க.
இது ஒரு புறமிருக்க
இந்த ஓலைகட்டினை, "கோமுக்" சென்ற பிறகு இரண்டாகப் பிரித்துக் கொள். அதில் ஒரு பகுதியைப் பயன்படுத்தி பொது மக்களுக்காக எப்பொழுதும் படிக்கவும், மற்றொரு பகுதியை, நான் யாரிடம் கொடுத்து வைக்க வேண்டும் என்று விரும்புகிறேனோ அந்த நபரிடம் கொடுக்கவும்.
உன்னிடம் உள்ள ஓலை கட்டில், அகத்தியன் எந்நாளும், அதாவது, அஸ்வினி முதல் ரேவதி வரையுள்ள நட்சத்திரம் தோறும், பௌர்ணமி முதல் அமாவாசை வரை உள்ள அத்தனை திதிகளிலும் வாக்குரைப்போம்" என்று அருள் வாக்கு தந்தார்.
"அகத்தியரிடம் ஒரு விண்ணப்பம்"
"என்ன?"
"எனக்கு இரண்டு விஷயங்கள் தெரிந்தாகவேண்டும். தங்கள் ஜீவநாடி ஓலையை எடுத்து கொண்ட அந்த பெண் செய்தது நியாயமா? அவளுக்கு என்ன தண்டனை? இன்னொன்று எதற்காக தங்கள் ஓலைச்சுவடியை இரண்டாகப் பிரிக்க வேண்டும்? முழுமையாக அது என்னிடமே இருக்கக் கூடாதா?" என்று கேட்டேன்.
"கொஞ்சம் பொறுத்திரு, என்ன நடக்கிறது என்று பார்" என்றார்.
அடுத்த பத்தாவது நிமிடம் ----
எங்களுக்கு பின்னல் வந்து கொண்டிருந்த கோடீஸ்வரரின் காரில் இருந்து ஒரு பெண்ணில் அலறல் வெளிப்பட்டது. இருட்டு நேரத்திலும் வெளிப்பட்ட அந்த பெண்ணின் அலறல் அனைவரையும் நடுங்கச் செய்ததது.
Om Agatheesaya Namah
ReplyDelete