"இறைவன் அருள் துணை கொண்டு, இறைவன் உத்தரவால், இந்த உலகத்துக்காக, வாழும் அனைத்து உயிர்களும் தன்னை உணர்ந்து, இறைவனை உணர்ந்து உய்வு பெறவும், இந்த இறைவன் காதை உனக்கு உரைக்கப்படுகிறது. இந்த காதையில் உள்ள முக்கியமான சத்துக்கள் மட்டும் பிறரை சென்று சேர்ந்தால் போதும். ஆதலால் இதை எழுத்து வடிவத்தில் வெளியிடும் பொழுது, இறை என்ன நினைத்ததோ அது மட்டும் வெளியிடப்பட வேண்டும். ஸ்ரீ ராம காதை முழுமையாக உனக்கு உரைக்கப்படும்.
இவ்வுலக மனிதர்கள் பூர்வ கர்மவினையினால் நிறையவே வருத்தங்களை, துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். என்ன தான் செய்தாலும், விதி அதன் பிடியை தளர்த்துவதில்லை. இறை மனம் கனிந்து, அந்த விதியை தளர்த்திட, சூசகமாக தன் அருளை ராமகாதையின் எந்தெந்த ஸ்லோகங்களில் மறைத்து வைத்திருக்கிறது என்பதை உனக்கு உரைக்கிறேன். அதை வெளியுலகுக்கு தெரியப்படுத்து. என் வாக்கில் ராமாயணம் முழுவதும் உனக்கு உரைக்கப்படும். அதை நீ உணர்வாய்!" என்றதும்
நான் இடைமறித்து "ஒரு சிறு விண்ணப்பம். ராமாயணம் முழுவதும் நீங்கள் உரைக்கப்படப்போகிற அதே வார்த்தைகளில், வெளியிட்டால், உங்கள் பரிபூரண அருளுடன், ஆசைப்பட்டதை நடத்திவிட்டோம் என என் மனது திருப்திப்படுமே! அப்படிப்பட்ட அருளை தரக்கூடாதா?" என்று பெருத்த ஆசையுடன் அகத்தியப் பெருமானிடம் கேட்டுவிட்டேன்.
"உண்மை தான்! இந்த உலகம் ஸ்ரீராமனின் காதையை மேலும் உணர்ந்து மேம்படும். ஆனால், அதற்கு இறை அனுமதி அளிக்கவில்லை. அது தெய்வீக சூட்ச்சுமங்களை உட்கொண்டது. தற்போதைக்கு, சுட்டிக் காட்டப்படும் ஸ்லோகங்களை, அதை கூறுவதானால், ஒரு மனிதன் எப்படிப்பட்ட பிரச்சினைகளிலிருந்து விடுபடலாம் என்று தெரிவித்து, இறைக்கு, அவர் இட்ட கட்டளைக்கு அடி பணிந்து கொடுத்த வேலையை செவ்வனவே செய்து, உன் மன ஆசையை தணித்துக்கொள். நடக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் பின்னால் ஒவ்வொரு காரணம் உண்டு. மனதை ஆசைக்கு உட்படாமல் அடக்கி, தெரிவிக்கின்ற விஷயங்களை அதன்படியே உள்வாங்கி, எதெது சுட்டிக் காட்டப்படுகிறதோ, அதை மட்டும் பதிவு செய்து, இந்த உலக நன்மைக்காக எழுத்துருவில் மாற்றி விடு. மற்றவற்றை இறைவன் அருளால், நான் பார்த்துக் கொள்கிறேன்.
அடேய் மைந்தா! இத்தனை யுகங்கள் ஓடிய காலத்தில், எத்தனையோ முறை விண்ணப்பித்தும், இறைவனே தன் சரிதையை, என் நாவால் கூற, இப்பொழுதுதான் அனுமதி தந்தான். எனக்கு அனுமதியை பெற இறைவனிடம் எத்தனை போராடினேன் என்று எமக்குத்தான் தெரியும். எனக்கு அனுமதி கிடைத்ததும், உடனேயே அது மானிட ஜென்மத்துக்கும் இவ்வுலகில் கிட்டட்டும் என்று உன் வழியாக அருளுகிறேன். இதன் அர்த்தத்தை முதலில் புரிந்துகொள். சித்தன் மனநிலை அப்போது உனக்கு புரியும்!" என்று ஒரே போடாகப் போட்டார்.
எனக்கு முழுவதும் புரிந்து போயிற்று. சப்த நாடியும் அடங்கிவிட்டது.
பொதுவாக, மனிதர்களுக்கு, துன்பம் வரும்போது, இது எதனால் வந்தது என்று உணரும்போது சப்த நாடியும் அடங்கிவிடும். ஒரு நல்ல விஷயத்தில், நடந்த உண்மை புரியும் பொழுது, சப்த நாடியும், நெஞ்சு அதிர அடங்கியதை அன்றுதான் உணர்ந்தேன்.
நாம் மனிதர்கள், எத்தனை தவறுகள், கட்டுப்பாடில்லாமல் செய்தாலும், நமக்கென இறைவனிடம் வாதாடி, இறை அருளை பெற்றுத்தர சித்தர்கள்தான் இருக்கிறார்கள். அவர்கள் இல்லையேல், அவர்கள் வேண்டுதல்களை இறை அனுமதிக்கவில்லையெனில், இவ்வுலகம் என்றோ மிருகக் குணம் நிறைந்த மனிதக் கூட்டமாகத்தான் இருந்திருக்கும். சித்தர்கள் நம்மிடம் எல்லோரிடமும் பேசாவிட்டாகிலும், நம்மை வழி திருப்பி, திருத்தி, மன்னிக்க வைத்து, அமைதியாக வாழவைக்க, இறைவனிடம் கொண்டு சென்று நம்மை சேர்க்க, எத்தனை காலமாக, யுகம் யுகமாக, முயன்று கொண்டிருக்கிறார்கள் என்று அந்த நொடியில் எனக்கு புரிந்தது.
இது புரிந்த நொடியில், அமைதியாகிவிட்டேன். இனி அருள்வது அகத்தியர் செயல் மட்டும்தான் என்று தீர்மானித்தேன்.
ஸ்ரீ ராம காதையை தொடங்கும் முன், ராமரின் ஜாதகத்தை அலசி விரிவாக உணர்த்தினார். அதன் பெருமைகளை,மனிதர்களுக்கு புரியவைப்பதற்காக, தான் ஏற்றுக்கொண்ட அவதாரத்தில் எத்தனை துன்பங்களையும், தாங்க தயார் என்று இறை தீர்மானித்து, எல்லா கிரகங்களும் உச்சத்தில் இருந்த நேரத்தில், இறையே தன் பிறவியை தீர்மானித்தது. அனைத்து கிரகங்களும் உச்சத்தில் இருந்தால், பொதுவாக மிக உயர்ந்த வாழ்க்கைதான் அமையும் என்று மனிதர்கள் நினைத்திருந்த காலத்தில், மற்றவர்கள், உயர்ந்தோர் எதிர்பார்க்காத நிலையில், தான் எத்தனை சிரமங்களை தாங்க வேண்டியிருக்கும் என்பதை சூசகமாக உணர்த்துவதற்காக இந்த அவதாரம் எடுத்தார் என்றும் கூறினார்.
அவர் கூறுவதை அனைத்தையும் மிக கவனமாக கேட்டுக் கொண்டே வந்தேன். குறிப்பெடுத்தது மனதில் மட்டும் தான். எழுத்துருவில் கொண்டு செல்ல உத்தரவு கொடுக்கவே இல்லை. ஸ்ரீ ராமபிரானின் சரிதையை பால பருவத்திலிருந்து தொடங்கி, கல்விக்கான குருகுல வாழ்க்கையை கூறி, ஸ்ரீ ராமாபிரானுக்கே தன் சக்தியை உணர்த்த விஸ்வாமித்ரர் அழைத்து சென்றது, அந்த காலத்திலேயே "தந்தை சொல் மிக்க மந்திரமில்லை" என்பது ஸ்ரீ ராமரை பொறுத்தவரை ஏன் என்று உணர்த்தியது, ஜனகன் மகள் சீதையை யார், எதற்கு அவதாரம் எடுத்தாள் என்று புரியவைத்தது எல்லாவற்றிலும் இறைவனின் முன் தீர்மானங்களை வெளிப்படுத்திய விதம், சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை. விஸ்வாமித்ரர் இத்தனை பாக்கியசாலியா என்று அன்றுதான் உணர்ந்தேன்.
விஸ்வாமித்ரருக்கு கிடைத்த அந்த பாக்கியத்தில், ஒரு சதவிகிதம் ஒரு மனிதனுக்கு கிடைத்தால், அடடா! அவன் நேராக மோக்ஷத்துக்கு சென்று, பெருமாள் காலடியிலேயே கிடந்திருப்பான். அத்தனை பெருமைக்குரியது, என்று தோன்றியது.
ஸ்ரீ ராமகாதை வளர்ந்து கொண்டே சென்றது. அதிலேயே மிக கவனத்தில் இருந்த எனக்கு, என்னுள் ஏற்பட்ட மாற்றங்களை உணர முடியவில்லை. ஆனால் மனம் மிக மிக பஞ்சாக மாறியது என்று மட்டும்தான் கூற முடியும்.
"இத்துடன் இன்று நிறைவு செய்வோம்! மறுபடியும் வேறு ஒரு நல்ல முகூர்த்தத்தில் உரைக்கிறேன். இனி நான் சென்று பூசை த்யானம் போன்ற நித்தியா கர்மாக்களை செய்ய வேண்டும். ஆசிகள் உனக்கு" என்று நிறுத்திக் கொண்டார்.
"ஒரே ஒரு விண்ணப்பம்!" என்று ஒன்றை கேட்க நினைத்தேன்.
"என்ன இதுவரை எதையுமே பதிவு செய்ய அனுமதிக்கவில்லை என்பது தானே உன் விண்ணப்பம். சரியான நேரம் வரும் பொது இறை அருளியதை யாம் கூறுவோம். அதுவரை பொறுமையாக கேட்டு வா! உனக்கென்ன தெரியும் இறைவனின் உத்தரவு. யாம் பார்த்து கூறுகிறோம். அப்போது போதும்" என்று கேள்வியை/விண்ணப்பத்தை என்னை கேட்கவிடாமல், அவரே பதிலை கூறினார்.
சரிதான்! நாம் கேள்வியை மனதுள் உருவாக்கும் முன்னரே, அதை கண்டுபிடித்து, அதற்கான பதிலையும் கூறுவதில் அவருக்கு நிகர், அவர்தான் என்று உணர்ந்து, மூத்தோனையும், அனுமனையும் வணங்கி நாடியை பூசை அறையில் இருந்த ஸ்ரீ ராமர் விக்கிரகத்தின் பாதத்தில் வைத்தேன். எழுந்து, சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தேன். பிறகு, த்யானத்தில் அமர்ந்து
"ஓம் அகத்தீசாய நமஹ!" என்று ஜெபிக்கத் தொடங்கினேன்.
சித்தன் அருள்................ தொடரும்!
