​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 20 October 2016

சித்தன் அருள் - 475 - "பெருமாளும் அடியேனும்" - 70 - நாரதரும் கலிபுருஷனும்!


நாரதர் கேட்ட கேள்விகளுக்கு அழுத்தம் திருத்தமாகவும் கருணையோடும் பதில் சொன்ன வேங்கடவன், எல்லாத் தெய்வ ரகசியங்களையும் நாரதருக்குச் சொல்லிவிட்டதாக எண்ண வேண்டாம்.

ஏனெனில்,

வேங்கடவனுக்கு நாரதரைப் பற்றித் தெரியும். இங்கொன்று பேசி, எதிராளிகளிடம் வேறொன்று பேசி, குட்டையைக் குழப்புவார் என்று. இது நாரதர்க்கு கைவந்த கலை. ஆகவே, தான் சொல்லும் அத்தனை விஷயங்களும், நாட்டைக் கெடுத்துக் கொண்டிருக்கும் கலிபுருஷன் காதுகளுக்குப் போய்ச் சேர்ந்துவிடும் என்பதால் வேங்கடவன் பொடிவைத்துப் பேசினார் என்பதுதான் உண்மை.

வேங்கடவனிடம் விஷயத்தைக் கறந்து விட்டோம். இதை அப்படியே கலிபுருஷன் காதுகளில் போட்டு விட்டால், கலிபுருஷன் எதிர்காலத்தில் என்ன செய்யப்போகிறான் என்பதைத் தெரிந்து கொள்ள நாரதருக்குக் கொள்ளை ஆசை.

எனவே-

வேங்கடவனிடம் விடைபெற்றுக் கொண்டு நாரதர் நேராக கலிபுருஷனைத் தேடிப்போனார்.

அருமையான ஒரு வனாந்தரத்தில் கலிபுருஷன் குறுக்கும் நெடுக்குமாக நடந்து எதைப்பற்றியோ பலமாக சிந்தித்துக் கொண்டிருந்தான். திருப்பதியில் வேங்கடவன் இருக்கும் வரை தன்னால் சுதந்தரமாகச் செயல்படமுடியாது என்பதை உணர்ந்து திருப்பதியை விட்டு வெகு தொலைவுக்கு வந்துவிட்டான்.

அவன் அமர்ந்த இடம் ஒரு சிற்றூர். பக்கத்தில் வனாந்தரமும் இருந்தது. அந்த இடத்தில் தங்கி தன் கலி வேலைகளை அந்தச் சிற்றூர் மக்களிடம் காட்டி வந்தான்.

“தெய்வத்தை நம்பாதே! தெய்வம் என்பது பொய்! நீ தான் தெய்வம்! உள்ளூர் பெரிய மனிதர்கள் சொல்லுகிற வேதத்தை - ஒழுக்க நெறியை நம்பாதே! வேதம் ஓர் ஏமாற்று வித்தை. அதைச் சொல்கிறவர்கள் வேஷதாரிகள். உன்னை நம்பு! அவர்களை நம்பாதே! அவர்கள் சொல்கிற வார்த்தைக்கும், திரை மறைவில் அவர்கள் நடத்தும் வாழ்க்கைக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. மனு நீதி என்பது பொய். அதைச் சொல்லி அவர்கள் பிழைக்கிறார்கள்! அவர்கள் பெண்ணாசை பிடித்தவர்கள். ஒழுக்கம் கெட்டவர்கள். நான் சொல்வது பொய் என்றால் அந்தப் பெரிய மனிதர்களுக்குத் தெரியாமல் அவர்களைப் பின் தொடர்ந்து ரகசியமாகச் சென்று பார்! உண்மை விளங்கும்.”

என்று விஷத்தைக் கக்குவது போல் கலிபுருஷன் அந்தச் சிற்றூர் மக்களிடம் துர்போதனைகளைப் பரப்பினான். கலிபுருஷன் சொன்னது உண்மைதான் என்பதைப் போல் அந்தச் சிற்றூரில் இரண்டொரு சம்பவங்களும் நிகழ்ந்தன. அதை ஜனங்கள் கொஞ்சம் கொஞ்சமாக நம்ப ஆரம்பித்தனர்.

எதெல்லாம் பாபம் என்று இருந்தார்களோ அதெல்லாம் புண்ணியம் என்று பேசத் தொடங்கினர். அந்த விஷயம் அந்தச் சிற்றூரில் மட்டுமன்றி அக்கம் பக்கத்து கிராமங்களை நோக்கியும் பரவலாயிற்று. அதைக் கண்டு கலிபுருஷன் மிகுந்த ஆனந்தப்பட்டான்.

அடுத்தபடியாக மக்களிடம் தெய்வ பக்தியை ஒழிக்கவேண்டும். கோவில்களுக்கு மக்கள் செல்வதைத் தடுக்க வேண்டும். அதுமட்டுமன்றி, ஒவ்வொரு குடும்பத்திலும் குழப்பத்தை ஏற்படுத்தி குடும்பத்தைப் பிரிக்கவேண்டும். வியாதிகளை உண்டாக்கி அதனை நிவர்த்தி செய்ய முடியாதபடி தடுக்க வேண்டும் என்றெல்லாம் முடிவெடுத்தான்.

அதை எப்படி நிறைவேற்றுவது என்பதைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கும் பொழுதுதான் நாரதர் கலிபுருஷனை நோக்கிச் சென்றார்.

நாரதரைக் கண்டதும் கலிபுருஷனுக்கு உள்ளுக்குள் பெருமகிழ்ச்சிதான். அதேசமயம் அவர் எந்த விநாடி எப்படி மாறுவார் என்றும் தீர்க்கமாகச் சொல்லமுடியாது. ஆனால் குழப்பத்தை விளைவித்து புத்தியைச் செயல்பட விடாமல் செய்வதில் நாரதருக்கு இணை நாரதர்தான்.

எனவே, இவரைத் தக்கவாறு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மனத்திற்குள் ஆசை ஆசையாய்த் திட்டம் போட்டான்.

“என்ன கலிபுருஷரே! சௌக்கியமா?” என்றார் நாரதர்.

“சௌக்கியமாக இருந்தால் நான் ஏன் இந்த வனாந்தரப் பிரதேசத்தில் தனியாகச் சுற்றிக் கொண்டிருக்கிறேன்?” என்று சோகமாக அங்கலாய்த்தார்.

“என்ன கலிபுருஷரே! நான் கேள்விப்பட்டது வேறு. தாங்கள் சொல்வது வேறாக இருக்கிறதே. ஊரெல்லாம் உங்கள் புகழ்தானே பரவிக் கொண்டிருக்கிறது?”

“அப்படியா? தாங்கள் சொல்வது நிஜமாக இருந்தால் எனக்கு அதுவே பெரும் மகிழ்ச்சி”

“நேற்றைக்குக் கூட திருமலைக்குச் சென்றிருந்தேன். வேங்கடவனைச் சந்தித்தேன்.”

“என்ன சொல்கிறார் வேங்கடவன்?”

“கலிபுருஷா! இப்போதெல்லாம் வேங்கடவனால் எதுவும் செய்ய முடியவில்லையாம். நாட்டில் உங்கள் கை ஓங்கி இருப்பதால் பாபங்கள் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருக்கிறதாம்.”

“நாரதரே!”

“ம்ம்”

“இதை நான் நம்பலாமா?”

“என்ன கலிபுருஷா, இன்னுமா என்னை நம்பவில்லை? இந்தச் செய்தியைக் கேட்ட சந்தோஷத்தில் நான் உடனே உங்களைப் பார்க்க ஓடோடி வந்திருக்கிறேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.” என்று நாரதர் கடைக்கண்ணால் குனிந்தபடி கலிபுருஷனைப் பார்த்தார்.

“நாட்டில் பாபங்கள் காட்டுத்தீ போல் பரவிக் கொண்டிருக்கின்றன. இதனைத் தடுக்க என்னால் முடியவில்லை. நடப்பது நடக்கட்டும் எல்லாம் அந்த கலிபுருஷன் செயல் என்று வேங்கடவனே என்னிடம் பலமுறை புலம்பி விட்டார். போதுமா?”

“உண்மையிலே வேங்கடவன் அப்படிச் சொல்லியிருந்தால் நீண்ட காலத்துக்குப் பிறகு எனக்குக் கிடைத்த பெரும் வெற்றிதான். நாரதரே நேரில் இங்கு வந்து என்னிடம் சொல்வதால் நான் இதனை ஏற்றுக் கொள்ளுகிறேன். ஆமாம். ஒரே ஒரு சந்தேகம்” என்றான் கலிபுருஷன்.

“என்ன சந்தேகம்?”

“பிரம்மா என்னைப் படைத்தார். பூலோக மக்களை ‘கலி’யுக மக்களாக மாற்றச் சொன்னார். அவர் இட்ட கட்டளையை நான் செய்ய ஆரம்பித்திருக்கிறேன். என்னை அழிக்க வேங்கடவன் கல் தெய்வமாக திருமலையில் அவதரித்தவர், இங்கு வந்து ஏன் எனக்கெதிராகச் செயல்படவில்லை?”

“நியாயமான கேள்வி. ஆனால் அவர் இங்கு வர மாட்டார். யார் யார் திருமலைக்கு வந்து வேங்கடவனிடம் பாபத்தைச் சொல்லி முறையிடுகிறார்களோ அவர்களுக்கு மட்டும்தான் பாபத்தைப் போக்குவாராம். மற்றபடி தங்களைப் பின் தொடர்ந்து வர மாட்டாராம்.”

“இது தாங்களாகச் சொல்வதா? இல்லை வேங்கடவனே சொன்னதா?”

“பார்த்தீர்களா பார்த்தீர்களா கலிபுருஷனுக்கு இன்னும் இந்த நாரதர் மீது முழு நம்பிக்கை வரவில்லை போலும். ம் ம்... எனக்கெதற்கு இந்த வம்பு? நீங்களாயிற்று அந்த வேங்கடவனாயிற்று. எப்படியோ போங்கள்!” என்று வெறுப்புற்றது போல் முடித்தார் நாரதர்.

“சரி சரி. நான் நாரதப் பெருமானை இம்மியளவும் பிசகாமல் நம்புகிறேன். இங்கு எதற்காக வந்தீர்கள்? அதைச் சொல்லவே இல்லையே.”

“சொல்லவிட்டால்தானே?”

“கோபப்படாதீர்கள் நாரதரே! தாங்கள் இங்கு வந்த விஷயம் என்ன?”

“சொல்லட்டுமா?”

“சொல்லுங்கள் நாரதரே!”

“இப்போது வேங்கடவன் மிகவும் சோர்ந்து போயிருக்கிறார். முன்பு போல் செயல்படுவதில்லை. எனவே தாங்கள், தங்கள் இஷ்டப்படி ஜனங்களிடம் எப்படி வேண்டுமானாலும் ஆன்மிகம், தெய்விகம், நன்னெறி, தர்மம் போன்றவற்றுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடலாம். ஜனங்களும் இனி உங்கள் பின்னால் வந்து விடுவார்கள். வேங்கடவனால் எதுவும் முடியாது கலிபுருஷா!” என்று தூபம் போட்டார் நாரதர்.

“ஆஹா! என்ன அருமையான ஆசீர்வாதம் இன்று எனக்குக் கிடைத்திருக்கிறது! உண்மையில் நான் தங்களுக்குத் தன்யனானேன்.” என்று மகிழ்ந்து போனான் கலிபுருஷன்.

“இன்னும் பூலோக மக்கள் திருந்தவில்லை. பாபம் புண்ணியம் என்று வேங்கடவனையே சுற்றி வருகிறார்கள். இதை ஒழிக்க வேண்டும்.”

“எப்படி?”

“கடவுளே இல்லை என்ற கொள்கையைப் பரப்பவேண்டும். யார் வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ளலாம்; பகவானால் ஒன்றும் செய்ய முடியாது. மழை பொழிவதும் சூரியன் தோன்றுவதும் உலக இயற்கை. அதில் தெய்வத்திற்கு சிறிதும் சம்பந்தமே இல்லை, என்பது போன்றவற்றை மக்களிடம் பரப்பவேண்டும். இதைச் செய்தாலே போதும். ஜனங்களுக்கு உங்கள் மீது பிடிப்பு ஏற்பட்டுவிடும்.”

“அப்படிச் செய்யலாம் என்றா சொல்கிறீர்கள்?”

“ஆமாம் ‘நாராயணா’ என்று சொல்லியே வலம் வந்து கொண்டிருக்கும் அதே நாரதர்தான் இதைச் சொல்கிறேன்.”

“நம்பலாமா? பின்னர் திருமலை வாசனால் வேறு ஆபத்தோ அல்லது இடையூறோ ஏற்படாதே?”

“நிச்சயம் ஏற்படாது” என்று நாரதர் தூண்டிவிட பத்து மடங்கு மகிழ்ச்சியில் கலிபுருஷன் துள்ளிக் குதித்தான். இதனை உடனடியாகச் செயல்படுத்தப் போவதாகவும் நாரதரிடம் உறுதிமொழியும் கூறினார்.

கலிபுருஷனைத் தூண்டிவிட்டு கலகத்தை ஆரம்பித்துவிட்ட சந்தோஷத்தில் நாரதர் ‘எப்படியோ நான் வந்த காரியம் முடிந்துவிட்டது. இனி வேங்கடவன் பாடு, கலிபுருஷன் பாடு’ என்று ஆனந்தமாகப் புறப்பட்டுப் போனார்.

கலிபுருஷனின் வேலையும் துர்போதனையும் பூலோக மக்களிடம் பரவின. அதற்கேற்றாற் போல் அந்த ஆண்டு பெய்ய வேண்டிய மழை பொழியவில்லை. பூமாதேவி வறண்டு போனாள். விவசாயம் தோல்வியடைந்தது. ஆடு, மாடு, கோழிகள் நீரின்றித் துடித்துச் செத்தன. நாட்டில் வறுமைப் பிணி சூழ்ந்தது.

ஜனங்கள் ஆண்டவனை வேண்டியும் கூட, நாட்டில் சுபிட்சம் ஏற்படவில்லை என்பதால், ஜனங்களுக்கு தெய்வ நம்பிக்கைக் குறையத் தொடங்கிற்று.

சித்தன் அருள்.................... தொடரும்!

No comments:

Post a Comment