"தலைச்சன் பிள்ளையை தேடி ஒவ்வொரு ஊராக வந்தவனுக்கு, அவன் நினைத்தபடி குழந்தை கிடைக்கவில்லை. அருகில் உள்ள நகரத்துக்கு சென்றான். அங்கேதான் அவனுக்கு இந்த பெண் குழந்தையின் பெற்றோர் மூலம் அவள் தலைச்சன் குழந்தை என்ற தகவல் உறுதியாக தெரிந்து இருக்கிறது. எனவே தன் திட்டத்தை நிறைவேற்றிக் கொண்டான்.
அந்த குழந்தையை நேராக கடத்திக்கொண்டு பத்ரகாளி அம்மன் கோவிலுக்குத்தான் சென்றிருக்க வேண்டும். ஆனால் அவனுக்கு ஒரு திடீர் பயம்.
அநியாயமாக இந்த குழந்தைக் கொல்லப் போகிறோமே என்ற பயம் இல்லை. ஒருவேளை அவன் எல்லாம் முடிந்த பின்பு, தன்னைக் கழற்றிவிட்டலோ, அல்லது தன்னையும் கொன்று அவ்வளவு நகையுடன் ஓடிவிட்டாலோ என்ன செய்வது? என்றுதான் பயம் அடைந்தான்.
சின்ன வயதில் இருந்தே அவனுக்கு ஓர் சிறு நம்பிக்கை. எந்த காரியத்தைச் செய்தாலும் அதை தொடங்கும் முன்பு அது நல்லபடியாக நடக்க வேண்டும் என்றால் "திருப்பதிக்கு" பிரார்த்தனை செய்தால் போதும், அது நல்லபடியாக நடக்கும் என்ற நம்பிக்கை அவனிடம் இருந்தது.
எனவே, அந்தக் குழந்தையை கடத்தியதும், அவன் மனதில் திருப்பதி பற்றிய எண்ணம் மேலோங்கியது. எதற்கும் இந்த குழந்தையுடன் திருப்பதி போவோம், பிரார்த்தனை செய்வோம். பிறகு பத்ரகாளியிடம் இந்தக் குழந்தையைக் கொண்டு செல்வோம். அதற்கு முன்பு இந்த குழந்தையையும் தன்னையும் யாரும் அடையாளம் கண்டு கொள்ளக்கூடாது என்பதற்காக தானும் அந்தக் குழந்தையும் சேர்ந்து தலைமுடியை காணிக்கையாக கொடுத்து மொட்டை அடித்தவுடன் பத்ரகாளி கோவிலுக்கு செல்லலாம் என்பதுதான் அந்த குழந்தையைக் கடத்தியவனுக்கு திட்டம்.
ஆனால்
இவை அத்தனையும் வீணாக போயிற்று. அவன் தப்பித்துக் கொண்டான். குழந்தையும் பெற்றோரிடம் போய் சேர்ந்தது.
அந்த குழந்தை உயிரோடு பெற்றோருக்கு கிடைத்ததற்கு இன்னொரு காரணமும் உண்டு. அந்த பெற்றோர் அதி தீவிர திருப்பதி வெங்கடாசலபதியின் பக்தர்கள். ஆண்டுக்கு ஒரு தடவை கால் நடையாக சொந்த ஊரில் இருந்து திருப்பதிக்கு வந்து தரிசனம் செய்து கொண்டிருப்பவர்கள். வெகு நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாத அவர்களுக்கு, தீவிர பிரார்த்தனைக்கு, பிறகு இந்தக் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு "வேங்கடம்மா" என்று பெயர் சூட்டினார்கள். விரைவில் அந்த குழந்தையை திருப்பதிக்கு அழைத்து வந்து மொட்டை அடிக்கப் போவதாக வேண்டி கொண்டு இருந்தனர். அதற்குள் இப்படி ஒரு சம்பவம் நடந்து, நல்லபடியாக முடிந்து விட்டது, என்று சிறுகதை போல் சொல்லி முடித்தார், அகத்தியப் பெருமான்.
"அது சரி! அந்த அச்சுதனுக்கும், குழந்தையைக் கடத்தியவனுக்கும் தண்டனையே கிடையாதா?" என்று நான் கேட்ட பொழுது "பொறுத்திருந்து பார்" என்று மட்டும் விடை கிடைத்தது.
இனி அச்சுதனை பார்ப்போம்.
அவனுக்கு திடீர் கவலை ஏற்பட்டது. நரபலி கொடுக்க ஒரு குழந்தையை, அதுவும் தலைச்சன் குழந்தையை தூக்கி கொண்டு வா, புதையல் கிடைக்கும் என்று அந்த இளைஞ்சனிடம் சொன்னதும், தன் பேச்சை நம்பி அந்த இளைஞ்சன் உடனடியாகச் சென்றதும் மகிழ்ச்சி அடைந்த அவன்,
வெகு நாட்களாகியும் திரும்பி வராததால், அவன் ஒரு வேளை போலீஸ் உளவாளியாக இருப்பானோ என்ற பயமும் வந்தது. இரண்டாவது, யாரையும் நரபலி கொடுக்க வேண்டிய அவசியமும் இல்லை. புதையல் கிடைக்காது என்பதும் அவனுக்குத் தெரியும். அவனை கழற்றி விடவும் திட்டம் போட்டான்.
இப்படி ஒரு வேஷம் போட்டால்தான் ஊர் ஜனங்களை ஏமாற்றி அதிகார பலத்தோடு வாழமுடியும் என்று அச்சுதன் நினைத்தான். பத்ரகாளியை இதற்கு பயன் படுத்திக் கொண்டான். இது தான் உண்மை.
சில நாட்கள் கழிந்தது.
அன்று மாலை நேரத்தில் அந்த காட்டுக்குள் நாலைந்து பேர்கள் கையில் துப்பாக்கி சகிதம் வருவது போல் தெரிந்தது. இதை கண்டதும் பயந்து போனான் அச்சுதன்.
தன்னை சுட்டுக் கொல்ல, போலீசார்தான் வருகிறார்கள். இனி இங்கிருந்து தப்பித்து ஓடத்தான் வேண்டும் என்று நினைத்தான். ஏற்கனவே இருந்த பீதி பயம் அவனைத் துரத்த, தலை தெறிக்க ஓட ஆரம்பித்தான்.
எவ்வளவு தூரம் ஓடியிருப்பானோ தெரியாது. மூச்சிரைக்க பொத்தென்று கீழே விழுந்தான்.
அவன் விழுந்த இடம்
ஒரு பெரிய பாம்புப்புற்று என்று அவனுக்கு முதலில் தெரியவில்லை. அவன் விழுந்த வேகத்தில், புற்றிலிருந்து வெளிப்பட்ட ஒரு கருநாகம் அவனை தீண்டியது.
எத்தனை பேர்களைத் துடிக்க துடிக்க கொன்றானோ, எவ்வளவு பேர்களுடைய சாபத்தைக் கொட்டிக் கொண்டானோ, அவற்றுக்கெல்லாம் வட்டி சேர்த்து கருநாகத்தால் கடிக்கப்பட்டு துடிக்க, துடிக்க செத்தான்.
அப்போது
அவன் காதில் பத்ரகாளியின் ஆக்ரோஷமான சிரிப்பும், பச்சைக் குழந்தையின் பரிகாசமான சிரிப்பும் விழுந்தது.
"தெய்வம் நின்று கொல்லும் என்ற பழமொழிக்கு அச்சுதனின் மரணம் ஒரு எடுத்துகாட்டு" என்று பின்னர் ஜீவ நாடியில் அகத்தியர் சொன்ன போது இதெல்லாம் உண்மை தானா? என்று தோன்றியது.
"அகத்தியனை சந்தேகப்படலாமா?" என்று அவரே கேட்டுவிட்டு, "ஒரு தகவலை முன் கூடியே சொல்கிறேன். இன்று மாலை ஆறு மணியளவில் ஒருவன் உன்னைத் தேடி வருவான். அவன் ஒரு கோடீஸ்வரன், ஆனால் அவன் குடும்பத்தில் நிம்மதி இல்லை. இதன் காரணமாக வீட்டை விட்டு வெளியே வந்தான். பார்க்க பரதேசி மாதிரி இருப்பான். ஆனால் சிறந்த சிவ பக்தன். அவன் வாழ்க்கையில் சில அதிசயங்கள் நடக்க போகிறது. அதுவும் இங்கு வந்து போன பிறகு" என்று பூடகமாக சொன்னார்.
எத்தனையோ அதிசயங்களை நிகழ்த்திக் காட்டிய அகத்தியர் இப்போது என்ன அதிசயம் செய்து காட்டப் போகிறாரோ என்று எண்ணியபடி இருந்தேன்.
மாலை 6 மணி இருக்கும். அகத்தியர் சொன்னது போல் நடக்க முடியாமல் தள்ளாடியபடி ஒருவர் என் வீட்டு வாசலுக்கு வந்தார்.
"நீங்கள் தான் அகத்தியர் நாடி பார்ப்பவரா?" என்றார்.
"ஆமாம்" என்று தலை அசைத்தேன்.
"இந்தாருங்கள்" என்று ஒரு சிறு பாட்டிலைக் கொடுத்தார்! அதை பார்த்த போது, அதில் "பூச்சிக்கொல்லி மருந்து" என்று எழுதப்பட்டு இருந்தது. பாட்டிலில் பாதி மருந்தைக் காணவில்லை.
அதே சமயம் அவர் வாயில் நுரை லேசாக வெளியே வந்து கொண்டு இருந்தது!
சித்தன் அருள்............ தொடரும்!
சித்தன் அருள்............ தொடரும்!
GURUVE SARANAM
ReplyDeleteOm Agatheesaya Namah
ReplyDelete