பக்தனுக்காகத் தன் பொற்பாதத்தில் இடம் கொடுத்து காலா காலத்திற்கும் அவருடைய பெயரை நீடிக்க வைத்த, வேங்கடவனின் கருணையைக் கண்டு வியந்து போனார்கள் விண்ணவர்களும், மனிதர்களும்.
அப்போது-
இந்த மலையின் வேறு சிறப்புகள் ஏதேனும் உண்டா? என்று வேங்கடமலைக்கு வந்த திலீப சக்கரவர்த்தி என்னும் ஆன்மிக மன்னர் அங்கு தவம் செய்து கொண்டிருந்த துர்வாச முனிவரை நோக்கிக் கேட்டார்.
“ஒன்றா? இராண்டா? எத்தனையோ சொல்லலாம். நாராயணாத்திரி மலையோடு ஏழுமலை கதை முடியவில்லை. இன்னும் ஒரு கதையும் வேங்கடமலையில் உண்டு. அதைச் சொல்லும் முன்பு நிறையப் பேருக்குத் தெரியாத செய்திகள் இந்த மலையில் உண்டு.
கோனேரித் தீர்த்தம் ஒன்றுதான் முதலில் இருந்தது. இப்பொழுது இந்த மலையில் வேங்கடவனே நித்திய தரிசனம் செய்வதால் இந்த மலையும் புண்ணிய மலையாயிற்று. கலிபுருஷன் வேங்கடவனிடம் சண்டையிட்டுத் தோற்றுப் போனான். இதற்குப் பிறகு புண்ணிய தீர்த்தங்கள் பல உருவாயின.
சுருக்கமாகச் சொல்லப் போனால் இங்கு 66 வகையான கோடி தீர்த்தங்கள் உண்டு. அந்த தீர்த்தங்களில் 1008 மிகவும் சிறந்தது. இதனையும் கூறு போட்டுப் பார்த்தால் 216 தீர்த்தங்கள் மிகவும் முக்கியமானவை. இந்த 216 தீர்த்தங்களில், 108 தீர்த்தங்களில் நீராடினால் அல்லது அவற்றின் தீர்த்தங்களை தலையில் இரண்டு சொட்டாவது விட்டுக் கொண்டால் போதும். ஏழேழு ஜன்மத்தில் செய்த பாபங்கள் விலகும்.” என்றார் துர்வாசர்.
“அந்த 108 தீர்த்தங்களை தாங்கள் அடையாளம் காட்ட முடியுமா?” என்று திலீப சக்கரவர்த்தி கேட்டார்.
துர்வாசர் ஒரு நிமிடம் கண்ணை மூடிக்கொண்டு தியானம் செய்து சொல்லலானார். “வேங்கடவன் தரிசனம் தரும் அந்தக் கோவிலுக்குத் தென் கிழக்குத் திசையில் சக்கரதீர்த்தம், அதற்குப் பக்கத்தில் வஜ்ர தீர்த்தம் உண்டு. இவை அத்தனை புண்ணியமானவை.
வஜ்ர தீர்த்ததிற்குப் பக்கத்தில் விசுவசேன தீர்த்தம், மேற்கே பஞ்சாயுத தீர்த்தம், இதற்கு அருகில் அலாயுத தீர்த்தம், நரசிம்ம தீர்த்தம் உண்டு.
சற்றே தள்ளி மேற்கே வந்தால்காசிப தீர்த்தம், அக்னி தீர்த்தம், மன்மத தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், கௌதம தீர்த்தம், விசுவாமித்திர தீர்த்தம், பார்கவ தீர்த்தம், சைபவ தீர்த்தம், தேவ தீர்த்தம், அஷ்டகோண மஹரிஷி தீர்த்தம் உண்டு.
இந்த தீர்த்தங்கள் ரிஷிகளால் உண்டாக்கப்பட்டு வேங்கடவனின் நித்ய பூஜைக்காக காத்துக் கிடக்கின்றன என்று சொன்ன துர்வாசர் இதற்கு வடகிழக்குத் திசையில் வைரவ தீர்த்தம், சேஷதீர்த்தம், க்ஷேத்ரபாலகர் தீர்த்தம் என்ற ஒப்புயர்வு மிக்க புண்ணிய தீர்த்தங்களையும் தாண்டி மேற்குத் திசைக்கு வந்தால்-
அங்கு- பாண்ட தீர்த்தம், மாருத தீர்த்தம், அஸ்தி தீர்த்தம், மார்கண்ட தீர்த்தம், வாலகில்லிய தீர்த்தம், சாவாவி தீர்த்தம், சுரதா தீர்த்தம், விஷுகர தீர்த்தம் என்ற தீர்த்தங்களும் உண்டு. இங்கு ஸ்நானம் செய்தால் அத்தனை தோஷங்களும் மறையும்.
இதனையும் தாண்டி வடகிழக்குத் திசைக்கு வந்தால் லக்ஷ்மி தீர்த்தம் உண்டு. இதன் வடதிசைக்கு வந்தால் இஷ்ட தீர்த்தம், சுகிக்ஷண தீர்த்தம், சிருங்க தீர்த்தம், சபாதீர்த்தம் என்னும் அருமையான தீர்த்தங்களும் உண்டு.
கோவிலின் வடமேற்கில் சதுர்முக தீர்த்தம், இந்திர தீர்த்தம், பாரதி வாஜ தீர்த்தம், ஆகாச கங்கை தீர்த்தம், பராசர தீர்த்தம், குமார தாரிதை, விபாண்டவ தீர்த்தம், தும்புரு தீர்த்தம், ஜகதீர்த்தம் என்னும் சின்னச்சிறு தீர்த்தங்களும் உண்டு.
இந்தத் தீர்த்தங்களைப் போல தசாவதார தீர்த்தம், சப்தரிஷி தீர்த்தம், சேனாபதி தீர்த்தம், உண்டு. இதனையும் தாண்டி கொஞ்சம் நகர்ந்தால் தசனேன தீர்த்தம், உத்தமசரசு தீர்த்தம், மனு தீர்த்தம், நிர்மல தீர்த்தம், ருத்ர தீர்த்தம், வசு தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், மருத்துவ தீர்த்தம், சானவி தீர்த்தம், வாருண தீர்த்தம், கவணவ தீர்த்தம், சுகதீர்த்தம், நாபேய தீர்த்தம், பராசி பத்ர தீர்த்தம், பௌமாச தீர்த்தம் போன்றவையும் காணப்படும்.
இந்தத் தீர்த்தங்களில் உடலை சுத்தப்படுத்திக் கொண்டு, ஆசுவாசப் படுத்திக் கொண்டு சிறிது தூரம் நடந்தால், சோம தீர்த்தம், நாரத தீர்த்தம், யம தீர்த்தம், அக்னி தீர்த்தம், பசு தீர்த்தம், யக்ஷ தீர்த்தம், கணேஷ்வர தீர்த்தம், ஜகஜாட்யஹா தீர்த்தம், விஸ்வ கல்லோல தீர்த்தம், பிரகஸ்பதி தீர்த்தம், ரோமரிஷி தீர்த்தம், சேனேஸ்வர தீர்த்தம், அஜரனமிள தீர்த்தம், கருமதீர்த்தம், அஸ்வ தீர்த்தம், மந்தரை தீர்த்தம், சுப்பிரமண்ய தீர்த்தம், வாருணி தீர்த்தம், வயினதேய தீர்த்தம், ரணவிமோசன தீர்த்தம் என்று பல அற்புதமான மூலிகை குணம் மிக்க தீர்த்தங்களும் உண்டு. இந்த தீர்த்தக் கரையில் நின்று அந்தத் தீர்த்தங்களை முகர்ந்தாலே போதும். ஏழேழு ஜன்மத்திற்கும் பாபம் அண்டாது.” என்று விளக்கம் அளித்தார் துர்வாசர்.
“பாக்கியுள்ள தீர்த்தங்களையும் சொல்லிவிடுகிறேன்” என்று தொடர்ந்தார்: “அகமருஷண தீர்த்தம், அனந்த தீர்த்தம், பர்ஜன்ய தீர்த்தம், மேக தீர்த்தம், நாராயண தீர்த்தம், கால தீர்த்தம், கோமுக தீர்த்தம், அதிகுத்த தீர்த்தம், வாசுதேவ தீர்த்தம் ஆஞ்சனேய தீர்த்தம், அங்கருஷண தீர்த்தம், சுதாகசரசு தீர்த்தம், பிதுரி தீர்த்தம், இதிகாச தீர்த்தம், புராண தீர்த்தம், பிரத்யும்ன தீர்த்தம், சுத்தத் தீர்த்தம், கபிண தீர்த்தம் என்ற தீர்த்தங்கள் காலாகாலத்திற்கும் அழியா வண்ணம் இந்த வேங்கட மலையில் உண்டு.” என்று வேகமாகச் சொல்லி முடித்தார் துர்வாசர்.
கை கூப்பி ஆனந்தமாக இதையெல்லாம் கேட்டுக்கொண்ட திலீப மன்னர் “இத்தனை தீர்த்தங்களில் நீராடுவதற்கு உடனடியாக இயலாதே. இதற்கு ஏதுவாக வேறு மார்க்கம் இருக்கிறதா?” என்று பவ்வியமாகக் கேட்டார் திலிப மன்னர். “இப்படியொரு கேள்வியை நீ கேட்பாய் என்று எனக்குத் தெரியும். என்னைவிடத் தலைசிறந்த தலையாய சித்தனான அகஸ்தியர் அதோ அங்கு தியானம் செய்து கொண்டிருக்கிறார். அவர் தியானம் செய்து முடித்ததும் அவரிடம் சென்று கேள். தக்க பதிலை அகஸ்தியரே விளக்குவார்.” என்று திலீப சக்ரவர்த்திக்கு அகஸ்தியரை அடையாளம் காட்டிவிட்டு வேங்கடவனை நோக்கித் தியானத்தில் ஆழ்ந்தார் துர்வாசர்.
வேங்கடவனை நோக்கித் தியானத்தில் ஆழ்ந்திருந்த அகத்தியர் முன்பு பவ்வியமாக கையைக் கட்டிக் கொண்டு அமர்ந்தார் திலீப சக்ரவர்த்தி.
ஒரு நாள் அல்ல ஏழு நாள்கள் ஆயிற்று. அகஸ்தியர் தியானம் செய்து முடிக்க. அது வரை திலிப சக்கரவர்த்தியும் தண்ணீர் கூடப் பருகாமல், அகத்தியரைப் போல் தியானத்தில் ஆழ்ந்தார்.
ஏழாம் நாள் காலையில் அகஸ்தியர் கண் விழித்தபோது தன் எதிரில் கண்ணை மூடிக்கொண்டு தியானம் செய்து கொண்டிருக்கும் திலீபன் சக்ரவர்த்தியைக் கண்டார்.
ஆன்மிகத்தையும் தர்மத்தையும் கொண்டு பரிபாலனம் செய்யும் இந்த மன்னன் எல்லாவற்றையும் விட்டுவிட்டு தன்னை நோக்கிக் காத்திருக்கும் காரணத்தைத் தன் ஞானக்கண்ணால் அறிந்தார்.
தானே எழுந்து திலிப சக்ரவர்த்தியைத் தட்டி எழுப்பினார். கண் திறந்து பார்த்த திலிபன், தன் எதிரே அகஸ்தியரே நிற்பதைக் கண்டு பரம சந்தோஷப்பட்டு “தன்யனானேன்” என்று அகஸ்தியர் பாதத்தில் விழுந்து நமஸ்கரித்தார்.
“திலீபா! உனக்கு மங்களம் உண்டாகட்டும். துர்வாசர் உன்னை இங்கு அனுப்பி வைத்திருக்கிறார். நீ எதைக் கேட்க வந்தாயோ அதற்குரிய பதிலைச் சொல்கிறேன் கேள்.”
“இங்குள்ள கோடி தீர்த்தங்களில் 108 புண்ணிய தீர்த்தங்கள் எல்லாம் ஒவ்வோர் ஆண்டும் புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளில் வேங்கடவன் அருகிலுள்ள புஷ்கரணியில் ஒன்றாகக் கலங்கும் அந்த நாளில் யார் இங்கு வந்து இந்த புஷ்கரணியில் நீராடுகிறார்களோ அவர்களுக்கு 108 புண்ணிய தீர்த்தங்களில் நீராடிய புண்ணியம் கிடைக்கும்” என்று பதில் உரைத்தார் அகஸ்தியர். இதைக்கேட்டு புளகாங்கிதம் ஆனான் திலீப சக்கரவர்த்தி.
இன்றைக்கும் கூட புஷ்கரணியின் கீழிருந்து திருமலை வேங்கடவன் அருளால் நூற்றியெட்டு புண்ணிய தீர்த்தங்கள் புஷ்கரணிக்கு ஒவ்வொரு புரட்டாசி சனிக்கிழமையும் வந்து கொண்டிருக்கிறது.
சித்தன் அருள் ..................... தொடரும்!
Vannakkam Ayya,
ReplyDeleteAre Devotees allowed to bathe in Pushkarani these days, please pardon my ignorance, Thanks,
Aum Sairam