[ ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகதியப்பெருமான், பாலராமபுரம்]
வணக்கம் அகத்தியர் அடியவர்களே!
கடந்த திங்கட்கிழமை [18/03/2019] என்பது மிக புண்ணியமான நாள். இதை, போனவாரம் வியாழக்கிழமை அகத்தியர் கோவில் செல்லும் முன் கவனித்ததால், அங்கு சென்றவுடன், நம் குருநாதரிடம் ஒரு வேண்டுகோளை சமர்ப்பித்தேன். கவனத்தில் பட்டு அடியேனை தூண்டிவிட்டு வேண்டுதலை சமர்ப்பிக்க வைத்த விஷயங்களை இங்கே தருகிறேன்.
- திங்கட்கிழமை - சிவனுக்கு உகந்த நாள்.
- திதி பிரதோஷம் (வளர்பிறை திரயோதசி) - நந்தியம் பெருமான், சிவனுக்கு உகந்த நாள்.
- நட்சத்திரம் - ஆயில்யம் - அகத்தியப்பெருமானின் அவதார நட்சத்திரம் - விஷம் என்கிற கெடுதல் கட்டுப்படுகிற நேரம்).
- பங்குனி மாதம் - சூரிய பகவான் தன் சஞ்சாரத்தை முடித்துக் கொள்கிற மாதம்.
இத்தனை விஷயங்கள் அவர் முன் நிற்கும் பொழுது அடியேன் மனதுள் மின்னலென புகுந்ததால் அப்படியே ஒரு சிறிய வேண்டுதலை அவர் முன் வைத்தேன்.
"அய்யனே! இத்தனை சிறப்பு பெற்ற அந்த நாளின் விளக்கத்தை தங்கள் திரு வாக்கால் அருள வேண்டும். உங்கள் சேய்கள் அதை உணரவேண்டும்! தயை கூர்ந்து அருளுங்கள்" என மனதுள் கூறி சமர்ப்பித்து, விடை பெற்றேன்.
உண்மையான பிரார்த்தனைக்கு நம் குருநாதர் அருள் வாக்கு தருவார் என்ற நம்பிக்கை இருந்தது. இருந்தாலும், அடுத்த தினமே, பிரார்த்தனையும் மறந்து போனது.
திங்கள் கிழமை அன்று, காலை பூஜை பிரார்த்தனை செய்த பொழுது, மறுபடியும் வேண்டுதல் மனதுள் நுழைந்தது.
"என்ன அய்யனே! என்ன தீர்மானம் பண்ணியிருக்கிறீர்? உங்கள் அடியவர்களுக்கு உண்மையை தெரிந்து கொள்கிற பாக்கியம் உண்டா?" என்கிற கேள்வியைத்தான் அவரிடம் வைக்க முடிந்தது.
உண்மையிலேயே, அன்றைய தினம் ப்ரம்ம முகூர்த்தத்தில், நாடியில் வந்து அகத்தியர் அன்றைய தினத்தை மிக சிறப்பாக விளக்கியிருக்கிறார்.
மதியம் சரியாக 12 மணிக்கு ஏதேனும் செய்தி உண்டா, என்று யோசனையுடன், மொபைல் போனை தடவி பார்க்க, ஒரு அகத்தியர் அடியவர் (அவருக்கு மிக்க நன்றியை கூறிக்கொள்கிறேன்) அந்த "ப்ரம்ம முகூர்த்த அருள் வாக்கை" பதிவு செய்து அனுப்பியிருந்தார். அதை கேட்ட மாத்திரத்தில், மிகவும் சந்தோஷமடைந்து, அகத்திய பெருமானுக்கு அடியேனின் சிரம் தாழ்ந்த வணக்கத்தையும், நன்றியையும் கூறினேன்.
யாம் பெற்ற இன்பம் இவ்வையகத்து வாழ் அகத்தியர் அடியவர்கள் பெறுக என்கிற எண்ணத்தில், அந்த பதிவை, கீழே உள்ள லிங்கில் தருகிறேன். எல்லோரும் அதை கேட்டு, உணருங்கள்.
அகஸ்தியர் அருள்வாக்கு!
[அடுத்த பக்கத்தில் பதிவிறக்கம்/டவுன்லோட் செய்து கேளுங்கள்]
[அடுத்த பக்கத்தில் பதிவிறக்கம்/டவுன்லோட் செய்து கேளுங்கள்]
அடியேன் செல்லும் பலராமபுரம், ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் கோவிலில், இந்த வருட அகஸ்தியர் பூஜை திருவிழா, அடுத்த மாதம் 6ம் தியதி தொடங்கி 15ம் தியதி வரை மிக சிறப்பாக நடை பெற உள்ளது. அதற்கான அழைப்பிதழையும் உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன். விருப்பமுள்ள அகத்தியர் அடியவர்கள் பங்கு பெறலாம். ஆலய தொடர்பு எண் 0471-2401222. கூப்பிட்டு பேசினால், விரிவான விளக்கத்தை தருவார்கள். அடியேன் எல்லா வருடமும் பங்கு கொண்டு, அவர் அருள் பெற்று வருவதனால், இந்த வருடம், உங்களுக்கும் ஏதேனும் ஒரு விதத்தில் அந்த வாய்ப்பை பெற்று தரலாம் என்கிற எண்ணத்தில் மட்டும்.
ஓம் ஸ்ரீ லோபா முத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில், இந்த தொகுப்பு சமர்ப்பணம்!
சித்தன் அருள்................ தொடரும்!

