​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Friday, 7 October 2016

சித்தன் அருள் - 462 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!


அகத்தியப் பெருமான் அருள் வாக்கு

எல்லா கலசங்களின் உள்ளே இருப்பதும் ஒரே கங்கை நீர்தான். அப்படித்தான், மனிதர்கள், தேகம் என்னும் கலசத்தை வைத்துக் கொண்டு தமக்குள் பாகுபாடுகளை பார்த்து, "உன்னை எனக்கு பிடிக்கும், உன்னை எனக்குப் பிடிக்காது. நீ நல்லவன். நீ நல்லவனல்ல. நீ எனக்கு நல்லதை செய்கிறாய். அதனால் நீ எனக்கு பிரியமானவன். நீ எப்பொழுதும் என்னை தூற்றிக் கொண்டிருக்கிறாய் அதனால் உன்னை எனக்குப் பிடிக்கவில்லை" என்றெல்லாம் தமக்குள் அபிப்பிராய பேதங்களை வளர்த்துக் கொண்டு அதைப் பகையாகவே மாற்றிக் கொள்கிறார்கள். ஆனால், மகான்கள் எப்படிப் பார்ப்பார்கள்? உள்ளே இருக்கும் நீரான ஆத்மாவைத்தானே பார்ப்பார்கள். எல்லாம் ஒரே நதியிலிருந்து எடுக்கப்பட்ட நீர் என்பது போல, எல்லாம் ஒரே பரம்பொருளின் அந்த அம்சத்தில் இருந்து, பிரிந்து, பிரிந்து, பிரிந்து, பிரிந்து, பிரிந்து மாயையில் ஆழ்ந்து, ஆழ்ந்து, ஆழ்ந்து, ஆழ்ந்து, ஆழ்ந்து, பிறவி தோறும் அறியாமையில் வீழ்ந்து, வீழ்ந்து, வீழ்ந்து, வீழ்ந்து, வீழ்ந்து, பாவ சேற்றிலே சிக்கி, தன்னையறியாமல், உழன்று கொண்டே இருக்கும் தேகம் எனும் கலசத்திற்குள் அடைபட்ட ஆத்மா எனும் கங்கை நீர். இவற்றை எல்லாம் விடுவித்து, புனிதநதியான கங்கையோடு சேர்த்துவிட்டால், மீண்டும் பார்வைக்கு எல்லாம் ஒன்று போல் தெரியும். இப்படி சேர்ப்பது என்பது அத்தனை எளிதல்ல. அதற்கு, எத்தனையோ பிறவிகள், காலங்கள் ஆகும். எனவே, இதனையுணர்ந்து, எமை நாடி வருகின்ற சேய்கள், தமக்குள் பகைமையை வளர்த்துக் கொள்ளாமல், தமக்குள் கருத்து வேறுபாடுகளை வளர்த்துக் கொள்ளாமல், தத்தம் பாவங்களைக் குறைத்துக் கொள்ள வழி முறைகளை மட்டும் பின்பற்றி, பிறருடன் இதமாக வாக்கை உரைத்து, எப்பொழுதும் புண்ணிய காரியங்களை செய்து கொண்டே இருந்தால், இறைவனருள் ஒவ்வொரு ஆத்மாவிற்கும் கட்டாயம் கிட்டுமப்பா.

No comments:

Post a Comment