​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Saturday 7 May 2022

சித்தன் அருள் - 1130 - கருட பகவானுக்கு நாராயணர் உரைத்த உண்மைகள்!


அகார வாச்சியரான திருமால் வேதவுருவினனான கருடனை நோக்கி, "கருடா! நான் உனக்குச் சில தர்மங்களை சொல்லுகிறேன், கேள்!"

"கருடா! கிருதயுகத்தில் மகாதவம் செய்வது மானிடர்க்கு  உத்தமமானது:  திரேதாயுகத்தில் தியானஞ் செய்வது உத்தமமாக இருந்தது.   துவாபரயுகத்தில் யாகங்கள் செய்வது உத்தமமாக இருந்தது.  கலியுகத்தில் தானங்கள் செய்வதே உத்தமமாகும்.  இல்லறத்தில் இருப்பவனுக்கு, எந்த யுகமானாலும் யாகாதி கர்மங்கள் செய்வதும் கோயில், குளம், சத்திரம், தோட்டம் முதலியவற்றை உண்டாக்கிக் தர்மஞ் செய்வதும் அதிதியாராதனம் செய்வதும் உத்தமமான செயல்களாகும். இல்லறத்தில் இருப்பவன், தன் தாயாதிகளில் யாரேனும் இறந்துவிட்டால், அவரைக் குறித்து தர்ப்பணம் செய்வது அவசியம்.  இறந்தவன், அந்தப் புனலைப் பெற்று மகிழ்வான்.  இறந்த தினத்தின் மூன்றாம் நாளில் மூன்று சிறு கற்களைக் கயிற்றில் கட்டி இரவு நேரத்தில் எறியவேண்டும்.  சஞ்சயனம் செய்த பிறகு தாயத்தார் அனைவரும் இறந்தவனுக்குத் தர்ப்பணம் செய்ய வேண்டும். முதல் மூன்று வர்ணத்தாராகிய பிரம, க்ஷத்திரிய, வைசியருக்குச் சூத்திரன் தர்ப்பணம் செய்யலாம்.  பிரம, க்ஷத்திரியருக்கு வைசியன் தர்ப்பணம் செய்யலாம். க்ஷத்திரியன் பிராமணனுக்குத் தர்ப்பணம் செய்யலாம்.  பிராமணன் தன் மரபினருக்கல்லாமல்  மற்ற குலத்தாருக்கு ஒன்றுமே செய்யலாகாது. சூத்திரனுடைய சவத்தோடு பிராமணன் சுடுகாட்டுக்குச் சென்றால், அந்தப் பிராமணனுக்கு மூன்று நாட்கள் ஆசௌசம் உண்டு. மூன்று நாட்கள் கழித்து, அந்தப் பிராமணன் காவிரி போன்ற புனித நதியில் குளித்துத் தூய்மையாக வேண்டும்.  மாய்ந்தவனுக்குக் கர்மம் செய்பவன் யாராயினும் அவன் பஞ்சணையில் படுத்துறங்கக் கூடாது.  இறந்தவனுடைய நல்ல குணங்களையே எடுத்துச் சொல்ல வேண்டும்.  எமனைக்  குறித்து ஸ்தோத்திரம் செய்ய வேண்டும்.  இறந்தவனுக்கு, அவனைக் குறித்துப் போடப்படும் பிண்டகளாலேயே சரீரம் உண்டாகிறது. எனவே, பத்து நாட் கிரியைகளையும் தவறாமல் முறைப்படிச் செய்வது அவசியம்.  பத்துநாள் கருமங்களைச் செய்யாவிட்டால், மாய்ந்தவன் சரீரம் பெற முடியாமல் வருந்துவான்.  தனுர்வேதமுணர்ந்த வில்லாளன் ஒருவன், குறி வைத்து அம்பை எய்தால், அந்த அம்பானது குறி தவறாமல் குறித்த இடத்தில் தைப்பது போல, கலைகள் உணர்ந்த சற்புத்திரன் மரித்த தன் தாய் தந்தையர்க்குரிய கர்மங்களைச் செய்தால், அக்கர்ம பயன்கள் அவர்களைத் தவறாமல் சென்றடையும்.  மரித்த ஜீவன், மூன்றாவது நாள் நீரிலும், மூன்று நாட்கள் அக்கினியிலும், மூன்று நாட்கள் ஆகாயத்திலும், ஒரு நாள் தனது வீட்டிலும் ஆவியுருவில் வாசிப்பான். முதல் நாளிலும், மூன்றாவது நாளிலும், ஐந்தாவது நாளிலும், ஏழாவது நாளிலும், ஒன்பதாவது நாளிலும், பதினொன்றாம் நாளிலும்  நவசிரார்த்தம் செய்ய வேண்டும்.  முதல் நாளன்று, எந்த இடத்தில் தர்ப்பணம் முதலியவை செய்யப்பட்டனவோ, அதே இடத்தில் மற்ற பத்து நாள் கிரியைகளையும் பத்து நாட்களிலும் செய்ய வேண்டும். பிரம. க்ஷத்திரிய, வைசிய, சூத்திரர்களில் எந்தக் குலத்தவருக்கு எத்தனை நாட்கள் ஆசௌசம் விதிக்கப்பட்டிருக்கிறதோ, அத்தனை நாட்களும் பிண்டத் தர்ப்பணம் செய்தல் வேண்டும். அது அவசியமாகும்.  எந்த திதியில் ஒரு ஜீவன் மரிக்கிறானோ, அந்த திதியில் மாசிகம் செய்தலும் அவசியம்.  பதினொன்றாம் நாள் பலகாரத்தோடு சோறு சமைத்து நாற்சந்தியில் கொட்டி ஸ்நானம்செய்ய வேண்டும்.  ஒருவன் அதிக வருத்தப்பட்டு இறந்து விட்டான் என்றால், அவனை குறித்து ஏகோதிஷ்ட சிரார்த்தம் சிறப்பாக செய்யப்படுமானால், அவன் வருத்தம் நீங்கி இன்பமடைவான். அந்த ஏகோதிஷ்ட சிரார்த்தத்தை க்ஷத்திரியன் பன்னிரண்டாவது நாளிலும் வைசியன் பதினைந்தாவது நாளிலும் செய்ய வேண்டும்.  தாய் தந்தை மரித்தாலும் மகவு பிறந்தாலும் சூத்திரக் குலத்தாருக்கு ஒரு மாதம் வரையில் ஆசௌசம் உண்டு.  அரை மாதம் உண்டு என்று சொல்வாரும் உண்டு. சூத்திரன் பதினைந்து நாட்களுக்குப் பிறகு, ஏகோதிஷ்ட சிரார்த்தம் செய்ய வேண்டும்.  ஒருவன் இறந்தால் பத்து நாட்கள் தீட்டுடைய அவனுடைய தாயாதிக்காரன் கருமம் முடிந்த பிறகு மூன்று மாதங்களுக்குள்ளாக இறந்த செய்தியை எப்போது கேட்பினும் அத்தாயத்தானுக்கு மூன்று தினம் தீட்டு உண்டு.  மூன்று மாதத்திற்குப் பிறகு ஆறு மாதங்களுக்குள்ளாக கேட்டாலும் ஒரு வருஷத்திற்குள் கேட்டால் ஒரு தினம் மட்டுமே தீட்டு உண்டு.  ஒரு வருஷம் முடிந்த பிறகு கேட்டால் கேட்டவுடனேயே ஸ்நானம் மட்டும் செய்தல் போதும்.  இந்த விதி எல்லா வருணத்தாருக்கும் பொதுவாகும்.  

"வைனதேயா!  முன்பே சய்யாதானம்    செய்ய வேண்டும் என்று சொல்லியிருக்கிறேன். எந்தப் புருஷனும் அன்ன  தானத்தைத் தன் கையாலேயே செய்ய வேண்டும்.  நல்ல மரத்தில் கட்டில் செய்து சொர்ணத்தாலும், வெள்ளியாலும் பூண்கள் போட்டு, முத்து மாலைகளாலும் மலர் மாலைகளாலும் அந்தக் கட்டிலை அலங்கரித்து பாயில் விரித்துத் தீபம், சந்தனம் , புஷ்பம், தாம்பூலம் இவற்றுடன் நறுமணமுடைய மற்ற யாவும் நீருடன் செம்பூத்தாலியும் அலங்காரத்திற்கும் லீலார்த்தமாகவும் ஸ்திரீ புருஷர்களுக்கு வேண்டியவைகளை அந்தக் கட்டிலில் வைத்து, நவக்கிரகங்களைப் பூஜித்து, சிவன் முதலிய தேவர்களும், பார்வதி முதலிய தேவமங்கையரும், லட்சுமிநாராயணரும் இந்தச் சய்யாதானத்தால் திருப்தியடைய வேண்டும் என்று சொல்லி, யோக்கியனாகவும் குடும்பஸ்தனாகவும் உள்ள உபாத்தியாயனுக்குத் தானஞ்செய்து அவனை வலம் வந்து சேவிக்க வேண்டும்" என்றருளினார்.

கருடன், முராரியை நோக்கி, "சர்வேசா! தாயைப் பெற்றவளும் அவளைப் பெற்றவளும், அவனைப் பெற்றவளும், தந்தையைப் பெற்றவனும் அவனைப் பெற்றவனும், அவனைப் பெற்றவனும் உயிரோடு இருக்கும் போது, தாயாவது தந்தையாவது இறந்துவிட்டால் அவர்களுக்குப் புத்திரன் எவ்வாறு பிண்டஞ் சேர்க்கவேண்டும்?  இந்த விஷயத்தை அடியேனுக்குக் கூறவேண்டும்" என்று வேண்டினான்.  அதற்குப் பகவான் கூறலானார்.

"வைனதேயா! தாயின் தலைமுறையிலும் தந்தையின் தலைமுறையிலும் உயிருடன் இருப்பவர்களுக்கு மேலே மூன்று தலைமுறைப் பிதுர்க்களின் பிண்டத்தோடு இறந்தவனின் பிண்டத்தையும் சேர்க்க வேண்டும்.  பிண்டம் உண்ணும் பிதுரர் மூவர்.  தியாசகர் மூவர். லேபகர் மூன்று பேர்.  பிண்டம் போடும் பந்தியில் வருவோன் ஒருவன். இவ்வாறு தந்தையின் மரபிற்குப் பத்துப் பேர்களும் உள்ளார்கள்.  ஒருவன் மரித்துப் பிதுரர்களோடு சேர்ந்ததும், நான்காம் பாட்டன் முதல் தியாசகன் ஆகிறான்.  மூன்றாம் தியாசகன் முதல் லேபகன் ஆகிறான்.மூன்றாம் லேபகன் பந்தியில் வருவோனாகிறான்.  பந்தியில் வருவோன் வராமல் ஒழிகிறான்.  புத்திரன் சிரார்த்தம் செய்தால் மாண்டு போன தந்தை மகிழ்ந்து, அந்தப் புத்திரனுக்கு ஒரு புத்திரனைத் தருகிறான்.  சிரார்த்தம் செய்வதில் பிதுரர்களுக்குத் திருப்தியுண்டாதலன்றிச் செய்பவனுக்கு மிக்க பயன் உண்டு.  அவிட்டம் முதல் ரேவதி நட்சத்திரம் வரையிலுள்ள ஐந்து நாட்கள் சிறப்பானவையல்ல. அந்த ஐந்து நட்சத்திரங்களில் மரிப்பவனுக்கு உடனடியாகச் சமஸ்காரங்களைச் செய்யலாகாது. அந்நக்ஷத்திரங்கள்  கழிந்த பிறகே சமஸ்காரங்களைச் செய்ய வேண்டும்.  உயிர் நீங்கிய பிறகு தேகத்தை வைத்திருக்க சிறிதும் அமையாது.  ஆகையால் உடனே சமஸ்காரம் செய்யவேண்டும் தனிஷ்டா பஞ்சாங்கத்தில் இறந்த தோஷ நிவர்த்தியின் பொருட்டுச் சாஸ்திரத்தில் கூறியுள்ளபடி சில கர்மங்களை அதிகமாகச் செய்தல் வேண்டும்.  மேலே சொன்ன ஐந்து நட்சத்திரங்களிலும் இறந்தவர்கள் நற்கதியை அடைவார்கள்.  ஆகையால் எள்ளும், கோவும் ஹிரண்யமும் நெய்யும் தானம் கொடுக்க வேண்டும்.  கனிஷ்டா பஞ்சாங்கத்தில் மாய்ந்தவர்க்கு சாஸ்திரத்தில் சொல்லியபடிச் செய்யாவிட்டால் கருமஞ் செய்யுங்  கர்த்தா துன்பம் அடைவான். பிரேதத்தை உத்தேசித்து செய்யப்படும் சிரார்த்தத்தில் பிராமணர் ஆசிர்வதித்தலும் அன்னவர் க்ஷேமங் கோருதலும், இரட்டை குசையையும் பணவமும், ஓமமும் எச்சிலையும் நாய் நுகரலாகாது என்ற விதியும் சேஷத்தை உண்ணலும் விகிரமும் ஸ்வதா என்ற சப்தமும் பிதுர்சப்தமும், உடன் சொல்லுதலும் ஆவாகனமும், நமஸ்காரமும் எல்லை வரையில் பின் செல்லுவதும் வலம் வருவதும், சம்பிரதாயப்படி புண்டரம் தரித்தலும், அக்கினியில் பூர்ணாகுதி செய்தலும், ஏகோத்திஷ்டமும் ஆகிய இந்தப் பதினெட்டும் வேண்டுவதில்லை.  இதை அறியாமல் இவற்றைச் செய்தவன் நரகம் அடைவான்.

"கருடா! ஒருவன் மரித்தவுடன் அவனது கால்களையும் கைகளையும் கட்ட வேண்டும்.  உறவினரெல்லாம் சவத்தின் அருகிலேயே இருக்க வேண்டும்.  ஒரு கிராமத்தில் ஒரு சவம் கிடந்தால்,  அந்தக் கிராமத்தில் உள்ளவர்கள் அனைவரும் சோறும் நீரும் உண்ணலாகாது.  அவர்கள் சோறும் நீரும் உண்டால் மாமிசம் உண்ட தோஷமும் இரத்தம் பருகிய தோஷமும் அடைவார்கள்.  தாம்பூல தாரணமும் செய்யக் கூடாது. தந்த சுத்தியும் செய்யலாகாது.  இரவில் பிணங் கிடக்கும்போது ஆண் பெண் கூடியின்புறுதல் கூடாது"  என்றார் திருமால்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்............ தொடரும்!

No comments:

Post a Comment