​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Saturday 16 April 2022

சித்தன் அருள் - 1115 - கருட பகவானுக்கு நாராயணர் உரைத்த உண்மைகள்!

​​கருடன், பரமபதியைத் தொழுது வணங்கி,  "பரம புருஷா! இதற்கு முன்பு பிரேத ஜன்மத்தைப் பற்றிச் சொன்னீர்களல்லவா? அத்தகைய பிரேத ஜன்மம் அடைந்தவனைக் குறித்த சரித்திரம் ஏதாவது உள்ளதா?  அத்தகைய சரிதமிருந்தால், அதைச் சொல்லியருள வேண்டும்" என்று வேண்டினான்.

உடனே, ஆதிநாயகரான, ஸ்ரீமந் நாராயண பகவான், கருடனை நோக்கி கூறலானார்: " ஓ வைனதேயனே ! நீ இப்போது கேட்ட கேள்வி, நல்லதொரு கேள்வியேயாகும்.  இதற்கும் ஒரு கதை உள்ளது. அந்தக் கதையைப் பக்தனாகிய உனக்குச் சொல்லுகிறேன். கவனமாகக் கேள்.  திரேதாயுகத்தில் பப்ருவாகனன் என்ற அரசன் ஒருவன் இருந்தான். அவன் தன் நித்திய கர்மங்களை நியமந் தவறாமல் செய்து வந்தான்.  பெரியோர்களால் கொண்டாடப்பட்ட அவன், மஹோதயம் என்ற நகரத்திலிருந்து உலகத்தை ஆண்டு வந்தான்.  அவன் ஒரு நாள் வேட்டையாட வேண்டும்  என்று மிகவும் விரும்பினான்.  எனவே, தன் படை வீரர்கள் சிலருடன் காட்டுக்குச் சென்று வேட்டையாடினான்.  அப்போது அவனது பார்வையில் புள்ளிமான் ஒன்று தென்பட்டது.  அவன் அந்த மான் மீது அம்பெய்தான்.  அடிபட்ட அந்த மான் கீழே விழுந்து, மீண்டும் எழுந்து ஓடிற்று.  மறுபடியும் அந்த மன்னன் வில்லை வளைத்து, அம்பெய்தான்.  அந்த அம்பும் குறித்தவறாமல் அந்தமான் மீதே பாய்ந்தது.  அம்பு பாய்ந்த புண்ணிலிருந்து வழிந்து ஒழுகிய இரத்தமானது சிதறியது.  அந்த மான் மீண்டும் ஓடி எங்கோ மறைந்தது.  அரசன், மானின் உடலிலிருந்து தரையில் விழுந்திருந்த இரத்தச்  சுவடைப் பின்பற்றிச் சென்று, நெடுந்தூரம் நடந்து , வேறு ஒரு வனத்தையடைந்தான்.  அங்கும் அந்தப் புள்ளிமானைக் காணாததாலும் வழி நடந்த சோர்வாலும் மிகவும் சோர்வடைந்தான். அரசனுக்குப் பசியை விடத் தாகம் நெஞ்சை வரளச் செய்தது.  அவன் தண்ணீருக்காக அந்த வனம் முழுவதும் ஒரு தடகத்தைத் தேடியலைந்தான்.   கடைசியில் ஒரு தாமரைப் பொய்கையைக் கண்டு அதனுள்ளிறங்கி, நீராடித் தண்புனல் பருகிக் களைப்பு நீங்கினான்.  குளக்கரையிலிருந்த ஆலமரம் ஒன்றின் அடியில் அமர்ந்து, தன்னுடன் வேட்டையாட வந்த தன் பரிஜனங்களின் வருகைக்காகக் காத்திருந்தான்.  அவர்கள் அரசனை தேடிக் கொண்டிருந்ததால் அவர்கள் வரவில்லை.  நெடு நேரமாயிற்று.  அந்தி மங்கியது.  இருள் கவிந்தது.  அரசனோ அவர்கள் வரும் வரையில் அந்த ஆலமரத்தின் அடியில் அமர்ந்திருந்தான்.  அப்போது, எலும்பும் நரம்பும் தசையும் இல்லாத சரீரமுடையதும் பார்ப்பதற்கு அச்சந்தருவதுமான ஒரு பிரேதம், பல பிரேதங்களோடு அங்குமிங்கும் ஓடுவதையும், பசி தாகத்தோடு வருந்துவதையும் கண்டான். பிரேத ஜன்மமடைந்த ஒரு உயிர், பல பிரேதங்களோடு பயங்கரமாகக் கூச்சலிடுவதைக் கண்ட அரசன் பயமும் அதிர்ச்சியும் வியப்பும் அடைந்தான்.  அப்போது அந்த பிரேத ஜன்மம் அரசனிடம் நெருங்கிவந்து " அரசனே!  உன்னை நான் காணப்பெற்றதால், இந்த பிரேத  ஜன்மம் நீங்கி நற்கதியை அடைவேன் என்று நம்புகிறேன்!" என்று வணக்கமாகக் கூறியது.  பப்ருவாகனராஜன் அந்தப் பிரேத ஜன்மத்தைப் பார்த்து, "நீ யார்? பார்ப்பவர்கள் பயப்படத் தக்க ரூபமுடைய பிரேதத்தைப் போலத் தோன்றும் நீ எவ்வாறு பேசுகிறாய்? உன் வரலாறு என்ன?அதை விளக்கமாகச் சொல்ல வேண்டும்!" என்று  கேட்டான்.

உடனே அந்தப் பிரேத ஜன்மம், அரசனை நோக்கி, " வேந்தனே! என் சரித்திரத்தைச் சொல்லுகிறேன். நீங்கள் கருணையுடன் கேட்க வேண்டும். வைதிசம் என்று ஒரு பட்டணம் உண்டு. அந்தப் பட்டணத்திலே இரதகஜதுரகபதாதிகள் எப்போதும் நிறைந்திருக்கும். அந்த நகரத்தில் நான் வைசிய குலத்தில் பிறந்து, வளர்ந்து திருமணஞ் செய்து கொண்டு சுகமாக வாழ்ந்து வந்தேன்.  என் பெயர் தேவன்! நான் என் வாழ்நாள் முழுவதும் தேவாராதனை, விரதானுஷ்டானம் முதலியவற்றை செய்து வந்தேன்.  பிராமணரையும் பெரியோரையும் எப்போதும் வழிபட்டு வந்தேன்.  தேவாலயம் பிரமாலயம் முதலியவற்றைச் சீர்செய்து புதுப்பித்தேன்.  ஏழைகளையும் அனாதைகளையும் அகதிகளையும் நாதனற்றவரையும் ரட்சித்து வந்தேன். சகல ஜீவர்களுக்கும் என்னால் இயன்ற அளவு நன்மைகளையே செய்து வந்தேன்.  என் வாழ்நாள் முடிந்தது. நான் மடிந்தேன். எனக்குப் புத்திரன் இலன். சுற்றத்தாரும் இல்லை. மாய்ந்த எனக்கு யாருமே கர்மம் செய்யாததால் நான் இத்தகைய பிரேத ஜன்மத்தையடைந்தேன் .  அரசனே! இந்தப் பிரேத ஜன்மத்தை நான் அடைந்து வெகு காலமாயிற்று.  இந்த ஜன்மத்தோடு நான் மிகவும் வருந்துகிறேன்.  இறந்தவனுக்குச் செய்ய வேண்டிய சம்ஸ்காரம், சஞ்சயனம், விருஷோர்சர்க்கம், சோடசம், சபிண்டீகரணம் ,  மாசிகம், சிரார்த்தம் முதலிய சடங்குகளை இறந்தவனின் மகன் அல்லது மற்ற உறவினர்கள் ஒருவருமே செய்யாவிட்டால், இறந்தவன் பிரேத ஜன்மத்தையே அடைவான். அரசனே! உலகத்தை ஆளும் உனக்கு நான் சொல்ல வேண்டுவது எதுவுமில்லை.  நீ குடிமக்களின் காவலன்.  உறவினன்.  ஆகையால் அடியேனுக்கு நீயே, மாண்டவனுக்குச் செய்தற்குரிய கர்மங்களைச் செய்து, இந்தப் பிரேத ஜன்மத்தை நீக்கவேண்டும்.  என்னிடம் சிறப்பான நவரத்தினங்களில் சிறந்த ஒரு மாணிக்கம் இருக்கிறது. அதை பாத காணிக்கையாக உனக்கு வழங்குகிறேன்.  அதை ஏற்றுக்கொள்வாயாக!" என்று கூறி அந்த இரத்தினத்தை அரசனிடம் கொடுத்தது. அரசன், அந்தப் பிரேத ஜன்மத்தை நோக்கி, " பிரேதமே! நான் உனக்கு எப்படிக் கருமஞ் செய்வேன்?  அதை நான் எவ்வாறு செய்ய வேண்டும்?  நீ கொடுக்கும் இந்த இரத்தினத்தை நான் உன்னிடமிருந்து பெற்றுக் கொள்ளக் கூடுமோ? உனக்கு உன் உறவினரில்லாமையாலும் புத்திரனில்லாமையாலும் யாருமே உனக்குக் கர்மம் செய்யம்மையால் நீ பிரேத ஜன்மத்தையடைந்ததாகச் சொல்லுகிறாயே .  இந்த பிரேத ஜன்மம் எப்படி நீங்கும்!   இந்தப் பிரேத ஜன்மத்தை நீ எவ்வாறு அடைந்தாய்?  அவற்றை நீ எனக்குச் சொல்ல வேண்டும்!" என்று கேட்டான்.  

அதற்கு பிரேதம் அரசனை நோக்கி, " அரசே! அந்தணோத்தமர்களில் பொருள்களையும், தெய்வ சொத்துக்களையும், ஸ்த்ரீ பாலன், அந்தகன், ஊமை, செவிடன் ஆகியோரது  பொருள்களையும் மோசம் செய்து அபகரித்தவன் எவனாயினும் அவன் எத்தகைய தானங்களைச் செய்தவனாயினும் இத்தகைய பிரேத ஜன்மத்தையே அடைவான்!  தவம் புரிகின்ற மங்கையையும் தன் கோத்திரத்தில் பிறந்த பெண்ணையும் பிறனுக்குரியவளையும்  விரும்பியவன் பிரேத ஜன்மத்தையடைவான். தாமரை மலர்களையும், நவரத்தினங்களையும், பொன்னையும் மங்கையர் மார்பிலணியும் கச்சையையும் திருடியவன் பிரேத ஜன்மத்தையடைவான்.  போரில் புறங்காட்டி ஓடியவனும் செய்ந்நன்றி மறந்தவனும், நல்லது செய்தவனுக்கே. தீமைகளைச் செய்தவனும் பிரேத ஜன்மத்தையடைவார்கள்!"   என்று கூறியது.  அதைக் கேட்டதும் அரசன் அந்தப்  பிரேதத்தை நோக்கி, "ஓ பிரேதமே!  பிரேத ஜன்மம் அடைத்த பிறகு, அவனுக்கு நேர்ந்த அந்த ஜன்மம் எப்படி நீங்கும்? அத்தகையவனுக்கு எத்தகைய கர்மத்தைச்  செய்ய வேண்டும்? அதை  எவ்விதம் செய்ய வேண்டும் என்பதைச் சொல்!" என்றான்.

உடனே பிரேத ஜன்மம், அரசனை நோக்கி," வேந்தனே! இந்த விஷயத்தை உனக்குச் சுருக்கமாகச் சொல்கிறேன், கேள்! நாராயணபலி சகிதனாய், ஸ்ரீமந் நாராயணனைப் போலத் திவ்விய மங்கள விக்கிரகம் ஒன்றைச் செய்து, சங்கு, சங்கர, பீதாம்பரங்களைக் கொண்டு அலங்காரஞ் செய்து, கிழக்குத் திசையில் ஸ்ரீதரனையும் தெற்குத் திக்கில் மகாசூரனையும் மேற்குத் திசையில் வாமனனையும் வடக்கில் கதாதரனையும் நடுவில் பிராமருத்திராதியரோடு ஸ்ரீமகாவிஷ்ணுவையும் நிலைநிறுத்தி, ஆராதனை செய்து, வலம் வந்து வணங்கி, அக்கினியிலே ஹோமஞ் செய்து,  மீண்டும் நீராடி விருஷோர்சர்க்கம் செய்து, பதின்மூன்று பிராமணர்களை வருவித்து, அவர்களுக்குக் குடை, மாரடி, மோதிரம், பலகை, வஸ்திரம், பொன் முதலியவற்றை வழங்கி, பிருஷ்டான்ன போஜனம் செய்வித்து, சய்யாதானம்,  கடகதானம் முதலியவைகளைக் கொடுத்தால், மரித்தவன் பிரேத ஜன்மத்திலிருந்து நீங்குவான்!" என்று கூறியது.

அந்தப் பிரேத ஜன்மம் அவ்வாறு சொன்னதுமே, மன்னனைத் தேடிக் கொண்டிருந்த அவனது பரிவாரங்கள், அவன் அமர்ந்திருந்த தடாகக் கரைக்கு வந்து கொண்டிருந்தார்கள்.  பெருந்திரளான ஜனக் கூட்டத்தைக் கண்டதும் பிரேத ஜன்மம், ஒருவருடைய கண்ணிற்கும் புலப்படாமல் மறைந்து விட்டது.  அரசன், அந்தப் பிரேத ஜன்மம் மறைந்ததைக் குறித்து யோசித்தான். " இதென்ன விந்தை! நமது சேனை வீரர்களைக் கண்டதுமே நம்முடன் இவ்வளவு நேரம் பேசிக் கொண்டிருந்த பிரேத ஜன்மம் மறைந்துவிட்டதே!  இனி அந்தப் பிரேத ஜன்மம் நம்மிடம் வேண்டியவாறு, அதற்குரிய கர்மங்களையும் தர்மங்களையும் நாமே செய்யவேண்டும்" என்று எண்ணி, வனத்தை விட்டுத் தன் நகரத்தையடைந்து, அந்தப் பிரேத ஜன்மத்தை குறித்து, அதற்குரிய கர்மங்களையும் தர்மங்களையும் முறைப்படிச் செய்தான்.   உடனே, அந்தப் பிரேதம், தனக்கு நேரிட்ட ஆவிப் பிறவியை நீங்கி, நல்லுலகையடைந்தது" என்று திருமால் கூறினார்.  

அதைக் கேட்டதும் கருடன் ஜகத்காரணனை நோக்கி, " சர்வலோக சரண்யனே! இவை தவிர வேறு என்ன கர்மங்களைச் செய்தால் பிரேத ஜன்மம் நீங்கும்?  அதனையும் எனக்குக் கூறியருள வேண்டும்"  என்று வேண்டினான்.  

அதற்கு ஆழி வண்ணன், " கருட!  எண்ணெய் நிறைந்த ஒரு குடத்தைப் பெரியோர்களுக்குத் தானம் கொடுத்தாலும் சகல பாவங்களும் நசித்துப் பிரேத ஜன்மமும் நீங்கி விடும்.  மரித்தவன் இன்பமுடன் மீளாவுலகை அடைவான்.  பொன்னால் குடங்கள் செய்து, அவற்றில் பாலும் நெய்யும் நிரம்ப வார்த்து, திக்கு பாலகரையும் அஜசங்கரரையும் ஸ்ரீஹரியையும் ஆராதனை செய்து, அக்குடங்களை அந்தணோத்தமர்களுக்குத் தானம் கொடுப்பது மிகவும் சிறப்புடையதாகும்!" என்றார்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்................... தொடரும்!

No comments:

Post a Comment