வணக்கம் அகத்தியர் அடியவர்களே!
முன்னர் எல்லாம், குருநாதர் அகத்தியப்பெருமானிடம் ஏதேனும் ஒரு விஷயத்துக்கு கேள்வி கேட்டால், மிகத்தெளிவாக, அவரது பதில் உரைக்கப்படும். மேலும் தொடர் கேள்விகள் கேட்கிற பொழுது, அதற்கான பதிலில், நம் "இந்துமதப்படி" நாம் செய்கிற பல விஷயங்களுக்கும் ஒரு அர்த்தம் உண்டு என்று புரியும்.
ஒரு முறை பூக்களை பற்றி, எந்த விதமான பூக்களை பூஜைக்கு எடுக்கலாம், சில பூக்கள், ஒரு சில தெய்வ மூர்த்தங்களுக்கு மட்டும் என கூறப்படுகிறதே என எளிய கேள்வியை கேட்ட பொழுது, பல உண்மைகளை உரைத்தார். ஞாபகத்தில் இருக்கிற சில விஷயங்களை இங்கு தருகிறேன்.
- பூக்கள் இறை வழிபாட்டுக்கு என படைக்கப்பட்டவை.
- மனித தேவை என்பது கடைசி பட்சம்.
- இறந்த மனிதனின் உடலுக்கு பூக்களை உபயோகிக்க கூடாது.
- இறந்த மனிதன் மகானாக வாழ்ந்து சென்றவன் என்றால், ஒரு துளசி இலை மாலையை போடலாம். ஒரு போதும் பூக்களை உபயோகிக்கக் கூடாது.
- இறந்தவனை கொண்டு செல்லும் வழி எங்கும் பூக்களை வாரி வீசுவது கூடாது.
- மனிதன் தன் கால்களால் பூக்களை மிதிப்பது கூடாது.
- கோவில் போன்ற புண்ணிய ஸ்தலங்களில் இறை மூர்த்தங்களுக்கு சாற்றிய பூ மாலை போன்றவை, மனிதர் கழுத்தில் அணிவது கூடாது. கையில் பெற்று கண்களில் ஒற்றிக்கொண்டு, இல்லம் கொண்டு சென்று இறை மூர்த்தங்களுக்கு அணிவிக்கலாம்.
- பெண்டிர் தலையில் சூடிக்கொள்ள வாங்கும்/தொடுத்து கட்டும் பூவை, ஒரு நாழிகை நேரமாவது இல்லத்தில் இறைவன் மூர்த்தத்தில் அல்லது பூசை அறையில் பக்தியுடன் சார்த்திவிட்டு பின்னர் தலையில் சூடிக்கொள்ள, உபயோகிக்க வேண்டும்.
- திருமணம் போன்ற நல்ல நிகழ்ச்சிகளுக்காக வாங்கும் பூவை, முதலில் இல்லத்தின் அருகில் இருக்கும் ஏதேனும் ஒரு கோவிலில் இறைவனின் பாதத்தில் சமர்ப்பித்து பூசை செய்த பின் நல்ல நிகழ்ச்சிகளுக்கு உபயோகப் படுத்த வேண்டும்.
- வீட்டில் பூக்கும் பூக்களை பூசைக்காக பறிக்கும் பொழுது, விரலில் உள்ள நகம் படாமல், கத்தி/கத்திரிக்கோல் போன்ற இரும்பு படாமல்/உபயோகிக்காமல் பறிக்க வேண்டும்.
- பழைய புஷ்பங்கள், மலராத மொட்டுக்கள், தூய்மை இல்லாத பூக்களைக் கொண்டு இறைவனிற்கு பூசை செய்யக்கூடாது.
- பூச்செடிகளிலிருந்து பூமியில் உதிர்ந்த பூக்களை, பூசைக்கென எடுத்தால், சுத்தமான நீரில் கழுவிய பின் இறைவன் பாதத்தில் உபயோகிக்கலாம்.
- அரச்சனை செய்த பூக்கள், கோவிலில் சாமிக்கு போட்ட மாலைகள் காலில் மிதிபடாதவாறு போட வேண்டும். முடிந்தால் தூய்மையான ஓடுகின்ற தண்ணீரில் விடலாம். அல்லது தூய்மையான இடத்தில் குழி தோண்டி புதைத்துவிடலாம். இல்லையெனில், நன்றாக வாடும்வரை வீட்டில் பாதுகாத்து, பின்னர் அக்னிக்கு சமர்ப்பிக்கலாம்.
- செடியில் பூத்திருக்கும் பூக்களை, சும்மாவேனும் மணந்து பார்ப்பதற்காக பறித்து பின்னர் எங்கேனும் தூர எறிவது கூடாது.
- குறிப்பாக, குழந்தைகளுக்கு அத்தனை விஷயங்களையும் சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டும். ஏன் என்றால் அவர்களிடம் தான் பூவெடுத்து விளையாடும் குணம் அதிகம்.
மேற்சொன்ன அத்தனை விஷயங்களையும் வாழ்க்கையில் ஒருவர் மிக கவனமாக கடைப்பிடித்து வாழவேண்டும் என்றார். ஏன் என சற்று விளக்கமாக கூறுங்களேன் என கேட்ட பொழுது, காரணத்தை மிகத்தெளிவாக உரைத்தார்.
"இறைவனை நோக்கி தவமிருக்கும், ரிஷிகளும், முனிவர்களும், மகான்களுக்கும், முன்னர் இறைவன் தோன்றி ஆசீர்வதித்த பின், "உங்களுக்கு என்ன வேண்டும்?" என கேட்பார்.
அவர்களும், இறைவனிடம் "பெருமானே! அடுத்த ஜென்மம் என ஒன்றிருந்தால், அதில் பூவாக பிறந்து, உங்கள் பூஜையில், பாதத்திலோ, மார்பிலோ, கழுத்தில் மாலையாக சூடப்பட்டோ, அப்படி ஒரு பாக்கியத்தை பெற்று, அடியேன்கள் முக்தியை அடைய வேண்டும். அதுவே, எங்கள் வேண்டுதல், என்பர். அப்படியே பூவாக பிறந்து வாருங்கள் என இறைவனும் அருளுவார்!"
எல்லா பூக்களும் இறைவனை அடைகின்றதா? பூஜையில் சேர்கின்றதா?அப்படி பிறக்கின்ற பூக்கள் தான், மனிதர் கைகளில் இந்த பாடு படுகிறது. அவர்களின் தவத்தால் பெற்ற வரத்தை அடைய விடாமல் செய்வதே மனிதர்களின் செயலாக உள்ளது. முன் காலங்களில் வாழ்ந்த மனிதர்களின் வாழ்க்கை முறையை உன்னிப்பாக கவனித்திருந்தால் இன்றைய மனிதர்களுக்கு பல விஷயங்களை சரியாக செய்ய முடியும். உதாரணமாக, வீட்டு வாசலில் பூ கூவி விற்கும் பெண்மணியிடம், வீட்டில் உள்ள பெண்கள் பூவை உதிரியாக வாங்கி மாலையாக கட்டி, அப்படி செய்யும் பொழுது அடுத்த தலை முறைக்கும், குழந்தைகளுக்கும் கதைகளுடன் கற்பித்து, பின்னர் வீட்டில் விளக்கேற்றி, பூஜையறையில் ஸ்வாமிக்கு சார்த்தி, ஒரு நாழிகை கழிந்து, அனைவருக்கும் சூடிக்கொள்ள சிறு துண்டுகளாக கொடுப்பார். அதில் பக்கத்து வீடு, எதிர் வீடு முதல் அனைத்து பெண் குழந்தைகளும் இருக்கும். இந்த முறையால், தலைமுறையாக ஒரு பூவை எப்படி கையாள வேண்டும் என்கிற அறிவு பகிர்ந்தளிக்கப்படுகிறது. மேலும் பூக்களில் ஜீவனுடன் இருந்த அந்த புண்ணிய ஆத்மாக்கள், பூஜையறையில் விளக்கேற்றி சாற்றப்படுவதால், அவர்கள் எண்ணமும் ஈடேறி, அனைவரையும் ஆசீர்வதிக்கும். அப்படிப்பட்ட பூக்கள் எம் சன்னதியிலும் பூவாக, மாலையாக பூஜைக்கு வரும் பொழுது யானே சிவமாகவும், நாராயணனாகவும் இருந்து அவர்கள் செய்ய வேண்டிய வேலையை செய்கிறேன். அந்த பூக்களை தவறாக கையாளும் பொழுதுதான், அதில் மனிதர் அறியாமல் பிறப்பெடுத்த புண்ணிய ஆத்மாக்களின் சாபத்தை அவர்கள் பெற வேண்டியுள்ளது. ஆதலால், எனக்காக ஒரு வேலையை நீ செய்யேன். என்னுடைய, லோபாமுத்திராவினுடைய தரிசனத்துக்கு வருகின்ற தினத்தில், இரவு பூஜை முடியும் வரை காத்திருந்து, அத்தனை பூ மாலையையும் வாங்கி சென்று, இல்லத்தில் பூசை அறையில் வைத்திருந்து, அந்த பூக்கள் வாடிய பின் அக்னியில் சேர்த்துவிடு" என ஒரு வேலையை கொடுத்தார்.
அடியேனும், இல்லத்திலிருந்து ஒரு பெரிய துணிப்பையை பாலராமபுரம் அகத்தியர் கோவிலுக்கு கொண்டு சென்று அனைத்து சன்னதிகளிலும் உள்ள பூமாலையை கழட்டி தரச்சொல்லி வீட்டிற்கு கொண்டு வந்து, பூஜை அறையில் உள்ள அனைத்து இறை மூர்த்தங்களும் சாற்றிவிடுவேன். பெரிய மாலைகள் வந்தால் அதை போட்டுக்கொண்டு நிற்க ஒரு மூன்று அடி உயர ஓதியப்பரையும் வாங்கி வைத்திருக்கிறேன். அவருக்கு எப்போதுமே செழிப்புதான். நான்கு அல்லது 5 நாட்களில் பூ மாலை வாடி, அதிலுள்ள ஜீவன் விலகிய பின் அக்னிக்கு சமர்பித்து விடுவேன்.
அகத்தியப்பெருமான் அருளிய இந்த வேலையை வாரத்திற்கு ஒருமுறை அல்லது இரண்டு முறை கோவிலுக்கு போய் செய்து விடுகிறேன்.
நம் குருநாதர் எப்படின்னா, குழந்தையையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டி விடுவார். அவர் கோவில் வாசல் முன் நின்று "குருநாதா" என மனதுள் கூப்பிடும் போதே, "இதோ சரியா வந்துட்டான் கொள்ளைக்காரன். இன்னிக்கு எல்லாரையும் மயக்கி, எல்லாத்தயும் உருவிண்டு போயிடுவான், என தாயிடம் கூறுவது" கேட்கும். குருநாதர் குடுத்த பட்டத்துக்கு ஏற்றாற்போல் வாழவேண்டும், ஆதலால் அடியேனும், பிள்ளையார், கிருஷ்ணர் (இவரை பார்க்கத்தான் பாவமாக இருக்கும். எல்லாவற்றையும் உருவியபின், நிர்வாண குழந்தையாக மாறிவிடுவார்), ஓதியப்பர் சிலா மூர்த்தங்களில் உள்ள அத்தனை பூக்களையும் கழட்டி தரச்சொல்லி, கடைசியில் குருநாதர் சன்னதியில் இரண்டு மாலைகளை விட்டு வைத்து (மறுநாள் காலை நிர்மால்ய தரிசனம் பார்க்க பூ மாலை வேண்டும்), அத்தனை மாலைகளையும் இல்லத்திற்கு கொண்டு வந்து விடுவேன்.
இப்படி ஒரு வேலை உங்களில் யாராவது ஒருவருக்கு அமைந்தால், உடனடியாக ஏற்றுக் கொள்ளுங்கள். எந்த கோவில்களில் பூஜாரி மாலையை கழுத்தில் போட வந்தாலும், மறுத்து, கையில் வாங்கி, வீட்டில் பூஜை அறையில் சாற்றி இது போல் செய்து பாருங்கள். உங்கள் வாழ்வில் நிறைய அதிசய அருள் கிடைக்கும். ஏன்? அகத்தியப்பெருமானே உங்கள் வீடு தேடி வந்து, இன்னிக்கு ஏன் வேலை பார்க்க வரவில்லை? என்று கேட்பார்.
விஷயம் தெரிந்த பெரியவர்கள் நம்மை கண்டதும், "இப்ப யாரிடம் வேலை பார்க்கிறாய், மகனே?" என நம்மிடம் கேட்கும் பொழுது, சுருக்கமாக "அகத்தியப்பெருமானிடம்" என சந்தோஷமாக கூறலாம், அவர்களும் அதன் உண்மை அர்த்தத்தை உடன் புரிந்து கொள்வார்கள். நமக்கும், தினமும் நேர்மையாக ஒரு செயலை செய்கிற வாய்ப்பு அமையும்!
அனைத்து சந்தோஷமும், ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்........ தொடரும்!
அகத்தீசாய நம நன்றி ஐயா
ReplyDeleteஓம்சிவசிவஓம் ஓம் லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளே சரணம்
ReplyDeleteகோவிலில் உபயோகப்படுத்திய மலர்களை வீட்டிலுள்ள சாமி படங்களுக்கு உபயோகிக்கலாம் _ நல்ல தகவல்
ReplyDeleteஓம் ஶ்ரீ லோபமுத்ரா சமேத அகத்தீஸ்வரா சரணம்
வீட்டில் சின்ன பூஜையறை சின்ன படங்கள் மாலை அணிவிக்க முடியாது ஆகையால் மாலைகளை வாங்கி வந்து பூஜையறையில் வைத்து அதன் பின்னர் அக்னியில் சேர்க்கலாமா ஐயா
ReplyDelete
Deleteசெய்யலாம். அங்கேயே சுவற்றில் ஆணியில் மாட்டிவைக்கலாம்.இறைவன் படத்தின் திருப்பாதத்தின் அருகில் வைக்கலாம்.
பூக்களின் சக்தி அதிகம்.(அகத்தியர் மகரிஷி சூட்சமமாக சொன்ன பூ வழிபாடு )நீரீல் உள்ளே இருக்கும் சிவன் முன்பு (ex திமிரி பாசானலிங்கம்) பெளர்ணமி அன்று மல்லிகை மலர்கள் கொண்டு சிவலிங்கம் வடிவமைத்து அர்ச்சனை செய்தால் வேண்டும் வரம் ஆன்மீக ரீதியாக வாங்கலாம்.
ReplyDelete2. மனோரஞ்சிதம் பூ பயன்படுத்தி நரசிம்மர் கிட்ட வேண்டும் வரம் பெளர்ணமி அன்று வாங்கலாம்.
இன்னும் பல ரகசியங்கள் பூக்களின் மூலம் நிறைவேற்றப்படும் வழிபாடுஉண்டு
இறைவனுக்கு சாற்றப்பட்ட பூக்கள் காய்ந்த பிறகு பொடிகளாக செய்து நரசிம்மர் பூஜை பெளர்ணமி அன்று தூபம் போட்டால் வேண்டிய வரம் கிடைக்கும். குருநாதர் உங்ககிட்ட அக்னியில் சேர்க்க சொல்லியுள்ளார். நான் அந்த பூக்களை வைத்து தூபம் தயாரித்து கொடுக்கிறேன். பல பேர் பயன் அடைந்து உள்ளனர். வாசனை இல்லாத இந்த தூபம் ஏன் வாங்கி கொண்டு செல்கிறார்கள் என்று பல முறை நினைத்தது உண்டு . விடை இன்று உங்க மூலம் கிடைத்துள்ளது. நன்றி
ReplyDelete