​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday, 12 March 2020

சித்தன் அருள் - 851 - அதிர்வலைகளும் தசவாயுக்களும்!


குண்டலினி யோகத்தை கடந்து செல்லும் ஒருவன், அந்த நிலையில் ஐம்பத்தோறு அட்சரங்களை ஒலிவடிவில் பல்வேறு நிலைகளில் கேட்கிறான். இந்த ஐம்பத்தோறு அட்சரங்கள் ஐந்து அட்சரங்களான "நமசிவய" என்பதில் அடங்கும் என்கிறார் திருமூலர்.

ஐந்தெழுத்து மந்திரமாகிய "நமசிவய"  என்பதை அனைத்து சித்தர்களும் "பேசா எழுத்து" என்கிறார்கள். ஒரு சிலர் இதை "சுரியதோர்" எழுத்து என்றும் கூறுகின்றனர். திருமூலரோ, "'ஓம் என்பது ஓரெழுத்து, அதுவே சிவஸ்வரூபம்" என்கிறார். ஓம் என்பது மிகப்பெரிய மந்திரத்தை, தனக்குள் குறுக்கி, மறைத்து வைத்துக் கொண்டிருக்கிற ஒரு மகா மந்திரம் என்கிறார்.

ஓம் என்பது அதிசூக்ஷும பஞ்சாக்ஷரம் எனப்படுகிறது. ஐந்தெழுத்து மந்திரமாகிய அகாரம், உகாரம், மகாரம், நாதம், பிந்து என்கிற ஐந்து நிலைகளை உட்கொண்டது, என்கிறார் சிவவாக்கியர் சித்தர்.   சிவமே இம்மந்திரமாக வந்தமர்ந்தது; இதை அறிந்தவனுக்கு மறுபிறப்பு இல்லை என்கிறார்.

கறந்தபால் முலைப்புகா கடைந்த வெண்ணை மோர்புகா
உடைந்துபோன சங்கினோசை உயிர்களும் உடற்புகா
விரிந்தபூ உதிர்ந்தகாயும் மீண்டுபோய் மரம்புகா 
இறந்தவர் பிறப்பதில்லை இல்லையில்லை இல்லையே 

என்ற பாடலில் சிவவாக்கியார் மறுபிறப்பை மறுக்கிறார் என்று எடுத்துக் கொள்வதை விட்டு, முக்திநிலை அடைந்தவர்கள் மீண்டும் பிறப்பை தவிர்த்துக் கொள்வார்கள் என்று பொருள் கொள்ள வேண்டும். ஐந்தெழுத்து மந்திரம் பிறப்பறுக்க உதவும் என்று திருமூலரும் உரைக்கிறார்.

  1. "சிவயநம" என்கிற ஐந்தெழுத்தில், "சி" என்பது - காண்பதெல்லாம் சிவமாக காணப்படவேண்டும் என்று உரைப்பதாகும்.
  2. "சிவயநம" என்கிற மந்திரத்தை தொடர்ந்து ஜெபிக்கிறவன், முதுமை நீங்கி இளைஞ்சனாகிறான், தாமிரத்தை பொன்னாக்கும் நிலையறிவான்.
  3. எட்டெழுத்து மந்திரம் என்பது அ,உ,ம,ந,ம,சி,வா,ய, எனப்படுகிறது.
  4. ஐந்தெழுத்து மந்திரம் என்பது சி,வ,ய,ந,ம எனப்படுகிறது.

இந்த ஐந்தெழுத்து மந்திரத்தில்  "சிவ" என்பது "அது" என்றும், "நம" என்பது "நீயே" என்றும், "அய" என்பது "ஆகிறாய்" என்றும் பொருள் கொள்ளப்படுகிறது. எனவே "சிவயநம" என்பது "அது நீயே ஆகிறாய்" என்றாகிறது. இதையே வடமொழியில் "தத் த்வம் அசி" என்று கூறுகிறார்கள்.

சில சித்தர் பாடல்களில் இந்த ஐந்தெழுத்து மந்திரம் "சிவயவசி" என்று கூறப்படுகிறது. இதை முன்னிருந்து பின்னாலும், பின்னிருந்து முன்னால் வாசித்தாலும் ஒரே மாதிரி உச்சரிப்பு வரும். இதனை சிவவாக்கியர் இருதலைத்தீ என்கிறார். இதனால் மெய் உணர்வை பெற்றவர்களை திருமூலர், "நமச்சிவாயப்பழம் தின்று கிடக்கும் நிலை" என்கிறார்.

இந்த ஐந்தெழுத்து மந்திரத்தை சைவ தலைமுறை ஐந்தாக கூறுகிறார்கள்.

1. நமசிவய - ஸ்தூல பஞ்சாக்ஷரம்.
2. சிவயநம - சூக்ஷும பஞ்சாக்ஷரம்.
3. சிவயவசி - அதிசூக்ஷும பஞ்சாக்ஷரம்.
4. சிவ - காரண பஞ்சாக்ஷரம்.
5. சி - மகாகாரண பஞ்சாக்ஷரம்.

இவ்வுலக இன்பத்தை துய்க்க நினைப்பவர்கள் "ஸ்தூல பஞ்சாக்ஷரத்தையும்", மறு உலக இன்பத்தை துய்க்க நினைப்பவர்கள் சூக்ஷும பஞ்சாக்ஷரத்தையும், மோட்சத்தை நாடுபவர்கள் அதிசூக்ஷும, காரண, மகா காரண பஞ்சாக்ஷரத்தையும் மனதில் ஓத வேண்டும் என்று சித்தர்கள் உரைக்கிறார்கள்.

மனித பிறப்புக்கு மட்டும், தேர்ந்தெடுக்கிற நிலையை இறைவன் அளித்துள்ளார். ஐம்புலன்கள் வழி நுகர்ந்து, வாசனைகளை சேர்த்துக்கொள்கிற பொழுது, இகபர உலக வாசனைகளை புலன்களுக்கு கொடுக்காமல், அதிர்வலைகள் வழி "பஞ்சாக்ஷரத்தை" மட்டும் உள்வாங்க ஒருவன் தீர்மானித்துவிட்டால், சித்தர்களே அந்த ஒருவனை சித்தமார்கத்துக்குள் இழுத்து வந்து, வலது காதில் மூச்சு காற்றினால், "ஓம் நமசிவாய" என்றும், இடது காதில் "ஓம் சிவயநம" என்றும் பஞ்சாட்சர மந்திரம் ஓதி, வாசியோக பாதையில் நடக்கவிடுவார்கள்.

இது ஒரு நிமிடத்திலும் நடக்கலாம், ஒரு ஜென்மத்திலும் நடக்கலாம். இப்படி நடப்பது, அவரவர் விதி விலகி எப்படி வழி விடுகிறது என்பதை பொறுத்து அமையும்.

இதனால் தான், விதி விலகி வழிவிட வேண்டி, கர்மாவை குறைக்க, பலவித தான/தர்மங்களை ஆத்மார்த்தமாக செய்யவைத்து, பல புண்ணிய ஸ்தலங்களுக்கும் செல்ல வைத்து, நிறைய இழப்புகளை ஏற்படுத்தி மெருகேற்றுவார்கள்.

இவற்றை தெளிவாக புரிந்து கொள்பவனுக்கு, வருத்தம் என்பதே அமையாது.

சித்தன் அருள்................ தொடரும்!