அந்த இஸ்லாம் பெரியவர் கொடுத்த கெடு முடிந்தது. நன்றாக தூங்கிகொண்டு இருந்த அந்த பெண் சட்டென்று கண் விழித்தாள். இதை கண்டு எல்லோருக்கும் சந்தோஷம்.
தெளிவான முகத்துடன் கண்விழித்த அந்த பெண் அருகில் இருந்த உறவினர்களை பார்த்து சிரித்தாள்.தனக்கு இதுவரை நடந்தது எதுவும் அவளுக்கு தெரியவில்லை. தனக்கு ஏதோ உடல் நலம் சரியில்லை என்றும் இப்போது முற்றிலும் குணம் அடைந்துவிட்டதாக எண்ணிக் கொண்ட அந்த பெண் முதலில் கேட்டது இதுதான்.
"தாகம் எடுக்கிறது. தண்ணீர் கொடுங்கள்"
கொஞ்சம் போல தண்ணீர் கொடுத்தார்கள்.
அது அவளுக்குப் போதவில்லை. மறுபடி மறுபடி தண்ணீர் கேட்டு நச்சரித்தாள். அவர்கள் சொட்டு சொட்டாகத்தான் ஜலத்தை நாக்கில் விட்டார்கள்.
அவளுக்கோ தாகம் அடங்கவில்லை.
கத்தினாள். கூப்பாடு போட்டாள். சுற்றி இருப்பவர்களுக்கு சாபம் கூட இட்டாள்.
இருந்தாலும் இஸ்லாம் பெரியவர் கொடுத்த தைரியத்தால் அவளோடு இருந்தவர்கள் தண்ணீர் கொடுக்க மறுத்து போரடிகொண்டிருந்தனர்.ஒரு சமயத்தில் அவர்கள் எல்லோரையும் உதறி தள்ளிவிட்டு வெளியே ஓடவும் அவள் துடித்தாள்.
இந்தக் காட்சி எல்லோருக்கும் கஷ்டத்தை கொடுக்கத்தான் செய்தது. இப்படி ஒரு சூழ்நிலைக்கு இந்தப்பெண்ணைக் கொண்டு வந்து விட்டோமே என்று. இதெற்கெல்லாம் காரணமான அந்தப் பெண்ணின் மாமனும் வருந்தினார்.
கேட்கிற தண்ணீரை கொடுத்து தான் விடுவோமே. தண்ணீர் கேட்டு அதை கொடுக்காமல் போனால் பாவம். ஒருவேளை தாகத்தில் தவித்து அவள் செத்துபோனால், பிற்காலத்தில் இவள் எப்படி வந்து பய முறுத்துவாளோ தெரியவில்லை. அதை விட தண்ணீர் சாப்பிட்டு அதனால் செத்துப் போனாலும் பரவாயில்லை, என்று தான் அங்குள்ளோருக்கு எண்ணம் வந்தது.
ஆனால் இஸ்லாம் பெரியவரின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு 3 மணி நேரம் எப்போது கழியும் என்று கடிகாரத்தையே பார்த்துக் கொண்டிருந்தனர். நேரம் அதிகரிக்க அதிகரிக்க அந்தப்பெண்ணின் ஆர்ப்பாட்டம் கூடியது.
பயந்து போன உறவினர்கள் அந்தப் பெண்ணை இஸ்லாமியப் பெரியவரிடம் மீண்டும் அவசர அவசரமாக அழைத்து சென்றனர். அங்கு சென்ற பின்னரும் அந்த பெண்ணின் ஆர்ப்பாட்டம் குறையவில்லை. இஸ்லாமிய பெரியவர் கொடுத்த தைரியத்தின் பேரில் தண்ணீர் கொடுக்காமல் சமாளித்தனர்.
இரவு மணி ஏழரை தாண்டியது.
அந்த பெண்ணின் ஆர்ப்பாட்டம் கொஞ்சம் கொஞ்சமாக அடங்கியது. அவள் சுருண்டு படுத்துவிட்டாள்.
"இப்பொழுது அவளுக்கு தண்ணீர் கொடுக்கலாம். தண்ணீர் மட்டுமல்ல அவள் கேட்கும் எதையும் கொடுங்கள்.அவள் உடலில் ரத்தத்தோடு ரத்தமாக கலந்திருந்த வசிய மருந்து கரைந்து விட்டது. அவள் மற்றவர்களை போல இயல்பான நிலைக்கு வந்துவிட்டாள்" என்று அந்த இஸ்லாம் பெரியவர் சொன்னதும் அங்கிருந்தவர்களுக்கு சொல்லமுடியாத அளவுக்கு ஆச்சரியம் ஏற்பட்டது
"இது எப்படி சாத்தியம்?" என்று கேட்ட பொது அவர் சொன்னது இதுதான்.
:"இது அகத்தியர் எனக்கு கொடுத்த அற்புதமான மருந்து சாஸ்த்திரம். இங்கு நான் மாலை 4 மணிக்கே வந்ததற்கும் அகத்தியர் தான் காரணம். விபத்தில் எனக்கு அடிபடவில்லை என்றாலும் நன்றாக ஓய்வு எடுக்கும் படி டாக்டர் சொன்னார். அதன்படி நான் படுத்து ஓய்வு எடுத்தேன். அப்போது ஏதோ ஒரு உள்ளுணர்வு.
அகத்தியரே வந்து என்னை தட்டி எழுப்பி "உனக்காக ஒரு பெண் நோயாளி காத்திருக்கிறாள்.சீக்கிரம் போ. யாம் கூறிய வைத்தியம் செய். அந்தப் பெண்ணை குணப்படுத்து" என்று சொன்னது போல் இருந்தது. அதனால் தான் மாலை 4 மணிக்கே நான் வந்தேன். இல்லை என்றால் இரவு தான் இங்கு வருவேன்" என்றார்.
"வெறும் நாட்டு சக்கரையைத் தானே அவளுக்கு கொடுத்தீர்கள்."
"ஆமாம்"
"நாட்டு சக்கரைக்கு அத்தனை விசேஷமா?"
"ஆமாம்.அதில் அகத்தியரின் ஜீவ மந்திரம் கலந்திருக்கிறதே. அது தான் முக்கிய காரணம்".
"ஆச்சரியமாக இருக்கிறதே. இது எல்லோரையும் குணப்படுத்தி விட முடியுமா?"
"அது அகத்தியர் கருணையை பொறுத்தது. யந்திரமும் கொடுத்திருக்கிறேனே"
'சித்த பிரமை பிடித்து பேய் போல ஆடிய இவள், இப்பொழுது பெட்டிப் பாம்பாக அடங்கி போனாளே?"
"இவளுக்கு பேயும் இல்லை, பிசாசும் இல்லை.இது அவளுக்கு வேண்டாதவர்கள் செய்த ஒரு விஷ பரீட்ச்சை"
டாக்டர்களால் கூட இவளது நோயை குணப்படுத்த முடியாமல் கை விட்ட போது உங்களால் மட்டும் எட்டு மணி நேரத்தில் குணப்படுத்த முடிந்தது என்பது எங்களுக்கு ஆச்சரியம் தான்" என்றனர்.
"இன்னும் கொஞ்ச நாள் யாரும் எவரும் இவளிடம் எதை பற்றியும் பேச்செடுக்காமல் சந்தோஷமாக பேசி கொண்டிருங்கள். நல்ல படியாக இவள் மாறிவிடுவாள்".
"இதற்கு பணம்?"
"வெறும் மூணே கால் ரூபாய் கொடுத்தால் போதும்" என்றார் அந்த இஸ்லாமியப் பெருமகன்.
எவ்வளவு வற்புறுத்தியும் இதற்கு மேல் எந்தக்காசையும் வாங்கிக் கொள்ள மறுத்துவிட்டார்.
அந்தப்பெண், நன்றாக தூங்கி எழுந்த நிலையில் எந்தவித ஆட்டமும் போடாமல், கூச்சல் போடாமல், மிரள மிரள விழிக்காமல், நாம் எங்கு வந்திருக்கிறோம், எதற்காக வந்திருக்கிறோம், என்ன நடந்தது என்று தெரியாமல், சொந்தகாரகள் இருப்பதை அடையாளம் கண்டு கொண்டு சாதாரணமாக சிரிப்பது போல் சிரித்தாள்.
இதைகண்டு அந்த இஸ்லாமியப் பெரியவர் உள்பட அனைவருக்கும் மகிழ்ச்சி ஏற்ப்பட்டது.
ஒரு சில நாட்கள் கழித்து அந்தப்பெண்ணின் உறவினர் ஒருவர் என்னை சந்தித்து இந்த தகவல்களை தெரிவித்தார்.அதோடு அகத்தியரிடம் ஒரு சந்தேகத்தையும் கேட்கவேண்டும் என்றார்.
"ஒரு சிறு அளவு நாட்டுச் சர்க்கரையைக் கொண்டு ஒருவருக்கு ஏற்பட்ட சித்தப்ரமையை முறியடிக்க அகத்தியரின் மருத்துவ சாஸ்திரத்தால் முடியும் என்றால், அப்படிப்பட்ட சாஸ்த்திரத்தை ஏன் அந்த இஸ்லாமியப் பெரியவருக்கு மட்டும் சொல்லித் தரவேண்டும்? எங்களுக்கும் அதை சொல்லித்தரக்கூடாதா?
அகத்தியரிடம் இது பற்றி கேட்டேன்.
அவர் கூறிய பதில் ஆச்சரியத்தில் மூழ்கடித்தது!
"இன்றைக்கு அவர் பிறப்பிலே இஸ்லாம் மதத்திலே பிறந்திருந்தாலும், முன் ஜென்மத்தில் கொல்லி மலையில் சித்த வைத்தியனாக பல காலம் வாழ்ந்தவன். அப்போது அவனுக்கு கண்ணப்பன் என்று பெயர். அகத்தியனான எனக்கு கொல்லி மலையில் சிலை எழுப்பி பால் அபிஷேகம் செய்து மகிழ்ந்தான். கடைசிவரை சித்தனாக வாழ வேண்டும் என்று நினைத்தான். முடியவில்லை.
முன் ஜென்மத்தில் தன்னிடம் வைத்தியம் பார்க்க வந்த பெண்ணிடம் தகாத முறையில் நடந்ததால் அவனது பெயர் கெட்டது.தொழிலும் கெட்டது. கடைசியில் அவன் மரிக்கும் பொழுது அகத்தியனை நோக்கி வணங்கியதால் இந்த ஜென்மத்தில் மறுபடியும் பிறந்தான்.
சாகும் முன்பு "அடுத்த ஜென்மத்திலாவது அகத்தியன் கருணையோடு சித்த வைத்தியம், அதர்வண வேதம் சூட்சுமம் படித்து மக்களுக்கு உதவ வேண்டும்" என்று கேட்டான். அதற்கு அகத்தியனும் மனமிரங்கினோம். அதன் விளைவு தான் இன்றைக்கு எண்பத்தைந்து வயதிலேயும் இளம்காளை போல்துடிப்புடன் செயல் படுகிறான். அவனைபோன்ற குருபக்தி இருப்பவர்களுக்கு மட்டுமே நாலாயிரத்து பதினெட்டு வகை சூட்ச்சுமங்களை அகத்தியன் வழங்குவான்" என்று முடித்தார் அகத்தியர்.
படிக்க படிக்க எனக்கே வியப்பு ஏற்பட்டது. என்னை நானே ஒரு முறை கிள்ளி பார்த்துக்கொண்டேன்.
எனக்கும் இது போல சில சூட்சுமங்களை சொல்லித்தந்தால் என்னாலேயும் பலருக்கு உதவ முடியுமே என்று எண்ணிய பொழுது "முதலில் நாடியை முழுமையாக நம்ப வேண்டும். நாடி படிக்கும் உன்னையும், வருகிறவர்கள் நம்ப வேண்டும்.அப்படிப்பட்ட மக்கள் யார் யார் என்பதை நானே உனக்கு அடையாளம் காட்டுவேன். அவர்களுக்கு மட்டும் உன் நாவில் நானே இருந்து உடல் உபதைக்கான மருந்து சூட்ச்சுமத்தை நாசூக்காக சொல்வேன்" என்றார்.
இதை சொன்னதும் எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. சந்தோஷத்தில் சிரித்தபடியே அகத்தியருக்கு உடனே நன்றி சொன்னேன்.
"என்னெங்க! நீங்க? நாடியை நீங்களே பார்த்துக்கறீங்க! நீங்களே சிரிக்கறீங்க! என்ன விஷயம்?" என்று வந்தவர்கள் கேட்டனர்.
"அதெல்லாம் சரி!" என்றபடி பேச்சை மாற்றினேன்!
"இப்போ அந்த பெண் எப்படி இருக்கா? காலேஜுக்கு படிக்க போறாளா? இவளைக் கல்யாணம் செய்யத் துடித்தானே அவளது தாய் மாமன், அவர் எப்படி இருக்கார்?" என்று கேட்டேன்.
"அவருக்கு வரவேண்டிய சொத்தும் போச்சு. பொண்ணும் போச்சு. மகனுக்கு வாத நோய் தீரலைன்னு ரொம்ப மனம் உடைந்து போயுள்ளார். இவருக்கு நீங்க தான் ஏதாவது ஒரு நல்ல வழியைக் கட்டனும். அதுக்காகத் தான் நாங்க ஊரிலேருந்து வந்திருக்கோம்" என்றனர்.
"அந்த தாய் மாமன் நேர்ல வரணம். அகத்தியரை நாடி அவர் வந்தால் தான் அவருக்கும், வாத நோயால் அவஸ்த்தைபடுகின்ற அவரது பையனுக்கும் பதில் கிடைக்கும். அதற்கு தான் நாடி" என்றேன்.
"அவருக்காக இல்லாட்டியும் அந்த ஊன முற்ற பையனுக்காக ஏதேனும் நல்ல வழியை அகத்தியர் கிட்ட கேட்டு சொல்லுங்க" என்று கை எடுத்து கும்பிட்டு கெஞ்சி கேட்டு கொண்டனர்.
அவர்களது தூய எண்ணம் என் மனதில் இரக்கத்தை ஏற்படுத்தியது. அந்த ஊன முற்ற பையனுக்கு ஏதேனும் ஒரு வகையில் உதவி செய்ய வேண்டும் என்று எனக்கு தோன்றியது.
அகத்தியரை வேண்டி ஜீவ நாடியை புரட்டினேன்.
அப்போது அகத்தியர் சொன்ன தகவல் எனக்கு மாத்திரமல்ல நாடி கேட்க வந்த அனைவருக்குமே பேரதிர்ச்சியை தந்தது.
"எந்த ஊனமுற்ற சிறுவனுக்காக நாடி பார்க்க நினைக்கிறார்களோ, அதே சிறுவனைக் கொன்று விட்டு தானும் மாய்த்துகொள்ள அவனது கொடூரத் தந்தை ஊரை விட்டு கிளம்பிக் கொண்டிருக்கிறான். ஒன்பது மணி நேரத்திற்குள் முடிந்தால் தடுத்து நிறுத்துக.இல்லையேல் நிலைமை விபரீதமாகும்" என்று எச்சரிக்கையாக வந்தது அகத்தியர் ஜீவ நாடியில்.
Om Agatheesaya Namah
ReplyDelete