வணக்கம் அகத்தியர் அடியவர்களே!
அகத்தியப்பெருமானிடம் நாம் நடந்து கொள்கிற விதம் தான் அவரை நம் அருகாமையில் வரவழைக்கும் என்பது அடியேனுடைய அனுபவம். அவரை, குருவாக, ஆசிரியனாக, தந்தையாக, தாயாக, இறைவனாக, நம்முள் ஒருவராக எப்படி வேண்டுமானாலும் உணரலாம், நடத்தலாம். சித்தர்களே ஆச்சரியப்படுகிற அளவுக்கு அவர் அருகாமையை நமக்கு அளிப்பார். நாம் அவரிடம் எளியவனாக நடந்து, அவர் சொல்கிற விஷயங்களின் உண்மை தத்துவத்தை உணர்ந்து செயல்பட்டாலே போதும். ஆனால் நாம் அவரை புரிந்து கொள்கிற விதத்தில் நிறைய தவறு இருக்கிறது. எப்படி?
உதாரணமாக! சமீபத்தில், அவரே மனம் கனிந்து தன் சேய்களுக்கு ஒரு உத்தரவிட்டார். "உண்மையான அன்புடன் ஒவ்வொருவரும் பிரார்த்திக்க, இல்லம் தேடி இந்த நாடி வரும்! யாமும் வந்து வாக்குரைப்போம்!" என்று. சரி! எத்தனை பேர் இன்றும் இந்த பிரார்த்தனையை சமர்பிக்கிறீர்கள்? எப்படி பிரார்த்திக்கிறீர்கள்?
சாதாரணமாக "அய்யனே! தாங்கள் ஜீவ நாடியுடன் எங்கள் இல்லத்தில் எழுந்தருளி நல் வாக்கு அருள வேண்டும்!" என வேண்டிக் கொண்டிருப்பீர்கள்.
இந்த பிரார்த்தனையில் ஒரு தவறு உள்ளது! அதை கண்டுபிடித்து, திருத்தி, உணர்ந்து பிரார்த்தனையை சமர்ப்பிக்க வேண்டும்! "நான்" "எனது" என்ற வார்த்தைகளை குருநாதரிடம் தவிர்க்க வேண்டும். இது "உங்கள் இல்லம்" என்கிற வார்த்தையும், அந்த உணர்வும் அவரிடம் சமர்ப்பிக்க மிக எளிதில் அவர் நம் அருகில் வந்து விடுவார் என்பதே உண்மை.
இனி ஓர் அனுபவம். எங்கேனும் வெளியே செல்ல கிளம்பும் பொழுது, பூசை அறை கதவை மூடும் பொழுது, வலது கையால் கதவை தொட்டு, "அய்யனே! இது உங்கள் இடம். இங்கு வந்து அமர்ந்து கொண்டு பிற இடங்களுக்கு சென்று வாருங்கள். எந்த கெட்ட கர்மாவும் உள் நுழையாமல் பார்த்துக்கொள்ளுங்கள். அப்படியே, அடியேனுடைய விதியினால், ஏதேனும் கெட்ட கர்மா பாதிக்க உள் நுழைந்தாலும், அதை நல்ல கர்மாவாக மாற்றி, லோகத்துக்கு உடனே பிரயோசனப்படும்படி விரட்டி விடுங்கள்" என பிரார்த்தனையை எப்போதும் அவரிடம் சமர்ப்பிக்க, பல அதிசயங்கள் நம் கண் முன் நிகழ்வதை காணலாம்.
சமீபத்தில் ஒரு நாள் அகத்தியப்பெருமானிடம் கூறிவிட்டு அடியேனும், மனைவியும் வீட்டுக்கான சில பொருட்களை வாங்க வண்டியில் வெளியே சென்றோம். திருவோணம் பண்டிகையானதால் எங்கும் ஒரே கூட்டம். பொருட்கள் வாங்கிக்கொண்டு வண்டியில் ஏறி அமர காலை தூக்கி போடும் பொழுது, யாரோ அடியேனின் வலது காலை இரு கைகளால் பற்றுவது போல் ஒரு உணர்வு. யாரையோ மிதித்துவிட்டோம் என்று அதிர்ந்து திரும்பி பார்க்க யாரும் இல்லை. என்னவோ யோசனையுடன், மனைவியை வண்டியில் அமரச்செய்து, வண்டி ஓடத்துவங்க, ரோட்டில் சிவப்பு விளக்கு எரியத் தொடங்கியது, அங்கு நின்றிருந்த காவலர், "சீக்கிரம் போ" என்று அறிவுறுத்தினார். வலது பக்கத்திலிருந்து வண்டிகள் வேகமாக குறுக்கே பாய்ந்தது, வேகமாக அவர்களை தவிர்க்க முயன்ற அடியேனின் வண்டி முன்னே வந்த ஒரு வண்டியில் பலமாக மோதியது. மனைவி வண்டியிலிருந்து தூக்கி வீசப்பட்டு நடுரோட்டில் வீழ்ந்தாள். வண்டி கட்டுப்பாட்டை இழந்து அத்தனை வண்டிகளுக்கு முன் விழ, அடியேன் வண்டிக்கு மேல் வீழ்ந்தேன். விழுந்த வேகத்தில் ஓடிக்கொண்டிருந்த இன்ஜினுக்கு மேல் கால் மாட்டிக்கொண்டது. அனைவரும் ஓடி வந்து உதவும் முன், சுதாகரித்து அடியேன் எழுந்து நின்றேன். நிதானத்தை என்னுள் வருத்தினேன். மேல் முட்டுக்கு கீழே எங்கெல்லாமோ எரிந்தது. அடிபட்டுவிட்டது என்று உணர்ந்தேன். மனைவிக்கு, இடுப்பில் நல்ல வேதனை. அவளைப்பார்த்து, "மருத்துவமனையா? வீடா?" என்றேன். வீட்டிற்க்கே போகலாம் என்றாள். வண்டியில் ஏறி வீடு வந்து சேர்ந்தோம்.
வீட்டுக்கு வந்து இடது காலை பரிசோதித்து பார்க்க பல இடங்களில் தோல் கிழிபட்டு ரத்தம் உறைந்திருந்தது. நடந்த விஷயங்களை யாரிடமும் சொல்லவில்லை. அமைதியானேன். திடீரென வந்த மிகப்பெரிய ஆபத்து, நான்கைந்து கிழிபட்ட சதைகளுடன் சிறிதாகிப்போனது.
பூசையறையில் அகத்தியப்பெருமான் கைதூக்கி ஆசீர்வதித்தபடி நின்றிருந்தார். அவர் பாதத்தை பார்த்து, பின் முகத்தை பார்த்து கேட்டேன்.
"ஏன்?"
பின்னர் அமைதியாகிப் போனேன்! உடல், வலியை மறுதலித்து இயல்பு நிலைக்கு சென்றது.
மறுநாள், மாலை. வீட்டில் விளக்கேற்றி அகத்தியப்பெருமானை பிராத்தித்து அமர்ந்திருக்க, திரு.ஜானகிராமனிடமிருந்து அழைப்பு வந்தது!
"வணக்கம் ஜானகி! ஓம் அகத்தீசாய நமக! என்ன விஷயம்?" என்றேன்.
"ஐயா! அகத்தியப்பெருமானின் வாக்கு உங்களுக்கென உள்ளது. உங்களிடம் கூறச்சொன்னார். அதான் கூப்பிட்டேன்" என்றார்.
நான் மௌனமாக சிரித்தபடி, "சரி சொல்லுங்கள்!" என்றேன்.
"உன் கர்ம விதிப்படி, இந்த ஆடி மாதத்தில் மிகப்பெரிய கண்டம் ஒன்று இருந்தது. அதன் படி பார்க்கையில் உனக்கு இடுப்பில் அடி பட்டு, கடைசி வரை படுக்கையில் இருக்க வேண்டும் என்பது விதி. அப்படி நடந்து, என் மைந்தனை படுக்க வைத்துவிட்டால், கடைசிவரை எம்மை திட்டி தீர்த்துவிடுவான். ஆகவே, பிரம்மனிடம் பல முறை இந்த விதியை மாற்றக் கோரியும், சண்டையிட்டும், "அவன் இடுப்புக்கு கீழே அடி வாங்கித்தான் ஆக வேண்டும், விதியை மாற்ற முடியாது" என்றுவிட்டார் பிரம்மன். ஆகவே, விதியை நடத்தி, அதே சமயத்தில் அதனால் மிகப்பெரிய பாதிப்பு வராமல், சிறிதளவு பாதிப்புடன், யாமே அந்த விபத்தை ஏற்படுத்தி, என் மைந்தனை காப்பாற்றினோம்" என்ற அகத்தியப்பெருமானின் அருள் வாக்கை தெரிவித்தார்.
இதை தெரிவித்தபின் தான், உண்மையிலேயே, அடியேனுக்கு என்ன நடந்தது என்பதை ஜானகிராமனிடம் விரிவாக தெரிவித்தேன். சற்று நேரம் பேசவே இல்லை. அமைதியாக இருந்தார்.
"அகத்தியப்பெருமானிடம், அடியேனின் நன்றியையும், நமஸ்காரத்தையும் தெரிவித்து விடுங்கள் என்று" முடித்துக் கொண்டேன். பின்னர், ஒரு வாரம் உடல் வேதனையை போராடி, யோகா மூச்சு பயிற்சியினால் சரி பண்ணி அனுபவித்து தீர்த்தேன்.
பெருமைக்காக இதை கூறவில்லை. ஆனால், உங்கள் அனைவருக்குள்ளும் அகத்தியப்பெருமானிடம், மிக மிக அன்பாக இருந்தால், உங்களிடமும் வந்திருந்து சிறப்பாக வழி நடத்துவார், உங்களாலும் அவரை கவர முடியும் என்று தெரிவிக்கவே, இந்த அனுபவத்தை இங்கு பகிர்ந்து கொண்டேன்.
அடுத்த அனுபவத்துடன் விரைவில் சந்திக்கிறேன்!
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
மெய் சிலிர்க்க வைக்கும் அனுபவம் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி 🙏🙏ஓம் ஸ்ரீ லோபாமுத்ரா சமேத அகஸ்தீசாய நமோ நம.
ReplyDeleteஅகத்தியர் பக்தர்களுக்கு எல்லோருக்கும் ஜீவா மூடி படிக்க ஐயா அருள்புரிய வேண்டும
ReplyDeleteகுரு நம்மை எப்பொழுதும் காப்பாற்றுவார்.
ReplyDeleteஎனவே நாம் குருவுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும்.
ஓம் அகத்தீசாய நமஹ.
அனைவரும் வாழ்க வளமுடன். நற்பவி நற்பவி நற்பவி ஓம்
அகத்தியர் அய்யன் என் குழப்பத்திற்கு பதில் குடுத்து ட்ரான்...
ReplyDeleteஓம் ஶ்ரீ லோபமுத்ரா தாயே அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏
ஓம் ஓதியப்பர் திருவடிகள் போற்றி
Om guru Agathirin Arule potri.
ReplyDeleteஅகத்திய பெருமானை தரிசித்து விட்டு கீழே விழுந்து இரத்தம் ஒழுக வீட்டிற்கு குருநாதர் தண்டித்து விட்டாரே என்ற மன வருத்தத்துடன் வந்தேன்.இப்போதுதான் புரிந்தது.
ReplyDeleteOm Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha
ReplyDelete