​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Monday, 25 April 2022

சித்தன் அருள் - 1122 - குருநாதருடன்..... ஒரு அனுபவம்!


​வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

சமீபகாலமாக, பலமுறை குருநாதரை, பாலராமபுரம் கோவிலில் சென்று தரிசிக்கிற பாக்கியம் கிடைத்தது. ஒவ்வொரு முறையும், வித்யாசமான சில நிகழ்ச்சிகளை நடத்தி, தன் எண்ணங்களை வெளிப்படுத்துவார். அம்மாவிடம் கொழுந்து வாங்கி கொடுக்கச் சொன்னதை நீங்கள் எல்லோரும் அறிவீர்கள். அது போல்......

பாலராமபுரத்தில் வசிக்கும் நண்பர்களுடன் ஒரு முறை கலந்துரையாடல், கோவிலில் வைத்து நடந்தது. அனைத்து சன்னதிகளிலும், வெளியே நின்று தரிசிக்கும் பொழுது மிகுந்த வெப்பம் சுழல்வதை உணர்ந்து, குருநாதருக்கான அபிஷேக தீர்த்தத்தில், முதல் நாளே "வெட்டிவேர்" போட்டு வைத்து அந்த நீரை அவருக்கு அபிஷேகம் செய்தால் நல்லது என்று விவாதிக்கப்பட்டது. கூடவே, செக்கில் தயாரித்த சுத்தமான நல்லெண்ணை கிடைத்தால் நல்லது. அது வெகு எளிதில் உஷ்ணத்தை குறைக்கும் என்றேன். பூஜாரியும், பிற நண்பர்களும் ஏற்றுக்கொண்டனர். உடனேயே, ஒரு நண்பரிடம், இங்கு எங்கே எண்ணெய் தயாரிக்கும் செக்கு உள்ளது என கண்டுபிடி. குருநாதருக்கு நல்லெண்ணெய் வாங்கி கொடுத்து விடுவோம் என்றேன்.

பத்துநாள் திருவிழாவிற்கு, எரித்தாவூர் முருகர் அகத்தியரை பார்க்க வருகிற வழியில், ஒரு மாரியம்மன் கோவிலில் வந்தமர்ந்து இருப்பார். அவரை அங்கு சென்று பார்க்கலாம் என்று போகும் வழியில், எதேச்சையாக எண்ணெய் விளம்பரம் கண்ணில் பட்டது. அங்கு ஒரு வயதான அம்மா செக்கில் தயாரித்த எண்ணையை வாங்கி விற்பதை அறிந்து, விவரங்கள் விசாரித்து வைத்துக் கொண்டேன். பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்து, மறந்தும் போனேன்.

பொதுவாக வண்டியில் எங்கு சென்றாலும், மனதுள் குருநாதர் திருப்பாதத்தை தியானித்து "ஓம் அம் அகத்தீசாய நமஹ!" என தொடர்ந்து ஜெபிப்பது பழக்கம். அன்று பலராமபுரம் சென்று குருநாதரை பார்த்து ஆசிர்வாதம் பெற்று வரலாம் என்று கிளம்பினேன். மிகுந்த வெப்பத்தால், வியர்வை ஊற்றியது. அனைத்தையும் பொறுத்துக் கொண்டு ஊர் எல்லையை தாண்டும் போது,

"நல்லெண்ணெய் எங்கே?" என்று கேட்பது எதிரொலித்தது. மறந்து போன விஷயம் உடனேயே ஞாபகத்துக்கு வர, மனதுள் "குருநாத மன்னிக்கவும்! அடியேன் சற்று மறந்துவிட்டேன் என்பது உண்மை. சுத்தமான எண்ணெய் கிடைக்கும் இடம் தேடி கண்டுள்ளேன். விசாரித்துள்ளேன். பின்னர் அங்கு சென்று பார்க்கிற வாய்ப்பு வரவில்லை. கூடிய விரைவில் கொண்டு வந்து உங்கள் சன்னதியில் சேர்த்து விடுகிறேன்!" என்றேன். இது அடியேனுக்கும் குருநாதருக்கும் இடையில் மானசீகமாக நடந்த உரையாடல். யாருக்கும் தெரிய வர வாய்ப்பில்லை.

மிகுந்த வெப்பத்தால், வியர்த்து, களைத்து, பாலராமபுரம் கோவிலை அடைந்தவுடன்,

"வாங்க, ஏன் தாமதமாகிவிட்டது? இனிமேல்தான் தீபாராதனை!" என்று கூறியபடி பூசாரி வரவேற்றார்.

"காத்திருக்கிறேன்!" என்ற ஒரு வார்த்தையுடன், லோபாமுத்திரா தாய்க்கும், அகத்தியப்பெருமானுக்கும் சேர்த்து குருவந்தனம் முத்திரையை சமர்ப்பித்து, மண்டபத்துக்கு முன் போய் நின்றேன். ஒரு நிமிடத்தில் பூசாரி, தீபாராதனைக்காக சன்னதியின் கதவை சார்த்திக்கொண்டு உள்ளே சென்றார்.

காத்திருந்தேன்...........

சற்று நேரத்தில், சன்னதி கதவு திறக்கப்பட்டு, தீபாராதனை நடந்தது. எப்போதும்போல், மந்திரங்களை ஜெபித்து, தீபாராதனையை கண்டு, தீர்த்தம் தெளிக்கப்பட காத்திருந்தேன்.

வெளியே வந்த பூஜாரி, சங்கில் தீர்த்தம் கொண்டு வந்து எல்லோருக்கும் தெளித்தார். சிறிது தீர்த்தம் அடியேனுக்கு தந்த பின்,

"ஒரு உத்தரவு இருக்கு" என்றார்.

"என்ன? என்றேன்.

"அவனிடம் கேளு. எண்ணெய் எங்கே என்று? இன்று வாங்கித்தரச் சொல்" என்கிறார்.

சற்றே ஆச்சரியத்துடன், "இன்று! இப்போதா! அது எப்படி? சரி முயற்சி செய்கிறேன்! 5 நிமிடத்தில் வருகிறேன். கோவில் சன்னதியை சார்த்திவிடாதீர்கள்" என்று வெளியே வரவும், ஒரு நண்பர் வந்தார்.

விஷயத்தை கேள்விப்பட்டதும் "நாளைக்கு வாங்கி கொடுக்கலாம் அய்யா. நான் ஒரு எண்ணெய் செக்கு பார்த்து வைத்திருக்கிறேன்" என்றார்.

"நாளை என்ற பேச்சுக்கே இடம் இல்லை. இப்பொழுதே. வண்டிய எடுங்க போகலாம். நான் ஒரு கடை பார்த்து வைத்திருக்கிறேன். அங்கு கிடைக்கும்" என்றேன்.

மின்னல் வேகத்தில் இருவரும் அந்த கடையை அடைந்ததும், கடை பூட்டியிருந்தது. காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரைதான் திறந்திருப்பார்கள் என்று அறிந்து, "சரி! கோவிலுக்கு போகலாம், வாங்க" என்றேன்.

குருநாதர் முன் நின்று, "அய்யா! சென்றிருந்தேன். கடை மூடிவிட்டார்கள். நாளை உங்களுக்கு கிடைக்குமாறு ஏற்பாடு செய்கிறேன்! மன்னித்துக்கொள்ளுங்கள்" என்று கூறியபடி, நண்பரிடம் "நீங்க என்ன பண்ணுவீங்கன்னு தெரியாது. நாளை காலை 9 மணிக்கு அந்த கடை திறந்ததும், ஒரு லிட்டர் நல்லெண்ணெய் வாங்கி குருநாதர் சன்னதிமுன் வைக்க வேண்டும். அது நாளை மறுநாள் அவருக்கு காலை அபிஷேகத்துக்கு உபயோகப்பட வேண்டும்" என்றேன்.

நண்பர் ஒத்துக்கொண்டார்.

கோவில் நடை சார்த்தியதும், அந்த நண்பருடன் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு, வீட்டுக்கு கிளம்பினேன். கோவில் தெருவை கடந்து பாலராமபுரம் சந்திப்பை தொடும் முன் பயங்கர மழை பெய்தது. தார் சாலை கண்ணை விட்டு மறைந்தது. மெதுவாக வண்டியை ஒரு நிறுத்தத்தில் ஒதுக்கி வைத்துவிட்டு, மழை கோட் போட்டு வேகம் குறைய காத்திருந்தேன். அரை மணிநேர காத்திருப்புக்கு பின் வண்டியை மெதுவாக ஒட்டி வீட்டுக்கு கிளம்பினேன். மழை மறுபடியும் பிடித்துக்கொண்டது. மொத்தமாக நனைந்து ஊருக்குள் நுழைய அங்கு மழையே பெய்யவில்லை. வண்டியில் செல்லும் அனைவரும் "என்ன! ஏதேனும் குளத்துக்குள் இறங்கி வந்தாயா?" என்பது போல் பார்த்தனர்.

மறுநாள், சுத்தமான நல்லெண்ணை வாங்கி அவர் சன்னதி முன் வைக்கப்பட்டது. சனிக்கிழமை இருவரையும் தரிசிக்க சென்ற பொழுது, பாலராமபுரத்தில் வெப்பம் குறைந்து, எண்ணெய் தேய்த்து குளித்த ஒரு மயக்கத்தில் இருவரும் இருப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது.

அடியேன் குருநாதரிடம் "வர வர, சிவன்மலை முருகப்பெருமான் போல் ஆகி வருகிறீர்!" என்றேன் நகைச்சுவையாக.

சரி! அகத்தியர் அடியவர்களிடம் அடியேன் சமர்ப்பிப்பது ஒன்று தான். உங்களால் முடிந்தால், அகத்தியப் பெருமானுக்கு, அபிஷேகத்துக்கு, சுத்தமான, செக்கில் தயாரித்த "நல்லெண்ணெய்" யை வாங்கிக் கொடுங்கள். என்ன அனுபவம் தருகிறார் என்று பாருங்கள். பிளாஸ்டிக் பையில் கடையில் விற்கப்படும் பல பிரபலமான "நல்லெண்ணெய்" களும், எள்ளெண்ணை இல்லை என்கிறார் குருநாதர். கவனம் தேவை!

அகத்தியப்பெருமான் அருளி, உதவிய இரு உபாயங்களை, அவர் அனுமதியுடன் பிறகு தெரிவிக்கிறேன்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.................தொடரும்!

3 comments:

  1. அகத்தீசாய நம, மிக்க மகிழ்ச்சி ஐயா

    ReplyDelete
  2. ஓம் அகத்தீசாய நமக
    🙏🙏🙏🙏🙏🙏

    ReplyDelete
  3. ஓம் ஆம் அகத்தீசாய நமக

    ReplyDelete