நாற்பது ஆண்டு காலமாக அகத்தியர் ஜீவ நாடியோடு மிக நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தாலும், இன்னமும் சில விஷயங்களை பற்றி என்னால் முழுமையாக தெரிந்து கொள்ள முடியவில்லை.
நாடி படிக்க மிக ஆவலோடு வருவார்கள். அவர்கள் எதிர்பார்ப்பு நிறையவே இருக்கும். அவர்களுக்காக நாடியை புரட்டும்போது சம்பந்தமில்லாத விஷயங்களைப்பற்றி அகத்தியர் சொல்லுவார். சில சமயங்களில் எதிரே அமர்ந்து இருப்பவருக்கு எந்த அருள்வாக்கும் வராது.
இது எனக்கு மிகப்பெரிய சங்கடத்தை உண்டு பண்ணும்.பல்லை கடித்துக்கொண்டு, மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திண்டாடுவேன். என்னால் பொய் சொல்லவும் முடியாது. அதே சமயம் அகத்தியரிடம் கண்டிப்பாக பேசி பலன் சொல்லுங்கள் என்று யாரும் கட்டாயப்படுத்தவும் முடியாது.
இதே நிலை தான் அன்றைக்கும் எனக்கு ஏற்பட்டது. எப்படியோ மனநிலை பதிக்கப்பட்ட அந்த பெண்ணை, தங்கசாலையில் இருக்கும் இஸ்லாமிய பெரியவர் மூலம் காப்பாற்ற வைத்த அகத்தியர் மீது அன்றைக்கு வந்த சிலருக்கு மிகவும் அளவு கடந்த நம்பிக்கை ஏற்பட்டுவிட்டது.
இதற்காக நன்றி சொல்ல வந்தவர்கள், அந்தப் பெண் தாய்மாமனது ஊனமுற்ற குழந்தைக் காப்பாற்ற முடியுமா? அவன் மற்றவர்களைப்போல் எழுந்து நடக்க இயலுமா? என்று எதேச்சையாக கேட்டனர்.
அவர்களுக்கு நாடி பார்த்தபோது "அந்த ஊனமுற்ற குழந்தையை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்யப் புறப்படுகிறான், அந்த குழந்தையின் தந்தை. இன்னும் 9 மணி நேரத்துக்குள் அவர்களை தடுக்க விட்டால் நிலைமை விபரீதம் ஆகிவிடும்", என்று அகத்தியர் எதிர்பாரதவிதமாக என்னிடம் சொன்னார். இதை படித்தபோது "இது என்னடா புதுக்கதையாக இருக்கிறதே" என்று நொந்து போனேன்.
"அய்யா! நாங்கள் என்ன செய்யட்டும்?" என்று கேட்டார்கள், அந்த ஊரிலிருந்து வந்தவர்கள்.
"அவர்களை எங்கு சென்றால் கண்டுபிடிக்க முடியும்?" இதையும் அகத்தியரிடம் கேட்டு சொல்லுங்கள்", என்று பதைபதைப்புடன் கேட்டார் வந்தவர்களில் ஒருவர்.
நாங்கள் அங்கு செல்வதற்குள் 9 மணி நேரம் ஆகிவிட்டால், அவர்களை உயிரோடு பார்க்கவே முடியாதா? அதையும் அகத்தியர் தான் சொல்லவேண்டும்" என்று மிகுந்த நம்பிக்கை கலந்த உரிமையோடு கேட்டார் இன்னொருவர்.
பொறுமையாக அவர்கள் சொல்வதை கேட்ட பின்பு ஜீவநாடியை பிரித்தேன்.
"ஊருக்கு வெளியே வடக்கு நோக்கிச் செல்லும் ஒரு ஒத்தயடிப் பாதை உண்டு. அதையும் தாண்டினால் சுற்றிலும் வயல் வரப்பு வரும். அந்த வரப்பு வழியே, வயலுக்கு நடுவில் நேராகச் சென்றால் வாய்க்கால் தெரியும். அந்த வாய்க்கால் ஓரமாக உள்ள புல்லந்தரையில் நடந்து சென்றால் வட கிழக்கு கோடியில் ஓர் நூற்றாண்டு புளிய மரம் தெரியும். அந்த புளிய மரத்தை சுற்றிலும் காரை, மண், சிமெண்ட், இந்த மூன்றும் கலந்து அமைக்கப்பட்ட சிறு மேடை வரும். இந்த மேடையில் தான் அவர்கள் இருவரும் இப்போது இருக்கிறார்கள்" என்று ஏதோ மர்ம கதையில் புதயலைப்பற்றி கோடிட்டு காட்டுவது போல் என் கண்ணிற்கு தெரிந்தது.
ஆனால் என்ன காரணத்தினாலோ அகத்தியர் ஊர் பெயரைச் சொல்லவில்லை. இதற்குப்பிறகு அவர்கள் எங்கு செல்வார்கள் என்றும் கட்டவில்லை. நான் சொன்ன திக்கைப் பற்றி நன்றாக மனதில் வாங்கிக்கொண்ட அவர்களில் ஒருவன், 'அடடா! அவர்கள் தெக்கூரில் இருக்கிறார்கள். வாங்க உடனே போய் கண்டு பிடித்து விடலாம்" என்றான்.
"தெக்கூருக்கு நாம் போகும் முன்பு அவன், அந்த பையனை ஏதாவது செய்துவிடக்கூடாதே........."
"அதான் அகத்தியரே அருள் வாக்கு கொடுத்து விட்டாரே.... இன்னும் 9 மணி நேரம் இருக்கே"
"இல்லைங்க. அந்த தெக்கூர்ல திருமுக்குளம் இருக்கு. அது ஆளை பழி வாங்கும் குளம். ஒரே பாசியாக இருக்கும். படிக்கட்டிலே ஜாக்கிரதையாக கால் வைக்கலைனா, அவ்வளவு தான். ஒரே வழுகலில் குளத்துக்குள் போய் தள்ளிவிடும். இவங்க அங்கே போய் மாட்டிக்கொள்ள கூடாதேன்னு தான் பயப்படறேன்"
"சரி! எதுக்கு வீணா கற்பனை, சட்டுன்னு கிளம்புங்க, அகத்தியர் அவர்களை காப்பாத்துவார். எனக்கு முழுமையான நம்பிக்கை இருக்கு" என்று அவர்களே தங்களுக்குள் சொல்லியபடி கிளம்பினார்கள்.
ஏதோ நான்கு பேருக்கு நல்லது சொன்னோமா, வந்தோமா என்றில்லாமல், தேவையில்லாமல் எதை எதையோ சொல்லி அகத்தியர் இப்படி பயமுறுத்துகிறாரே, இது தேவை தானா? என்று வெறுத்து யோசித்தேன்.
நாடி என்றால் கஷ்டத்தை போக்கும் ஒரு கருவியாக அல்லது வழிகாட்டியாக இருக்க வேண்டும். இந்த பரிகாரம் செய், அந்த கோவிலுக்கு போ என்று சொல்வதோடு நிறுத்திகொண்டிருந்தால் சந்தோஷமாக இருக்கும்.
எனக்கு கிடைத்த நாடி அப்படி அமையவில்லை என்பது ஒருவித வருத்தம் தான். நான் வருத்த பட்டதற்கு காரணம் உண்டு. என்னிடம் இருக்கும் ஜீவ நாடியில் ஒளி வடிவத்தில் அகத்தியர் பேசுகிறார். மற்றவர்களிடம் இருப்பது போல காண்ட நாடி இல்லை. காண்ட நாடியில், யார் நாடி பார்க்க வந்திருக்கிறார்களோ அவருடைய பெயர், பெற்றோர் பெயர், பிறந்த ஜாதகம் எல்லாம் முதலில் பார்க்கின்ற பொதுகாண்டத்தில் வரும்.
இதை படித்த உடன் நாடி பார்க்க வருகிறவர்களுக்கு, உடனே புளங்காகிதம் ஏற்ப்பட்டுவிடும். பிறகு பரிகார காண்டம், சாந்தி காண்டம், தீட்ச்சை காண்டம் என்று பல ஏடுகளை புரட்டுவார்கள். அவரவர்களுக்கு ஏற்ற மாதிரி பரிகாரங்கள் வரும்.
ஆனால் - என் கையில் இருக்கும் ஜீவ நாடியில்
இப்படி ஏதும் இல்லாமல் வருகிற போகிறவர்களுக்கு அவர்களைப் பற்றியோ அல்லது அவர்களுக்கு வேண்டியவர்களைப் பற்றியோ ஏதாவது ஒரு அதிர்ச்சியை தந்தால் நாடி பார்க்க வருகிறவர்களுக்கு பயம் தான் வரும். நம்பிக்கை ஒரு துளி கூட வராது. எதற்காக அகத்தியர் ஜீவ நாடியில் இப்படி நடந்து கொள்கிறார் என்று நான் கவலைப்படுவதுண்டு.
எப்படியோ அந்த இருவரும் நிச்சயம் காப்பற்றபடுவார்கள் என்பது மட்டும் என் மனதிற்கு உறுதியாக தெரிந்தது.அவர்களுக்காக பிரார்த்தனை செய்து கொண்டேன்.
இதற்கிடையில் ---
என்னை திக்கு முக்காட வைத்த அந்த கோடீஸ்வர பரதேசி என்ன ஆனார் என்பதை பற்றி அறியும் எண்ணம் ஏற்பட்டது. அவரை கடத்திக் கொலை செய்ய வந்தவர்கள், கொலை செய்யும் எண்ணத்தை விட்டு விட்டு தங்கள் குழந்தைக்காகவும், தன் மனைவிக்காகவும் கொல்லிமலைக்குப் போவதாக சொன்னார்களே, அவர்கள் என்ன ஆனார்கள். அவர்களைப் பற்றி இன்று வரை எந்த தகவலும் வரவில்லையே.எனவே அவர்களைப்பற்றியும் தெரிந்து கொள்ளவேண்டும் என்று எனக்குத் திடீரென்று தோன்றியது.
சில பிரார்த்தனைகளைச் செய்து விட்டு, அகத்தியர் நாடியைப் புரட்ட பூஜை அறையில் அமர்ந்தேன்!
"கோடீஸ்வரனான அந்த சிவபக்தனுக்கு அகத்தியனை சோதிக்க வேண்டும் என்று ஒரு ஆசை. உயிர் தப்பித்தான். உற்றாரும் மற்றோரும் அவனை அடையாளம் கண்டு மனமுவந்து ஏற்று கொண்டார்கள். இவனை கொலை செய்தால் அத்தனை சொத்துகளையும் அபகரித்து கொள்ளலாம் என்று யார் எண்ணினானோ அவன் இப்பொழுது தன் நினைவில்லாமல் பக்கவாதம் ஏற்பட்டு பேச முடியாமல் மருத்துவ மனையில் போராடிக் கொண்டு இருக்கிறான். விதியின் செயலைப்பார்த்தாயா?: என்றார் அகத்தியர்.
"அய்யா! எனக்கொரு சந்தேகம். கேட்கலாமா?" என்றேன்
"ஐயம் ஏதும் இருப்பின் கேள்"
அந்தக் கோடீஸ்வரர் தனது வீட்டை விட்டு வெளியேறி வெகு காலமாயிற்று. பல வருஷம் கழித்துத்தான் தமிழகத்துக்கு வந்திருக்கிறார்.அவருக்கோ சொத்து, சுகத்தில், குடும்பத்தில் ஆசை இல்லை. இன்னும் சொல்லப்போனால், அவரால் யாருக்கும் எந்தவிதத்திலும் தொந்தரவு இல்லை. அப்படி இருக்க, எதற்காக அவரைக் கொலை செய்யும் முயற்சி நடந்தது? அவர் தானிவர் என்று மற்றவர்களுக்கு எப்படி அடையாளம் தெரிந்தது?"
கேட்க பட வேண்டிய கேள்வி இது.மனைவி மற்றும் உறவினர்கள் கொடுமையால் சொத்துகளை விட்டு விட்டு பரதேசியாகப் போனாலும் சில வக்கிர புத்தி அவனிடம் இருந்தது"
"என்னை கொலை செய்து, என் சொத்துகளை கவர சிலர் முயற்சி செய்கிறார்கள். எனவே, நான் வெளியூரில் இருக்கிறேன். விரைவில் ஊருக்கு வரப்போகிறேன். எனக்கு பாதுகாப்பு கொண்டுங்கள்" என்று தனது நெருங்கிய நண்பர்கள் மற்றும் காவல் துறையினருக்கு அடிக்கடி கடிதம் எழுதி இருக்கிறான். அதனால் அவன் உயிரோடு இருக்கும் விஷயம் அரசல் புரசலாக உறவினர்கள் மற்றும் மனைவி குடும்பத்தினருக்கு தெரிந்து விட்டது."
"இவன் உயிரோடு இருக்கும் வரை தங்களுக்கு நிம்மதி இருக்காது" என்று தான் அவனைக் கொல்ல முயற்சி நடந்தது" என்று சொன்னார் அகத்தியர்.
இவ்வாறு சொன்ன அகத்தியர் திடீரென்று "சட்டென்று கிளம்பு, பத்ரச்சலத்துக்கு. அங்கு ஸ்ரீராமனின் தரிசனம் உனக்கு கிட்டும்" என்று முடித்தார்.
"பத்ரச்சலத்துக்கு போக வேண்டுமா? அங்கு ஸ்ரீராமன் தரிசனம் கிடைக்குமா?" என்று நான் வியப்பில் ஆழ்ந்து இருந்த போது........
"தட தட" என்று வாசல் கதவு தட்டப்பட்டது. கதவு தட்டப்படும் ஓசையே வித்யாசமாக இருந்தது.
"பத்ராசலம்... ஸ்ரீராமன் தரிசனம்........ தட தட என கதவு தட்டப்படும் ஓசை..... மனது நிலையில்லாமல் தவித்தது"
கதவை திறந்து பார்த்தால்..........
Om Agatheesaya Namah
ReplyDelete2021 following....
ReplyDelete