​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Friday, 18 March 2011

சித்தன் அருள் - 22


அரைகுறை மயக்கத்தில் கால்களை இயக்க முடியாமல் கிடந்த அந்தக் கோவிலின் தற்கால அதிகாரியை டாக்டர் நன்றாகப் பரிசோதித்தார். தெம்புக்காகவும், நரம்பு தளர்ச்சியை நீக்கவும் மருந்து கொடுத்தார்.

"பயப்பட வேண்டாம்.  விரைவில் எல்லாம் செரியாகிப் போய்விடும்" என்று தைரியம் கொடுத்து விட்டுச் சென்றார்.  இதை கேட்டதும் எல்லோருக்கும் மகிழ்ச்சி.

இறைவன் கருணையோ, இயற்கையின் கருணையோ - கோதாவரியில் சட்டென்று வெள்ளம் வடிந்து விட்டது.  மழை பெரும்பாலும் நின்று விட்டதால் கோவிலின் அடிவாரத்தில் உள்ள கடைகளில் மக்கள் சுதந்திரமாக நடமாடத் தொடங்கினர்.

இனியும் இங்கிருந்து என்ன செய்ய போகிறோம்.  ராமர் தரிசனம் கிடைத்தாயிற்று.  பக்த ராமதாஸ் பக்தியோடு ராமனுக்கு செய்த ஆபரணங்களையும் பார்த்தாயிற்று.  அதோடு கோதாவரி நதியின் பிரவாகத்தையும் காணும் காட்சி கிடைத்தது.  போத குறைக்கு கோவிலின் நிர்வாக அதிகாரிக்கு ஜீவநாடி படித்தாயிற்று. இனி கிளம்ப வேண்டியது தான் என்றெண்ணி ராமரை வணங்கி விட்டு வெளியே வந்தேன்.  பேச முடியாத சூழ்நிலையில் இருந்தாலும் ---

அங்கே கண்ட காட்சி என்னை ஆச்சரியப்பட வைத்தது.

அந்த தற்கால நிர்வாக அதிகாரி, தனது அலுவலக சிப்பந்திகள் துணையோடு எதோ ஒரு காணிக்கையை எடுத்து அங்கிருந்த உண்டியலில் போட்டார். அவரிடம் சென்று, "நான் கிளம்புகிறேன், உங்கள் ஆதரவுக்கு நன்றி" என்று பொதுவாகச் சொல்லிவிட்டு "எதோ உண்டியலில் போட்டீர்களே, ஏதாவது பிரார்த்தனையா?" என்று கேட்டேன்.

"அது ஒன்றுமில்லை.  மூணு நாளைக்கு முன்பு இந்த ஊருக்கு வந்த ஒருத்தர் என்கிட்டே ஒரு பொட்டலத்தைக் கொடுத்து உண்டியல்ல போடச் சொன்னார். அது இப்போது தான் நினைவுக்கு வந்தது.  அதைத்தான் போட்டேன்" என்றார் மெதுவாக.

"தங்களுக்கு தான் உடல் நலம் சரி இல்லையே.  அப்புறம் போடலாமே, இப்போது ஓய்வெடுத்துகொள்ளலாமே" என்றேன்.

"இல்லை சார்.  நீங்கள் அகத்தியர் கிட்டே வங்கித் தந்த அருள்வாக்கைப் பற்றி இப்போதுதான் நினைச்சுப் பார்த்தேன்.  அவர் சொல்றபடி செய்து செய்து விட்டுப் போவோமே" என்றார் மெதுவாக.  வார்த்தைகள் சன்னமாக வெளி வந்தன.  இந்த அரைமணி நேர கால் வலியே என்னால் தாங்க முடியவில்லை.  ஒருவேளை எனக்கு பக்க வாதம் வந்தா என் நிலைமை என்ன ஆகும்? என்று யோசித்துப் பார்த்தேன்.  உடம்பே நடு நடுங்கி போயிற்று. அதனால் அகத்தியர் சொல்றபடியே செய்துடறேன்" என்றார் மிகவும் உறுதியோடு.

"அப்படியே செய்யுங்கள்" என்று சொல்லிவிட்டு மலைப்படிக்கட்டில் இறங்கிக் கொண்டிருந்தபோது எனக்கோர் ஆச்சரியம் காத்திருந்தது.

"அய்யா என்னை உங்களுக்கு நினவு இருக்கா?" ன்னு தமிழ்ல பேசினார், மலையை நோக்கி வந்து கொண்டிருந்த ஒருவர்.  வேகமாகப் படி இறங்கிக் கொண்டிருந்த நான், என்னை நோக்கி, கையெடுத்து கும்பிட்ட நபரை உற்று பார்த்தேன்.

சில காலத்திற்கு முன்பு தான் சந்தித்திருக்க வேண்டும் என்று உள்ளுணர்வு சொல்லியது.  ஆனால் வெகு சுலபத்தில் அவரை அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை.  தயங்கி நின்றேன்.

அவர் பின்னே நடுத்தர வயதுள்ள ஒரு அம்மாள்.  வயதுக்கு வந்த பெண் குழந்தைகள் இருவர், பணக்கார தோரணையோடு மூச்சிறைக்கப் பட்டுபுடவையால் முகத்தைத் துடைத்து கொண்டு வந்தனர்.  அவரோ மெல்லிய வெள்ளை ஜிப்பா, மைனர் செயின், விலை உயர்ந்த பட்டு வேஷ்டியுடன், வாசனை திரவியங்கள் மணக்க சிரித்தபடியே வந்தார்.

"என்னை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லையா?" என்று அவரே கேள்வியைக் கேட்டுவிட்டு அதற்கானா பதிலையும் அவரே சொன்னார்.

"ஒரு நாள் சாயங்கால நேரத்திலே விஷத்தைக் குடிச்சுட்டு உங்க வீட்டுக்கு பரதேசிக் கோலத்தோடு வந்தேனே அவன் தான் நான்", என்றார் அடக்கமாக.

"நான் இந்த நல்ல நிலைக்கு வரக்காரணம் அகத்தியர் வாக்கு தான்" என்று சொல்லி தன மனைவி மகள்களை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

அவரைப்பற்றி நினைவுகள் ஞாபகத்துக்கு வந்தது.....

சொத்தை பறிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு உறவினர்கள் இவரை வீட்டை விட்டு விரட்டி அடித்தனர்.  உயிருக்கு பயந்து இவர் சந்நியாசி மாதிரி வடநாடு சென்று சில வருஷங்கள் ஆங்காங்கே அப்படி அப்படி வாழ்ந்து பின் தமிழ்நாட்டிற்குத் திரும்பினார்.  பின்னர் ஜீவ நாடி பற்றி அறிந்து என்னிடம் நாடி படிக்க வந்ததும் என்னையும் அகத்தியரையும் சோதிக்க விஷம் குடித்து விட்டு வந்ததும், அதன் காரணமாக வயிற்றில் வந்த நோய் குணமானதும் எனக்கு இப்பொழுது ஞாபகத்துக்கு வந்தது.

அந்த பரதேசிக் கோலம் எங்கே? இந்த படாடோப கோலம் எங்கே? என்று வியந்து போனேன்.

மனைவியோடு மீண்டும் ஒன்றாக இணைந்து விட்டதாகவும், சொத்துக்கு ஆசைப்பட்டு யாரெல்லாம் அவரை விரட்டி அடித்து, கொலை செய்ய முயன்றார்களோ அவர்கள் சிதறி ஓடி விட்டதாகவும், இருக்கிற சொத்தில் மூன்றில் ஒரு பகுதியை அநாதை அச்ரமதிர்க்குக் கொடுத்து விட்டு இப்போது அந்திரப்ரதேசத்தில் அன்மீகப் பயணம் செய்து கொண்டிருப்பதாகவும் கூறினார்.

"கடுமையான மழை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதே! எப்படி நீங்கள் இங்கு வந்தீர்கள்?" என்ற போது "இதுவும் அகத்தியர் புண்ணியம்" என்றார்.

"எப்படி?" என்று கேட்டேன்.

"காலையில் இங்கு புறப்பட்டபோது, வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது, காரில் செல்லாதீர்கள் என்று எல்லோரும் பயமுறுத்தி விட்டார்கள்.  எனக்கோ, இன்றைக்கு ராமரை இங்கு வந்து பார்த்தே ஆகவேண்டும் என்ற வைராக்கியம் ஏற்ப்பட்டது.  அகத்தியரை நினைத்துக் கொண்டேன்.  அவர் படத்தை காரின் முன்பக்க கண்ணாடியில் ஓட்டினேன்.  துணிந்து வந்து விட்டேன்.   நல்ல வேளை. வெள்ளம் வடிந்து கொண்டிருந்தது.  பத்திரமாக வந்து சேர்ந்து விட்டோம்", என்று சுருக்கமாக முடித்தார், அந்த கோடீஸ்வரர்.

பின்னர் என்னைப்பற்றி விசாரித்தார்.  நான் சாமி தரிசனத்தை முடித்து விட்டு புறப்பட இருப்பதை தெரிவித்தேன்.

"ஒரு மணி நேரம் பொறுத்திருந்தால், தாங்கள் எங்கு செல்ல வேண்டுமோ அங்கு கொண்டு விட்டு விடுகிறேன்" என்று அன்புக்கட்டளை போட்டார்.

"எதற்கு காத்திருக்கவேண்டும், பேசாமல் பஸ்சிலேயே சென்று விடலாம்" என்று தான் நினைத்தேன்.  ஒரு வேளை மழை காரணமாக பஸ் வரவில்லைஎன்றால் என்ன செய்வது? என்ற கேள்வியும் மனதிற்குள் எழுந்தது.  எனவே அவருடன் செல்ல முடிவு எடுத்தேன்.

பின்னர் அவரிடம் "சரி! காத்திருக்கிறேன்.  ஸ்ரீராமரை தரிசனம் செய்து விட்டு வாருங்கள்" என்று அந்தப் படிக்கட்டில் அமர்ந்து விட்டேன்.

மிகுந்த மகிழ்ச்சியோடு அவர் மனைவி மக்களை அழைத்துக் கொண்டு வேகமாகப் படி ஏறினார்.

பத்ராசலத்தில், சந்தோஷமான நிலையில் இவரை சந்திப்பேன் என்று நான் கனவில் கூட நினைக்கவில்லை. என் கண் முன் இவர் பரதேசிக் கோலத்தோடு விஷப்பாட்டில் சகிதம் வந்த காட்சி தான் கண்ணில் தெரிந்தது.

"விதி" ஒரு மனிதனை எப்படியெல்லாம் மாற்றுகிறது, என்பதை நினைத்து நினைத்து ஆச்சரியப்பட்டேன்.  பத்ராசலம் செல்! பல்வேறு அதிசயம் நடக்கும் என்று அகத்தியர் சொன்ன அருள்வாக்கு இது தானோ?  இல்லை இன்னும் இருக்கிறதோ? என்று ஆச்சரியப்பட்டுக் கொண்டே நேரத்தைக் கழித்தேன்.

சீக்கிரமே ராமரைத் தரிசனம் செய்துவிட்டு வேகமாக வந்த அந்த கோடீஸ்வரருடன் நானும் மகிழ்ச்சியுடன் கீழே இறங்கினேன்.

கார் முன் கண்ணாடி கதவில் அகத்தியர் மவுனமாகச் சிரித்துக் கொண்டிருந்தார்.  கையிலுள்ள ஜீவ நாடியை ஜாக்கிரதையாக அவரது பொற்பாதம் படும்படி வைத்து பிரார்த்தனை செய்தேன்.

அந்த கொடீஸ்வரருக்கு என்னுடன் உரையாடுவதில் ஏகப்பட்ட சந்தோசம். எனக்கோ நல்லபடியாக ரயில் நிலையத்திற்கு கொண்டு விட்டால் போதும் என்ற கவலை. காரணம் பாதை முழுவதும் மழை நீரால் பாதிக்கப்பட்டு இருந்தது.  காரை ஒட்டிய டிரைவரோ முரட்டுத்தனமாக வேகத்தில் வண்டியை ஓட்டினார்.  ஒரு சிறு பயம் இருந்தாலும், எந்த பிரச்சினை வந்தாலும் அகத்தியர் என்னைக் காப்பாற்றுவார் என்ற தைரியத்துடன் இருந்தேன்.

வெள்ளத்தின் காரணமாகவோ அல்லது இயல்பான சூழ்நிலையின் காரணமாகவோ மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருந்தது. இருட்டு நேரம் வேறு. டிரைவர் அந்த பகுதிக்கு புதியவராக இருந்ததால் எங்களையும் அறியாமல் பத்ராசலம் ரயில்வே நிலையத்திற்கு செல்லாமல் கார் திசை மாறி சென்றது. பாதையை தவறவிட்டதை டிரைவர் அறிந்து கொண்ட போதிலும், தூரத்தில் தெரிந்த வெளிச்சத்தை நோக்கி காரை செலுத்தினார்.  அங்கு சென்ற போது..........

என்னவென்று நாங்கள் தீர்மானிக்கும் முன்பு, ஆறு பேர்கள் கொண்ட இளைஞ்சர் கூட்டம் சட்டென்று காரை வழி மறித்தது.  சிலர் ஓங்கி கையால் காரை அடித்தனர்.  அவர்கள் அனைவரும் சிவப்பு சட்டை - அரை காக்கி நிஜார் அணிந்திருந்தனர்.  கையில் எதோ ஒரு கட்சியின் கொடி.  சரியாக மாட்டிக் கொண்டோம் என்று தெரிந்தது.  வெலவெலத்துப் போனேன்.

1 comment: