வணக்கம் அகத்தியர் அடியவர்களே!
இந்த வருட முதல் நாளில் பாபநாசத்தில் நீராடி, இறைவனை தரிசித்து (மார்கழி மாதம், பாபநாச நீராடல், இறை தரிசனம், இந்த பூமியில் மறுபிறவியை தவிர்க்கும் என்பார்கள்), அகத்தியருக்கு, கல்யாண தீர்த்தத்தில் அபிஷேகம் செய்கிற பாக்கியத்தை அடியேன் பெற்றுக் கொண்டேன். உண்மையாகவே, சில மாதங்களாக அகத்தியரிடம் வேண்டாத நேரமில்லை. எல்லோருக்கும் அபிஷேகம் பூசை செய்கிற பாக்கியத்தை இறைவன் அருளிய பொழுது, தங்களுக்கு மட்டும் அபிஷேகம் செய்கிற அந்த நொடி இதுவரை கிடைக்கவே இல்லை. அதை இங்கேயே, பாபநாசத்தில் உங்கள் சன்னதியில் அருளக்கூடாதா என்று சில மாதங்களுக்கு முன் விண்ணப்பித்தேன்.
எதற்கும் நேரம், காலம் என்று ஒன்று உண்டு. நீண்ட நாள் காத்திருப்புக்கு பின், இந்த வருடம் முதல் நாளில், ஒரு நண்பருடன் சென்று, கூட்டம் இல்லாத தருணத்தில், அகத்தியப் பெருமானுக்கும், லோபாமுத்திரை தாய்க்கும், அபிஷேகம், அலங்காரம், ஜபம், நிவேதனம் போன்றவை செய்ய முடிந்தது. நிச்சயமாக அது குருவருள். அடியேனின் வாழ்வில், முதல் முறையாக, அகத்தியப் பெருமானுக்கும் லோபாமுத்திரை தாய்க்கும், என் கரத்தால் அபிஷேகம் செய்கிற பாக்கியம் கிடைத்தது. (ஒரு தகவல் - அங்கே செல்பவர்கள் யார் வேண்டுமானாலும் அபிஷேக பூசை செய்யலாம். செல்லும் பொழுது, பூசைக்கான, தகுந்த ஏற்பாடுடன் செல்வது நல்லது. மாலை 5 மணிக்கு மேல் கல்யாணதீர்த்தம் பகுதிக்குள் யாரையும் விடுவதில்லை.) பூசை மிக எளியதாக இருந்தாலும், மிகுந்த மன நிறைவை தந்தது.
பூசை முடித்து, அவரிடமே செய்த பூசையை ஒப்படைக்கும் பொழுது ஒரு எண்ணம் தோன்றியது. அதையும் விண்ணப்பித்து விட்டேன்.
"அய்யனே! எத்தனையோ அடியவர்கள், எத்தனையோ பிரச்சினைகளுடன் நித்தம், நித்தம் வாழ்க்கையில் போராடி வருகிறார்கள். அவர்கள் அனைவரின் கர்ம வினைகள் தீரவும், மன எண்ணங்கள் ஈடேறவும், இனி வரும் நாட்களில் உங்கள் அருகாமையும், வழி நடத்துதலும் கிடைக்க வேண்டும். உடனேயே அருளுங்கள்."
அங்கு மிகுந்த அமைதி நிலவியது. அகத்தியப் பெருமான் நிச்சயம் அனைவருக்கும் அருளுவார். பொறுமை அவசியம். அங்கே எடுத்த ஒரு சில புகைப்படங்களை உங்கள் பார்வைக்கு கீழே தருகிறேன்.
மேலும், வரும் வழியில், கோடகநல்லூர் சென்று, தாமிரபரணியில் நீராடி, பச்சை வண்ணப் பெருமாளின் தரிசனமும், ஆசிர்வாதமும் பெற்று, ஊர் வந்து சேர்ந்தோம். செல்லும் வழி எங்கும், வலைப்பூவழி தொடர்பு கொள்ள முடியாததால், நேற்றைய தினம் "அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கை" வழங்க முடியவில்லை. இருப்பினும் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தயப் பெருமானிடம் உங்கள் அனைவருக்காகவும் விண்ணப்பிக்க முடிந்ததே என்பதில் மிகுந்த மன நிறைவு பெற்றேன்.
எல்லோரும் அவர் அருள் பெற்று நிறைவாக வாழவேண்டும்.
ஓம்! ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ!





