​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Tuesday, 22 March 2011

சித்தன் அருள் - 27

"எங்களுக்கு புத்திர பாக்கியம் உண்டா, இல்லையா? என்பதை மட்டும் அகஸ்தியரிடம் கேட்டுச் சொல்லுங்கள் என்று முகத்தில் ஏகப்பட்ட வெறுப்புகளைச் சுமந்து கொண்டு நடுத்தர வயது தம்பதிகள் இருவர் என்னிடம் கேட்டனர்.

யார் எதை சொன்னாலும் அதனை முழுமையாக நம்பி, பணத்தை, பணமாக எண்ணாமல் தண்ணீர் போல் செலவழித்து ஏகப்பட்ட பரிகாரங்களைச் செய்திருக்கிறார்கள்.  அப்படி செய்தும் அவர்களுக்கு புத்திரப் பாக்கியம் இதுவரை கிட்டவில்லை என்பது தெரிந்தது.

அந்த தம்பதிகளில் ஆணுக்கு வயது ஐம்பத்திரண்டு.  பெண்ணிற்கு வயது நாற்பத்தி மூன்று.  மருத்துவ இயல்படி அந்தப் பெண்ணிற்கு கருத்தரிக்கும் வாய்ப்பு இல்லை.  இருப்பினும், தங்களுக்குக் குழந்தை பாக்கியம் வேண்டும் என்ற ஏக்கத்தால் நம்பிக்கையோடு காத்திருந்தனர்.

அகஸ்தியர் காண்ட நாடி பார்த்தேன்.  சில பரிகாரங்களைச் செய்யச் சொன்னார்.  அப்படி செய்தும் எங்களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கவில்லை என்றும் அந்த நாடியை பற்றிக் குறை கூறினர்.

எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டுக் கொண்டேன்.  அவர்கள் அகத்தியர் நாடியைப் பற்றிக் குறை கூறும்போது எனக்குள் சிறு வருத்தம் ஏற்ப்பட்டது.  அது ஜீவநாடி அல்ல.  காண்ட நாடி என்பதால் சிறிது சமாதானமும் அடைந்தேன்.

பின்னர் அந்த தம்பதிகளுக்காக நாடி பார்க்க ஆரம்பித்தேன்.

ஒருவரின் பெற்றோர் முன் ஜென்மத்தில் கருவில் சிசுக்களைக் கொலை செய்ததும், இன்னொருவரின் முன்னோர் தாயையும், சேயையும் பிரித்து வைத்ததும், தம்பதிகளை ஒன்று சேர விடாமல் குறுக்கில் நின்றதும், புற்றுக்களை அழித்து குடில் கட்டினதும் தான் இதற்கு காரணம்.  இதுவே பின்னாளில் பிரம்மஹத்தி தோஷமாக மாறியதால் மூன்றாவது தலைமுறை இதனால் பாதிக்கிறது என்று முடித்தார்.

இதைப்படித்ததும், அந்தத் தம்பதியினர் கேட்ட முதல் கேள்வி இதுதான்.  மூன்றாவது தலைமுறை பாதிக்கிறது என்றால் என் உடன் பிறந்தவர்கள் அனைவருக்கும் புத்திரப் பாக்கியம் இருக்கிறதே! எப்படி அது எங்களை மட்டும் பாதிக்கும்? எங்களால் இதை நம்பவே முடியவில்லை" என்றார்கள் ஒரே குரலில்.

"நம்பவில்லை எனில் விட்டு விடுங்கள்" என்றேன்.

"சரி! இதற்கு என்னதான் பரிகாரம்" அதையாவது சொல்லுங்களேன்."

ராமேஸ்வரம் சென்று பிரம்மஹத்தி தோஷம் போக்க தில தர்ப்பணம் ஒன்றை முறைப்படி செய்வது என்று சொல்லி முடிக்கும் முன்பே நாங்கள் அதையும் செய்து விட்டோம் என்று சட்டென்று பதில் அளித்தனர்.

"ஆகம விதிப்படி தில தர்ப்பணம் செய்தாலும் அதில் மந்திரங்கள் பல சரியானபடி சொல்லாததினால் விட்டுப் போயிருக்கலாம்.  அதனால் தான் இன்னமும் பிரம்மஹத்தி தோஷம் இருக்கிறது என்றார் அகத்தியர்.

"அப்படியானால் மறுபடியும் ராமேஸ்வரம் செல்ல வேண்டுமோ?" என்று நம்பிக்கை இழந்து கேட்டனர்.

"இது உங்கள் விருப்பம்.  நாம் இதில் ஒரு போதும் தலையிட மாட்டோம்" என்றார் அகத்தியர்.

"வேறு ஏதேனும் பரிகாரம், பிரார்த்தனைகள் இருக்கிறதா?"

"பின்னால் நாகம் தன்னை நாற்பத்து ஐந்து நாட்கள் பூஜித்து அதை உங்களது குலதெய்வக் கோவிலில் நிறுவலாம்"

"நாங்கள் அதையும் செய்து விட்டோம் காளஹஸ்தியில்"

"எப்போது?"

"அது பன்னிரண்டு வருஷத்துக்கு முன்பு"

"எப்படி?"

வெள்ளியில் நாகம் செய்து அதை காளத்தி கோவிலில் ஹோமம் வளர்த்து உண்டியலில் போட்டு விட்டோம் - என்று பதில் வந்தது.

இப்படி அகத்தியர் நாடியில் பதில் வரும்முன்னே பொறுமை இல்லாமல் அந்த தம்பதிகள் உடனுக்குடன் பதில் தந்ததால் சில மணி நேரம் நாடியில் எந்த பதிலும் வரவில்லை.

பொதுவாக அகத்தியர் நாடியைப் படிக்கும் பொழுது முன்கூட்டியே சொல்லி விடுவார்.  இது தெய்வ ரகசியம் என்பதால் அதை யாரிடமும் நான் சொல்வது இல்லை.    இது வேண்டுமென்றே மறைக்கப்பட்டது என்று மற்றவர்கள் நினைக்கலாம். அது உண்மை அல்ல.

அவசியமிருந்தால் அதனை அவர்களிடத்தில் முன் கூட்டியே சொல்வதுண்டு.  அவர்கள் அகத்தியனை சோதிக்க வந்திருப்பதாக இருந்தால் அதற்கேற்ற மாதிரி பதில்கள் வரும்.

அத்தனைப் பரிகாரங்களையும் செய்து விட்ட பின்பும் தங்களுக்குப் புத்திரபாக்கியம் இல்லை என்று மிகவும் அழுத்தம் திருத்தமாக அவர்கள் பேசியதால் - பொறுத்திரு, பின்னர் யாம் விளக்குவோம் என்று முடித்துக் கொண்டார்.

இவர்களுக்கு புத்திரபாக்கியம் உண்டு என்று ஒரு வார்த்தையில் கூறிவிட்டால் அவர்களுக்குத் திருப்தியாக இருக்குமே என்று எனக்கு ஆதங்கம்.  ஆனால், சில மணிநேரம் பொறுத்திருக்கச் சொன்னது ஏன்? என்று மனதை அலைபாய விட்டேன்.

சில மணி நேரம் கழிந்தது.

இவர்களுக்கு புத்திர பாக்கியம் உண்டு என்று மீண்டும் ஒரே வரியில் சொல்லி முடித்துக்கொண்டார் அகத்தியர்.

எப்போது? என்ற கேள்விக்கு அகத்தியர் நாற்பது நாட்கள் கழித்து அவர்களை வரச் சொன்னார்.  இருந்தாலும் அவர்களுக்கு முழு நம்பிக்கையோடு அகத்தியர் நாடி அமையவில்லை என்பதை புரிந்து கொண்டேன்.

நாற்பத்து  ஐந்து  நாட்கள் கழிந்தது.

சொல்லி வைத்தார்ப் போல் அந்த தம்பதிகளில் கணவன் மட்டும் வந்தார்.  அவரது மனைவி வரவில்லை.  ஏன் என்று நானும் கேட்கவில்லை.  அவர்களுக்காக அகத்தியர் நாடியைப் பிரித்துப் படிக்க ஆரம்பித்தேன்.

"என்னதான் பிரார்த்தனை செய்தாலும் விதிப்படி உங்களுக்கு புத்திரபாக்கியம் என்பது இல்லை தான்.  ஆனால் மானசீகமாக நீங்கள் செய்த பிரார்த்தனை, பரிகாரங்கள் உங்கள் விதியை மாற்றி இருப்பதால் உடல் இயல்பின்படி ஒரு அற்புதம் நிகழும்.

அந்த அற்புதத்தால் தான் இத்தனை வயதிலும் கருத்தரிக்க வாய்ப்புண்டு.  அதை நாற்பத்து ஐந்து நாட்களுக்கு முன்பே சொல்லி இருப்பேன்.  ஏன் அப்போது சொல்லவில்லை எனக் கேட்கலாம்.

முதலில் மிகவும் நம்பிக்கையோடு எந்த பரிகாரமும் செய்யவில்லை.  இதற்குப் போய் பரிகாரம் செய்யவேண்டுமா என்று அரை குறை நம்பிக்கையோடு செய்தது ஓர் தவறு.  இரண்டாவது அவசப்பட்டு, பணத்தைக் கணக்கிட்டும் பரிகாரங்கள் எதுவும் முழ்மையாகச் செய்யவில்லை.  மூன்றாவதாக உங்களுக்கு பரிகாரம் செய்த நபர் முறையாக மந்திரங்களை ஓதவில்லை.  நான்காவதாக செய்திட்ட பரிகாரங்கள் அனைத்தும் தீட்டு கலந்துவிட்டது என்பதையும் நீங்கள் அறியமாட்டீர்கள்.  இதன் காரணமாகத்தான் எப்பொழுதோ கிடைக்க வேண்டிய புத்திரபாக்கியம் தள்ளிப் போய்க் கொண்டிருக்கிறது.

உங்களுக்குக் குழந்தை பிறக்கவில்லையே என்ற வருத்தத்தால், உங்களுக்காக எத்தனையோ வருஷங்கள் மானசீகமாக இறைவன் கருணை பெற பட்டினி   கிடந்தது அன்றாடம், ஜெபித்து, ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு உயிர் விட்டாளே உனது தாய் அவள் தான் உன் மனைவியின் வயிற்றில் கருவாக உதிக்கப்போகிறாள்.

ஆனால் உன் பொருட்டு போராடி வணங்கி பட்டினி கிடந்த உன்தாயை என்றைக்காவது நீயோ அல்லது உன் மனைவியோ அன்போடு, பாசத்தோடு, ஆசையோடு பேசியதில்லை.  எரிந்து விழுந்திருக்கிறாய்.  அவள் மனதை மிகவும் புண்படுத்தி இருக்கிறாய்.  அந்த தாய்க்கு நன்றிக்கடனாக, பிறக்கின்ற அந்தப் பெண் குழந்தைக்கு உன் தாயின் பெயரை வை.  அதோடு அந்த தாய்க்கு திதியை விழாவாக எடு.  இதை உள்ளன்போடு செய்வதாக இருந்தால் அந்த பெண் குழந்தை தங்கும்" என்று முடித்தார் அகத்தியர்.

கண்ணீர் மல்க அத்தனையும் கேட்டுக் கொண்டான் அவன்.  பல மாதம் சென்றது.

அகத்தியர் சொன்னபடி அந்த பெண் கருத்தரித்தாள்.  இது மருத்துவருக்கே ஆச்சரியம் ஏற்ப்படுத்தியது.

அகத்தியர் அருள் வாக்குப்படி அவனது தாய் பிறந்த நட்சத்திரத்தில் அவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது.இன்றைக்கு சென்னை நகரில் பிரதானமாக ஓர் இடத்தில் அந்தப் பெண் குழந்தை ஆரோக்கியமாக வளர்ந்து வருகிறாள்!

1 comment: