​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Thursday, 13 October 2016

சித்தன் அருள் - 469 - "பெருமாளும் அடியேனும்" - 69 - வேங்கடவர் நாரதரிடம் உரைத்தல்!


எத்தனை தீர்த்தங்கள், புண்ணிய நதிகள் திருப்பதி மலையிலுள்ள புஷ்கரணியில் வந்து சேருகின்றன என்பதை ஓரளவு பார்த்தோம். இன்னும் திருமலையின் சிறப்புகளைப் பற்றி நிறைய எழுதலாம்.

ஏழு மலைகளில் ஐந்து மலைகளின் வரலாற்றைத் தான் இதுவரை பார்த்தோம். வேங்கடாத்திரி, சேஷாத்திரி என்னும் இரண்டு மலைகளின் பெருமையைப் பற்றித் தெரிந்து கொண்டுவிட்டால் பின்னர் பத்மாவதி தாயாரைப் பற்றிய அபூர்வமான செய்திகளைப் பார்க்கலாம்.

வேங்கடம் என்ற சொல்லைப் பிரித்து பதம் பார்க்க வேண்டும். வேம் என்றால் பாபம் என்று பொருள். கடம் என்றால் போக்குதல் என்று அர்த்தம். ஒவ்வொருவரும் தெரிந்தோ அல்லது தெரியாமலோ நிறையப் பாபங்களை அன்றாடம் செய்யவேண்டியிருக்கிறது.

பிற்காலத்தில் இந்தப் பாபங்களின் எண்ணிக்கை அதிகமாகும்போது அவை நோயாக மாறுகின்றன. அல்லது விபத்து போன்ற சம்பவங்கள் நடந்து மனத்தை வேதனை அடைய வைக்கின்றன. இந்தப் பாபத்தைப் போக்க நதிகளில் நீராடினாலும் அந்த பாபங்கள் போவதில்லை. பகவான் பாதத்தில் விழுந்து சரணாகதி அடைந்தால்தான் அந்தப் பாபங்களிலிருந்து கடைத்தேறலாம்.

இன்றைக்கு-

இந்தப் பூலோக மக்களின் அனைத்துப் பாபங்களையும் போக்கும் ஒரே இடம் வேங்கடமலை என்றால் ஆச்சரியமில்லை. காதில் கேட்காத-கேட்க முடியாத- பாபங்களையெல்லாம் சர்வசாதாரணமாகச் செய்துவிட்டு வேங்கடவனை சரண் அடைந்து புண்ணியசாலியாக மாறுகிறார்கள். மக்களின் சோகங்களைப் போக்கவே பகவான் வேங்கடமலையில் ஒன்பதாவது அவதாரத்திற்கும், இனிவரும் கல்கி அவதாரமான பத்தாவது அவதாரத்திற்கும் இடையே கல் அவதாரமாக எடுத்திருக்கிறார் என்பதை ஏற்கெனவே விளக்கியிருக்கிறோம்.

இப்பொழுது வேங்கடவன் நம் பாபங்களைப் போக்கி நமக்கு முக்தி நிலையைத் தந்தாலும் நம் பாபங்களால் வேங்கடவனுக்கு நிறைய பாதிப்பு ஏற்படும். இத்தனை பேருடைய பாபங்களை பகவான் வாங்கிக் கொண்டால் இந்தப் பாபங்களை பகவான் எப்படி தன்னிடமிருந்து போக்கிக் கொள்கிறார்?

இது பற்றி நாரதர் ஒரு நாள் வேங்கடவனிடம் நேரடியாகவே கேட்டார். “அசுரர்கள் செய்த பாபத்தைவிட இப்போது பூலோக மக்கள் பன்மடங்கு அதிகம் பாபத்தைச் செய்கிறார்கள். இதைத் தடுக்க தாங்கள் முயற்சி செய்யக்கூடாதா?”

“நாரதருக்கு திடீரென்று இப்படி ஓர் எண்ணம் எப்படி வந்தது?”

“தங்கள் கருணையை தினமும் பார்க்கிறேன். யார் வந்து தஞ்சம் அடைந்தாலும் அவர்கள் செய்த பாபத்திற்கு மன்னிப்பு தந்து அவர்களுடைய பாப மூட்டைகளைத் தாங்கள் சுமக்கிறீர்கள். இதைத் தவிர்க்கத்தான் கேட்டேன் ஸ்வாமி!”

“நாரதா! நீ ஒன்றை அறவே மறந்துவிட்டாய். கலிபுருஷன் செய்கிற லீலைதான் இது. அது வேகமாகத்தான் வேலை செய்யும். எனவே பாபத்தைச் செய்யாமல் யாரும் பூலோகத்தில் இருக்க முடியாது.”

“கலிபுருஷனை அடக்கிவிட்டால் பாபம் செய்வதை பூலோக மக்கள் விட்டுவிடுவார்கள் அல்லவா?”

“நல்லயோசனை. ஆனால் இது கலியுகம் ஆயிற்றே! அவன் கை ஓங்க வேண்டும். இல்லையென்றால் பிரளயம் எப்படி ஏற்படும்?”

“பிரளயமா?”

“ஆமாம். கலிபுருஷனின் ஆட்டம் அதிகமாக அதிகமாள ஜனங்கள் தர்மத்தை அறவே மறந்து விடுவார்கள். அக்கிரமங்கள் அதிகமாகும். பாபங்கள் அதிகமாகும். மகளிர் கற்பு நெறி தவறுவார்கள். விலைவாசி உயரும். கொலை பாதகங்கள் நடக்கும். ஒவ்வொரு குடும்பத்திலும் சோதனைகள் அதிகமாகும். நோய்கள் பேயாட்டம் போடும். பூமியில் நீர் வற்றும். இயற்கை தன் கடமையைச் செய்யாது.”

“தாங்கள் இதையெல்லாம் திருமலையில் இருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டே இருப்பீர்களாக்கும்?”

“நாரதா! நான் இன்னும் கலியுகத்தில் என்னவெல்லாம் நடக்கும் என்று சொல்லும் முன்னரே பதற்றப்படுகிறாயே! சரி சரி. மேற்கொண்டு சொன்னால் நீ தாங்கமாட்டாய். ஆனால் ஒன்று. இத்தனை சோதனைகளையும் தாண்டி என்னிடம் முழுமனத்தோடு சரண் புகுந்தவர்களுக்கு மட்டும் நான் அடைக்கலம் தருவேன். எல்லாருக்கும் அல்ல.”

“தன்யனானேன் பிரபு! அப்படி அடைக்கலம் கேட்டு வருகிறவர்கள் அன்றாடம் திருமலையில் லட்சக்கணக்கில் இருக்கிறார்கள். அவர்கள் எல்லாருக்கும் பாபத்தைப் போக்கி புண்ணியம் தருகிறீர்கள் அல்லவா?”

“ஆமாம்! அதிலென்ன சந்தேகம்? நீதான் தினமும் கண்கூடாகப் பார்த்துக் கொண்டிருக்கிறாயே”

“அதனால்தான் கேட்கிறேன். அவர்களுடைய பாப மூட்டைகளை எப்படி தாங்கள் கரையச் செய்து புண்ணியத்தை அள்ளித் தருகிறீர்கள்?”

“இது தெய்விக ரகசியம் தான். இந்த மலைக்கு வேங்கட மலை என்றுதான் பெயர்.”

“ஆமாம்”

“அதாவது பாபத்தைப் போக்கும் இடம். அப்படித்தானே?”

“ஆமாம்”

“இந்த வேங்கடமலைக்கு படியேறி வந்து என்னைப் பிரார்த்தனை செய்து வரும் பக்தர்களின் உண்மையான பக்தியை நான் காலிகோபுரத்தில் அமர்ந்தபடியே பார்க்கிறேன். என் பார்வை அவர்கள் மீது படும். அப்பொழுது அவர்கள் செய்த பாபம் காற்றிலே கரையும். மலையின் அடியில் மறையும். காலிகோபுரத்தைத் தாண்டி பயபக்தியோடு வருபவர்கள் பெரும்பாலோருக்கு ஆதிசேஷனும் கருடாழ்வாரும் மேலும் கொஞ்சம் பாபத்தை மலையின் இருபக்கம் நின்று போக்கிவிடுவார்கள்.”

“ஆச்சரியமாக இருக்கிறதே!”

“ஆதிசேஷனும் கருடனும் தினமும் தங்கள் பணியை இன்றைக்கு மாத்திரமல்ல பிரளயம் ஏற்படும் வரை என்றைக்கும் செய்வார்கள். இது அவர்களுக்குக் கஷ்டமான செயல் அல்ல. இரட்டிப்பு மகிழ்ச்சியோடு செய்கிறார்கள்.”

“அப்படியெனில் தங்களின் பொற்பாதத்தைத் தேடி மலையில் நடந்து வரும் பக்தர்களுக்கு இவ்வளவு பெரும் புண்ணியம் கிடைக்கிறது என்று இப்போதுதான் தங்களின் திருவருளால் கேட்கும் பாக்யம் பெற்றேன். மேற்கொண்டு தாங்கள் திருவாய் மலர்ந்து சொல்லுங்கள் ஸ்வாமி!”

“ஆதிசேஷனும் கருடாழ்வாரும் போக்கிய பாபத்தையும் தாண்டி இன்னும் பாபம் இருந்தால் புஷ்கரணியில் நீராடும்போது அந்தப் பாபத்தின் பெரும்பகுதி கழிந்து விடுகிறது. அப்படியே மிச்சம் மீதி பாபங்கள் இருந்தால் என் கோபுர கலசத்தை தரிசனம் செய்யும் பொழுது விலகிவிடும். போதுமா?” என்று சொல்லி கன்னங் குழியச் சிரித்தார் வேங்கடவன்.

நாரதர் அப்படியே வேங்கடவன் திருப்பாதத்தில் விழுந்து வணங்கினார்.

“திருமலையில் எப்படியெல்லாம் புண்ணியம் கிடைக்கும் என்பதை மிகவும் அற்புதமாகச் சொல்விஇவிட்டீர்கள். இப்படி வந்து தங்கள் திருவடியைத் தரிசனம் செய்தும் நிறைய மனிதர்களுக்கு பாபம் போகாமல் இருக்கிறதே, இதற்கு என்ன காரணம்?”

“வேங்கடமலைக்கு வந்தாலே அவன் இதுவரை செய்த அத்தனை தோஷங்களும் விலகும். அதனால்தான் வேங்கடாத்திரி என்று இந்த மலைக்குப் பெயர். இங்கு வந்தும் கூட ஒருவனுடைய பாபம் விலகவில்லையென்றால் அவன் உண்மையான பக்தியோடு வேங்கடமலைக்கு வரவில்லை என்று அர்த்தம்.”

“அப்படியானால் அப்பேர்ப்பட்டவர்களுக்கு கடைசிவரை சாபவிமோசனம் கிடையாதா?”

“கண்டிப்பாக அவர்களுக்கும் சாபவிமோசனம் உண்டு. ஆனால் அவர்கள் பயபக்தியோடு இங்கு வந்து மூன்று நாள்கள் தங்கியிருந்து தினமும் காலையில் அங்கப்பிரதக்ஷணம் செய்து மாலையில் மூன்று முறை வேங்கடமலையை அதாவது குடியிருக்கும் கோவிலை வலம் வரவேண்டும். உடலை வருத்தி பிரார்த்தனை செய்யவேண்டும். உள்ளத்தில் ஆழ்ந்த பக்தியும் இருக்கவேண்டும்.”

“சரி. இதை எப்படி தாங்கள் அறிவீர்கள் ஸ்வாமி?”

“அதற்குத்தான் பரிவாரத் தேவதைகள் இங்கு இருக்கிறார்கள். வராஹமூர்த்தி இருக்கிறார். சித்தர்கள் பலர் இருக்கிறார்கள். இவர்கள் எல்லாரும் தலையாய சித்தர் அகஸ்தியர் தலைமையில் அன்றாடம் அரூபமாக இயங்கி வருகிறார்கள். இவர்கள் இருக்கும் பொழுது எனக்கு எந்தவிதக் குறையும் இல்லை.”

“ஸ்வாமி! இப்படிப்பட்ட ஒரு கேள்வியை தங்கள் முன்பு சமர்ப்பிக்கிறேன் என்று அருள் கூர்ந்து கோபித்துக் கொள்ளக்கூடாது. கேட்கலாம் என்றால் கேட்கிறேன்.” என்று நாரதர் கை கூப்பி வாய் பொத்தி பணிவுடன் திருமாலை நோக்கிக் கேட்டார்.

“சொல்லுங்கள் நாரதரே!”

“தங்களை இங்கு வந்து நேரிடையாக வந்து தரிசனம் செய்பவர்களுக்கு மட்டும்தான் பாபவிமோசனம் கிட்டுமா? இங்கு வர முடியாதவர்கள் எப்படி தங்கள் பாபத்தைப் போக்கிக் கொள்வார்கள்?”

“நாரதா! என்னை நோக்கி வருபவர்களை விட என்னை நோக்கி வராதவர்கள்தான் மிக அதிகம். அவர்களை நான் எப்படி கைவிட்டு விடமுடியும்? ஒருகாலும் விடமாட்டேன். அவர்கள் ஏழைகளாக இருக்கலாம். நடக்க முடியாமல் அவதிப்படலாம். அல்லது அவர்களின் சந்தர்ப்ப சூழ்நிலைகளில் பல்வேறு தடைகள் இருக்கலாம். இதையெல்லாம் அறிந்து அவர்களின் பக்திக்கேற்ப நான் அவர்களுக்கு மோட்சத்தையும் முக்தியையும் கொடுப்பேன்.”

“வேங்கடவா! தங்களின் கருணையே கருணை. தாங்கள் திருமலையில் இருக்கும் வரை பூலோக மக்களுக்கு எந்தக் கவலையும் இல்லை. ஆனால்...”

“என்ன ஆனால்?”

“அந்தக் கலிபுருஷனின் கொட்டம் தான் தாங்க முடியவில்லை. பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி அவதாரம் எடுத்து எத்தனையோ அரக்கர்களை அழித்தவர்கள் தாங்கள். அப்படியிருக்க இந்தக் கலிபுருஷனை மாத்திரம் எப்படி விட்டு வைத்திருக்கிறீர்கள்?”

“பொறுத்திருந்து பார். அதற்குள் ஏன் அவசரப்படுகிறாய்?”

என்று சிரித்த முகத்தோடு வேங்கடவன் சொன்ன இந்த சூட்சுமச் சொல்லை உடனடியாக நாரதரால் புரிந்து கொள்ள முடியவில்லை. வேங்கடவனை நோக்கிக் கை கூப்பி தன்னை அறியாமல் மெய்மறந்து செயலற்று நின்றார்.

சித்தன் அருள்................தொடரும்!

3 comments: