அகத்தியர் அடியவர்களுக்கு வணக்கம்!
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ!
அகத்தியப் பெருமானின் "சித்தன் அருளை" வாசித்து வரும் அடியவர்கள், அகத்தியப் பெருமான் குறிப்பிட்ட தினங்களில், நாடி வாசித்த மைந்தனை, கோடகநல்லூர், நம்பிமலை, பாபநாசம், கரும்குளம், திருச்செந்தூர் என்று பல இடங்களுக்கு அழைத்துச் சென்று, இறை, சித்த அனுபவங்களையும், ஆசிர்வாதங்களையும் பெற்றுக் கொடுத்ததை, நாம் அனைவரும் அறிவோம். அதில் மறைமுகமாக "அந்த நாள்/இந்தநாள்" என்று அகத்தியப் பெருமான் பல இடங்களில், குறிப்பிட்டதை கவனித்திருக்கலாம். 2017ம் ஆண்டு பல அகத்தியர் அடியவர்களும், அந்தப் புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று அருள் பெற்றது நினைவிருக்கும்.
நம் அனைவருக்குமே, "அந்த நாள்" இந்த வருடம், எப்போது வருகிறதோ, அன்று, அங்கு சென்று இருந்து அவர்களின் அருள், ஆசிர்வாதம், செம்மையான வாழ்க்கைக்காக பெற்றுக்கொள்ள வேண்டும், என்கிற எண்ணம் ஒவ்வொரு அகத்தியர் அடியவரின் மனதுள் இருக்கும். உங்களின் அந்த இனிய எண்ணைத்தை பூர்த்தி செய்வதற்காக, இந்த வருடம் "அந்த நாட்களை" தெரிவு செய்து இங்கே தருகிறேன். குறித்து வைத்துக்கொண்டு, அங்கெல்லாம் சென்று, அவர் அருள் பெற்று வருமாறு, வேண்டிக்கொள்கிறேன்.
நம்பிமலை:- (இறைவனும், சித்தர்களும், முனிவர்களும், தேவர்களும் ஒன்று கூடி இருக்க, அகத்தியப் பெருமான் நம்பிமலை பெருமாளுக்கு 200 வருடங்களுக்கு ஒருமுறை செய்கிற பூசையை செய்த நாள்)
22/07/2018 - ஆடி மாதம் - ஞாயிற்று கிழமை - சுக்லபக்ஷ தசமி திதி மாலை 06.53 வரை, விசாகம்/அனுஷம் நக்ஷத்திரம்.
பாபநாசம்:- (நதிகள் எல்லாம் அகத்தியப் பெருமானுடன் இருந்து அன்று தீர்த்தமாடியவர்கள் அனைவருக்கும், அவர்கள் குடும்பத்திற்கும், நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் புண்ணியம் கொடுத்த நாள். நவகிரக தம்பதிகள் ஆசிர்வதித்த நாள்)
23/07/2018 - ஆடி மாதம் - திங்கள்கிழமை - சுக்லபக்ஷ ஏகாதசி திதி இரவு 07.41 வரை, அனுஷம் நக்ஷத்திரம் மாலை 04.36 வரை.
திருச்செந்தூர்:- (ஓதியப்பர், அகத்தியர், அனுமன் ஆகிய மூவரும் சேர்ந்து இருந்த நாள். அதில், முருகர் அனுமனுக்கு அன்று அனுமனின் நட்சத்திரம் ஆனதால், அவரை ஆரத்தழுவி, நல்வாழ்த்து தெரிவித்த நாள். இன்றும் எல்லா மாதமும் அனுமன், அவரது நட்சத்திரத்தன்று திருசெந்தூரில் அன்று மாலை வந்து முருகரின் அருள் பெற்று செல்கிறாராம்.)
24/07/2018 - ஆடி மாதம் - செவ்வாய் கிழமை - சுக்லபக்ஷ த்வாதசி திதி இரவு 08.56 வரை, மூலம் நட்சத்திரம் மாலை 6.28 முதல்.
ஒதிமலை ஓதியப்பர் பிறந்த நாள்:- (போகர் கூற்றின் படி, ஓதியப்பர் ஆவணி மாதம் பூசம் நட்சத்திரத்தில் பிறந்தார். ஓதியப்பரின் பிறந்த நாளை அபிஷேக ஆராதனைகளுடன் கொண்டாடுகிற நாள். சித்தர்கள் அனைவரும் அன்று அங்கே ஒன்று கூடி, ஓதியப்பரை தரிசனம் செய்து, பின்னர் 90 நாட்களுக்கு அங்கேயே தங்கி இருக்க தொடங்குகிற நாள்.)
07/09/2018 -ஆவணி மாதம் - வெள்ளிக்கிழமை - திரயோதசி திதி மறுநாள் காலை 4.33 வரை, பூசம் நட்சத்திரம் அன்று பகல் 11.40 வரை .
கோடகநல்லூர்:- (எல்லா தெய்வங்களும், சித்தர்களும், முனிவர்களும், தேவர்களும் ஒன்று கூடி இருந்து, அகத்தியருக்கு தங்கள் உரிமையை பகிர்ந்து கொடுத்த நாள். தாமிர பரணியின் பெருமையை அகத்தியப் பெருமான் உலகுக்கு உணர்த்திய நாள். அன்று அங்கு வரும் பக்தர்களுக்கு அவர்கள் வேண்டுதலை, குறைந்தது, திருப்தியை பெருமாள் அருளுகிற நாள்.)
22/10/2018 - திங்கட்கிழமை - ஐப்பசி மாதம் சுக்லபக்ஷ த்ரயோதசி திதி அன்று இரவு 10.14 வரை, உத்திரட்டாதி நட்சத்திரம் மறுநாள் பகல் 09.32 வரை.
பாபநாச ஸ்நானம்:- தாமிரபரணி புராணத்தில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. சிவபெருமானை லிங்க ரூபத்தில் பிரதிஷ்டை செய்து, தாமிரபரணி தேவியானவள், அகத்திய பெருமான் முன்னிலையில் தவமிருந்து, இறைவனிடமிருந்து நம் மனித குலத்திற்காக ஒரு வரத்தை பெற்றாள். எவர் இந்த இடத்தில், மார்கழி மாதத்தில் எம் தீர்த்தத்தில் நீராடி, உம்மை கண்டு வணங்குகின்றனரோ, அவர்களுக்கு இந்த பூமியில் இனிமேல் பிறவி என்பதே இருக்கக்கூடாது. சிவபெருமானும் தாமிரபரணியின் பூசை, தவத்தில் மகிழ்ந்து "அப்படியே ஆகட்டும்" என்று கூறி பாபநாத சுவாமி கோவில் லிங்கத்தினுள் மறைந்தார். அந்த நாட்கள் இந்த வருடம் 16/12/2018 முதல் 14/01/2019க்குள் வருகிறது.
அகத்தியர் அடியவர்களே! மேல் சொன்ன இந்த நாட்களை குறித்து வைத்துக் கொண்டு, இங்கு தெரிவிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று, இறை அருள், அகத்தியர் அருள் பெற்று நலமாக வாழ்ந்திட வேண்டிக் கொள்கிறேன்.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகதீசாய நமஹ!
