​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Friday, 18 March 2011

சித்தன் அருள் - 26


பத்ராசலம் சென்று பல வித்யாசமான அனுபவங்களை சந்தித்த பிறகு சென்னை திரும்பினேன்.  அங்கு கிடைத்த பல அனுபவங்களில் ராமரின் தரிசனமே ஆத்மா திருப்தியை தருவதாக அமைந்து இருந்தது.  அந்த அனுபவத்தில் மூழ்கியபடி சற்று ஓய்வெடுத்துக் கொள்ளலாம் என்று கண் அயர்ந்தேன்.

ஒரு நாள் காலை வாசலில் யாரோ ஒருவர் அழைக்கும் ஓசை கேட்டது.  அங்கு சென்று பார்த்த போது ஒரு வயதான பெரியவரும், நடுத்தர வயதைச் சேர்ந்த ஒருவரும் கையை கூப்பியபடி நின்றனர்.

உள்ளே அழைத்து என்ன விஷயம் என்று கேட்டேன்.  வெகு நேரமாகியும் அவர்களிடம் இருந்து எந்தவித வார்த்தைகளும் வரவில்லை.  துக்கம் நெஞ்சை அடைத்ததால் வார்த்தைகள் தடுமாறியது.  கண்களில் இருந்து நீர் வழிந்து கொண்டிருந்தது.

சற்று நேரம் கழித்து அந்த பெரியவர் வாய் திறந்தார்.

"என்னுடைய பையன் கப்பலில் என்ஜினீயராக பணிபுரிகிறான். ஒரு வாரத்திற்கு முன்பு திடீரென்று அவனிடம் இருந்து டெலிபோன் வந்தது. பெரும் சங்கடத்தில் இருப்பதாகவும், அவனுடன் பணி செய்யும் மேல் அதிகாரியால் அவன் உயிருக்கு மிரட்டல் ஏற்பட்டு இருக்கிறது என்றும் சொல்லி முடித்தான். பிறகு இதுவரை அவனிடம் இருந்து எந்த விதமானத் தகவலும் இல்லை. அவன் உயிரை அகத்தியர் தான் காப்பற்றித்தர வேண்டும்" என்று முடித்தார்.

"இப்பொழுது உங்கள் பையன் எங்கு இருக்கிறான்?" என்று கேட்டேன்.

"நெதர்லாந்து.  அங்கு சரக்குகளை ஏற்றிக் கொண்டு அவன் வந்த கப்பல் இப்போது சிங்கப்பூருக்கு வந்திருக்க வேண்டும்.  ஆனால், எவ்வளவோ முயற்சி செய்தும் அவனோடு தொடர்பு கொள்ளவே முடியவில்லை.  அவன் உயிருக்கு ஆபத்து ஏதும் ஏற்பட்டு இருக்காதே" என்று அந்த பெரியவருடன் வந்த நடுத்தர வயது இளைஞ்சர் கேட்டார்.

பெரியவரை பார்த்தேன்.  பதட்டத்தோடு காணப்பட்டார்.

"பதற வேண்டாம். அகத்தியரிடமே இந்த பொறுப்பை ஒப்படைத்து விடுவோம்" என்று அகத்தியரை வணங்கி நாடி படிக்க ஆரம்பித்தேன்.

"இன்றல்ல.நேற்றல்ல,இரண்டு ஆண்டாக அவன் உயிருக்கு பயம் ஏற்பட்டுள்ளது. தற்சமயம் அவன் உயிருக்கு எந்தவித ஆபத்தும் இல்லை என்றாலும், இனியும் தொடர்ந்து அந்த கப்பலில் பணி புரிய வேண்டாம்". என்று சொன்னார் அகத்தியர்.

"எப்படி சார்! அவன் ஆசைப்பட்டு விரும்பி படித்த படிப்பு. இப்போது கப்பலில் இரண்டாவது என்ஜினீயராக இருக்கிறான். இன்னும் ஆறு மாதத்தில் அந்த கப்பலில் முதன்மை என்ஜினீயராக மாறிவிடுவான்.அதனால், அதை விட்டுவிட்டு அவன் எப்படி வர முடியும்?" என்று கேட்டார் பெரியவர்.

"எது முக்கியம் என்பதை முதலில் முடிவு செய்து கொண்டுவிட்டு, பின்பு அகத்தியனை நோக்கி கேட்கட்டுமே" என்று சட்டென்று முடித்துக்கொண்டார் அகத்தியர்.

அகத்தியர் இப்படி சொன்னதும் அவர்களுக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது.

நானும் ஓலைக்கட்டை மூடி வைத்துவிட்டேன். வெளியே சென்று வருவதாக சொல்லிவிட்டு போன அவர்கள் ஒன்றரை மணி நேரம் கழித்து ஓடி வந்தார்கள்.

"நாங்கள், அவசரப்பட்டு எதோ சொல்லிவிட்டோம். எங்களுக்கு அவனது உயிர் தான் முக்கியம். பணமோ, பதவியோ முக்கியமில்லை. தயவு செய்து எங்களை அகத்தியர் மன்னித்து நல்வாக்கு சொல்லட்டும் என்றார்கள். இதை அகத்தியர் ஏற்று உத்தரவு கொடுத்தால் சொல்கிறேன் என்று விட்டு.

மறுபடியும் ஓலைக்கட்டை எடுத்தேன், படிக்க ஆரம்பித்தேன்.

"எந்த மைந்தனுக்காக இந்த அகத்தியனை நோக்கி ஓடி வந்தார்களோ, அந்த மைந்தனை பற்றி சொல்கிறேன். முதலில் நாணயமாகவும், நேர்மையாகவும் தான் நடந்து கொண்டான்.பின்னர், அவனும், இன்னும் சிலரும் சேர்ந்து கள்ளக்கடத்தலில் ஈடுபட்டனர்.

இது லட்சக்கணக்கான பண ஆதாயத்தைக் கொடுத்ததால் அந்த பணத்தைக் கொண்டு தான் பல இடங்களில் ஏராளமான நிலம், மனை வாங்கி போட்டான். இது சம்பளப் பணம் என்று எல்லோரையும் நம்ப வைத்தான்.  சமீப காலமாக அவன் செய்து வரும் இந்த கள்ளக்கடத்தல், அவனுடன் பணிபுரியும் மேல் அதிகாரிக்கு தெரிய வந்தது.  தனக்கும் இதில் பெருமளவு பங்கு வேண்டும் என்று அந்த அதிகாரி கேட்டான். அந்த மைந்தனுக்கோ அதில் இஷ்டமில்லை. எனினும், பெயரளவுக்கு பங்கு கொடுத்து வந்தான். இதை அவனது மேல் அதிகாரி ஏற்கவில்லை. காரணம், இன்னும் சில நாட்களில் இவன் முதன்மை எஞ்சினியராக ஆகிவிடுவான். தாம் ஓய்வு பெற்று விடுவோம்.

ஓய்வு பெரும் முன்னரே கணிசமானப் பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை அந்த மேல் அதிகாரிக்கு ஏற்பட்டது. இதுவே, அந்த மேல் அதிகாரிக்கும், அவனுக்கும் பெரும் பகையாக மாறிவிட்டது. அது இன்றைக்கு விஸ்வரூபம் எடுத்து, இவர்களின் மைந்தனுக்கு உயிர் பயமாகவும் மாறிவிட்டது.

இவன் நன்னெறியில் சென்று இருந்தால் இன்றைக்கு உயிருக்கு பயந்து துடித்து கொண்டிருக்க வேண்டாம். இவன் சம்பாதித்ததும் குறுக்கு வழி. அந்த மேல் அதிகாரி இவனை மிரட்டி பணம் பறிக்க முயற்ச்சிப்பதும் குறுக்கு வழி. இன்னும் மூன்று நாட்களுக்குள், தான் குறுக்கு வழியில் சம்பாதித்த அத்தனை பணத்தையும் அவன், தனது மேல் அதிகாரியிடம் ஒப்படைத்து விடட்டும். மறுத்தால் அவன் உயிரை அந்த முக்கண்ணனாகிய சிவன் தான் காப்பாற்ற முடியும். பின்னர் பதவி உயர்வும் கிட்டும் என்று அகத்தியர், இனியும் அத்தகைய குறுக்கு வழியில் அவன் செல்லாமல் இருப்பது நல்லது என்று முடித்தார்.

அகத்தியர் சொல்ல சொல்ல, அவர்களுக்கு முதலில் கொஞ்சம் நம்பிக்கை இல்லை. அவன் அப்படிப்பட்டவன் இல்லை என்று தான் வாதாடினார்கள்.  பின்னர், இதற்கு என்ன பரிகாரம் என்று கேட்டனர்.

"கருப்பு பணத்தை வைத்துக் கொண்டு அவன் என்ன தான் இறைவனுக்குப் பரிகாரம் செய்தாலும் அது இறைவனுக்கு போய்ச் சேராது.கடினமான உழைப்பைக்கொண்டு கிடைக்கும் பணத்தில் முருகப்பெருமானுக்கு தினமும் ரோஜா மாலையும், குல தெய்வத்திற்கு லட்ச தீபம் ஏற்றவும். திருகடையூர் அபிராமிக்கு சந்தன காப்பும் செய்வதாக வேண்டிக் கொள்ளட்டும். இது தான் பரிகாரம் என்று பதில் உரைத்தார் அகத்தியர்" சிறிது நேர யோசனைக்கு பிறகு.

"இதை எல்லாம் அவனுக்காக நாங்கள் செய்கிறோம். அதுவரை அவனுக்கு எந்த வித ஆபத்தும் ஏற்படக்கூடாது. நாங்கள் அகத்தியப் பெருமானைத் தான் முழுமையாக நம்புகிறோம்" என்றார்,  பையனுடைய தந்தையான பெரியவர்.

"இந்த பிரார்த்தனைகளை அவன் தான் செய்ய வேண்டும்.  இருந்தாலும் இன்று நடுக்கடலில் உயிருக்கு பயந்து போரடிக்கொண்டிருப்பதால் அவனால் செய்ய முடியாது. அவன் பொருட்டு உடனே முருகப்பெருமானுக்கு சகலவிதமான அபிஷேகத்தையும் செய்யுங்கள். இன்று இரவுக்குள் பய பக்தியோடு இதனைச் செய்யாவிட்டால், அவன் உயிருக்கு இந்த அகத்தியன் பாதுகாப்பு தருவது கஷ்டம்" என்றார் அகத்தியர்.

இதைச் சொன்னதும் தான் தாமதம், அடுத்த நாழிகைக்குள் அவர்கள் என்னிடம் விடைபெற்று கிளம்பி விட்டார்கள். பின்பு அவர்களை பற்றியத் தகவலே இல்லை.

மூன்று மாதம் கழிந்திருக்கும்.

மாலை நேரம், கப்பலில் வேலை செய்து, தவறான முறையில் பணம் சம்பாதித்து, உயிருக்கு போராடிய அந்த பையன், கூடவே அவனது தந்தை, சகோதரன் - மூன்று பேரும் என்னைத் தேடி வந்தனர்.

அகத்தியருக்கு நன்றி கூறவே வந்தோம் என்று அகத்தியர் நாடியை தொழுதனர்.

என்ன நடந்தது என்று நான் கேட்டேன்.

இதற்கு அந்த பையனே பதில் சொன்னான்.

"நான் முதலில் நேர்மையாகத் தான் இருந்தேன். கள்ளக் கடத்தலில் எனக்கு உடன்பாடு இல்லை. முதலில் இதனை மறுத்த போது, கப்பலில் இருந்த சில கள்ளக்கடத்தல்காரர்கள் என்னைக் கொன்று கடலில் வீசி விடுவதாக பயமுறுத்தினார்கள். உயிருக்குப் பயந்து நான் தலையாட்டினேன். பின்னர் அதுவே பழக்கமாகிவிட்டது."

சமீபத்தில் எனக்கு நிறைய எதிர்ப்பு வந்தது. எதற்காக இந்த தப்பு செய்ய வேண்டும், என்னை விட்டுவிடுங்கள் என்று ஒதுங்கினேன். நான் நிறைய சம்பாதித்து இருப்பதாகவும், அதை கொடுக்க மறுத்தால் அன்று இரவே என்னைக் கொலை செய்து நடுக்கடலில் தூக்கி எறியப்போவதாகவும் எனது மேல் அதிகாரி என்னை பயமுறுத்தினான். இதைத்தான், நான் தொலை பேசியில் வீட்டிற்கு சொன்னேன்.

ஆனால், என்ன நடந்தது என்று தெரியவில்லை.என் மேல் அதிகாரி எண்ணத்தை மாற்றிக்கொண்டான்.நானோ என்னுடைய அத்தனைப் பணத்தையும் அவனுக்கு கொடுத்தேன். ஏற்க மறுத்துவிட்டான்.  அதை அநாதை இல்லத்திற்கு கொடுத்து விட்டேன். எனக்கு இப்போது முதன்மை என்ஜினீயர் பதவி உயர்வும் கிடைத்து விட்டது" என்று அவன் சொன்னதைக் கேட்டு, அகத்தியருக்கு நான் நன்றி சொன்னேன்.

1 comment: