நாராயணப் பெரியவர் கொண்டுவந்த மூட்டையிலிருந்து சாளக்கிராமம் கீழே விழுந்ததும் விழுந்த இடத்தில் சுனை தோன்றியதும் அந்தச் சுனைக்குள் சாளக்கிராமம் இருப்பதையும் கண்டு வியந்து போன ‘அகத்தி’ என்ற அகத்தியருக்கு ஆச்சரியம் தாங்கவில்லை.
இப்படிப்பட்ட அதிசயம் நடக்குமா? என்று வியந்து போன அகத்தி, நாராயணப் பெரியவரை நோக்கி கையெடுத்துக் கும்பிட்டார்.
“பெரியவர் யாரென்று இந்த அடியேன் தெரிந்து கொள்ளலாமா?”
“நீ யாரென்று சொன்னால் என்னைப் பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.”
“ஐயாவைப் பார்க்கும்பொழுது வைணவத்திற்காக எதையும் இழப்பவர், வேங்கடவன் மேல் பற்று கொண்டவர் என்று உயர்ந்த எண்ணம் ஏற்பட்டது. “கோவிந்தா! கோவிந்தா!” என்று, தாங்கள் ஒவ்வொரு வினாடியும் நாமத்தைச் சொல்லி வந்தீர்கள். வேங்கடவ தாசனான தங்களுக்கு கைம்மாறு செய்ய வேண்டி, மாற்று உருவம் எடுத்து தங்களுக்கு உதவிசெய்ய வந்தேன். அடியேனுக்கு அகத்தியன் என்று பெயர்” என்றார் அகத்தி என்ற அகத்தியர்.
“அகத்தியர் போன்ற சித்த புருஷர்களைச் சந்திக்க நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். அகத்தியர் இன்னும் இளமை வேஷம் போடவேண்டாமே! நிஜ உருவத்திலேயே எனக்குக் காட்சியைத் தந்தால் பாக்கியவான் ஆவேன்.” என்றார் நாராயணப் பெரியவர்.
“சந்தோஷமாக” என்று சொன்ன அகத்தியர் அடுத்த வினாடி அகத்தியராக மாறி இயல்பான நிலைக்கு வந்தார்.
நாராயணப் பெரியவர் தன் இரு கைகளையும் கூப்பி சாஷ்டாங்கமாக அகத்தியர் காலில் விழுந்தார். அவரை கைதாங்கிப் பிடித்துக் கொண்ட அகத்தியர் “இது வேங்கடவன் சந்நிதி. ஆதிசேஷனின் தலையில் வேங்கடவன் அமர்ந்திருக்கும் புண்ணிய ஸ்தலம். இங்கே என் காலில் விழக்கூடாது. வேங்கடவன் காலில் விழ வேண்டும்” என்று சிரித்துக் கொண்டே சொன்னார்.
“அகத்தியரே! தங்களை இந்தத் திருமலையில் சந்தித்ததில் பெரும் மகிழ்ச்சி. நான் வேங்கடவனைப் பற்றி கிரந்தத்தில் நிறைய ஓலைச் சுவடிகளில் எழுதி வைத்திருக்கிறேன். அவற்றைத் தங்களிடம் ஒப்படைக்கிறேன். இதைத் தாங்கள் தமிழில் மொழி பெயர்த்து எல்லாரும் அறிய வெளிக் கொணரவேண்டும். செய்வீர்களா?” என்று கேட்டார் நாராயணப் பெரியவர்.
“இது வேங்கடவனே அடியேனுக்கு இட்ட கட்டளையாக எண்ணுகிறேன். வேங்கடவனின் எண்ணம் அதுபோல் இருக்குமேயானால் இந்தத் திருமலையில் தாங்கள் எழுதிய கிரந்தத்தை மொழிபெயர்ப்பு செய்து, புரட்டாசி மாதம் சனிக்கிழமையன்று அதை அரங்கேற்றமும் செய்துவிடுகிறேன். போதுமா?” என்றார் அகத்தியர்.
“தன்யனானேன்” என்ற நாராயணப் பெரியவரிடம் அகத்தியர் “பெரியவரே! எனக்கொரு சந்தேகம். தாங்கள் யார்? எதற்காக கஷ்டப்பட்டு மலையேறி வரவேண்டும்? அதுவும் சாளக்கிராமத்தையும் ஓலைச் சுவடிகளையும் தலையில் சுமந்து?” என்று லேசாக நிறுத்தினார்.
“ம்ம்! வேறு என்ன சந்தேகம் அகத்தியரே! எதுவும் கேட்க வேண்டியதுதானே?”
“சாளக்கிராமம் ஏன் வெளியே வந்து விழுந்தது? விழுந்த இடத்தில் எப்படி சுனை உண்டாயிற்று? சாளக்கிராமம் அந்தச் சுனைக்குள் இருப்பதன் காரணம் என்ன? இதையெல்லாம் தாங்கள் கூறவேண்டும் என்று ஆசை” என்றார் அகத்தியர்.
“நாராயணப் பெரியவர் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு இப்படி இந்த மரநிழலில் ஆற அமர உட்கார்ந்து பேசலாமா?” என்றார்.
“தாராளமாக” என்று அகத்தியர் சொல்ல, இருவரும் அந்த சுனை தோன்றிய பள்ளத்தின் அருகிலுள்ள நாவல் மரத்தடியில் அமர்ந்தார்கள்.
“என் பெயர் நாராயணன். வைணவக் குடும்பத்தைச் சேர்ந்தவன். இளம் வயதிலே வேதம், கிரந்தம் போன்றவற்றைக் கற்றேன். எட்டு வயதில் வீட்டை விட்டுப் புறபட்டேன். இப்பொழுது வயது எண்பத்தெட்டு ஆகிறது. கடந்த எண்பது ஆண்டுகளாக இந்த பாரத தேசம் முழுவதும் கோவில் கோவிலாகச் சுற்றினேன். அறுபது வயதில் நான் நேபாளத்துக்குச் சென்று கண்டகி நதியோரம் ஆஸ்ரமம் போல் ஒன்றை அமைத்துக் கொண்டு விஷ்ணுவைத் தியானம் செய்து கொண்டிருக்கும் பொழுது ஒரு நாள் என் மடியில் இந்த சாளக்கிராமம் வந்து விழுந்தது.”
தானாக எப்படி சாளக்கிராமம் வந்து விழுகிறது என்று எண்ணி ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்த பொழுது ஓர் அசரீரிக் குரல் கேட்டது. “நாராயணா! நீ இங்கேயே இருந்து இருபத்தைந்து ஆண்டு காலம் இந்த சாளக்கிராமத்தை வைத்து பூஜை செய். உன் எண்பத்தைந்தாவது வயதில் இங்கிருந்து நடைப்பயணமாக திருமலைக்குப் புறப்பட்டுச் செல். அப்போது இந்த சாளக்கிராமமும் உன்னுடன் இருக்கட்டும். திருமலையில் ஓர் அதிசயம் நடக்கும். எந்த இடத்தில் இந்த சாளக்கிராமம் உருண்டு கீழே விழுகிறதோ அந்த இடத்தில் ஒரு சுனை தோன்றும். சாளக்கிராமமும் அதனுள் இருக்கும். அந்த இடத்தில் அமர்ந்து வேங்கடவனை நோக்கித் தவம் செய். வேங்கடவனே உனக்கு நேரில் தரிசனம் தருவார். நீ பிறந்ததன் பயனை அடைவாய்.”
என்று சொன்ன அசரீரியின் வாக்கை தெய்வ வாக்காக எண்ணினேன். அதன்படி இருபத்தைந்து ஆண்டு காலம் விஷ்ணுவை நோக்கித் தவம் புரிந்தேன். என் எண்பத்தைந்தாவது வயதில் நேபாளத்திலிருந்து புறப்பட்டேன். மூன்றாண்டுகள் நடைப்பயணமாகப் பயணம் செய்து இன்றைக்கு வேங்கடவன் மலையில் படியேறிக் கொண்டிருக்கிறேன்.” என்று அகத்தியரிடம் தன் வாழ்க்கையில் நடந்த கதையைச் சொன்னார் நாராயணப் பெரியவர்.
எட்டு வயதிலிருந்து எண்பத்தெட்டு வயது வரை சதாசர்வ காலமும் நாராயணனையே பிரார்த்தனை செய்து, பாரதத்தின் பல புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வந்த இவர் உண்மையிலேயே புண்ணியசாலிதான்.
வேங்கடவனின் பரிபூர்ண கருணை இவருக்கு நன்றாகவே கிட்டியிருக்கிறது என்று எண்ணிக் கொண்ட அகத்தியர், நாராயணப் பெரியவரை ஆற அமர அமர்த்தி அவருக்கு வேண்டிய சௌகரியங்களைச் செய்துவிட்டு பின்பு நேராக வேங்கடவனின் சந்நிதிக்குச் சென்றார்.
நாராயணப் பெரியவரைப் பற்றிச் சொன்னதும் “அகத்தியரே! அந்த சாளக்கிராமத்தில் இருப்பதும் நான்தான். இன்றல்ல நேற்றல்ல; நாராயணன் ஏழு ஜன்மமாகவே என் மீது அளவற்ற பக்தி கொண்டவன். இன்னும் சொல்லப்போனால் ஒரு நெருங்கிய நண்பரைப் போலவே நான் இந்த நாராயணனிடம் பழகி வந்திருக்கிறேன். கடைசி காலத்தில் தமக்கு என் காலடியில் அடைக்கலம் பெற வேண்டி இப்போது இந்த மலைக்கு வந்திருக்கிறான்.” என்றார் வேங்கடவன்.
“அவ்வளவு பக்திமானா இந்த நாராயணர்?”
“ஆமாம். வேண்டுமென்றால் இப்போதே அவருக்கு ஒரு சோதனை வைக்கிறேன் இம்மியளவும் கூட என் நிலையிலிருந்து மாறமாட்டார் என்பதை நீயே பாரேன்” என்றார் வேங்கடவன்.
“தாங்களே அமுதவாய் திறந்து நாராயணரைப் பற்றிச் சொல்லும்போது எதற்கு ஐயனே அவரைச் சோதிக்க வேண்டும்?”
“இல்லை அகத்தியரே! இவரது பக்தி எல்லையைக் கடந்தது. அதனால்தான் இவரது கடைசி காலத்தில் நாராயணனை இங்கு வரவழைத்தேன். பாரேன் வேடிக்கையை” என்ற பெருமாள் ஒரு நிமிடம் கண்ணை மூடிக்கொண்டு மௌனம் சாதித்தார்.
கீழே...
எந்த இடத்தில் நாராயணப் பெரியவர் அமர்ந்திருந்தாரோ அந்த இடத்தில் திடீரென்று தீ பிடித்தது. பட்சிகள் எல்லாம் அலறி அடித்துக்கொண்டு மரங்களை விட்டுப் பறந்தன. காட்டிலுள்ள மிருகங்கள் பயந்து நடுநடுங்கி அபயக் குரல் எழுப்பின. பசுமையாக இருந்த காடு எப்படி தீ பிடித்தது என்று அங்கிருந்த முனிவர்கள் வியப்புடனும் பீதியுடனும் பேசிக்கொண்டனர்.
ஆனால்...
இவரைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாமல் “கோவிந்தா! கோவிந்தா!” என்று கண்ணை மூடிக்கொண்டு வேங்கடவனையே ஜபம் செய்து கொண்டிருந்தார் நாராயணப் பெரியவர்.
அவரைச் சுற்றி வட்டவடிவமாக அக்னி எரிந்து கொண்டிருந்தது. இத்தகைய சூழ்நிலையில் நாராயணப் பெரியவரின் தியானம் கொஞ்சம் கூடக் கலையவே இல்லை. மற்றவர்களாக இருந்தால் இந்நேரம் தலைதெறிக்க ஓடிப்போயிருப்பார்கள்.
வேங்கடவன், இந்தக் காட்சியை அகத்தியருக்குக் காட்டி “இவருடைய ஆழ்ந்த பக்தியைப் பற்றி என்ன நினைக்கிறாய் அகத்தியரே!” என்றார்
“அற்புதமானது. ஆனந்தமானது. எளிதில் வரையறுத்துச் சொல்லமுடியாதது” என்றார்.
“அப்படியெனில் இவரது பக்திக்கு நாம் என்ன கைமாறு செய்யலாம்?” என்று வேங்கடவன் அகத்தியரிடம் ஆலோசனை கேட்டார்.
“ஐயனே! இதில் நானென்ன சொல்வதற்கு இருக்கிறது? தாங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதன்படியே செய்யலாமே” என்றார் அகத்தியர் பவ்வியமாக.
“அது தெரியாமல்தானே நானே குழம்பிக் கொண்டிருக்கிறேன்” என்ற வேங்கடவன் “இனி நாராயணனைச் சோதனை செய்தது போதும். அக்னி தேவன் விலகிக் கொள்ளட்டும்” என்றார்.
அடுத்த விநாடி அக்னி தேவன் மறைய நாராயணப் பெரியவர் இருந்த இடம் மறுபடியும் பசுமைச் சோலையாக மாறிவிட்டது. காண்பது கனவா? நனவா? என்று திருமலையிலுள்ள முனிபுங்கவர்கள் வியப்பின் எல்லைக்குச் சென்றுவிட பட்சிகளும், மிருகங்களும் உற்சாகமாக அந்தக் காட்டில் வலம் வரத்தொடங்கின.
“ஒன்று செய்வோம். நாமிருவரும் நேரடியாகவே நாராயணனிடம் போவோம். அவருடைய விருப்பத்தைக் கேட்போம். அவர் என்ன விரும்புகிறாரோ அதையே செய்வோம்.” என்றார் அகத்தியர்.
வேங்கடவன் அதற்குச் சம்மதம் தெரிவிக்க அகத்தியரும் வேங்கடவனும் நேராக திருமலையில் ஜபம் செய்யும் நாராயணப் பெரியவரிடம் வந்தனர்.
“நாராயணா” என்றழைத்தார் வேங்கடவன்.
பெருமாளின் திவ்வியமான, மங்களகரமான தேனமுதக் குரலைக் கேட்டு நாராயணப் பெரியவர் கண் திறந்தார்.
எதிரே வேங்கடவன் தரிசனத்தைக் கண்டதும் சாஷ்டாங்கமாக பொற்பாதத்தில் விழுந்தார். அவர் கண்ணில் ஆனந்தம் கரை புரண்டோடியது.
“என்மீது இடைவிடாது பக்தி கொண்டு பிரார்த்தனை செய்து வரும் உனக்கு என்ன வேண்டும்?”
“வேங்கடவா! தங்கள் தரிசனம் ஒன்றே போதுமானது. வேறொன்றும் வேண்டாம் ஐயனே!”
“நீ என்னைப் பற்றி கிரந்தத்தில் நிறைய எழுதியிருக்கிறாயாமே”
“ஆமாம்.”
“அதை அகத்தியன் பொறுப்பேற்று தமிழில் மொழி பெயர்த்து விடுவான். கவலைப்படாதே! வேறு என்ன வேண்டும்?”
“உன் திருவடியில் நான் சரணாகதி ஆகிவிட்டேன். உன் திருவடித் தாமரைப் பாதங்களைக் கண் கொட்டாமல் காலம் காலமாக கண்டு கொண்டே இருக்க வேண்டும்.”
“பிறகு?”
“வேறொன்றும் வேண்டாம் ஐயனே!”
“நீ கேட்டதை நான் கொடுத்துவிட்டேன். அகத்தியர் அதற்குச் சாட்சி. இப்போது நான் கொடுப்பதை நீ வாங்கிக் கொள்.” என்றார் வேங்கடவன்.
நாராயணர் பதில் எதுவும் சொல்லாமல் மிரள மிரள விழித்தார்.
“இந்த இடம் இனிமேல் உன் பெயரால் ‘நாராயண கிரி’ என்று வழங்கப்படும். என் மீது அளவற்ற பக்தி கொண்ட உன் போன்ற பக்தர்களுக்கு வேங்கடவன் அளிக்கும் அன்புப் பரிசு இது” என்று சொல்லி ஆசிர்வாதம் வழங்கினார்.
இன்றைக்கு “நாராயணாத்திரி” என்று சொல்லப்படும் மலையில்தான் நாராயணப் பெரியவர் அருரூபமாக நடமாடிக் கொண்டிருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.
வேங்கடவன் தன் பக்தன் மீது வைத்த கருணைக்கு இதைவிட என்ன சான்று வேண்டும்?
சித்தன் அருள்........................ தொடரும்!