​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Tuesday, 24 May 2022

சித்தன் அருள் - 1141 - கருட பகவானுக்கு நாராயணர் உரைத்த உண்மைகள்!

ஷட்குண பரிபூரணனாகிய பகவான், கருடனை நோக்கிக் கூறலானார்:

"காசிபன் மகனே!  புத்திரன் முதலியோர், தன்  தாய் தந்தையர்களைக் குறித்து ஆண்டுதோறும் சிரார்த்தம் செய்ய வேண்டும்.   தந்தை தன் மகனுக்கும், தமையன் தன் தம்பிக்கும் சிரார்த்தம் செய்யும் படி நேரிட்டால், தன் தலைமுறையில் உள்ளவரைக் குறிக்காமல், இறந்தவனைக் குறித்து மட்டுமே செய்யவேண்டும்.  ஆசௌசம், விருத்தி முதலியவை நேரிட்டால், அவை: நீங்கிய தினத்தில் சிரார்த்தம் செய்ய வேண்டும். மரித்தவனுக்குக் கிருத்தியம் செய்யும் பொழுதே, சபிண்டீகரணம் செய்யாமல் மாசிகம் மட்டுமே செய்து வரும்போது, ஆசௌசம் நேர்ந்து மாசிகம் நிறுத்தப்படுமானால், அந்த மாசிகத்தை மறு மாசிகத்தோடு சேர்த்து செய்யல் வேண்டும்.  சபிண்டீகரணம் செய்து மாசிகம் செய்யப்பட்டு வந்தால், ஆசௌசத்தால் நின்ற மாசிகத்தை , அந்த ஆசௌசம் நீக்கிய தினத்தில் செய்யலாம். பூணுல் பூணாத புத்திரன் சிரார்த்தம் செய்யும் படி நேரிட்டால் சங்கற்ப விதானத்தோடு செய்ய வேண்டும். ஒரே காலத்தில் தேசாந்திரத்தில் பலர் இறந்தார்கள் என்று கேள்வி யுற நெற்றிட்டால், யாவன் இறந்தான் என்று முன்பு கேட்டானோ  அவனுக்கு முன்னதாகவும்  மற்றவருக்குப் பிறகும் கிரியைகளை செய்ய வேண்டும்.  தினம் தெரிந்து, மாதம் தெரியாவிட்டால், ஆடி, புரட்டாசி, மார்கழி, மாசி ஆகிய இந்த மாதங்களில் கிருஷ்ணபக்ஷத்தில் அஷ்டமியிலாவது, அமாவாசையிலாவது செய்யலாம். தேசாந்தரத்தில் ஒருவன் இறந்தால், அவன் இறந்த தினமாவது மாதமாவது தெரியாவிட்டால், அவன் தேச யாத்திரைக்குப் புறப்பட்ட திதியில் செய்ய வேண்டும்.  ஒரு குடும்பத்துக்குத் தலைவனாக இருந்தவன் அவனைச் சார்ந்த சிலரோடு தேசாந்திரம் சென்ற போது அவர்களில் ஒருவன் இறந்துவிட்டால், அந்தத் தலைவன், அங்கேயே ஆசௌசம் அனுஷ்டித்து பிறகு மனைக்கு வருவானால், அந்தக் காலத்தில் அவனது புத்திரன் வேறு ஒருவனுக்கு சிரார்த்தம் செய்து கொண்டிருந்தால், வந்த தலைவன், சிரார்த்தம் செய்து முடியும் வரையில் சற்று தூரத்தில் இருந்து, பிறகே வீட்டுக்கு வருதல் வேண்டும்.   சிரார்த்தத்துக்கு வரிக்கப்பட்ட பிராமணன் மேற்குறிய செய்தியை முன்னதாக உணர்ந்தும் அதைச் சிரார்த்தம் செய்யும் புத்திரனுக்குச்  சொல்லாமல், சிரார்த்தத்தில் சாப்பிட்டால் தோஷம் அந்தப் பிராமணனையே சாரும்.  தாய் தந்தையர்கள் இறந்த திதியை மறந்து விட்டால் அஷ்டமியிலாவது, ஏகாதேசியிலாவது, அமாவாசையிலாவது, நீத்தார் கடன்களை செய்தல் வேண்டும்.   அவற்றைச் செய்யாமல் விட்டு வீடாக்கூடாது.  சிரார்த்தம் செய்யாமல் விடுபவன் எவனோ, அவனே சண்டாளன். ஒருவன் மரிக்கும் காலம் வரையில் நாள்தோறும் நித்திய சிரார்த்தம் செய்வானாகில் அவனுக்கு மிகவும் நன்மையுண்டாகும்.  இறந்தவனைக் குறித்தல்லாமல் உயிரோடு இருப்பவன் தன் க்ஷேமார்த்தமாகச் செய்யத் தாக்கதாகிய இந்த நித்திய சிரார்த்தத்துக்கு விதியொன்றுமில்லை. ஆவாஹனமும் இல்லை. பிராமணார்த்தம் சாப்பிடுகிறவனுக்கு யாதொரு நிர்ப்பந்தமான விதி முறையெதுவுமில்லை. தினந்தோறும் ஒரு பிராமணனுக்குப் போஜனம் செய்வித்தல் மட்டுமே போதுமானது", என்று திருமால் கூறியருளிவிட்டுக் கருடனை நோக்கி, "கருடா! நீ என்னைக் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் உரிய பதில்களைச் சொல்லி விட்டேன். இனி, கேட்க வேண்டியது ஏதாயினும் கேட்பாயானால் அதற்கும் பதில் சொல்கிறேன்" என்றார்.

கருடன், ஸ்ரீ வாசுதேவனைத் தொழுது, " ஸ்வாமீ ! உலகத்தில் தோன்றும் ஜீவர்களில் ஒரு சில குறிப்பிட்ட ஜீவர்களை, இந்த ஜீவன் பூர்வ ஜன்மத்தில் இன்ன பாவத்தை செய்தவன், இந்த ஜீவன் இன்ன புண்ணியம் செய்தவன் என்பதைப் பகுத்தறியும் அறிவாற்றலால் அறியலாமோ?  பாபஞ் செய்தவரைத் தண்டிப்பவன் யமனைத் தவிர வேறு ஒருவரும் இல்லையா?  இந்த விஷயத்தைப் பற்றி அடியேனுக்கு விளக்கமாகச் சொல்ல வேண்டும்!" என்று வேண்டினான்.  

அதற்குப் பரந்தாமன், பக்தனாகிய கருடனை நோக்கிக் கூறலானார்:

"காசிப முனிவரின் மகனே! இந்த ஜீவன் இன்ன பாவத்தைச் செய்தவன் என்பதை நன்றாக அறிந்து கொள்ள முடியும். மாணவன் ஒருவன் தவறுதல் செய்து விட்டால், அவனை அவனது ஆசாரியன் சிக்ஷிக்கிறான். அவன் துஷ்டனாக இருந்து, ஆசாரியனது ஆணைக்கு அடங்காதவனாக இருந்தால் அவனை அரசன் தண்டிப்பான். சிஷ்டனாயினும் துஷ்டனாயினும் யாரும் அறியாதவாறு பாபஞ் செய்தால் அவனை யமன் நன்றாகத் தண்டிப்பான்.  பாபஞ்செய்தவன், அந்தப் பாப நிவர்த்தியின் பொருட்டு, பிராயச்சித்தம் எதுவும் செய்து கொள்ளாமல் மரித்து விட்டான் என்றால், அவன் யமலோகத்தில் நெடுங்காலம் நரகவாசஞ் செய்து, நாய் நரி முதலிய இழிவான பிறவிகளையடைந்து, பிறகு மீண்டும் மானிடப் பிறவியை அடைந்து, முன்பு மாண்ட ஜன்மத்தில் செய்த பாபத்தை, யாவரும் அறியத்தக்க அடையாளங்களுடன் விளங்குவான்.

"வார்த்தைகள் எதையும் சொல்ல முடியாதவாறு நெஞ்சடைப்பு உடையவனைக் கண்டால், அவன் பூர்வ ஜென்மத்தில் பொய் சொல்லியதால்   நரகவாசம்   செய்தவன்  என்று அறிந்து கொள்ளலாம்.  மூங்கையானை சுரபி விஷயத்தில் இழிவான செயலைச் செய்தவன் என்றும், பிறரது வீட்டுக்குத் தீயை வைத்தவன் என்றும், குஷ்டரோகியை பிரமஹத்தி செய்தவன் என்றும், புழுக்களுடைய பற்களுடையவனை மத்தியபானஞ் செய்தவன் என்றும்,  புழுநெளியும் நரகத்தில் தொழில் செய்பவனை சுவர்ணம் திருடியவன் என்றும், விகாரமான மேனியையுடையவனைக் குரு பத்தினியைச் சம்போகம் செய்தவன் என்றும், சண்டாள ஜன்மத்தை அடைந்திருப்பவனை அவன் தன் ஜாதியை விட்டு, பரஸ்திரீயை சேர்ந்தவன் என்றும், வறிஞனைக் கண்டால் அவன் முன் ஜன்மத்தில் ஒருவனுக்கு ஒன்றையும் கொடுக்காத லோபி என்றும் அறியலாம்.

"கருடா! பதி தனக்கும் அசத்தான சூத்திரனுக்கும் புரோகிதனாக இருந்தவன் பன்றியின் பிறவியை அடைவான். ஒரு கிராமத்துக்குப் புரோகிதர்கள் பலரும் இருந்து, ஒருவன் பாபஞ் செய்வானென்றால் அந்தப் பாபம் அந்த ஒருவனையே சாராமல், அந்தக் கிராமத்திலுள்ள புரோகிதர்கள் அனைவரையுமே  சாரும்.  அவ்விதமில்லாமல், ஒரு கிராமத்துக்குப் புரோகிதன் ஒருவனே இருப்பனாகில், அந்தப் பாபம்யாவும் அவனையே சாரும்.  அவன் கழுதையின் பிறவியை அடைவான். ஸ்நானமும், சந்தியாவந்தனமும் தேவதா ஆராதனையும் செய்யாமல் புசித்தவன் காக்கையின் பிறவியை அடைவான். வீடு அல்லது பந்தல் முதலிய இடங்களில் உணவை அருந்தாமல் வெட்ட வெளியில் உணவை அருந்தியவன் மனித சஞ்சாரமேயில்லாத காட்டில் ஒரு குரங்காக ஜன்மம் எடுப்பான். எல்லோரையும் அஞ்சத்தக்க விதத்தில் அதட்டிப் பேசியவன்  பூனை ஜன்மத்தை அடைவான். செடிகளைக் கொளுத்தியவன் மின்மினிப் பூச்சியின் ஜன்மத்தையடைவான். பிராமணருக்கு, அவர்கள் அறியாதவாறு தீய பதார்த்தத்தைக் கொடுத்தவனும், கூடக்  கூடாத சூத்திரப் பெண்ணைக் கூடி மகிழ்ந்த பிராமணனும், வண்டி இழுக்கும், எருதின் ஜன்மத்தை அடைவார்கள்.  விபிரனுக்குப்  பழைய சோற்றைக் கொடுத்தவன் கருங்குரங்கு ஜன்மத்தை அடைவான்.  காரணமில்லாமல் யாரையும் விரோதித்தவன் குருடனாகவே பிறக்கிறான். புஸ்தகங்களைத் திருடியவன் உலகில் பிறந்த சிறிது காலத்திற்கெல்லாம் குருடனாகி விடுவான்.  பிராமணக் குடும்பத்தை நசிக்கச் செய்தவன், தான் பெறுகின்ற பிள்ளைகளையெல்லாம் இழப்பான். பசியோடு, சோறு கேட்டவனுக்கு அன்னங் கொடாதவன் மக்களைப் பெறாத மஹாபாபியாவான். ஆடைகளைத் திருடியவன் உடும்பு ஜன்மத்தை அடைவான். பிறரை இறக்கச் செய்ய விஷம் கொடுத்தவன், சர்ப்பமாகப் பிறப்பான். சந்நியாச ஆசிரமம் பெற்றவனுடைய மனைவியைக் கூடிக்  குலாவியவன் பைசாசப் பிறவியை அடைவான்.  மற்ற அந்நிய ஸ்தீரிகளைக் கூடியவன் சிறு வயதில் இறப்பான்.  குருவின் மனைவியை அணைய வேண்டும் என்று இச்சித்தவன், ஓணானின் ஜன்மத்தை அடைவான்.  குளம் வெட்டிக் கிணறு எடுத்து, பிறகு அவற்றைத் தூர்த்தவன் மீன் ஜன்மத்தை அடைவான். நீதிக்கு விரோதம் செய்தவன், கோட்டான் பிறவியை அடைவான். ஏகோதிஷ்டம் சாப்பிட்டவன் நாயின் ஜன்மத்தை அடைவான். தத்தாபகாரம் செய்தவன் நரிப் பிறவியை அடைவான். இராஜஸ்திரியைக் கூடியனுபவித்தவன் இழிந்த பிறவியை  அடைவான். வேதியருக்குத் தோஷம் கற்பித்தவன் ஆமையின் ஜன்மத்தை அடைவான்.  மூன்று ஆண்டுகள் வரையில் தக்ஷணை பெற்று ஆராதனை செய்தவனும் வேதம் ஓதுவித்தவனும் சண்டாள ஜன்மத்தை அடைவார்கள். கனி காய்களுடன், பூவும் பிஞ்சுமாய் இருக்கும் மரங்களை வெட்டியவன், ஒரு தகுதியும் இல்லாதவனாகிறான். வாசனைப் பொருள்களைத் திருடியவன் துர்நாற்றமுடையவனாய்ப் பிறப்பான். பிறருடைய பொருள்களில் எதையேனும் கவர்ந்தவன், புழு, கிருமி முதலிய இழிந்த பிறவியை அடைவான்.

யமபுரியிக்குச் செல்லும் வழியில், சீழாலும்  இரத்தத்தாலும் பலவகை விசித்திர மிருகங்களாலும் முதலைகளாலும் கிரீடங்களாலும் நிறைந்த வைதரணீ என்று ஒரு நதியுள்ளது என்று முன்பே சொல்லியிருக்கிறேனல்லவா?  அந்த நதியில் உருக்கிய நெய் போல ஊன் நீர் பெருகிக் கொண்டிருக்கும். மஹா பாபங்களைச் செய்தவர்களுக்கெல்லாம் அந்தத் துர்நாற்ற நதியே ஸ்நானத்திற்குரியதாக இருக்கும்.  

எவற்றாலும் எனக்கு இணையான ஒருவன் இருக்கிறானோ என்று செருக்குற்றவனும் தாய் தந்தையரையும் குருவையும் புரோகிதனையும் அவமதித்தவனும் தன்னை நேசித்தவனுக்கும் தனக்குப் பிழைப்பதற்குரிய ஜீவன் உபாயத் தொழிலைத் தந்தவனுக்கும், அந்தத் தொழிலைத் தேடிக் கொடுத்தவனுக்கும் ஸ்திரீகளுக்கும் குழந்தைகளுக்கும் கண், செவி, முதலிய உறுப்புக் குறையுள்ள அங்கஹீனர்களுக்கும் தீங்கு செய்தவனும், விவாக விஷயத்திலும் பிராமண விஷயத்திலும் தான விஷயத்திலும் விரோதம் புரிந்தவனும், பிராமணருக்கு ஏதேனும் ஒன்றைத் தருகிறேன் என்று வாக்களித்து விட்டு இன்று நாளை என்று சொல்லி அலைய வைத்தவனும், புரோகிதனின் மனைவியைக் கூடி அனுபவித்தவனும், ஸ்ரீமந் நாராயண  பாரத பாகவத புராணங்களைப் படிக்கும் இடத்திலும் சொற்பொழிவாற்றும் இடத்திலும், வீண் வார்த்தைகளைப்  பேசியவனும் திருமணஞ் செய்யும் சமயத்தில் கன்னியருக்கு குறை சொன்னவனும்,  தோஷம் கற்பித்தவனும், பசு முதலிய மிருகங்களுக்குச் சமமாகத் தண்ணீர் வார்க்காமல்  தனக்குரியவைகளுக்கு மிகுதியாயும், பிறனுக்குரியவற்றுக்குக் குறைவாகவும் கொடுத்தவனும், ஒரு பொருளை ஒருவனுக்கு கொடுத்துவிட்டு, பிறகு அதை அவனுக்குக் கொடுத்து விட்டோமே என்று துக்கிப்பவனும், பிராமணர்களுக்குரிய தர்மானுஷ்டானங்களை விட்டு, புலால் உணவை உண்ட பிராமணர்களும், பகவான் இல்லை என்று வீண் வாதம் செய்தவனும், எப்போதும் பிறரைக் கோபித்தவனும் பிறன் பழி கூறியவனும் அந்த வைதரணி நதியிலேயே மூழ்கி, மிருகங்களாலும், முதலைகளாலும், கிடங்களாலும் மிகவும் துன்பம் அடைவார்கள்.

"வைனதேயா!  தீவினை செய்யாமல் நல்வினை செய்த ஜீவன், இறுதியை அடைந்த பிறகு, சுவர்க்க வாசம் செய்து, நல்ல க்ஷேத்திரத்தில் உத்தம குலத்தில் சர்வசாஸ்திர சம்பன்னனாய் தர்ம சிந்தையுடையவனாய்ப்  பிறந்து நல்வாழ்வு வாழ்வான்.   தந்தை மரித்தபொழுது, ஆசௌசம் நீங்குவதற்குள்ளாக புத்திரனானவன், இந்தப் புராணத்தைக் கேட்பான் என்றால் அத்தந்தை நிரதிசய இன்ப வீடாகிய நமது நல்லுலகை அடைவான். தாய் மரித்தபோது இந்தப் புராணத்தைக் கேட்டால் அந்தத் தாய் புருஷ ஜன்மத்தை அடைந்து சுவர்க்கத்தை அடைவாள்.  பிதுரர்களும் நற்கதியை அடைவார்கள். சங்கராத்தியிலும் விஷுவென்னும் புண்ணிய தினத்திலும் கிரகண புண்ணிய காலத்திலும், சிரார்த்த தினத்திலும் இந்தப் புராணத்தைப் படிப்பவர்களும் கேட்பவர்களும் படிக்கச் செய்வோரும் தம் வாழ்வின் இறுதியில் நல்லுலகை அடைவார்கள்.   கோடி கன்னிகாதானம் செய்வதாலும், நூறு முறைகள் சோடச மஹாதானம் செய்வதாலும் கயாசிரார்த்தம் செய்வதாலும் வருகின்ற புண்ணியங்கள் அனைத்தும் இந்தப் புராணத்தைப் படிக்க வைத்து கேட்டாலும் படித்தாலும் உண்டாகும். ஜீவனுக்கு யமலோக பயத்தைப் போக்குவதும் மோட்ச மார்க்கத்தை தெரிவிப்பதுவும் ஆகிய இந்தப் புராணத்தை உலக நன்மையின் பொருட்டு உனக்கு நான் சொன்னேன்" என்று திருமால் திருவாய் மலர்ந்தருளினார்.

பிறகு பரமகாருண்ய, பரமகிருபா நிதியாகிய பகவானைக் கருடன் வலம்  வந்து, அவரது திருவடிகளைத் தொழுது வணங்கி, "வேதாவுக்கு வேதம் ஓதியருளிய திருநாவால், சர்வேசனாகிய தேவரீர் புராணஞ் சொல்லியருளப் பெற்றேனே! அடியேன் செய்த பாக்கியமே, பாக்கியம், இதைக் கேட்க நான் என்ன தவஞ் செய்தேனோ? என்று மகிழ்ந்தான்.

இவ்வாறு சூத புராணிகர், நைமிசாரணீய முனிவர்களுக்குச் சொல்லி விட்டு அவர்களை நோக்கி, " முனிவர்களே! புராணதச்  சிரவணம் செய்ய வேண்டும் என்று விரும்பிய உங்களுக்கு இந்தப் புராணத்தை நீங்கள் விரும்பியவாறே சொன்னேன்!"  என்று கூறிவிட்டு, ஹரி நாமங்களை, நாமணக்க வாய் மணக்க போற்றியிசைத்துக் கொண்டிருந்தார்.

அப்போது, இந்தப் புராணத்தைக் கேட்டு மகிழ்ந்த நைமிசாரணீய முனிவர்கள், ஆனந்தத்தில் மூழ்கி, மகிழ்ந்து, சூத புராணிகரை நோக்கி, "மாமுனிவரே! அடியோர்களிடத்தில்  கருணை கொண்டு, இந்தப் புராணத்தைச் சொன்னீர்கள். நாங்கள், தங்கள் வாயிலாக அநேகம் புராணங்களைக் கேட்டிருக்கிறோம்.  ஜீவனுக்கு உறுதி கற்பிக்கும் இந்த புராணம் மிகச் சிறந்தது. தங்களுக்கு எங்களால் இயன்ற கைம்மாறைப் பெரிதாகச் செய்யவேண்டும் என்ற எண்ணம் எங்களுக்குத் திண்ணமாக இருக்கிறது.  ஆனாலும் எங்கள் நிலைமை தங்களுக்குத் தெரியாததன்று என்று கூறி, கைநீர்,  அடிநீர், உண்ணீர் கொடுத்துப் போற்றினார்கள்.

அவர்களுள் ஒருவர், இத்தகைய புராணத்தை வெறுமனே கேட்டதாக இருக்கக் கூடாது என்று எண்ணியவராய், புராணிகருக்கு ஒரு கடத்தைக் கொடுத்தார்.  ஒருவர் மரவுரியைக் கொடுத்தார்.  ஒருவர் புலித்தோல் கொடுத்தார். ஒருவர் பூணூலைக் கொடுத்தார்.  ஒருவர் எதைக் கொடுப்பது என்று சிறிது ஆலோசித்து விட்டுக் கடைசியில் சூசைப்புல்லைக்  கொடுத்தார்.  ஒருவர், "சூதரைப் போலப் புராணஞ் சொல்பவர், மூவுலகிலும் இருக்கிறார்களோ" என்று வாயாரப் புகழ்ந்தார்.  ஒருவர், சூத புராணிகரைப் பலமுறை பணிந்து வணங்கினார்.  யாவரும் புராணிகரை வலம் வந்து, வணங்கித் தத்தமது ஆசிரமத்தையடைந்தார்கள்.

இத்துடன், இந்த தொடர் நிறைவு பெற்றது.

இது அகத்தியப்பெருமானின் உத்தரவால், அனைவரும் தெரிந்து கொள்வதற்காக இங்கு தொகுக்கப்பட்டது. அப்படியாயின், அகத்தியப்பெருமான் நம்மிடம் என்ன எதிர் பார்க்கிறார் என ஓரளவுக்கு அனைவராலும் புரிந்து கொள்ள முடியும். அவர் சேயாய் இருந்து, அருள் பெற்று ஆனந்தமாய் வாழ அனைவரையும் வேண்டிக் கொள்கிறேன்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் அனைத்தும் சமர்ப்பணம்!

சித்தன் அருள்............தொடரும்!

3 comments:

  1. ஓம் அம் அகத்தீசாய நமக

    ReplyDelete
  2. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏

    ReplyDelete
  3. அகஸ்தியர் திருவடிகள் போற்றி. அய்யா இதில் கூறி இருக்கும்படி செய்ய வேண்டும் என்று ஆசைதான் ஆனால் செய்ய இயலாத நிலையில் தகப்பனார் ஆத்மா சாந்தியடைய என்ன செய்ய வேண்டும் அகத்தியரே

    ReplyDelete