​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Monday, 30 December 2024

சித்தன் அருள் - 1758 - அகத்தியப்பெருமானின் விளக்கம்!


கேள்வி: சமீபகாலத்தில், வாமாசாரத்தின் பூஜைகள், சக்தி, ஏவல் போன்றவை நிறையவே தலை தூக்கி வருவதாக தெரிகிறது. அதன் பாதிப்பிலிருந்து பாதுகாப்பு எடுத்துக் கொள்ள ஒரு மனிதன் என்ன செய்ய வேண்டும்?

1. 108 மூலிகைகளை நல் முறைகளாக ஹோமத்தில் இட்டு, பரிபூரணமாக எரிய வைத்து, அது நன்றாக பஸ்பமாகிய பிறகு, அதனுடன், மஞ்சள், குங்குமம், விபூதி பிரசாதங்களை சேர்த்து, குலதெய்வக் கோவிலிலிருந்து சிறிதளவு மண்ணை எடுத்து, நன் முறையாகவே பச்சை கற்பூரத்தை அதில் இட்டு, ஒரு துணியில் கட்டி, அனுதினமும் குலதெய்வத்தை நினைத்து பூஜைகள் செய்து வர, அதனுடன் மண் தட்டில் பசும் சாணியில் உருவான விபூதியில், ருத்திராக்ஷத்தை வைத்து, அதன் அருகே, இப்பொழுது சொன்னேனே அந்த மூட்டையை வைத்துவிட்டு அனுதினமும் பூஜைகள் செய்து வந்தாலே போதுமானதப்பா. அதாவது தூப, தீபம் காட்டி வந்தாலே போதுமானது அப்பா. மிகுந்த பலமாக மந்திர ஜபம் செய்து வந்தால், எவன் அதை செய்தானோ அவனை சென்று பலமாக தாக்கும், அவன் குடும்பத்தையே அழித்துவிடுமப்பா. ஆனால், அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என சித்தர்கள் விரும்புவதால், அப்படிப்பட்ட மனிதர்களுக்கு நிறையவே வாய்ப்பை கொடுக்கிறோம். 

2. அனுதினமும் சுதர்சன மந்திரத்தை 108 முறை உருவேற்றி, முன்னர் கூறிய 108 மூலிகை பஸ்மத்தை நெய் விட்டு குழைத்து உச்சந்தலையில் வைத்துக் கொண்டு சென்றால் எதுவும் அண்டாதப்பா.

3. மனிதன் திருந்தட்டும் என்று நாங்கள் பார்த்துக் கொண்டு இருக்கிறோம் அப்பனே. அதிகமானால், இன்னும் செப்புகிறோம். திருந்தவில்லை என்றால் அம்மந்திரத்தை யான் செப்புகிறேன். 

கேள்வி: வீட்டில் இருக்கும் பொழுது செய்ய வேண்டியதை நீங்கள் கூறினீர்கள். இந்த காலத்தில் ஆண்களும், பெண்களும் வெளியில் சென்று வேலைக்கு போக வேண்டியுள்ளது. அவர்கள் என்ன செய்ய வேண்டும்?

இதற்காகத்தான் சற்று முன்னரே ருத்திராக்ஷத்தை அணிய வேண்டும் என்று கூறினேன். ஒரு ருத்திராக்ஷத்தை கழுத்தில் அணிய வேண்டும். இன்னொரு ருத்திராக்ஷத்தை தண்ணீரில் இட்டு, மறுநாள் சூரிய உதயத்திற்கு முன் அந்த நீரை பருக வேண்டும். இப்படி பருகிவர அனைத்து விஷயங்களும் தெரிய வரும். ஈசனுக்கு அபிஷேகம் செய்த நீராக மாறி அது குடிக்கின்ற நீராக மாறும். இதனால், அதை பருகுகிறவரை யாரும் அண்ட முடியாதப்பா. இதை சிரமப்பட்டாகிலும் செய்ய வேண்டும்.

இன்னும் எத்தனையோ திருத்தலங்கள் உள்ளது என்பேன். அங்கெல்லாம் சென்று வர, எந்த தீவினையும் பாதிக்காது. ப்ரத்தியங்கிரா தேவி கோவில், கும்பகோணம், சோற்றானிக்கரை கோவில், கேரளம், கொடுங்கல்லூர் தேவி கோவில், கேரளம், தில்லை காளி கோவில், போன்றவை மிக பலம் பொருந்திய கோவில்கள். இங்கெல்லாம் சென்று வந்தாலே, எதுவும் தாக்காதப்பா.

கேள்வி: சித்தர்கள் சொல்கிறபடி நடந்து அவர்கள் கூடவே போய்க்கொண்டிருந்தாலும், வாமாச்சாரத்தின் பாதிப்பை ஒரு மனிதன் எதிர் கொள்ளத்தான் வேண்டியுள்ளது, ஏன்?

ஏற்கனவே கூறிவிட்டேன். இறைவனாயினும், உடம்பை பெற்றுவிட்டாலே, இதை அனுபவிக்கத்தான் வேண்டும். அவ்வளவுதான். இதற்கு பல காரணங்கள் உள்ளது. உடம்பு ஒன்று இருந்தால் பாபம் என்ற ஒன்று இருக்கும். இறைவன் ஒருவனை ஆட்கொள்ளும் பொழுது தான் துன்பமே வருகின்றது.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

No comments:

Post a Comment