திருப்பதியை பற்றி எத்தனையோ மகத்துவங்கள் எல்லாம் கூற வேண்டுமப்பா. பெருமாளின் அம்சம், அங்கு இருக்கிறது என்பது உண்மை. அங்குள்ள வராகர் சன்னதியில் வணங்கினால் குழந்தைகளின் புத்தி கூர்மைக்கு உதவும். அச்சன்னதியிலே ஹயக்ரீவரும், அன்னை கலைவாணியும் அரூபமாக இருந்து தவம் செய்வதுண்டு. பெருமாளை வணங்குவதற்கு முன் வராஹரை வணங்க வேண்டும். திருப்பதி என்பது சாக்ஷாத் பூலோக வைகுண்டம்தான்.
அகத்தியர் அறிவுரை!
அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்கப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!
Monday, 31 October 2016
Sunday, 30 October 2016
சித்தன் அருள் - 486 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!
அகத்தியப் பெருமான் அருள் வாக்கு
மனிதர்கள் குற்றங்கள் செய்தால் தடுப்பதற்கு, சிறைச்சாலையை மனிதர்கள் வைத்திருக்கிறார்கள். இந்த சிறைச்சாலையே இல்லாத நிலை என்றாவது வந்துவிடுமா? அப்படியென்றால் குற்றங்களே இல்லாத மனிதர்கள் இருக்கிறார்கள், என்று பொருளாகிவிடும். அதைப் போல, ஆன்மாக்கள் செய்கின்ற தவறுகளுக்கு இந்த உலகிலே பிறந்து ஏற்கனவே செய்திட்ட பாவங்களுக்கு தண்டனையாக அல்லது ஒருவிதமான துன்ப அனுபவத்தை நுகர்ந்து அந்த பாவங்களை கழிப்பதற்காகத்தான், பிறவிகள் தரப்படுகின்றன. அது விலங்கு பிறவியோ, மனிதப் பிறவியோ, தேவப் பிறவியே, எந்தப் பிறவியாக இருந்தாலும், ஏற்கனவே சேர்த்த புண்ணியத்தையும் நுகர வேண்டும், பாவத்தையும் நுகரவேண்டும். அப்படி நுகர்வதற்காக ஏற்படுத்தப்பட்ட எத்தனையோ கூடங்களுள் இந்த பூமியும் ஒன்று. எனவே, இப்போதைக்கு குற்றங்களே செய்யாத மனிதர்கள் யாரும் இல்லை என்பதால், இந்த பூமி என்னும் சிறைச்சாலையை ஒட்டு மொத்தமாக அழிக்க இறைவன் இன்னும் எண்ணவில்லை. அப்படியொரு சூழலும் நிகழாது. பகுதி, பகுதியாக அழிவுகள் ஏற்படும். அதற்கு காரணம் வேறு.
Saturday, 29 October 2016
சித்தன் அருள் - 485 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!
அகத்தியப் பெருமான் அருள் வாக்கு
ஒரு மனிதன் எமக்கு பிரியமானவன், எமது வழியில் வருபவன் என்றால், எமது வார்த்தைகளை உள் நிறுத்தி, செவி கேட்டு, செயல் நடத்திக் காட்ட வேண்டும். ஒரு செல்வந்தன் இருக்கிறான். அவன் தனக்கு பிரியமான ஒரு உதவியாளனை அழைத்துக் கொண்டு பல்வேறு இடங்களுக்கு செல்லும்போது அவனுக்குக் கிடைக்கும் மதிப்பும், மரியாதையும் அவன் உதவியாளனுக்கும் கொடுக்கப்படுகிறது. ஆயினும், அந்த உதவியாளன் தவறுகள் ஏதேனும் செய்தால், அவனை அழைத்துச் சென்ற செல்வந்தனுக்குத்தானே அந்த கேவலமும், ஏளனமும். அகுதொப்பத்தான் மிகப் பெரிய மஹான்களின் உன்னத கருத்துக்களைக் கூறிக்கொண்டிருக்கும் எமக்கு, "எமது வழியில் வருபவன் என்று கூறிக்கொண்டு, எமது வாக்கின் தன்மையை பிரதிபலிக்காமல் இருந்தால், அது எமக்கு ஏற்புடையதாக இராது. எம்மையும், ஏளனப்படுத்துவதாகும். அப்படிப்பட்டவர்களுக்கு யாங்கள், பெயரளவுக்குத்தான் வாக்குகளை தருவோமே ஒழிய, ஆத்மார்த்தமாக அல்ல. புத்தி சொல்லி திருந்தவில்லை என்றால், "அவன் விதிப்படி வாழட்டும்" என்று விட்டுவிடுவோம். காலம், இடம், சூழல், சுற்றி உள்ள மனிதர்கள், வறுமை, வளமை, இல்லம், தொழில், இதில் எது சிக்கலாக இருந்தாலும், அதை ஒதுக்கி வைத்துவிட்டு, அறம், சத்தியம், இறை பிரார்த்தனையை மறவாதே. இவற்றை பின் தொடர்ந்து கொண்டே வா. யாம் உன் அருகில் இருந்து கொண்டே இருப்போம். ஆசிகள். சுபம்.
Friday, 28 October 2016
சித்தன் அருள் - 484 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!
Thursday, 27 October 2016
சித்தன் அருள் - 483 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!
அகத்தியப் பெருமான் அருள் வாக்கு
நம்பிக்கையின் அடிப்படையில்தான் பக்தியே பிறக்கிறது. "இறைவனை நம்பு" என்பதற்காக, ஒரு மனிதன் தான் செய்ய வேண்டிய கடமைகளில் இருந்து ஒதுங்கி கொள்வது என்பது கூடாது. இந்த இறை நம்பிக்கையின் அளவு மூடத்தனமாக ஆகிவிடவும் கூடாது. அதே சமயம் .நம்பிக்கையை விட்டு விலகும் வண்ணமும் ஆகிவிடக்கூடாது. உடல் நலம் சரி இல்லை என்றால் பிரார்த்தனை செய்வதோடு, மருந்தினையும் ஏற்கவேண்டும். எப்படி ஒரு மருத்துவன் எழுதி கொடுத்த ஒரு மருந்தை ஒரு பிணியாளன் நம்பிக்கையோடு ஏற்கிறானோ, அதே போல்தான் ஆலயம் செல்வதும், பிரசாதம் ஏற்பதும். அதோடு எல்லாவற்றையும் இறைவன் பார்த்துக் கொள்வான் என்ற எண்ணமும் இருக்க வேண்டும்.
சித்தன் அருள் - 482 - "பெருமாளும் அடியேனும்" - 71 - பெருமாளும் நாரதரும்!
கலிபுருஷனின் கை ஓங்கிவிட்டது என்பதற்கு அடையாளமாக இயற்கை பொய்த்து விட்டது என்பதால் பல ஊர்களில் மக்களின் அவலவாழ்வு அதிகமாயிற்று.
அந்தந்த ஊர்களில் இருந்த நல்லவர்கள் பலர், ஞானிகளையும் முனிவர்களையும் நாடிச் சென்றனர்.
ஞான திருஷ்டியால் என்ன நடந்தது என்பதை அறிந்து கொண்ட ஞானிகள் கலிபுருஷனின் வேலைதான் இது என்பதைத் தெரிந்து கொண்டாலும் ‘அவன் பேச்சைக் கேட்டு தெய்வத்தை இகழலாமா?’ என்று ஒரே ஒரு கேள்வியைக் கேட்டனர்.
“இருந்தாலும் இந்த நிலை மாறி மறுபடியும் பசுமையான சூழ்நிலை உண்டாக வேண்டுமென்றால் திருமலை வேங்கடவனால் மட்டுமே முடியும். எனவே எல்லாரும் சேர்ந்து திருமலைக்குச் சென்று வேங்கடவனை நோக்கித் தவம் செய்யுங்கள்.” என்று அந்த நல்லவர்களுக்கு வழியைக் காட்டினார்கள்.
இதனை ஊராருக்குச் சொல்லி “அனைவரும் திருமலைக்குச் சென்று வேங்கடவனிடம் பிரார்த்தனை செய்வோம்” என்று அழைத்தனர்.
ஆனால்...
நிறையப் பேர் இந்த வார்த்தையைக் கேட்க முன் வரவில்லை. மாறாக வேறு விதமாகப் பேசினார்கள்.
“வேங்கடவனை நோக்கி நாங்கள் ஏன் திருமலைக்கு வரவேண்டும்? அவர் காக்கும் கடவுள் என்றால் அவரே இங்கு வந்து மழை பொழிய வைக்கட்டும். நிலத்தைப் பசுமையாக மாற்றி அமைக்கட்டும்.” என்று வாக்குவாதம் செய்தனர்.
இன்னும் சிலர் “திருமலை தெய்வம் என்றால் அவர் திருமலைக்குத்தான் தெய்வம். எங்களுக்கு அல்ல. இது இயற்கையின் நிலை. நாளைக்கே இந்தச் சூழ்நிலை மாறும். இதற்குப் போய் நாங்கள் ஏன் நடந்து கஷ்டப்பட்டு பகவானைப் பார்க்கப் போக வேண்டும்?” என்று கேட்டனர்.
“நாராயணா” என்று காதைப் பொத்திக்கொண்டார்கள். அந்த நல்ல உள்ளம் கொண்டவர்கள்.
இனிமேல் இந்த ஊர் ஜனங்களைத் திருத்த முடியாது. எனவே வருகிறவர்கள் வரட்டும். வராதவர்கள் போகட்டும் என்று முடிவெடுத்த அந்த ஊரைச் சேர்ந்த பெரியவர்களும் ஆன்மிகவாதிகளும் பாதயாத்திரையாக அங்கிருந்து திருமலைக்குப் புறப்பட்டார்கள்.
போகும் வழியில் வேங்கடவனின் புகழைப் பாடிக்கொண்டும், பஜனை நாமாவளிகளைச் சொல்லி கொண்டும் சென்றனர். இதைக் கண்ட கலிபுருஷன் ‘இப்படி இவர்கள் சென்றால் வேங்கடவன் ஒருவேளை விஸ்வரூபம் எடுத்து தன்னை அழித்தாலும் அழித்துவிடுவான்’ என்று நினைத்தான்.
எனவே-
அந்த ஊர் மக்களை திருமலைக்குச் செல்லவிடாமல் தடுக்க என்ன செய்யலாம் என்று யோசித்தான்.
‘யாரெல்லாம் திருமலைக்குச் செல்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் உடன் ஆரோக்கியத்தைக் கெடுத்துவிட்டால் ஒருவர் கூட திருமலைக்குச் செல்லமுடியாது. வந்தபடி ஊருக்குத் திரும்புவார்கள். பிறகு வேங்கடவனாவது என்னை வந்து தாக்குவதாவது?’ என்று திட்டம் போட்டு அதன்படி செயல்படத் தொடங்கினான்.
மரத்தடியிலும், சத்திரங்களிலும் ஓய்வெடுத்து வேங்கடவனின் நாமாவளியைப் பாடிக்கொண்டு சென்ற வேங்கடவனின் பக்தர்களுக்கு வயிற்றுப் போக்கையும் கடுமையான ஜுரத்தையும் உண்டு பண்ணினான் கலிபுருஷன்.
அதனைத் தாங்க முடியாமல் அவர்கள் அவதிப்பட்டதைக் கண்டு கைதட்டிச் சிரித்து மகிழ்ந்தான். தான் நினைத்தபடி அந்தப் பக்தர்கள் திருமலைக்குச் செல்லாமல் திரும்பி விடுவார்கள் என்று நினைத்த கலிபுருஷனுக்கு கடைசியில் ஏமாற்றமே மிஞ்சியது.
அந்தப் பக்தர்கள் ஆயிரம் கஷ்டப்பட்டாலும் அவர்கள் மனம் தளரவில்லை. எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு திருமலை வேந்தனின் திவ்விய நாமாவளியை - உடல் நலம் கெட்டிருந்தாலும் கூட ஈனஸ்வரத்தில் - சொல்லிக் கொண்டே காட்டிலும் மேட்டிலும் முட்புதரிலும் நடந்தார்கள்.
இதையெல்லாம் அறிந்த நாரதர், நேராக திருமலைவாசனிடம் சென்றார். பொதுமக்களும் பக்தர்களும் படுகிற அவஸ்தையைச் சொன்னார். இந்த நிலைமை ஏன் ஏற்பட்டது என்பதற்கான காரணத்தையும் கலிபுருஷனைத் தான் தூண்டிவிட்ட சம்பவத்தையும் ஒன்று விடாமல் சொல்லி...
திருமலைக்கு வருகிற அந்தப் பக்தர்களைக் காப்பாற்ற வேண்டும் என்று வேங்கடவனிடம் வேண்டுகோள் விடுத்தார்.
வேங்கடவனுக்கு நாரதர் மீது சிறிது கோபம் தான். இருந்தாலும் நாரதர் குணத்தை மாற்றமுடியாது என்பதாலும் எதை நாரதர் செய்தாலும் முடிவில் அது நல்லதாகத் தான் இருக்கும் என்பதாலும் வேங்கடவன் நாரதரை மன்னித்தார்.
‘கலிபுருஷன் கொடுமையால் இயற்கைகூட சிலகாலம் செயலிழந்துவிட்டதைக் கண்டு வருந்திய வேங்கடவன், அந்த ஊர் ஜனங்கள் எதற்காக தன்னைத்தேடி வெகுதூரம் இங்கு வரவேண்டும்? அவர்கள் திருமலைக்கு வராமலேயே அவர்களுக்கு வேண்டியதைச் செய்துவிட்டால் என்ன?’ என்று எண்ணினார்.
உடனே நாரதரை அழைத்து “கஷ்டப்பட்டு என்னைத் தேடி அந்தப் பக்தர்கள் இங்கு வரவேண்டாம். அவர்களை உடனடியாக அவரவர் இருப்பிடத்திற்குத் திரும்பிப் போக ஏற்பாடு செய். அவர்களின் வேண்டுகோளை நிச்சயம் யாம் நிறைவேற்றுவோம்” என்று உத்தரவிட்டார்.
‘நேராக நான் இப்படிச் சென்றால் ஜனங்கள் நம்ப மாட்டார்கள். ஊருக்கும் திரும்பிச் செல்லமாட்டார்கள். அது மட்டுமல்ல. திருமலை வேங்கடவன் சார்பில் நான் அந்தப் பக்தர்களை திருப்பி அனுப்பினால் இந்தச் செய்தி கலிபுருஷனுக்குத் தெரிந்துவிடும்’ என்றெண்ணிய நாரதர் வயதான ஒரு முனிவரைப் போல் மாறுவேஷம் கொண்டார்.
தான் யாரென்று பக்தர்களிடம் காட்டிக் கொள்ளாமல் நேரிடையாகச் சென்று “திருமலைக்குச் சென்று, வேங்கடவனைத் தரிசனம் செய்து உங்கள் பிரார்த்தனையைக் கேட்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இப்படிக் கஷ்டப்பட்டு திருமலைக்குச் செல்ல வேண்டாம். பேசாமல் அவரவர்கள் ஊருக்குத் திரும்பிச் செல்லுங்கள். உங்கள் பிரார்த்தனையை வேங்கடவன் நிறைவேற்றுவார்.” என்றார் நாரதர்.
ஆனால்-
அந்தப் பக்தர்கள் இதனை ஏற்கவில்லை. “இந்த மாதிரி ஒரு மகாமுனி சொன்னதன் பேரில்தான் திருமலை வேங்கடவனிடம் பிரார்த்தனை செய்து எங்கள் கஷ்டங்களைப் போக்க வந்தோம். அப்படியிருக்க நீங்கள் சொன்னதை நாங்கள் ஏற்கமாட்டோம். எங்கள் உயிர் போனாலும் திருமலைக்குச் சென்று வேங்கடவனிடம் பிரார்த்தனை செய்து விட்டுத்தான் வருவோம்.” என்றார்கள்.
நாரதருக்கு இது தர்ம சங்கடமாகப் போயிற்று. எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் அவர்கள் கேட்பதாக இல்லை.
உடனே-
அங்கிருந்தபடியே வேங்கடவனுக்கு மானசீகமாகப் பேசினார். “இவர்கள் என்ன சொன்னாலும் நம்ப மறுக்கிறார்கள். தாங்களே இங்கு நேரில் வந்து வாக்குறுதி அளித்தால் கூட அது கலிபுருஷனுடைய வேலையாக இருக்கும் என்று சந்தேகப்படுவார்கள். இப்போது என்ன செய்ய?”
“சரி! அவர்கள் கஷ்டப்படாமல், ஆரோக்கியமாக திருமலைக்கு வந்து சேரட்டும். அதே சமயம் வருண பகவானிடம் யாம் ஆணையிட்டிருக்கிறோம். இன்னும் இரண்டு நாளில் அவர்கள் ஊரில் பெருமழை பெய்யும். பூமியில் பசும்புல் தழைக்கும். கிணறுகளில், ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுக்கும். விவசாயம் செழிக்கும்.
“வறுமையினால் ஏற்பட்ட வியாதிகள் விலகும். ஆலயங்களில் ஆறு காலமும் பூஜை நடக்கும். அன்னத்திற்கு இனிமேல் பஞ்சம் வராது. இறந்துபோன கறவை மாடுகள் மீண்டும் உயிர்பிழைக்கும். ஒவ்வொரு வீட்டிலும் பூஜைமணி ஒலிக்கும்.
“தெய்வ பக்தி இல்லாதவர்கள் தாங்கள் செய்த பாபத்திற்காக மனம் திருந்தி ஆன்மிகத்தில் அதிகமாக ஈடுபடுவார்கள். மொத்தத்தில் யாரெல்லாம் என்மீது நம்பிக்கை கொண்டு பிரார்த்தனை செய்கிறார்களோ அவர்களுக்கெல்லாம் என் அருள் கிட்டும்.” என்று வேங்கடவன் திருவாய் மலர்ந்து அருளினார்.
நாரதருக்கு இதைக்கேட்டு இரட்டிப்பு மகிழ்ச்சி. கலிபுருஷனைத் தூண்டிவிட்டது, வேங்கடவன் அதற்கு அருள் பாலித்தது இரண்டையும் நினைத்து அகமகிழ்ந்து போனார்.
அதேசமயம் நாரதர் முனிவர் வேடத்திலிருந்து நாரதராக வெளிப்பட்டார். ‘இதுவரை ஒரு முனிவரைப் போல தங்கள் முன்பு வந்து நின்றது நாரதரா?’ என்ற ஆச்சரியத்தில் அந்தப் பக்தர்கள் அனைவரும் நாரதரின் காலில் விழுந்து நமஸ்கரித்தனர்.
“திருமலைக்குச் செல்லுவது உங்கள் விருப்பம். எனினும் உங்கள் வேண்டுகோளை வேங்கடவன் இரண்டே நாளில் நிறைவேற்றுவார்” என்று நாரதர் இப்போது சொன்னதைக் கேட்டு அந்தப் பக்தர்கள் தம்தம் ஊருக்குத் திரும்பலாயினர்.
அவர்களை வழியனுப்பிவிட்டு ‘நாராயணா’ என்று நாரதர் சொல்லி முடிக்கும் முன்பு-
கலிபுருஷன் மிகுந்த கோபத்தோடு பல்லைக் கடித்துக் கொண்டு வந்து நின்றான். அவன் கோபத்தைக் கண்டு நாரதர் பயந்து போனார்.
சித்தன் அருள்................ தொடரும்!
Tuesday, 25 October 2016
சித்தன் அருள் - 481 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!
அகத்தியப் பெருமான் அருள் வாக்கு
இறை தரிசனமோ, சித்தர்களின் தரிசனமோ கிடைப்பது பிரார்த்தனையினாலும், பூர்வ ஜென்ம புண்ணியத்தாலும். பூர்வ ஜென்ம புண்ணியத்தால் தானே நம்பிக்கையும், அந்த நம்பிக்கையின் அடிப்படையில் பிரார்த்தனையும் ஒருவன் செய்கிறான். அது மட்டுமல்ல, எத்தனையோ இடங்களுக்கு இறைவன் சென்று, மகான்களின் வடிவிலும், சாதாரண மனிதர்கள் வடிவிலும், வேண்டிய உதவிகளை இன்னும் செய்து கொண்டுதானிருக்கின்றார். ஆனால் ஒரு கடினம் என்னவென்றால், "வந்தது இறைதான்" என்று அந்த ஆன்மாவால் புரிந்து கொள்ள முடியாது.
Monday, 24 October 2016
சித்தன் அருள் - 480 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!
அகத்தியப் பெருமான் அருள் வாக்கு
திருப்பதியில் உள்ளது பெருமாள் அல்ல, முருகப்பெருமான் என்ற கருத்துக்கு, ஞானிகளின் பார்வை வேறு. மனிதர்களின் பார்வை வேறு. அங்கு பெருமாளே அவதாரம் எடுத்ததுதான் உண்மை. காலப்போக்கிலே பிற தெய்வ உருவங்கள் அங்கு இடம் பெற்றதும் உண்மை. எனவே, திருப்பதி பெருமாளின் முன்பு நின்று, முருகனாக எண்ணி வணங்கினால், பெருமாள் கோபித்துக்கொள்ளப் போவதில்லை. பெருமாளாக நினைத்து வணங்கினால், முருகனும் கோபித்துக்கொள்ளப் போவதில்லை.
Sunday, 23 October 2016
சித்தன் அருள் - 479 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!
அகத்தியப் பெருமான் அருள் வாக்கு
உலகியல் வாழ்விற்காக, கடுமையாக ஒருவன் போராடக்கூடாது என்று நாங்கள் கூறவில்லை. கடுமையாக ஒருவன் உழைக்கக்கூடாது, என்று நாங்கள் கூறவில்லை. அந்த செயலின் காரணமாக மறந்தும் பாவத்தை சேர்க்கக்கூடாது என்பதுதான் எமது கோட்பாடாகும். கூடுமானவரை, யாரையும் பாதிக்காமல், யார் மனதையும் புண்படுத்தாமல், தத்தம் கடமைகளை, நேர்மையாக ஆற்றி தன்னால் முடிந்த தர்ம காரியங்களை ஆற்றி, அன்றாடம் இறை நாமாவளியை ஆழ் மன நிலையில் நிறுத்தி, சிந்தித்து ஒரு மனிதன் வாழ்ந்தாலே தேடுகின்ற நிம்மதியும், சந்தோஷமும் அவனைப் பின் தொடரும். இறைவனின் அருளாசியும் வந்து சேருமப்பா! இதை சரியான விகிதாச்சாரத்தில் புரிந்து கொண்டு எந்த விதமான காழ்ப்பு உணர்ச்சிக்கும் இடம் தராமல், எம் வழியில் வர முயற்சி செய்தால், இறைவன் அருளைக்கொண்டு, யாமே அகுதொப்ப மனிதனை கரைசேர்ப்போம் அப்பா!
Saturday, 22 October 2016
சித்தன் அருள் - 478 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!
அகத்தியப் பெருமான் அருள் வாக்கு
இறைவனின் கருணையை கொண்டு, இயம்புவது யாதென்றால், இகுதொப்ப காலகாலம், வாழ்வியல் துன்பங்களுக்கு தீர்வு தேடி மாந்தர்களில் சிலர் எம்மை நாடுவது உண்டு. துன்பங்கள் எல்லாம் ஒரு கணப்பொழுதில் அல்லது விழி மூடி விழி திறப்பதற்குள் தீர்க்கப்படவேண்டும் என்பதே மனிதனின் நோக்கமாக இருக்கிறது. அணுவளவும் துன்பமே இல்லாமல் வாழவேண்டும், சதா சர்வகாலமும் இன்பமும், சாந்தியும் வாழ்வில் நிலவவேண்டும் என்பதே மனிதர்களின் எண்ணமாக இருக்கிறது. இதை தவறு என்று நாங்கள் கூறமாட்டோம். ஆனால் இந்த இன்பமும், நிம்மதியும் இந்தந்த விதத்தில் தான் இருக்க வேண்டும் என்று மனிதன் எதிர்பார்க்கிறானே, அந்த எதிர்பார்ப்புதான் குறையாக மாறிவிடுகிறது. எனவே, மனிதன் எதிர்பார்க்கிற நீடித்த இன்பமும் நிலைத்த சாந்தியும் இறைவனின் பாதாரவிந்தங்களை சரணடைந்து, இறையோடு, சாயூச்சமோ, சாரூபமோ, சாலோகமோ, சாமீபமோ, ஏதாவது ஒரு ஆன்ம பரிணாம வளர்ச்சி நிலை அடைந்தால் ஒழிய மனிதனுக்கு கிட்டாது.
Friday, 21 October 2016
சித்தன் அருள் - 477 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!
அகத்தியப் பெருமான் அருள் வாக்கு
ஒரு ஆத்மா, உடலோடு இருந்தாலும், உடலற்று இருந்தாலும், அதனுடன் இருப்பது பாவங்களும், புண்ணியங்களும். எனவே, ஆத்மா நித்திய சந்தோஷமாக, நித்திய நிம்மதியாக, இருக்கவேண்டும் என்றால், புண்ணியம், புண்ணியம், புண்ணியம், புண்ணியம், புண்ணியம், சதா சர்வகாலம் மனிதன் புண்ணியத்தை தேடித்தான் ஆகவேண்டும். ஒரு விலங்கு புண்ணியத்தை சேர்க்க இயலாது. பாவத்தையும் செய்ய இயலாது. அது செய்த பாவத்தை அந்த விலங்கு உடலுக்குள் அந்த ஆத்மா புகுந்து செயல்பட்டு, அந்த விலங்காகவே வாழ்ந்து, அந்த பிறவியை முடிக்க வேண்டும் என்பது விதியின் கட்டளை. ஆனால் மனிதன் நினைத்தால், புண்ணியத்தை சேர்த்துக் கொள்ள முடியும். இந்த சுதந்திரம் மனிதனுக்கு இறைவனால் கொடுக்கப்பட்டிருக்கிறது. கொடுத்த சுதந்திரத்தை மனிதன் என்றுமே சரியாக பயன்படுத்தியதாக சரித்திரமில்லை. சரியாக பயன்படுத்தினால் இறைவனருள் தொலைவில் இல்லை. ஆசிகள்.
Thursday, 20 October 2016
சித்தன் அருள் - 476 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!
அகத்தியப் பெருமான் அருள் வாக்கு
பல்வேறு தருணங்களில், யாங்கள் மௌனமாக இருக்கிறோம் என்றால், அது போன்ற மௌனம் பல்வேறு தெய்வீக சூட்ச்சுமத்தை உடையது. மனிதர்களால், சட்டென்று புரிந்து கொள்ள முடியாத நிலையில் இருக்கக்கூடியது. நாங்கள் மௌனமாக இருக்கிறோம் என்றால், அதற்கும் ஒரு காரணம் இருக்கும். வாக்கை உரைக்கிறோம் என்றால், அதற்கும் ஒரு காரணம் இருக்கும். பல்வேறு தருணங்களில் உரைத்தாலும், எதிரே அமர்ந்திருக்கும், அகுதொப்ப மனிதன் பல்வேறு பிறவிகள் கடந்துதான் இறைவனை நோக்கி வரப்போகிறான் என்று தெரிந்த பிறகு, இறைவன் கட்டளை இல்லாமல் நாங்கள் வாக்கை கூறுவதில்லை. அதனால் தான் இன்னும் பல்வேறு மனிதர்களுக்கு நாடியின் சூட்சுமம் புரிவதில்லை. அதை புரிந்துகொள்வதற்கும், புரிந்து அதன் வழியில் வருவதற்கும் கூட சில புண்ணியங்கள் தேவைப்படுகிறது.
சித்தன் அருள் - 475 - "பெருமாளும் அடியேனும்" - 70 - நாரதரும் கலிபுருஷனும்!
நாரதர் கேட்ட கேள்விகளுக்கு அழுத்தம் திருத்தமாகவும் கருணையோடும் பதில் சொன்ன வேங்கடவன், எல்லாத் தெய்வ ரகசியங்களையும் நாரதருக்குச் சொல்லிவிட்டதாக எண்ண வேண்டாம்.
ஏனெனில்,
வேங்கடவனுக்கு நாரதரைப் பற்றித் தெரியும். இங்கொன்று பேசி, எதிராளிகளிடம் வேறொன்று பேசி, குட்டையைக் குழப்புவார் என்று. இது நாரதர்க்கு கைவந்த கலை. ஆகவே, தான் சொல்லும் அத்தனை விஷயங்களும், நாட்டைக் கெடுத்துக் கொண்டிருக்கும் கலிபுருஷன் காதுகளுக்குப் போய்ச் சேர்ந்துவிடும் என்பதால் வேங்கடவன் பொடிவைத்துப் பேசினார் என்பதுதான் உண்மை.
வேங்கடவனிடம் விஷயத்தைக் கறந்து விட்டோம். இதை அப்படியே கலிபுருஷன் காதுகளில் போட்டு விட்டால், கலிபுருஷன் எதிர்காலத்தில் என்ன செய்யப்போகிறான் என்பதைத் தெரிந்து கொள்ள நாரதருக்குக் கொள்ளை ஆசை.
எனவே-
வேங்கடவனிடம் விடைபெற்றுக் கொண்டு நாரதர் நேராக கலிபுருஷனைத் தேடிப்போனார்.
அருமையான ஒரு வனாந்தரத்தில் கலிபுருஷன் குறுக்கும் நெடுக்குமாக நடந்து எதைப்பற்றியோ பலமாக சிந்தித்துக் கொண்டிருந்தான். திருப்பதியில் வேங்கடவன் இருக்கும் வரை தன்னால் சுதந்தரமாகச் செயல்படமுடியாது என்பதை உணர்ந்து திருப்பதியை விட்டு வெகு தொலைவுக்கு வந்துவிட்டான்.
அவன் அமர்ந்த இடம் ஒரு சிற்றூர். பக்கத்தில் வனாந்தரமும் இருந்தது. அந்த இடத்தில் தங்கி தன் கலி வேலைகளை அந்தச் சிற்றூர் மக்களிடம் காட்டி வந்தான்.
“தெய்வத்தை நம்பாதே! தெய்வம் என்பது பொய்! நீ தான் தெய்வம்! உள்ளூர் பெரிய மனிதர்கள் சொல்லுகிற வேதத்தை - ஒழுக்க நெறியை நம்பாதே! வேதம் ஓர் ஏமாற்று வித்தை. அதைச் சொல்கிறவர்கள் வேஷதாரிகள். உன்னை நம்பு! அவர்களை நம்பாதே! அவர்கள் சொல்கிற வார்த்தைக்கும், திரை மறைவில் அவர்கள் நடத்தும் வாழ்க்கைக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. மனு நீதி என்பது பொய். அதைச் சொல்லி அவர்கள் பிழைக்கிறார்கள்! அவர்கள் பெண்ணாசை பிடித்தவர்கள். ஒழுக்கம் கெட்டவர்கள். நான் சொல்வது பொய் என்றால் அந்தப் பெரிய மனிதர்களுக்குத் தெரியாமல் அவர்களைப் பின் தொடர்ந்து ரகசியமாகச் சென்று பார்! உண்மை விளங்கும்.”
என்று விஷத்தைக் கக்குவது போல் கலிபுருஷன் அந்தச் சிற்றூர் மக்களிடம் துர்போதனைகளைப் பரப்பினான். கலிபுருஷன் சொன்னது உண்மைதான் என்பதைப் போல் அந்தச் சிற்றூரில் இரண்டொரு சம்பவங்களும் நிகழ்ந்தன. அதை ஜனங்கள் கொஞ்சம் கொஞ்சமாக நம்ப ஆரம்பித்தனர்.
எதெல்லாம் பாபம் என்று இருந்தார்களோ அதெல்லாம் புண்ணியம் என்று பேசத் தொடங்கினர். அந்த விஷயம் அந்தச் சிற்றூரில் மட்டுமன்றி அக்கம் பக்கத்து கிராமங்களை நோக்கியும் பரவலாயிற்று. அதைக் கண்டு கலிபுருஷன் மிகுந்த ஆனந்தப்பட்டான்.
அடுத்தபடியாக மக்களிடம் தெய்வ பக்தியை ஒழிக்கவேண்டும். கோவில்களுக்கு மக்கள் செல்வதைத் தடுக்க வேண்டும். அதுமட்டுமன்றி, ஒவ்வொரு குடும்பத்திலும் குழப்பத்தை ஏற்படுத்தி குடும்பத்தைப் பிரிக்கவேண்டும். வியாதிகளை உண்டாக்கி அதனை நிவர்த்தி செய்ய முடியாதபடி தடுக்க வேண்டும் என்றெல்லாம் முடிவெடுத்தான்.
அதை எப்படி நிறைவேற்றுவது என்பதைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கும் பொழுதுதான் நாரதர் கலிபுருஷனை நோக்கிச் சென்றார்.
நாரதரைக் கண்டதும் கலிபுருஷனுக்கு உள்ளுக்குள் பெருமகிழ்ச்சிதான். அதேசமயம் அவர் எந்த விநாடி எப்படி மாறுவார் என்றும் தீர்க்கமாகச் சொல்லமுடியாது. ஆனால் குழப்பத்தை விளைவித்து புத்தியைச் செயல்பட விடாமல் செய்வதில் நாரதருக்கு இணை நாரதர்தான்.
எனவே, இவரைத் தக்கவாறு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மனத்திற்குள் ஆசை ஆசையாய்த் திட்டம் போட்டான்.
“என்ன கலிபுருஷரே! சௌக்கியமா?” என்றார் நாரதர்.
“சௌக்கியமாக இருந்தால் நான் ஏன் இந்த வனாந்தரப் பிரதேசத்தில் தனியாகச் சுற்றிக் கொண்டிருக்கிறேன்?” என்று சோகமாக அங்கலாய்த்தார்.
“என்ன கலிபுருஷரே! நான் கேள்விப்பட்டது வேறு. தாங்கள் சொல்வது வேறாக இருக்கிறதே. ஊரெல்லாம் உங்கள் புகழ்தானே பரவிக் கொண்டிருக்கிறது?”
“அப்படியா? தாங்கள் சொல்வது நிஜமாக இருந்தால் எனக்கு அதுவே பெரும் மகிழ்ச்சி”
“நேற்றைக்குக் கூட திருமலைக்குச் சென்றிருந்தேன். வேங்கடவனைச் சந்தித்தேன்.”
“என்ன சொல்கிறார் வேங்கடவன்?”
“கலிபுருஷா! இப்போதெல்லாம் வேங்கடவனால் எதுவும் செய்ய முடியவில்லையாம். நாட்டில் உங்கள் கை ஓங்கி இருப்பதால் பாபங்கள் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருக்கிறதாம்.”
“நாரதரே!”
“ம்ம்”
“இதை நான் நம்பலாமா?”
“என்ன கலிபுருஷா, இன்னுமா என்னை நம்பவில்லை? இந்தச் செய்தியைக் கேட்ட சந்தோஷத்தில் நான் உடனே உங்களைப் பார்க்க ஓடோடி வந்திருக்கிறேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.” என்று நாரதர் கடைக்கண்ணால் குனிந்தபடி கலிபுருஷனைப் பார்த்தார்.
“நாட்டில் பாபங்கள் காட்டுத்தீ போல் பரவிக் கொண்டிருக்கின்றன. இதனைத் தடுக்க என்னால் முடியவில்லை. நடப்பது நடக்கட்டும் எல்லாம் அந்த கலிபுருஷன் செயல் என்று வேங்கடவனே என்னிடம் பலமுறை புலம்பி விட்டார். போதுமா?”
“உண்மையிலே வேங்கடவன் அப்படிச் சொல்லியிருந்தால் நீண்ட காலத்துக்குப் பிறகு எனக்குக் கிடைத்த பெரும் வெற்றிதான். நாரதரே நேரில் இங்கு வந்து என்னிடம் சொல்வதால் நான் இதனை ஏற்றுக் கொள்ளுகிறேன். ஆமாம். ஒரே ஒரு சந்தேகம்” என்றான் கலிபுருஷன்.
“என்ன சந்தேகம்?”
“பிரம்மா என்னைப் படைத்தார். பூலோக மக்களை ‘கலி’யுக மக்களாக மாற்றச் சொன்னார். அவர் இட்ட கட்டளையை நான் செய்ய ஆரம்பித்திருக்கிறேன். என்னை அழிக்க வேங்கடவன் கல் தெய்வமாக திருமலையில் அவதரித்தவர், இங்கு வந்து ஏன் எனக்கெதிராகச் செயல்படவில்லை?”
“நியாயமான கேள்வி. ஆனால் அவர் இங்கு வர மாட்டார். யார் யார் திருமலைக்கு வந்து வேங்கடவனிடம் பாபத்தைச் சொல்லி முறையிடுகிறார்களோ அவர்களுக்கு மட்டும்தான் பாபத்தைப் போக்குவாராம். மற்றபடி தங்களைப் பின் தொடர்ந்து வர மாட்டாராம்.”
“இது தாங்களாகச் சொல்வதா? இல்லை வேங்கடவனே சொன்னதா?”
“பார்த்தீர்களா பார்த்தீர்களா கலிபுருஷனுக்கு இன்னும் இந்த நாரதர் மீது முழு நம்பிக்கை வரவில்லை போலும். ம் ம்... எனக்கெதற்கு இந்த வம்பு? நீங்களாயிற்று அந்த வேங்கடவனாயிற்று. எப்படியோ போங்கள்!” என்று வெறுப்புற்றது போல் முடித்தார் நாரதர்.
“சரி சரி. நான் நாரதப் பெருமானை இம்மியளவும் பிசகாமல் நம்புகிறேன். இங்கு எதற்காக வந்தீர்கள்? அதைச் சொல்லவே இல்லையே.”
“சொல்லவிட்டால்தானே?”
“கோபப்படாதீர்கள் நாரதரே! தாங்கள் இங்கு வந்த விஷயம் என்ன?”
“சொல்லட்டுமா?”
“சொல்லுங்கள் நாரதரே!”
“இப்போது வேங்கடவன் மிகவும் சோர்ந்து போயிருக்கிறார். முன்பு போல் செயல்படுவதில்லை. எனவே தாங்கள், தங்கள் இஷ்டப்படி ஜனங்களிடம் எப்படி வேண்டுமானாலும் ஆன்மிகம், தெய்விகம், நன்னெறி, தர்மம் போன்றவற்றுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடலாம். ஜனங்களும் இனி உங்கள் பின்னால் வந்து விடுவார்கள். வேங்கடவனால் எதுவும் முடியாது கலிபுருஷா!” என்று தூபம் போட்டார் நாரதர்.
“ஆஹா! என்ன அருமையான ஆசீர்வாதம் இன்று எனக்குக் கிடைத்திருக்கிறது! உண்மையில் நான் தங்களுக்குத் தன்யனானேன்.” என்று மகிழ்ந்து போனான் கலிபுருஷன்.
“இன்னும் பூலோக மக்கள் திருந்தவில்லை. பாபம் புண்ணியம் என்று வேங்கடவனையே சுற்றி வருகிறார்கள். இதை ஒழிக்க வேண்டும்.”
“எப்படி?”
“கடவுளே இல்லை என்ற கொள்கையைப் பரப்பவேண்டும். யார் வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ளலாம்; பகவானால் ஒன்றும் செய்ய முடியாது. மழை பொழிவதும் சூரியன் தோன்றுவதும் உலக இயற்கை. அதில் தெய்வத்திற்கு சிறிதும் சம்பந்தமே இல்லை, என்பது போன்றவற்றை மக்களிடம் பரப்பவேண்டும். இதைச் செய்தாலே போதும். ஜனங்களுக்கு உங்கள் மீது பிடிப்பு ஏற்பட்டுவிடும்.”
“அப்படிச் செய்யலாம் என்றா சொல்கிறீர்கள்?”
“ஆமாம் ‘நாராயணா’ என்று சொல்லியே வலம் வந்து கொண்டிருக்கும் அதே நாரதர்தான் இதைச் சொல்கிறேன்.”
“நம்பலாமா? பின்னர் திருமலை வாசனால் வேறு ஆபத்தோ அல்லது இடையூறோ ஏற்படாதே?”
“நிச்சயம் ஏற்படாது” என்று நாரதர் தூண்டிவிட பத்து மடங்கு மகிழ்ச்சியில் கலிபுருஷன் துள்ளிக் குதித்தான். இதனை உடனடியாகச் செயல்படுத்தப் போவதாகவும் நாரதரிடம் உறுதிமொழியும் கூறினார்.
கலிபுருஷனைத் தூண்டிவிட்டு கலகத்தை ஆரம்பித்துவிட்ட சந்தோஷத்தில் நாரதர் ‘எப்படியோ நான் வந்த காரியம் முடிந்துவிட்டது. இனி வேங்கடவன் பாடு, கலிபுருஷன் பாடு’ என்று ஆனந்தமாகப் புறப்பட்டுப் போனார்.
கலிபுருஷனின் வேலையும் துர்போதனையும் பூலோக மக்களிடம் பரவின. அதற்கேற்றாற் போல் அந்த ஆண்டு பெய்ய வேண்டிய மழை பொழியவில்லை. பூமாதேவி வறண்டு போனாள். விவசாயம் தோல்வியடைந்தது. ஆடு, மாடு, கோழிகள் நீரின்றித் துடித்துச் செத்தன. நாட்டில் வறுமைப் பிணி சூழ்ந்தது.
ஜனங்கள் ஆண்டவனை வேண்டியும் கூட, நாட்டில் சுபிட்சம் ஏற்படவில்லை என்பதால், ஜனங்களுக்கு தெய்வ நம்பிக்கைக் குறையத் தொடங்கிற்று.
சித்தன் அருள்.................... தொடரும்!
Wednesday, 19 October 2016
Tuesday, 18 October 2016
சித்தன் அருள் - 473 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!
அகத்தியப் பெருமான் அருள் வாக்கு
இறைவனை வணங்கினாலே, ஒரு மனிதனுக்கு தன்னம்பிக்கை பிறக்கும். தன்னை விட ஒரு பெரிய, உயரிய சக்தியின் அருள் நமக்கு கிடைக்கிறது, என்ற தைரியம் பிறக்கும். இறைக்குப் பிடிக்காததை, செய்யக் கூடாது என்ற எண்ணம் வரும். அவன் நல்லவனாக மாறும்பொழுது, எல்லா கிரகங்களும் நன்மையைத்தான் செய்யும்.
Monday, 17 October 2016
சித்தன் அருள் - 472 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!
அகத்தியப் பெருமான் அருள் வாக்கு
தவறு செய்கின்ற எல்லா மனிதர்களுக்கும் தண்டனை உண்டு. அந்த தண்டனை, பிறர் கண்ணுக்குத் தெரியும்படி, பிறர் அறியத்தான் வர வேண்டும் என்பதில்லை. பிறர் அறியாமல் வருவதும் உண்டு. அப்படிப்பட்ட மனிதர்களை நீ பார்க்கவேண்டும் என்றால் இப்பொழுது யாரையெல்லாம் இழிந்த நிலையிலே, உடல் மிகவும் சோர்ந்த நிலையிலே, வியாதியினால் பீடிக்கப்பட்டு, பிறர் யாரும் திரும்பிக் கூட பார்க்காத நிலையிலே, பிற மனிதர்களால் ஒதுக்கப்பட்டு, உதாசீனப்பட்டு, அரசு மருத்துவமனைகளில், உயிருக்குப் போராடிக் கொண்டு அல்லது சாலை ஓரங்களில் உணவும், உடையும் இல்லாமலும் இருப்பார்கள். "இப்படி வாழவேண்டும் என்ற ஒரு விதி அவர்களுக்கு இருக்கும் பொழுது எதற்காக அவர்களுக்கு உதவ வேண்டும்" என்று ஒருவன் குதர்க்கமாக கேட்பான். அவர்களுக்கு உதவி செய்யும் பொழுது, கஷ்டத்தை தீர்ப்பவனின் கர்மா குறைகிறது, என்பதற்காகத்தான் அவ்வாறு கூறுகிறோம்.
Saturday, 15 October 2016
சித்தன் அருள் - 471 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!
அகத்தியப் பெருமான் அருள் வாக்கு
ஒரே பிறவியிலே ஞானம் அடைந்தவர்கள் என்று யாருமே கிடையாது. இறை மனது வைத்தால், வேண்டுமானால் அப்படி அமையலாம். பல பிறவிகள் எடுத்து, பல அனுபவங்களை நுகர்ந்து, பல்வேறு கர்மாக்களை கழித்த பிறகுதான், ஞானம் என்பது சித்திக்கும். உண்மையான ஞானத்தை அடைந்து விட்டால் ஒரு மனிதன் யாருடனும் பேசமாட்டான். அவன் பேசுவதற்கும், கேட்பதற்கும் எதுவுமே இல்லை. பார்ப்பதற்கும், உணர்வதற்கும் எதுவுமே இல்லை. அவனுக்குத் தேவையுமில்லை. அவன் தேவையும் யாருக்கும் இல்லை. இதுதான் ஞானத்தின் உச்ச நிலையாகும். இதை அடைவதற்குத்தான் அனைத்து வழிபாடுகளும், சடங்குகளும், புறச் செயல்களும் கூறப்பட்டுள்ளன. விட்டு விடுதல், சகித்துக் கொள்ளுதல், எது நடந்தாலும் ஏற்றுக் கொள்ளுதல், எத்தனை துன்பத்திலும் இறைவனை இகழாமல் இருத்தல் - ஞானத்தை இப்படித்தான் விளக்கம் தரலாமே ஒழிய, "இதுதான்" என்று தனியாக உனக்கு காட்ட முடியாது. ஏனென்றால், நீ ஞானமாகிவிட்டால், அப்போது நீயே இருக்க மாட்டாய்.
Friday, 14 October 2016
சித்தன் அருள் - 470 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!
அகத்தியப் பெருமான் அருள் வாக்கு
அனைத்து உயிர்களின் கூட்டுக்குள் இருப்பது எல்லாமே, இறை சக்திதானப்பா. அவைகள் அங்கு சிறிய, சிறிய பிழைகள் செய்யும் பொழுது, விலங்காக, விருக்ஷமாக, முனிவராக, தேவராக, கந்தர்வனாக, மனிதராக உருமாற்றம் அடைகிறது. மற்றபடி ஒரு சிங்கத்தின் உடலில் கூட ஒரு உயர்ந்த முனிவரின் ஆன்மா இருக்கலாம். ஒன்று சாபத்திற்காக அல்லது மனித தேகம் எடுத்தால் மாயையில் சிக்கிவிடுவோம் என்பதற்காக, சிங்கமாகவோ, புலியாகவோ, மானாகவோ இருக்கலாம், என்று அப்பிறவியை எடுக்கலாம். இன்னும் சில தேவர்கள், முனிவர்கள், தங்கள் கர்மாவை எப்படி கழிப்பார்கள் தெரியுமா? மெதுவாக கீழிறங்கி வந்து மானாக பிறவி எடுப்பார்கள். பல அசுரர்கள் புலிகளாக சபிக்கப்பட்டிருப்பார்கள். அந்த புலிகளின் முன்னால் திரிந்து, ஆசை காட்டி, தன்னைக் கொல்ல வைப்பார்கள். அப்படி, அவர்கள் அழிய நேர்ந்தால் போதும். பல ஜென்ம தோஷங்கள் அந்த ஒரு பிறவியிலேயே கழிந்துவிடும். இப்படியெல்லாம் எத்தனையோ சூட்ச்சுமங்கள் உள்ளன. மனித சரித்திரமோ, சிந்தனையோ இதனை ஏற்றுக் கொள்ளாது. ஏற்றுக் கொள்ளக்கூடாது என்பதற்காகத்தான், இறைவன், மனிதனுக்கு விசித்திரமான அறிவைக் கொடுத்திருக்கிறான்.
Thursday, 13 October 2016
சித்தன் அருள் - 469 - "பெருமாளும் அடியேனும்" - 69 - வேங்கடவர் நாரதரிடம் உரைத்தல்!
எத்தனை தீர்த்தங்கள், புண்ணிய நதிகள் திருப்பதி மலையிலுள்ள புஷ்கரணியில் வந்து சேருகின்றன என்பதை ஓரளவு பார்த்தோம். இன்னும் திருமலையின் சிறப்புகளைப் பற்றி நிறைய எழுதலாம்.
ஏழு மலைகளில் ஐந்து மலைகளின் வரலாற்றைத் தான் இதுவரை பார்த்தோம். வேங்கடாத்திரி, சேஷாத்திரி என்னும் இரண்டு மலைகளின் பெருமையைப் பற்றித் தெரிந்து கொண்டுவிட்டால் பின்னர் பத்மாவதி தாயாரைப் பற்றிய அபூர்வமான செய்திகளைப் பார்க்கலாம்.
வேங்கடம் என்ற சொல்லைப் பிரித்து பதம் பார்க்க வேண்டும். வேம் என்றால் பாபம் என்று பொருள். கடம் என்றால் போக்குதல் என்று அர்த்தம். ஒவ்வொருவரும் தெரிந்தோ அல்லது தெரியாமலோ நிறையப் பாபங்களை அன்றாடம் செய்யவேண்டியிருக்கிறது.
பிற்காலத்தில் இந்தப் பாபங்களின் எண்ணிக்கை அதிகமாகும்போது அவை நோயாக மாறுகின்றன. அல்லது விபத்து போன்ற சம்பவங்கள் நடந்து மனத்தை வேதனை அடைய வைக்கின்றன. இந்தப் பாபத்தைப் போக்க நதிகளில் நீராடினாலும் அந்த பாபங்கள் போவதில்லை. பகவான் பாதத்தில் விழுந்து சரணாகதி அடைந்தால்தான் அந்தப் பாபங்களிலிருந்து கடைத்தேறலாம்.
இன்றைக்கு-
இந்தப் பூலோக மக்களின் அனைத்துப் பாபங்களையும் போக்கும் ஒரே இடம் வேங்கடமலை என்றால் ஆச்சரியமில்லை. காதில் கேட்காத-கேட்க முடியாத- பாபங்களையெல்லாம் சர்வசாதாரணமாகச் செய்துவிட்டு வேங்கடவனை சரண் அடைந்து புண்ணியசாலியாக மாறுகிறார்கள். மக்களின் சோகங்களைப் போக்கவே பகவான் வேங்கடமலையில் ஒன்பதாவது அவதாரத்திற்கும், இனிவரும் கல்கி அவதாரமான பத்தாவது அவதாரத்திற்கும் இடையே கல் அவதாரமாக எடுத்திருக்கிறார் என்பதை ஏற்கெனவே விளக்கியிருக்கிறோம்.
இப்பொழுது வேங்கடவன் நம் பாபங்களைப் போக்கி நமக்கு முக்தி நிலையைத் தந்தாலும் நம் பாபங்களால் வேங்கடவனுக்கு நிறைய பாதிப்பு ஏற்படும். இத்தனை பேருடைய பாபங்களை பகவான் வாங்கிக் கொண்டால் இந்தப் பாபங்களை பகவான் எப்படி தன்னிடமிருந்து போக்கிக் கொள்கிறார்?
இது பற்றி நாரதர் ஒரு நாள் வேங்கடவனிடம் நேரடியாகவே கேட்டார். “அசுரர்கள் செய்த பாபத்தைவிட இப்போது பூலோக மக்கள் பன்மடங்கு அதிகம் பாபத்தைச் செய்கிறார்கள். இதைத் தடுக்க தாங்கள் முயற்சி செய்யக்கூடாதா?”
“நாரதருக்கு திடீரென்று இப்படி ஓர் எண்ணம் எப்படி வந்தது?”
“தங்கள் கருணையை தினமும் பார்க்கிறேன். யார் வந்து தஞ்சம் அடைந்தாலும் அவர்கள் செய்த பாபத்திற்கு மன்னிப்பு தந்து அவர்களுடைய பாப மூட்டைகளைத் தாங்கள் சுமக்கிறீர்கள். இதைத் தவிர்க்கத்தான் கேட்டேன் ஸ்வாமி!”
“நாரதா! நீ ஒன்றை அறவே மறந்துவிட்டாய். கலிபுருஷன் செய்கிற லீலைதான் இது. அது வேகமாகத்தான் வேலை செய்யும். எனவே பாபத்தைச் செய்யாமல் யாரும் பூலோகத்தில் இருக்க முடியாது.”
“கலிபுருஷனை அடக்கிவிட்டால் பாபம் செய்வதை பூலோக மக்கள் விட்டுவிடுவார்கள் அல்லவா?”
“நல்லயோசனை. ஆனால் இது கலியுகம் ஆயிற்றே! அவன் கை ஓங்க வேண்டும். இல்லையென்றால் பிரளயம் எப்படி ஏற்படும்?”
“பிரளயமா?”
“ஆமாம். கலிபுருஷனின் ஆட்டம் அதிகமாக அதிகமாள ஜனங்கள் தர்மத்தை அறவே மறந்து விடுவார்கள். அக்கிரமங்கள் அதிகமாகும். பாபங்கள் அதிகமாகும். மகளிர் கற்பு நெறி தவறுவார்கள். விலைவாசி உயரும். கொலை பாதகங்கள் நடக்கும். ஒவ்வொரு குடும்பத்திலும் சோதனைகள் அதிகமாகும். நோய்கள் பேயாட்டம் போடும். பூமியில் நீர் வற்றும். இயற்கை தன் கடமையைச் செய்யாது.”
“தாங்கள் இதையெல்லாம் திருமலையில் இருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டே இருப்பீர்களாக்கும்?”
“நாரதா! நான் இன்னும் கலியுகத்தில் என்னவெல்லாம் நடக்கும் என்று சொல்லும் முன்னரே பதற்றப்படுகிறாயே! சரி சரி. மேற்கொண்டு சொன்னால் நீ தாங்கமாட்டாய். ஆனால் ஒன்று. இத்தனை சோதனைகளையும் தாண்டி என்னிடம் முழுமனத்தோடு சரண் புகுந்தவர்களுக்கு மட்டும் நான் அடைக்கலம் தருவேன். எல்லாருக்கும் அல்ல.”
“தன்யனானேன் பிரபு! அப்படி அடைக்கலம் கேட்டு வருகிறவர்கள் அன்றாடம் திருமலையில் லட்சக்கணக்கில் இருக்கிறார்கள். அவர்கள் எல்லாருக்கும் பாபத்தைப் போக்கி புண்ணியம் தருகிறீர்கள் அல்லவா?”
“ஆமாம்! அதிலென்ன சந்தேகம்? நீதான் தினமும் கண்கூடாகப் பார்த்துக் கொண்டிருக்கிறாயே”
“அதனால்தான் கேட்கிறேன். அவர்களுடைய பாப மூட்டைகளை எப்படி தாங்கள் கரையச் செய்து புண்ணியத்தை அள்ளித் தருகிறீர்கள்?”
“இது தெய்விக ரகசியம் தான். இந்த மலைக்கு வேங்கட மலை என்றுதான் பெயர்.”
“ஆமாம்”
“அதாவது பாபத்தைப் போக்கும் இடம். அப்படித்தானே?”
“ஆமாம்”
“இந்த வேங்கடமலைக்கு படியேறி வந்து என்னைப் பிரார்த்தனை செய்து வரும் பக்தர்களின் உண்மையான பக்தியை நான் காலிகோபுரத்தில் அமர்ந்தபடியே பார்க்கிறேன். என் பார்வை அவர்கள் மீது படும். அப்பொழுது அவர்கள் செய்த பாபம் காற்றிலே கரையும். மலையின் அடியில் மறையும். காலிகோபுரத்தைத் தாண்டி பயபக்தியோடு வருபவர்கள் பெரும்பாலோருக்கு ஆதிசேஷனும் கருடாழ்வாரும் மேலும் கொஞ்சம் பாபத்தை மலையின் இருபக்கம் நின்று போக்கிவிடுவார்கள்.”
“ஆச்சரியமாக இருக்கிறதே!”
“ஆதிசேஷனும் கருடனும் தினமும் தங்கள் பணியை இன்றைக்கு மாத்திரமல்ல பிரளயம் ஏற்படும் வரை என்றைக்கும் செய்வார்கள். இது அவர்களுக்குக் கஷ்டமான செயல் அல்ல. இரட்டிப்பு மகிழ்ச்சியோடு செய்கிறார்கள்.”
“அப்படியெனில் தங்களின் பொற்பாதத்தைத் தேடி மலையில் நடந்து வரும் பக்தர்களுக்கு இவ்வளவு பெரும் புண்ணியம் கிடைக்கிறது என்று இப்போதுதான் தங்களின் திருவருளால் கேட்கும் பாக்யம் பெற்றேன். மேற்கொண்டு தாங்கள் திருவாய் மலர்ந்து சொல்லுங்கள் ஸ்வாமி!”
“ஆதிசேஷனும் கருடாழ்வாரும் போக்கிய பாபத்தையும் தாண்டி இன்னும் பாபம் இருந்தால் புஷ்கரணியில் நீராடும்போது அந்தப் பாபத்தின் பெரும்பகுதி கழிந்து விடுகிறது. அப்படியே மிச்சம் மீதி பாபங்கள் இருந்தால் என் கோபுர கலசத்தை தரிசனம் செய்யும் பொழுது விலகிவிடும். போதுமா?” என்று சொல்லி கன்னங் குழியச் சிரித்தார் வேங்கடவன்.
நாரதர் அப்படியே வேங்கடவன் திருப்பாதத்தில் விழுந்து வணங்கினார்.
“திருமலையில் எப்படியெல்லாம் புண்ணியம் கிடைக்கும் என்பதை மிகவும் அற்புதமாகச் சொல்விஇவிட்டீர்கள். இப்படி வந்து தங்கள் திருவடியைத் தரிசனம் செய்தும் நிறைய மனிதர்களுக்கு பாபம் போகாமல் இருக்கிறதே, இதற்கு என்ன காரணம்?”
“வேங்கடமலைக்கு வந்தாலே அவன் இதுவரை செய்த அத்தனை தோஷங்களும் விலகும். அதனால்தான் வேங்கடாத்திரி என்று இந்த மலைக்குப் பெயர். இங்கு வந்தும் கூட ஒருவனுடைய பாபம் விலகவில்லையென்றால் அவன் உண்மையான பக்தியோடு வேங்கடமலைக்கு வரவில்லை என்று அர்த்தம்.”
“அப்படியானால் அப்பேர்ப்பட்டவர்களுக்கு கடைசிவரை சாபவிமோசனம் கிடையாதா?”
“கண்டிப்பாக அவர்களுக்கும் சாபவிமோசனம் உண்டு. ஆனால் அவர்கள் பயபக்தியோடு இங்கு வந்து மூன்று நாள்கள் தங்கியிருந்து தினமும் காலையில் அங்கப்பிரதக்ஷணம் செய்து மாலையில் மூன்று முறை வேங்கடமலையை அதாவது குடியிருக்கும் கோவிலை வலம் வரவேண்டும். உடலை வருத்தி பிரார்த்தனை செய்யவேண்டும். உள்ளத்தில் ஆழ்ந்த பக்தியும் இருக்கவேண்டும்.”
“சரி. இதை எப்படி தாங்கள் அறிவீர்கள் ஸ்வாமி?”
“அதற்குத்தான் பரிவாரத் தேவதைகள் இங்கு இருக்கிறார்கள். வராஹமூர்த்தி இருக்கிறார். சித்தர்கள் பலர் இருக்கிறார்கள். இவர்கள் எல்லாரும் தலையாய சித்தர் அகஸ்தியர் தலைமையில் அன்றாடம் அரூபமாக இயங்கி வருகிறார்கள். இவர்கள் இருக்கும் பொழுது எனக்கு எந்தவிதக் குறையும் இல்லை.”
“ஸ்வாமி! இப்படிப்பட்ட ஒரு கேள்வியை தங்கள் முன்பு சமர்ப்பிக்கிறேன் என்று அருள் கூர்ந்து கோபித்துக் கொள்ளக்கூடாது. கேட்கலாம் என்றால் கேட்கிறேன்.” என்று நாரதர் கை கூப்பி வாய் பொத்தி பணிவுடன் திருமாலை நோக்கிக் கேட்டார்.
“சொல்லுங்கள் நாரதரே!”
“தங்களை இங்கு வந்து நேரிடையாக வந்து தரிசனம் செய்பவர்களுக்கு மட்டும்தான் பாபவிமோசனம் கிட்டுமா? இங்கு வர முடியாதவர்கள் எப்படி தங்கள் பாபத்தைப் போக்கிக் கொள்வார்கள்?”
“நாரதா! என்னை நோக்கி வருபவர்களை விட என்னை நோக்கி வராதவர்கள்தான் மிக அதிகம். அவர்களை நான் எப்படி கைவிட்டு விடமுடியும்? ஒருகாலும் விடமாட்டேன். அவர்கள் ஏழைகளாக இருக்கலாம். நடக்க முடியாமல் அவதிப்படலாம். அல்லது அவர்களின் சந்தர்ப்ப சூழ்நிலைகளில் பல்வேறு தடைகள் இருக்கலாம். இதையெல்லாம் அறிந்து அவர்களின் பக்திக்கேற்ப நான் அவர்களுக்கு மோட்சத்தையும் முக்தியையும் கொடுப்பேன்.”
“வேங்கடவா! தங்களின் கருணையே கருணை. தாங்கள் திருமலையில் இருக்கும் வரை பூலோக மக்களுக்கு எந்தக் கவலையும் இல்லை. ஆனால்...”
“என்ன ஆனால்?”
“அந்தக் கலிபுருஷனின் கொட்டம் தான் தாங்க முடியவில்லை. பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி அவதாரம் எடுத்து எத்தனையோ அரக்கர்களை அழித்தவர்கள் தாங்கள். அப்படியிருக்க இந்தக் கலிபுருஷனை மாத்திரம் எப்படி விட்டு வைத்திருக்கிறீர்கள்?”
“பொறுத்திருந்து பார். அதற்குள் ஏன் அவசரப்படுகிறாய்?”
என்று சிரித்த முகத்தோடு வேங்கடவன் சொன்ன இந்த சூட்சுமச் சொல்லை உடனடியாக நாரதரால் புரிந்து கொள்ள முடியவில்லை. வேங்கடவனை நோக்கிக் கை கூப்பி தன்னை அறியாமல் மெய்மறந்து செயலற்று நின்றார்.
சித்தன் அருள்................தொடரும்!
Wednesday, 12 October 2016
சித்தன் அருள் - 468 - அந்த நாள் >>>>> இந்த வருடம் - கோடகநல்லூர்!
[ கோடகநல்லூர் பச்சை வண்ணப் பெருமாள் ]
கோடகநல்லூரில் இறைவனும் சித்தர்களும் நிகழ்த்திய பல்வேறு நிகழ்ச்சிகளை உட்கொண்ட அதே முஹூர்த்தம், அந்த நாள் இந்த வருடம் என்கிற தொகுப்பில் 12/11/2016 சனிக்கிழமை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
அகத்திய பெருமான் நாடியில் வந்து உரைத்தபொழுது, உண்மையில் ஐப்பசி மாதம் உத்திரட்டாதி நட்சத்திரத்தில், சுக்ல பக்க்ஷ திரயோதசி திதியில் இந்த நிகழ்வுகள் நடந்தது, என்றார்.
சோதனையாக, இந்தவருடம், நட்சத்திரமும், திதியும் இரண்டு நாட்களாக பிரிந்து போனது. நட்சத்திரத்தை எடுத்தால், திதி இருக்காது. திதியை எடுத்தால் நட்சத்திரமிருக்காது. ஒரே குழப்பத்தில் ஆழ்ந்துவிட்டேன். எதை தெரிவு செய்வது என்று புரியவில்லை. எல்லோரும் ஐப்பசி மாதம், உத்திரட்டாதியை நினைவில் கொண்டிருக்க, திதி இல்லாமல் அந்த முகூர்த்தம் தெரிவு செய்தால் சரியாக இருக்குமா? இல்லை அதுதான் சரியான முகூர்த்தமா? என்று கேள்விகள் எழும்பத்தொடங்கியது. விடை கண்டுபிடிக்க அகத்திய பெருமானைத்தான் நாடவேண்டி வந்தது.
"இதற்கு ஒரு விடை கிடைக்க செய்ய வேண்டும். எங்கள் சிற்றறிவுக்கு எதுவும் புலப்படவில்லை. விளக்க வேண்டும்" என்று அகத்திய பெருமானை வேண்டிக்கொண்டேன்.
இரண்டு தினங்களில், அவரிடம், அவரது அடியவரால் கேள்வி எழுப்பப்பட மிகத் தெளிவாக பதில் வந்தது.
"தெய்வீக விஷயங்களுக்கு "திதிக்குத்தான்" முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஆகவே, இந்த முறை சனிக்கிழமை அன்று அந்த முகூர்த்தம் வருகிறது. அதையே எடுத்துக் கொள்ள சொல்" என்றார்.
அதன் பின்னர் தான் உங்கள் அனைவருக்கும் அந்த நாள் தெரிவிக்கப்பட்டது.
ஒரு முறை ஞாபகப்படுத்திக் கொள்ள, சுருக்கமாக அந்த நாளில் அங்கு நடந்த நிகழ்ச்சிகளை தெரிவிக்கிறேன்.
- 6000 ஆண்டுகள் அகத்திய பெருமான், இந்த கோவிலை சுற்றி சுற்றி வந்திருக்கிறார்.
- பக்கத்தில் ஒரு நந்தவனத்தில் குடிகொண்ட "பரப்பிரம்மம் என்கிற வேங்கடவருக்கு" அகத்திய பெருமான் அபிஷேகம் செய்த நாள் அது. அதை நினைவு கூறுகிற எண்ணத்தில்தான் அந்த நாளை நமக்கு குறித்துக் கொடுத்தார்.
- சித்தர்கள் மட்டுமல்ல, முனிவர்கள், மகா முனிவர்கள், முனி புங்கவர்கள் அத்தனை பேரும் ஒன்று சேர்ந்து ஆனந்தமாக இறைவனை வழிபட்ட நல்ல நாள் இது.
- தாமிரபரணி நதிக்கரையை லோபாமுத்திரையாக மாற்றிய நாள், இந்த நாள். தாமிர பரணியின் பெருமையை அகத்தியப் பெருமான் உலகுக்கு உணர்த்திய நாள்.
- பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூன்று தெய்வங்களும் தங்கள் உரிமையை அகத்திய பெருமானுக்கு பகிர்ந்து, தாரை வார்த்துக் கொடுத்த நாள்.
- பெருமாளின் அடியேன் "கருடன்" விஸ்வரூபமெடுத்து, முனிவரின் குழந்தையின் உடலில் ஏறிய விஷத்தை எடுத்த நாள். எனவே இது ராகு கேது தோஷத்திற்கான பரிகார ஸ்தலமாக உள்ளது.
- அன்று அங்கு வரும் பக்தர்களுக்கு அவர்கள் வேண்டுதலை, குறைந்தது, திருப்தியை பெருமாள், அகத்திய பெருமான் அருளுகிற நாள்.
இந்த வருடமும் பெருமாளுக்கு அபிஷேகம், ஆராதனை, பூசை, நிவேதனம் என்பவை அகத்தியர் அடியவர்களால் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
அனைத்து அகத்தியர் அடியவர்களையும், அன்றைய தினம், அங்கு சென்று, இறைவன், அகத்தியப் பெருமான் அருள் பெற்று செல்லுமாறு வேண்டிக் கொள்கிறேன்.
ஓம் ஸ்ரீ லோபா முத்திரா சமேத அகத்தீஸ்வராய நமஹ!
[ இந்த தொகுப்பு, அகத்தியர் அடியவர்களுக்கு தெரிவிப்பதற்காகவும், ஞாபகப்படுத்துவதற்காகவும் வேண்டி தரப்பட்டுள்ளது. ]
சித்தன் அருள் - 467 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!
அகத்தியப் பெருமான் அருள் வாக்கு
ஆத்மா எனப்படும் பயணி, தேகம் எனப்படும் வாகனத்தில் ஏறி, இறைவன் எனும் ஊரை அடைவதற்குண்டான, பிறவி எனும் பயணத்தை துவங்கியிருக்கிறது. இடையிலே மண் ஆசை, பெண் ஆசை, பொன் ஆசை, பதவி ஆசை, இந்த உலக ஆசை – இது போன்ற ஊர்கள் குறுக்கிட்டாலும் அங்கேயெல்லாம் கவனத்தை திசை திருப்பாமல் தொடர்ந்து பயணம் செய்து கொண்டே இருந்தால், கட்டாயம் இந்தப் படிகளை எல்லாம் ஒரு மனிதன் எளிதில் தாண்டி விடலாம். அறிவு பூர்வமாக சிந்திக்கும்பொழுது ‘ஒன்று, உலகியல் ரீதியாக வேண்டும், தேவை என்பது மறுக்க முடியாத உண்மையாக இருக்கலாம். ஆனால் அந்தத் தேவை உடலைக் காப்பதற்கும், அந்த உடலை ஆரோக்யமாக வைத்துக்கொள்ள மட்டும் இருந்தால் போதும். அதனையும் தாண்டி, தேவையில்லை என்கிற நிலைக்கு ஒரு மனிதன் தன்னை ஆட்படுத்திக்கொள்ள வேண்டும். தொடர்ந்து வெறும் உடல் தேவைகளுக்கே முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டேயிருந்தால், அவன் கவனம் திசை திரும்பி, பரமாத்மனை நோக்கி ஜீவாத்மா செல்வது தடைபட்டுப் கொண்டேயிருக்கும். அப்படி வரக்கூடிய தடைகளை எல்லாம் ஒரு மனிதன் ஈஸ்வர த்யானம் அஃதாவது இறை த்யானம் மூலம் மெல்ல, மெல்ல வெல்லலாம். இதற்கு தர்மமும், சத்தியமும் பக்க பலமாக இருக்கும். எனவே மிக எளிய வழி, எத்தனையோ தர்மங்கள் செய்தாலும், எத்தனையோ புண்ணிய காரியங்களை செய்தாலும், எத்தனையோ ஸ்தல யாத்திரை செய்தாலும் கூட அவனுடைய ஆழ்மனதிலே, அவனுடைய அடிமனதிலே நீங்காத ஒரு இடமாக "இறைவனை அடைந்தே தீருவேன்" என்று உறுதியான எண்ணத்தோடு இருந்தால், அவன் எதை செய்தாலும் அது குறித்து அவன் பாதிக்கப்படாமல் இருப்பான். அஃதாவது ஒருவன் எங்கிருந்தாலும், எந்த சூழலில் இருந்தாலும் அவனுடைய ஆழ்மனதிலே ஈஸ்வர சிந்தனை அசைக்க முடியாமல் இருந்தால், அந்த ஜீவாத்மா மிக எளிதில் பல படிகளைத் தாண்டிவிடும். ஆனால் அடிப்படையிலேயே அந்த எண்ணம் இல்லாமலும், பரிபூரண சரணாகதி பக்தி இல்லாமலும், இருக்கின்ற மனிதனுக்கு தடுமாற்றங்கள் வரத்தான் செய்யும். அது போன்ற தருணங்களிலே குழப்பம் கொண்டிடாமல் கீழே விழுந்தாலும் ‘விழுவது இயல்பு’ என்று மீண்டும், மீண்டும், எழுந்து அமர்ந்து ‘இறைவா! என்னைக் காப்பது உன் பொறுப்பு' என்றெண்ணி, இறைவனை நோக்கி மனதை விரைவாக பயணம் செய்வதற்குண்டான முயற்சியில் இறங்குவதே மனிதனுக்கு உகந்த கடமையாகும். இதை செய்தால் ஜீவாத்மா, எளிதில் பரமாத்மாவை அடையும்.
Tuesday, 11 October 2016
Monday, 10 October 2016
Sunday, 9 October 2016
சித்தன் அருள் - 464 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!
அகத்தியப் பெருமான் அருள் வாக்கு
பக்குவமற்ற மனிதர்கள் பண்பாடு இல்லாமல் பேசுவதும், தாறுமாறான விமர்சனங்களை செய்வதும், சினம் வருவதுபோல் நடந்து கொள்வதும், இயல்பு. அவன் அப்படி நடந்து கொள்வதே சினத்தை வரவழைக்கத்தான். ஆனால், அவன் தோற்கவேண்டும் என்று எண்ணக்கூடிய மனிதன் என்ன செய்யவேண்டும்? சினம் எழாமல் நாகரீகமாக தவிர்த்துக் கொள்ளவேண்டும். இல்லையென்றால், அவன் வெற்றி பெற தானே ஒரு காரணமாகி விடக்கூடிய ஒரு சூழல் வந்துவிடும். எனவே, பண்பாடு இல்லாத மனிதர்களோடு நெருங்கிப் பழகாமல் ஒதுங்கி இருக்கவேண்டும். அப்படி தவிர்க்க முடியாமல் இருக்க நேரிட்டால், அமைதியான முறையிலே கூடுமானவரை மௌனத்தை கடைப்பிடிப்பதும், அகுதொப்ப, வாத பிரதிவாதங்களில் ஈடுபடாமல் இருப்பதுமே எம் வழி வரும் சேய்களுக்கு ஏற்றதாகும். இதை மனதிலே தெள்ளத்தெளிவாக பதிய வைத்து, தொடர்ந்து சினமில்லாமல், பதட்டமில்லாமல், கவலை இல்லாமல், கலக்கம் இல்லாமல் வேதனை இல்லாமல், வெட்கம் இல்லாமல் நாங்கள் கூறுகின்ற அனைத்து நல்ல காரியங்களையும் செய்ய எண்ணி, செய்து கொண்டு வரவேண்டும்.
Saturday, 8 October 2016
சித்தன் அருள் - 463 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!
அகத்தியப் பெருமான் அருள் வாக்கு
இகுதொப்ப, நலமாய், ஒவ்வொரு ஆத்மாவும், தன்னைத்தான் உணர்ந்து, ஆணவத்தை விட்டொழித்து, தன்முனைப்பை அணுவளவும் வளர்த்துக் கொள்ளாமல், பவ்யமாக, அவையடக்கமாக, தத்தம் கடமைகளை நேர்மையாக ஆற்றி, இறை பக்தியில் ஆழ்ந்து, பரிபூரண சரணாகதியிலே என்றென்றும் இருந்து, இயன்ற அளவு தர்மத்தை தொடர்ந்து வாழ்ந்து வந்தாலே, அவனவன் தலைவிதி கடுமையாக இருந்தாலும், அதை, இனிமையாக இறைவன் மாற்றுவார். இதைத்தான், யாங்கள் விதவிதமான வார்த்தைகளில் இயம்பிக் கொண்டிருக்கிறோம்.
Friday, 7 October 2016
சித்தன் அருள் - 462 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!
அகத்தியப் பெருமான் அருள் வாக்கு
எல்லா கலசங்களின் உள்ளே இருப்பதும் ஒரே கங்கை நீர்தான். அப்படித்தான், மனிதர்கள், தேகம் என்னும் கலசத்தை வைத்துக் கொண்டு தமக்குள் பாகுபாடுகளை பார்த்து, "உன்னை எனக்கு பிடிக்கும், உன்னை எனக்குப் பிடிக்காது. நீ நல்லவன். நீ நல்லவனல்ல. நீ எனக்கு நல்லதை செய்கிறாய். அதனால் நீ எனக்கு பிரியமானவன். நீ எப்பொழுதும் என்னை தூற்றிக் கொண்டிருக்கிறாய் அதனால் உன்னை எனக்குப் பிடிக்கவில்லை" என்றெல்லாம் தமக்குள் அபிப்பிராய பேதங்களை வளர்த்துக் கொண்டு அதைப் பகையாகவே மாற்றிக் கொள்கிறார்கள். ஆனால், மகான்கள் எப்படிப் பார்ப்பார்கள்? உள்ளே இருக்கும் நீரான ஆத்மாவைத்தானே பார்ப்பார்கள். எல்லாம் ஒரே நதியிலிருந்து எடுக்கப்பட்ட நீர் என்பது போல, எல்லாம் ஒரே பரம்பொருளின் அந்த அம்சத்தில் இருந்து, பிரிந்து, பிரிந்து, பிரிந்து, பிரிந்து, பிரிந்து மாயையில் ஆழ்ந்து, ஆழ்ந்து, ஆழ்ந்து, ஆழ்ந்து, ஆழ்ந்து, பிறவி தோறும் அறியாமையில் வீழ்ந்து, வீழ்ந்து, வீழ்ந்து, வீழ்ந்து, வீழ்ந்து, பாவ சேற்றிலே சிக்கி, தன்னையறியாமல், உழன்று கொண்டே இருக்கும் தேகம் எனும் கலசத்திற்குள் அடைபட்ட ஆத்மா எனும் கங்கை நீர். இவற்றை எல்லாம் விடுவித்து, புனிதநதியான கங்கையோடு சேர்த்துவிட்டால், மீண்டும் பார்வைக்கு எல்லாம் ஒன்று போல் தெரியும். இப்படி சேர்ப்பது என்பது அத்தனை எளிதல்ல. அதற்கு, எத்தனையோ பிறவிகள், காலங்கள் ஆகும். எனவே, இதனையுணர்ந்து, எமை நாடி வருகின்ற சேய்கள், தமக்குள் பகைமையை வளர்த்துக் கொள்ளாமல், தமக்குள் கருத்து வேறுபாடுகளை வளர்த்துக் கொள்ளாமல், தத்தம் பாவங்களைக் குறைத்துக் கொள்ள வழி முறைகளை மட்டும் பின்பற்றி, பிறருடன் இதமாக வாக்கை உரைத்து, எப்பொழுதும் புண்ணிய காரியங்களை செய்து கொண்டே இருந்தால், இறைவனருள் ஒவ்வொரு ஆத்மாவிற்கும் கட்டாயம் கிட்டுமப்பா.
Thursday, 6 October 2016
சித்தன் அருள் - 461 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!
அகத்தியப் பெருமான் அருள் வாக்கு
எல்லாவற்றையும் வெளிப்படையாக கூறினால் என்ன நடக்கும்? வெறும் எதிர் மறையான எண்ணங்களையும், கருத்துக்களையும் நாங்கள் கூறுவதால் என்ன பலன்? அப்படி கூறிக் கூறி அந்த விதியை, ஏன்? எமது வாக்கால் உறுதிப்படுத்த வேண்டும்? என்று தான் பரிகாரங்களைக் கூறிக்கொண்டு இருக்கிறோம். நாடி வருகின்ற மனிதர்களுக்கு அத்தனை சாதகமான விதியம்சம் இல்லை என்பதை புரிந்து கொண்டு இறைவன் அருளால் நாங்கள் கூறுகின்ற பரிகாரங்களை விடாப்பிடியாக பிடித்துக் கொண்டு சென்றால், எதிர்காலம் அனைவருக்குமே சுபிக்ஷமாக இருக்கும்.
சித்தன் அருள் -460- "பெருமாளும் அடியேனும்" - 68 - அகத்தியர், துர்வாசர் கூறிய திருமலை தீர்த்தங்களின் பெருமை!
பக்தனுக்காகத் தன் பொற்பாதத்தில் இடம் கொடுத்து காலா காலத்திற்கும் அவருடைய பெயரை நீடிக்க வைத்த, வேங்கடவனின் கருணையைக் கண்டு வியந்து போனார்கள் விண்ணவர்களும், மனிதர்களும்.
அப்போது-
இந்த மலையின் வேறு சிறப்புகள் ஏதேனும் உண்டா? என்று வேங்கடமலைக்கு வந்த திலீப சக்கரவர்த்தி என்னும் ஆன்மிக மன்னர் அங்கு தவம் செய்து கொண்டிருந்த துர்வாச முனிவரை நோக்கிக் கேட்டார்.
“ஒன்றா? இராண்டா? எத்தனையோ சொல்லலாம். நாராயணாத்திரி மலையோடு ஏழுமலை கதை முடியவில்லை. இன்னும் ஒரு கதையும் வேங்கடமலையில் உண்டு. அதைச் சொல்லும் முன்பு நிறையப் பேருக்குத் தெரியாத செய்திகள் இந்த மலையில் உண்டு.
கோனேரித் தீர்த்தம் ஒன்றுதான் முதலில் இருந்தது. இப்பொழுது இந்த மலையில் வேங்கடவனே நித்திய தரிசனம் செய்வதால் இந்த மலையும் புண்ணிய மலையாயிற்று. கலிபுருஷன் வேங்கடவனிடம் சண்டையிட்டுத் தோற்றுப் போனான். இதற்குப் பிறகு புண்ணிய தீர்த்தங்கள் பல உருவாயின.
சுருக்கமாகச் சொல்லப் போனால் இங்கு 66 வகையான கோடி தீர்த்தங்கள் உண்டு. அந்த தீர்த்தங்களில் 1008 மிகவும் சிறந்தது. இதனையும் கூறு போட்டுப் பார்த்தால் 216 தீர்த்தங்கள் மிகவும் முக்கியமானவை. இந்த 216 தீர்த்தங்களில், 108 தீர்த்தங்களில் நீராடினால் அல்லது அவற்றின் தீர்த்தங்களை தலையில் இரண்டு சொட்டாவது விட்டுக் கொண்டால் போதும். ஏழேழு ஜன்மத்தில் செய்த பாபங்கள் விலகும்.” என்றார் துர்வாசர்.
“அந்த 108 தீர்த்தங்களை தாங்கள் அடையாளம் காட்ட முடியுமா?” என்று திலீப சக்கரவர்த்தி கேட்டார்.
துர்வாசர் ஒரு நிமிடம் கண்ணை மூடிக்கொண்டு தியானம் செய்து சொல்லலானார். “வேங்கடவன் தரிசனம் தரும் அந்தக் கோவிலுக்குத் தென் கிழக்குத் திசையில் சக்கரதீர்த்தம், அதற்குப் பக்கத்தில் வஜ்ர தீர்த்தம் உண்டு. இவை அத்தனை புண்ணியமானவை.
வஜ்ர தீர்த்ததிற்குப் பக்கத்தில் விசுவசேன தீர்த்தம், மேற்கே பஞ்சாயுத தீர்த்தம், இதற்கு அருகில் அலாயுத தீர்த்தம், நரசிம்ம தீர்த்தம் உண்டு.
சற்றே தள்ளி மேற்கே வந்தால்காசிப தீர்த்தம், அக்னி தீர்த்தம், மன்மத தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், கௌதம தீர்த்தம், விசுவாமித்திர தீர்த்தம், பார்கவ தீர்த்தம், சைபவ தீர்த்தம், தேவ தீர்த்தம், அஷ்டகோண மஹரிஷி தீர்த்தம் உண்டு.
இந்த தீர்த்தங்கள் ரிஷிகளால் உண்டாக்கப்பட்டு வேங்கடவனின் நித்ய பூஜைக்காக காத்துக் கிடக்கின்றன என்று சொன்ன துர்வாசர் இதற்கு வடகிழக்குத் திசையில் வைரவ தீர்த்தம், சேஷதீர்த்தம், க்ஷேத்ரபாலகர் தீர்த்தம் என்ற ஒப்புயர்வு மிக்க புண்ணிய தீர்த்தங்களையும் தாண்டி மேற்குத் திசைக்கு வந்தால்-
அங்கு- பாண்ட தீர்த்தம், மாருத தீர்த்தம், அஸ்தி தீர்த்தம், மார்கண்ட தீர்த்தம், வாலகில்லிய தீர்த்தம், சாவாவி தீர்த்தம், சுரதா தீர்த்தம், விஷுகர தீர்த்தம் என்ற தீர்த்தங்களும் உண்டு. இங்கு ஸ்நானம் செய்தால் அத்தனை தோஷங்களும் மறையும்.
இதனையும் தாண்டி வடகிழக்குத் திசைக்கு வந்தால் லக்ஷ்மி தீர்த்தம் உண்டு. இதன் வடதிசைக்கு வந்தால் இஷ்ட தீர்த்தம், சுகிக்ஷண தீர்த்தம், சிருங்க தீர்த்தம், சபாதீர்த்தம் என்னும் அருமையான தீர்த்தங்களும் உண்டு.
கோவிலின் வடமேற்கில் சதுர்முக தீர்த்தம், இந்திர தீர்த்தம், பாரதி வாஜ தீர்த்தம், ஆகாச கங்கை தீர்த்தம், பராசர தீர்த்தம், குமார தாரிதை, விபாண்டவ தீர்த்தம், தும்புரு தீர்த்தம், ஜகதீர்த்தம் என்னும் சின்னச்சிறு தீர்த்தங்களும் உண்டு.
இந்தத் தீர்த்தங்களைப் போல தசாவதார தீர்த்தம், சப்தரிஷி தீர்த்தம், சேனாபதி தீர்த்தம், உண்டு. இதனையும் தாண்டி கொஞ்சம் நகர்ந்தால் தசனேன தீர்த்தம், உத்தமசரசு தீர்த்தம், மனு தீர்த்தம், நிர்மல தீர்த்தம், ருத்ர தீர்த்தம், வசு தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், மருத்துவ தீர்த்தம், சானவி தீர்த்தம், வாருண தீர்த்தம், கவணவ தீர்த்தம், சுகதீர்த்தம், நாபேய தீர்த்தம், பராசி பத்ர தீர்த்தம், பௌமாச தீர்த்தம் போன்றவையும் காணப்படும்.
இந்தத் தீர்த்தங்களில் உடலை சுத்தப்படுத்திக் கொண்டு, ஆசுவாசப் படுத்திக் கொண்டு சிறிது தூரம் நடந்தால், சோம தீர்த்தம், நாரத தீர்த்தம், யம தீர்த்தம், அக்னி தீர்த்தம், பசு தீர்த்தம், யக்ஷ தீர்த்தம், கணேஷ்வர தீர்த்தம், ஜகஜாட்யஹா தீர்த்தம், விஸ்வ கல்லோல தீர்த்தம், பிரகஸ்பதி தீர்த்தம், ரோமரிஷி தீர்த்தம், சேனேஸ்வர தீர்த்தம், அஜரனமிள தீர்த்தம், கருமதீர்த்தம், அஸ்வ தீர்த்தம், மந்தரை தீர்த்தம், சுப்பிரமண்ய தீர்த்தம், வாருணி தீர்த்தம், வயினதேய தீர்த்தம், ரணவிமோசன தீர்த்தம் என்று பல அற்புதமான மூலிகை குணம் மிக்க தீர்த்தங்களும் உண்டு. இந்த தீர்த்தக் கரையில் நின்று அந்தத் தீர்த்தங்களை முகர்ந்தாலே போதும். ஏழேழு ஜன்மத்திற்கும் பாபம் அண்டாது.” என்று விளக்கம் அளித்தார் துர்வாசர்.
“பாக்கியுள்ள தீர்த்தங்களையும் சொல்லிவிடுகிறேன்” என்று தொடர்ந்தார்: “அகமருஷண தீர்த்தம், அனந்த தீர்த்தம், பர்ஜன்ய தீர்த்தம், மேக தீர்த்தம், நாராயண தீர்த்தம், கால தீர்த்தம், கோமுக தீர்த்தம், அதிகுத்த தீர்த்தம், வாசுதேவ தீர்த்தம் ஆஞ்சனேய தீர்த்தம், அங்கருஷண தீர்த்தம், சுதாகசரசு தீர்த்தம், பிதுரி தீர்த்தம், இதிகாச தீர்த்தம், புராண தீர்த்தம், பிரத்யும்ன தீர்த்தம், சுத்தத் தீர்த்தம், கபிண தீர்த்தம் என்ற தீர்த்தங்கள் காலாகாலத்திற்கும் அழியா வண்ணம் இந்த வேங்கட மலையில் உண்டு.” என்று வேகமாகச் சொல்லி முடித்தார் துர்வாசர்.
கை கூப்பி ஆனந்தமாக இதையெல்லாம் கேட்டுக்கொண்ட திலீப மன்னர் “இத்தனை தீர்த்தங்களில் நீராடுவதற்கு உடனடியாக இயலாதே. இதற்கு ஏதுவாக வேறு மார்க்கம் இருக்கிறதா?” என்று பவ்வியமாகக் கேட்டார் திலிப மன்னர். “இப்படியொரு கேள்வியை நீ கேட்பாய் என்று எனக்குத் தெரியும். என்னைவிடத் தலைசிறந்த தலையாய சித்தனான அகஸ்தியர் அதோ அங்கு தியானம் செய்து கொண்டிருக்கிறார். அவர் தியானம் செய்து முடித்ததும் அவரிடம் சென்று கேள். தக்க பதிலை அகஸ்தியரே விளக்குவார்.” என்று திலீப சக்ரவர்த்திக்கு அகஸ்தியரை அடையாளம் காட்டிவிட்டு வேங்கடவனை நோக்கித் தியானத்தில் ஆழ்ந்தார் துர்வாசர்.
வேங்கடவனை நோக்கித் தியானத்தில் ஆழ்ந்திருந்த அகத்தியர் முன்பு பவ்வியமாக கையைக் கட்டிக் கொண்டு அமர்ந்தார் திலீப சக்ரவர்த்தி.
ஒரு நாள் அல்ல ஏழு நாள்கள் ஆயிற்று. அகஸ்தியர் தியானம் செய்து முடிக்க. அது வரை திலிப சக்கரவர்த்தியும் தண்ணீர் கூடப் பருகாமல், அகத்தியரைப் போல் தியானத்தில் ஆழ்ந்தார்.
ஏழாம் நாள் காலையில் அகஸ்தியர் கண் விழித்தபோது தன் எதிரில் கண்ணை மூடிக்கொண்டு தியானம் செய்து கொண்டிருக்கும் திலீபன் சக்ரவர்த்தியைக் கண்டார்.
ஆன்மிகத்தையும் தர்மத்தையும் கொண்டு பரிபாலனம் செய்யும் இந்த மன்னன் எல்லாவற்றையும் விட்டுவிட்டு தன்னை நோக்கிக் காத்திருக்கும் காரணத்தைத் தன் ஞானக்கண்ணால் அறிந்தார்.
தானே எழுந்து திலிப சக்ரவர்த்தியைத் தட்டி எழுப்பினார். கண் திறந்து பார்த்த திலிபன், தன் எதிரே அகஸ்தியரே நிற்பதைக் கண்டு பரம சந்தோஷப்பட்டு “தன்யனானேன்” என்று அகஸ்தியர் பாதத்தில் விழுந்து நமஸ்கரித்தார்.
“திலீபா! உனக்கு மங்களம் உண்டாகட்டும். துர்வாசர் உன்னை இங்கு அனுப்பி வைத்திருக்கிறார். நீ எதைக் கேட்க வந்தாயோ அதற்குரிய பதிலைச் சொல்கிறேன் கேள்.”
“இங்குள்ள கோடி தீர்த்தங்களில் 108 புண்ணிய தீர்த்தங்கள் எல்லாம் ஒவ்வோர் ஆண்டும் புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளில் வேங்கடவன் அருகிலுள்ள புஷ்கரணியில் ஒன்றாகக் கலங்கும் அந்த நாளில் யார் இங்கு வந்து இந்த புஷ்கரணியில் நீராடுகிறார்களோ அவர்களுக்கு 108 புண்ணிய தீர்த்தங்களில் நீராடிய புண்ணியம் கிடைக்கும்” என்று பதில் உரைத்தார் அகஸ்தியர். இதைக்கேட்டு புளகாங்கிதம் ஆனான் திலீப சக்கரவர்த்தி.
இன்றைக்கும் கூட புஷ்கரணியின் கீழிருந்து திருமலை வேங்கடவன் அருளால் நூற்றியெட்டு புண்ணிய தீர்த்தங்கள் புஷ்கரணிக்கு ஒவ்வொரு புரட்டாசி சனிக்கிழமையும் வந்து கொண்டிருக்கிறது.
சித்தன் அருள் ..................... தொடரும்!
Subscribe to:
Posts (Atom)