என் முன்பு வந்து நின்ற மாடசாமியின் இளம் வயது மனைவியைப் பார்த்தேன். கிராமத்துச் சூழ்நிலையில் வளர்ந்த பெண். கண்களில் கபடு, சூது இல்லை. உடம்பு தேறி வருவதற்கான அறி குறிகள் தென்பட்டது.
"எப்படியம்மா இருக்கே ?"
"அய்யா. எட்டு வருஷமா நெஞ்சில் வலி இருந்துக்கிட்டே இருந்துச்சு. நானும் போகாத டாக்டர் இல்லை. பார்க்காத வைத்தியம் இல்லை. இருக்கிற நிலத்தை வித்து எங்க அப்பாவும், அண்ணனும் நிறைய செலவழிச்சு பார்த்துட்டாங்க. ஆனா குணமாகலை."
"இப்போ எப்படி இருக்கே. அதை மொதல்ல ஐயா கிட்டே சொல்லுன்னு" அவளது பேச்சை இடை மறித்தான் மாடசாமி.
"கொல்லிமலை வைத்தியர் கிட்ட வாங்கிட்டு வந்த மூலிகைச் சாறை சாப்பிட்டு வந்தேங்க. இப்போ நெஞ்சில் வலி இல்லீங்க. மூச்சு நல்ல விட முடியுது. பசியும் எடுக்குது. சந்தோஷமா இருக்கேனுங்கய்யா!
"அப்படியா! ரொம்ப மகிழ்ச்சி!" என்றேன்
பிறகு மாடசாமியின் பக்கம் திரும்பி எப்படியோ உன் பொண்டாட்டியும் குணமாயிட்டா. உன் அண்ணன் குழந்தைக்கும் பார்வை கிடைச்சுப் போச்சு. கேட்க ரொம்ப சந்தோஷமா இருக்கு. அது சரி, அப்புறமா அந்த கொல்லிமலை சித்தர்கிட்டே போனாயா?" என்றேன்.
"ஒரு தடவை போய் வந்தேனுங்க. அதுல பாருங்க ஒரு ஆச்சரியம். நான் எங்கே அவரைப் பார்த்தேனோ, அந்த இடத்துல இப்ப குடிசையும் இல்லை - சித்த வைத்தியரும் இல்லை. அக்கம் பக்கத்லே விசாரிச்சதிலே இதுவரை அங்கு குடிசை போட்டு எந்த வைத்தியரும் குடி இருக்கலைன்னு சொல்றாங்க.
"அப்படியா?"
"எப்படியோ-யார் செஞ்ச புண்ணியமோ? எங்க அண்ணனுடைய குழந்தைக்கும் பார்வை கெடைச்சுப் போச்சு. என் மனைவிக்கும் உடல் நலம் சரியா போச்சு, ரொம்ப நன்றிங்க. அதை சொல்லத்தான் குடும்பத்தோட உங்களை பார்க்க வந்தோம்", என்று சொல்லி முடித்து கொண்டான் மாடசாமி.
அடுத்தபடியாக "பிழைப்புக்கு என்ன பண்ணப்போறீங்க. பழயபடி அடிதடி, கொள்ளை, கொலைன்னு இறங்கிட போறீங்களா?" என்று கிண்டலாய் கேட்டேன்.
"வேண்டாங்க. இனி நானும் சரி, என் அண்ணனும் சரி, அந்த பக்கம் தலை வெச்சுக் கூட படுக்க மாட்டேங்க" என்ற மாடசாமி "நீங்க சொன்னபடி எங்க அண்ணன் ஒரு ஆஸ்ரம விடுதியிலே வாழ்நாள் முழுவதும் சேவை செய்யப்போறதா முடிவெடுத்திருக்கிறாங்க. எனக்குத் தான் என்ன செய்யறதுன்னு தெரியலீங்க. அகத்தியர் கிட்டே கேட்டு சொல்லறீங்களா?" என்றான் மாடசாமி.
அவர்களுக்காக, அகத்தியரிடம் பிரார்த்தனை செய்து நாடியைப் பிரித்தேன். மாடசாமிக்கும், அவன் அண்ணனுக்கும் அகத்தியர் சில அறிவுரைகளை கூறினார்.
"ஞாயிறு தோறும் சூரிய வழிபாட்டை செய்து வாருங்கள். ஆறாவது ஞாயிறன்று உங்கள் இருவருக்கும் கை நிறைய சம்பளத்தோடு, நல்ல இடத்திலிருந்து வேலை கிடைக்கும். ஆனால் ஒரு நிபந்தனை, வாங்குகிற பணத்தில் ஒரு சிறு காணிக்கையை மாதத்திற்கொரு நாள் அநாதை குழந்தைகளின் உணவுக்காக கொடுத்து விட வேண்டும்" என்று உத்தரவும் போட்டார்.
சந்தோஷமாக ஏற்று கொண்டனர்.
அகத்தியர் அருள் வாக்குப்படியே அவர்கள் இருவருக்கும் மிகப்பெரிய நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவர், தன கம்பனியில் வேலை போட்டு கொடுத்தார். அதுவும் அவர்கள் பிராத்தித்து முடித்த ஆறாவது ஞாயிறன்று கிடைத்தது.
அவர்கள் இருவரும் சேர்ந்து, அகத்தியருக்குரிய மரியாதைக் கொடுக்க விரும்பி அனாதைக் குழந்தைகளுக்கு மாதந்தோறும் தங்களால் முடிந்த தொகையை காணிக்கையாக அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
அகத்தியர் காட்டிய வழியில் சென்று சித்த மருத்துவம் படித்து, ஏராளமான பேருக்கு தன்னால் இயன்ற மருத்துவ உதவிகளை மனம் கோணாமல் இன்று வரை செய்து கொண்டிருக்கிறான் மாடசாமி, என்பது தான் ஆச்சரியமான செய்தி.
மாடசாமியின் உடன் பிறவாச் சகோதரனுடைய குழந்தைக்கு இழந்து போன கண் பார்வை மீண்டும் வந்துவிட்டதால், அந்த குழந்தையின் பெயரிலேயே யார் யாருக்கு கண் நோய் இருக்கிறதோ, யாரெல்லாம் கண் நோய்க்கு மருந்து வாங்க வசதி இல்லாமல் இருக்கிறார்களோ, அவர்களுக்கெல்லாம் தன்னால் இயன்ற உதவிகளை மாடசாமியின் அண்ணன் செய்து வருகிறான்.
ஒரு தாதாவாக, கொலை கொள்ளை செய்பவனாக இருந்தவர்கள், அகத்தியரின் அருள் வாக்கினால் எப்படி மென்மையாக மாறிவிட்டார்கள், என்பதை நினைத்துப் பார்க்கும்போது பெருமையாக இருந்தது.
அன்றைக்கு மாடசாமியின் முன் தோன்றி மருந்து கொடுத்த அந்த சித்த மருத்துவர் யார்? என்ற கேள்வியை அகத்தியரிடம் பின்பு ஒரு நாள் கேட்டேன்.
"என் அருமை சீடன் போகன்தான் அவன். அகத்தியனின் வேண்டுகோளுக்கு இணங்க அவனே நேரில் வந்து கொடுத்த மருந்துதான் அது. இது அவர்கள் செய்த புண்ணியம்" என்றார் அகத்தியர்.
அப்படி என்றால் எல்லோருக்கும் இந்த பாக்கியம் கிடைக்குமா?
"கிடைக்கும். போகன் இன்றும் கொல்லிமலையில் உலாவிக் கொண்டிருக்கிறான். உண்மையில் போகனை வணங்கிக்கொண்டு போனால் ஏதாவது வைத்தியர் வேடத்தில் போகன் வந்து மருந்து கொடுத்து அவர்களது உயிரைக் காப்பாற்றுவான்".
"அப்படி என்றால், எப்படி போகரை அடையாளம் கண்டு கொள்வது. எல்லா வைத்தியர்களும் போகரைப் போன்றே காணப்படுவார்களே! யார் உண்மையான வைத்தியன்? விளக்க வேண்டும்" என்றேன்.
"கண்களில் ஒளிவட்டம் பளிச்சென்று தென்படும். துளசி மணம் யாரிடத்தில் தோன்றுகிறதோ அல்லது ஜவ்வாது கலந்த விபூதியின் வாசனை யாரிடத்தில் தோன்றுகிறதோ அவன் தான் போகன்"
மற்ற வைத்தியர்கள் எல்லாம்?
"போகனின் சிஷ்யர்களாக இருந்து, இளம் வயது முதல் சித்த வைத்தியத்தில் கரை கண்டவர்கள். அவர்கள் தினமும் போகனை வணங்கியே வைத்தியம் செய்வதால், அந்த சித்த வைத்தியர்களுடைய மருத்துவமும் பலிக்கும்" என்றார் அகத்தியர்.
இதை கேட்டதும் எனக்கு ஒரு மன நிம்மதி. என்றேனும் ஒருநாள் கொல்லி மலைக்குச் சென்று போகரை நேரிடையாகச் சந்திக்க வேண்டும் என்ற ஆசையும் பிறந்தது.
"போகர் தரிசனம், அவர் தன் கைப்பட எழுதிய மிக அற்புதமான மருத்துவ நூல் ஓலை வடிவிலேயே உனக்கு கிடைக்கும். அதனைப் படித்து மற்றவர்கள் பயன்படும் வகையில் ஒரு அற்புதமான நூலை பிற்காலத்தில் நீ எழுதப் போகிறாய்" என்று பின்பொருநாள் அகத்தியர் ஆசியும் வழங்கினார்.
"பத்ராசலம் செல். அங்கு பல்வேறு ஆச்சரியம் நடக்கும். ஸ்ரீராமனின் தரிசனம் மறை முகமாகக் கிட்டும். வாய்ப்பை நழுவ விடாதே", என்று அகத்தியர் அடிக்கடி எனக்கு நினைவூட்டிக் கொண்டிருந்ததால், அவர் வாக்குப்படியே நான் பத்ராசலம் புறப்பட்டேன்.
அங்கு செல்லும் முன்பு நான் அகத்தியரிடம் முன் கூட்டியே அனுமதி பெற்றிருக்க வேண்டும். கேட்க்காமல் சென்றதால் சரியாக மாட்டிக்கொண்டேன்.
ஆமாம்.
பத்ராசலம் ஸ்ரீராமர் கோவிலினுள் நுழைந்ததும் மழை பெய்ய ஆரம்பித்தது. தொடர்ந்து பெய்த மழையால் கோதாவரி ஆற்றின் வெள்ளம் பத்ராசலம் கோவில் அடிவாரத்தில் இடுப்பளவில் சூழ்ந்தது. கோவிலை சுற்றி நாலாபுறமும் தண்ணீர். எங்கும் வெள்ளக்காடு. நன்றாக மாட்டிக்கொண்டேன்.
Om Agatheesaya Namah
ReplyDelete