ஆண்டவன் புண்ணியத்தில் எனக்கு எல்லா வசதிகளும் இருக்கிறது. ஆனால் மன நிம்மதியே இல்லை. ராத்திரி முழுவதும் தூக்கமே இல்லை. எதோ ஒன்று என்னை பயமுறுத்துகிறது. கழுத்தை பிடித்து நெறிக்கிராப் போல் இருக்கிறது. அகத்தியரிடம் கேட்டுச் சொல்ல முடியுமா? என்று ஒருவர் கேட்டார்.
ஆமாங்க, எனக்கும் அதே மாதிரி தினமும் நடக்குதுங்க என்று கணவரின் சொல்லை ஆமோதித்துப் பேசினார் உடன் வந்த பெண்.
அவர்கள் சொல்வதை எல்லாம் நிதானமாக கேட்டுக் கொண்டேன். உடனே நாடி படிக்கவில்லை.
எத்தனை நாளாக இப்படிப்பட்ட கெட்ட சம்பவம் நடக்கிறது?
"எட்டு மாசமா"
வேறு யாரு கிட்டேயாவது பொய் இது பற்றிக் கேட்டீங்களா? பரிகாரம் ஏதாவது செய்யச் சொன்னாங்களா?
"நிறைய பேர் கிட்டே போய்க் கேட்டேன். யாரோ, எதோ உங்களுக்கு பண்ணிட்டாங்க. அதை எடுக்கணம்: இருபதாயிரம் ரூபாய் ஆகும்னு சொன்னாங்க. அப்படியும் கொடுத்துப் பார்த்துட்டோம். ஆனாலும் அந்த கெட்ட சம்பவம் நடந்து கிட்டுத்தான் இருக்கு" என்றனர்.
மவுனமாக எனக்குள்ளே நான் சிரித்துக்கொண்டேன். அகத்தியர் நாடியை எடுத்துப் புரட்டினேன். சில செய்திகள் வெகு வேகமாக வந்தன.
"அய்யா, அகத்தியருக்கு இப்படிப்பட்ட செய்வினை பேரில் சிறிதும் நம்பிக்கை இல்லை என்று உங்களுக்குத் தெரியுமா?"
"தெரியாதுங்க!"
"எதையும் பகுத்தறிவுடன் கூடிய ஆன்மீகச் சிந்தனை வேண்டும் என்று தான் அகத்தியர் விரும்புகிறார். ஆகையினால் நீங்க நினைக்கிறபடி யாரும் உங்களுக்கு செய்வினை எதுவும் செய்யவில்லை" என்று சொல்லி முடித்த்தேன்.
இதை கேட்டதும் அவர்களுக்கு எதோ மாதிரி ஆகிவிட்டது. சிறிது நேரம் அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
பின்னர், இல்லை அய்யா, அந்த வீட்டுல எதோ ஒன்னு இருக்கு. நாங்க ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக கஷ்டப்படுகிறோம். என்ன செய்தால் நாங்கள் அந்த வீட்டில் நிம்மதியாகத் தூங்க முடியும். அகத்தியரிடமே இதைக் கேளுங்கள்" என்றார் வந்தவர்.
நாடியை புரட்டாமலே நான் கேட்டேன். "கெட்ட ஆவி எதுவும் இருப்பதாக நீங்கள் எண்ணினால் அந்த வீட்டை காலி செய்து விட்டு வேறு வீட்டிற்கு போகலாமே".
அப்படியும் நெனச்சோம். காலி செய்ய நினைச்ச, அது கூட முடியலீங்க. அதற்கும் தடங்கல் வந்து கொண்டே இருக்கு" என்றார் அவரது மனைவி.
மீண்டும் நாடியை புரட்டினேன்.
சில செய்திகள் வந்தது. ஆனால் அதை வெளியே சொல்லவில்லை.
அகத்தியர் என்னங்க சொல்கிறார்? என்று பவ்யமாகக் கேட்டார்.
வீட்டில் எல்லா அறைகளிலும் தினமும் சாம்பிராணி புகையைக் காட்ட வேண்டும். குறிப்பாக வெள்ளிக்கிழமை அமாவாசையன்று காலையிலும் மாலையிலும் இரு வேலையும் கண்டிப்பாக புகையை கட்டவேண்டும் என்கிறார்.
அதைத்தான் நான், நாலு மாசமா செய்துட்டு வரேன் சாமி, என்று உடனே பதில் கொடுத்தார்.
இதென்ன புதுக்கதையாக இருக்கிறதே. அகத்தியர் எதைச் சொன்னாலும் அதைச் செய்து விட்டதாக உடனுக்குடன் பதில் சொல்கிறாரே. ஒரு வேளை உண்மையில் இவர் அதர்வண வேதத்தால் பாதிக்கப்பட்டிருக்கிராரோ? அல்லது அகத்தியர் வேறு எதையோ மனதில் வைத்துச் சொல்கிறாரோ? என்று கூட எண்ணத் தோன்றியது.
மறுபடியும் அகத்தியர் ஜீவநாடியைப் புரட்டினேன். வேறு சில செய்திகள் வந்தன. அந்தச் செய்தியை வந்தவரிடம் சொல்லாமல் அவரை ஏற இறங்கப் பார்த்தேன். நெற்றியில் விபூதிப் பட்டை, நடுவில் குங்குமம், கைகளில் அங்கங்கே விபூதியை மூன்று வரியாக பட்டத் தீட்டிய நெற்றியுடன் பக்திப் பழமாக காட்சியளித்தார்.
இதற்கு மேல் அவருடைய மனைவி. நெற்றி வகிடில் குங்குமம், நெற்றியில் சந்தானம், குங்குமம், விபூதி, பட்டுபுடவை, முகத்தில் மஞ்சள் பூசி குளித்ததற்கு அடையாளமாக முகத்தின் ஆங்காங்கே திட்டு திட்டாக மஞ்சள் கறை, கழுத்து நிறைய செயின், காதில் வைரத்தோடு கையில் ஜோடிஜோடியாக ஆறு ஆறு நவரத்தினம் பதித்த கல் வளையல்கள்.
அகத்தியர் என்னிடம் சொன்ன தகவல் வேறு. வந்திருக்கும் இவர்கள் நிலை வேறு. இதில் எதை நம்புவது என்று எனக்கே சங்கடமாக போயிற்று.
"என்ன யோசிக்கிறீங்க. அகத்தியர் அய்யா இப்போதாவது நான் சொல்கிறதை நம்புகிறாரா இல்லையா?" என்று கேட்டார்.
இனியும் அவர்களிடம் மறைப்பதில் பயனில்லை என்று பேசத்தொடங்கினேன்.
"அய்யா, தாங்கள் தவறாக எடுத்துக் கொள்ளவேண்டாம். அகத்தியரை சோதிக்க வந்திருக்கிறீர்கள். தாங்கள் பகுத்தறிவு இயக்கத்தைச் சேர்ந்தவர்கள். அகத்தியர் சொல்வது எல்லாம் உண்மையா, பொய்யா? என்று ஆராய வேஷம் போட்டு வந்திருக்கிறீர்கள். உங்களுக்கென்று சொந்த வீடு எதுவும் கிடையாது. வாடகை வீட்டில் தங்கி இருக்கிறீர்கள். இன்னொன்று, நீங்கள் இருவரும் உண்மையில் கணவன், மனைவி அல்ல. நான் சொல்வது அனைத்தும் உண்மை தானே?" என்று கேட்டேன்.
இதைச் சொன்னதும் வந்தவர் சட்டென்று எழுந்தார். அவர் எழுந்ததைக் கண்டு அந்த அம்மாவும் எழுந்தாள்.
எதோ ரகளை ஆரம்பமாகப் போகிறது என்று நினைத்தேன். நடப்பது நடக்கட்டும் என்று அகத்தியரை நினைத்து மவுனமாக இருந்தேன்.
அடுத்த நிமிடம் --
அவர்கள் இருவரும் என் காலில் விழுந்து வணங்கினார்கள். அவர்கள் இருவருக்கும் பேச வார்த்தைகள் வரவில்லை. இரண்டு நிமிடம் மவுனம் எங்களுக்குள் நிலவியது.
"அகத்தியர் சொன்னது உண்மை தான். நாங்கள் இருவரும் கணவன் - மனைவி அல்ல. சிலர், அப்பாவி மக்களிடம் நாடி பார்ப்பதாகச் சொல்லி ஏமாற்றிப் பணம் பறிக்கிறார்கள் என்பதைக் கேள்விப்பட்டோம். இது எப்படி உண்மையா? இல்லையா? என்று கண்டுபிடிக்க கவரிங் நகைகளை அணிந்து பக்திமான்கள் போல் நடித்து உங்களிடம் வந்தோம். எங்களை மன்னித்து விடுங்கள்" என்றனர்.
"இது எனக்கு புதிது அல்ல. இந்த மாதிரி பலர் வந்து கடைசியில் ஏமாந்தும் போயிருக்கிறார்கள். உங்களுக்கோ பக்தியும் இல்லை. ஜோதிடம் - நாடிகளில் நம்பிக்கையும் இல்லை. பின் எதற்காக உங்கள் நேரத்தையும், என் நேரத்தையும் வீணாக்க வேண்டும். பணத்தை வாங்கி ஏமாற்றுவது என் தொழில் அல்ல. ஒரு வழிகாட்டியாக நாடியைப் படித்துச் சொல்கிறேன். நம்புகிறவர்கள் நம்பட்டும். நம்பாதவர்கள் போகட்டும். நான் பகவான் அல்ல, அகத்தியரும் மந்திரவாதி அல்ல. உடனே விதியை மாற்றுவதற்கு" என்றேன்.
"அய்யா, இதை தாங்கள் பெருங் குற்றமாகவே எண்ண வேண்டாம். இப்போது நான் மனப்பூர்வமாகவே நாடி பார்க்க விரும்புகிறேன். அகத்தியரிடம் கேட்டுச் சொல்லுங்கள்" என்றாள் அந்தப் பெண். கணவனாக நடித்த அந்த நபரும் கண்ணீர் மல்க நாடி படிக்க வேண்டினார்.
அகத்தியரை வணக்கி அவர்களுக்கு நாடி படிக்க ஆரம்பித்தேன்.
"சேலத்தை சேர்ந்த பெண் நீ. உன் பெயர் ஸ்வர்ணலட்சுமி. சிறு வயதில் ஒருவனிடம் மனதைப் பறிகொடுத்து கர்பமானாய்.இதனால் குழந்தை பிறந்ததும் ஊருக்கு வெளியே ஓர் மலையடிவாரத்தில் அந்தக் குழந்தையைப் பெற்றெடுத்தாய். அழகான அந்த ஆண் குழந்தை மூல நட்சத்திரத்தில் பிறந்தது. அது உயிரோடு இருந்திருந்தால் இன்றைக்கு ஊருக்கே ராஜாவாக இருந்திருப்பான். ஆனால் கள்ளத்தனமாகப் பிறந்த காரணத்தால் கள்ளிப்பால் கொடுத்து அதைக் கொன்று விட்டாய். இதனால் உனக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது. பின்னர் என்னதான் முயன்றும் உன்னால் அந்த நிகழ்ச்சியை மறக்கவே முடியவில்லை.இன்று வரை மன வாழ்க்கையும் இல்லை. குடும்பத்தாரும் கை விட்டதால் வயிற்று பிழைப்புக்குப் பல வழிகளில் எப்படி எப்படிஎல்லமோ பிழைக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்ப்பட்டிருக்கிறது" என்று அகத்தியர் நாடியில் சொன்னதைக் கேட்டு பொங்கி, பொங்கி அழுதாள் அந்தப் பெண்.
"என்ன பரிகாரம் செய்தால் இந்த வினை தீரும்?" என்று கேட்டாள் அவள்.
"நர்ப்பத்தைந்து நாட்கள் காலபைரவருக்கு தூங்கா விளக்கு ஏற்றி விட்டு வரட்டும்" என்று அருள் புரிந்தார் அகத்தியர்.
"அய்யா! எனக்கும் அகத்தியர் நாடி படிக்க வேண்டுமே" என்றார் அந்த பகுத்தறிவுவாதி.
"ஆன்மீகத் தன்மையில் புத்தியை செலுத்து. குல தெய்வக் கோவிலுக்கு ஒன்பது மாதம், ஞாயிறு தொடரும் பால் அபிஷேகம் செய். பின்னர் உன் வாழ்க்கையே திசை மாறி சிறப்பாக ஒளிர்வாய்" என்று அவருக்கும் அகத்தியர் வழி காட்டினார்.
ஒன்பது மாதம் கழிந்தது. அந்தப் பகுத்தறிவுவாதி, அகத்தியர் பக்தனாக மாறி விட்டார். சொந்தமாக தறி நெசவு வைத்து உற்சாகமாக பணச் செழிப்போடு உலா வருகிறார்.அன்றைக்கு கணவன்-மனைவியாக நடித்தவர்கள் உண்மையில் தம்பதிகளாக மாறிவிட்டனர் என்பது சிறப்புச் செய்தி.
Om Agatheesaya Namah
ReplyDelete