​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Saturday, 9 April 2022

சித்தன் அருள் - 1110 - மரிக்கொழுந்து!

 

வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

நம் குருநாதர் நடத்துகிற நிகழ்ச்சிகளில், நமக்கு ஏதேனும் ஒரு பாடம் இருக்கும். அதை சில நேரங்களில் நேரடியாக உணர்த்தாமல், ஒரு சிறு அனுபவம் மூலம் உணர்த்துவார். சில வேளை நேரடி உத்தரவாகவும் இருக்கும்.

சமீபத்தில் ஒரு வியாழக்கிழமை, குருநாதரை கண்டு, குரு தட்சிணை கொடுத்து (ஆதித்தய ஹ்ருதயம்), அருள் பெற்று வரலாம் என நினைத்து, பாலராமபுரம் லோபாமுத்திரா சமேத அகத்தியர் கோவிலுக்கு சென்றிருந்தேன்.

கோவில் மிக அமைதியாக இருந்தது. ஆதித்தய ஹ்ருதயம் ஸ்லோகம் ஜபம் பண்ணிக்கொண்டு எல்லா சன்னதிகளையும் வலம் வந்து, அகத்தியர் சன்னதி முன் வந்து நின்று, சித்த மார்க்க முறைப்படி அதை "குரு தக்ஷிணையாக" கொடுத்து, கண் மூடி அமைதியாக, அவருக்கு நன்றியை உரைத்து நின்றேன்.

திடீரென சன்னமாக அவர் உரைத்தது தெளிவாக கேட்டது.

"கொழுந்து வாங்கி அம்மாவின் வலது கையில் தினமும் வைக்கச் சொல்லேன். மிகுந்த அக்னியாக இருக்கிறது" என்றார்.

மிகுந்த ஆச்சரியத்துடன், அவரை பார்த்து, தலை அசைத்தேன்.

பூசாரியிடமும், அங்கிருந்த கோவில் நிர்வாகிகளிடமும், இந்த உத்தரவை கூறினேன்.

"தினமும் ஒரு 10 ரூபாய்க்கு கொழுந்து வாங்கி அம்மாவின் வலது கையில், நாளை முதல் வைத்து விடுங்கள். மிகுந்த அக்னியாக இருக்கிறது, என்கிறார். அம்மா அவருக்கு வீசிக் கொடுத்துப்பாங்க போல" என்றேன், சிரித்துக்கொண்டே.

"மறக்காமல் செய்யவும். தூரம் காரணமாக நான் தினமும் வருவது இயலாது. காலையிலேயே அலங்காரத்துடன் இதையும் செய்து விடுங்கள்" என்றேன்.

அனைவரும் சரி என ஒப்புக் கொண்டனர். அடியேனும் அவரிடம், "சொல்லிவிட்டேன். தருவார்கள்" என கூறிவிட்டு வீட்டிற்கு திரும்பி வந்து விட்டேன்.

ஞாயிற்று கிழமை மாலை, மிகுந்த உஷ்ணமாக இருந்ததால், குளித்து, வீட்டில் விளக்கேற்றி ஜபம் செய்ய தொடங்கிய உடன் "நீ கிளம்பி வா, என் கோவிலுக்கு!" என்றார்.

எதற்கு என தெரியவில்லையே, சரி! குருநாதர் கூப்பிட்டுவிட்டால் என்ன? எது? என கேட்க்காமல் செவி சாய்ப்பது அடியேன் பழக்கம். அடியேன் வீட்டிலிருந்து 15 கிலோமீட்டர் தூரம் யாத்திரை செய்து கோவிலை வந்தடைந்து, எப்போதும் போல, ஜபம் செய்து அவருக்கு குரு தக்ஷிணை கொடுத்தவுடன், வந்தது உத்தரவு. ஆடிப்போய்விட்டேன். அதில் சற்று கோபம் தொனித்தது.

"சொல்வதுடன் உன் வேலை முடிந்தது என நீ போய் விட்டாய்! ஒரு பயலும் இங்கு சரியில்லை. யாம் கேட்ட கொழுந்தை அம்மாவிடம் தரவே இல்லை" என்றாரே பார்க்கலாம். அடியேனும் அவர் கூறியது போல், இவர்கள் செய்து விடுவார்கள் என்ற நம்பிக்கையில் விஷயத்தை மறந்து போய் விட்டேன்.

மறந்து போன தவறை அடியேனும் செய்து விட்டதால், அவரிடம் மன்னிப்பு கூறிவிட்டு,

"அவரே எதுவும் வேண்டும் என கேட்க மாட்டார்! சிறிது கொழுந்து தினமும் அம்மாவிடம் கொடு என வாய் திறந்து கேட்டுவிட்டார். அதை கூடவா உங்களால் நிறைவேற்ற முடியவில்லை. இப்படி இருந்தால் எப்படி? ஒரு பயலும் சொன்னா கேட்பதில்லை என்கிறார். இனிமேல் ஏதேனும் உத்தரவு வந்தாலும், கேட்டுவிட்டு நான் அமைதியாக இருந்து விடுவேன். நீங்களாச்சு, அவராச்சு!" என்றேன் பூசாரியிடம்.

"உண்மைதான். மறந்து போய்விட்டேன்! கொழுந்து வாங்கி மடப்பள்ளியில் வைத்திருக்கிறேன். நாளை வைக்கிறேன் என்றார்." பூசாரி.

"நாளை என்கிற பேச்சே கிடையாது! இன்று, இப்போதே அம்மாவின் கையில் கொடுத்த பின் நீங்கள், இன்று நடை சார்த்தினால் போதும். நான் காண வேண்டும். அதை கொண்டு வந்து அம்மாவின் கையில் கொடுங்கள்!" என்றேன்.

மடப்பள்ளியை நோக்கி ஓடிப்போன பூஜாரி, கொழுந்தை கொண்டு வந்து, அம்மாவின் கையில் வைத்து, ஒரு கொத்து கொழுந்தை அகத்தியப்பெருமானின் தலையில் வைத்து, அவர்கள் முன் இருக்கும் லிங்கத்துக்கும் சாரத்தினார்.

அகத்தியப்பெருமானிடம் "அய்யா! நிறைவு தானே! இனி தினமும் தருவார்கள்! அடியேனும் தொடர்பு கொண்டு விசாரித்துக் கொள்கிறேன்" என்றேன்.

"சில காலங்களுக்கு இதை செய்யச்சொல்!" என்றார். இதன் சூட்ச்சுமும் என்ன என்று அடியேன் விசாரிக்கவில்லை.

மறுநாள், திங்கட்க்கிழமை மாலை, ஒரு வயதானவர் கோவிலுக்கு வந்தார். பூஜாரி கூட அவரை முதன் முறையாக பார்க்கிறார். வந்தவர் அகத்தியப்பெருமானை, தாயாரை வணங்கிவிட்டு, அனைத்து சன்னதிகளிலும் இறைவனை வணங்கிவிட்டு, குறிப்பாக அகத்தியப்பெருமானின் சன்னதியை பலமுறை சுற்றி வந்து, அவர் முன் வந்து நின்றார், அமைதியாக.

எப்போதும் போல, பூஜாரி, அவருக்கும் பிரசாதம் கொடுத்துவிட்டு, யாரும் இல்லாததால், சற்று தள்ளி ஒரு இருக்கையில் அமர்ந்து இருந்தார். வந்த பெரியவர், அகத்திய பெருமானின் சன்னதியையே நீண்ட நேரம் அமைதியாக பார்த்து இருந்து விட்டு, பூஜாரியை பார்த்தார்.

எது பூஜாரியை தூண்டிவிட்டது என தெரியவில்லை, பூஜாரி எழுந்து அவர் முன் சென்று எதுவும் பேசாமல் நின்றார். அவர் யார் என்று விசாரிக்க கூட இல்லை.

வந்தவர் பூஜாரியிடம் "எனக்கு அம்மாவின் கையில் உள்ள கொழுந்து வேண்டும்!" என்றார். அது என்னவோ ஒரு உத்தரவு போல் இருந்ததாக பின்னர் பூஜாரி அடியேனிடம் கூறினார்.

எதற்கோ கட்டுப்பட்டவர் போல் "சரி!" என தலையாட்டிவிட்டு, சிறிது கொழுந்தை அம்மாவின் கையிலிருந்து எடுத்துக் கொடுத்தார், பூஜாரி.

"நன்றி!" என்ற ஒரு வார்த்தையை அகத்தியரை நோக்கி கூறிவிட்டு, கோவிலை விட்டு வெளியே சென்றார்.

சற்று நேரத்திற்கு எதுவும் யோசிக்காமல் இருந்த பூஜாரி, ஏதோ ஒரு எண்ணம் தோன்ற, கோவிலை விட்டு வெளியே வந்து பார்த்தால், அப்படிப்பட்ட பெரியவரை எங்கும் காணவில்லை.

பின்னர், கோவில் திருவிழாவின் முதல் நாள் அன்று, ஸ்ரீ லோபாமுத்திரை சமேத அகத்தியப் பெருமானுக்கு, புஷ்பாபிஷேகம் ஏற்பாடு செய்த பொழுது "ஒரு பிடி கொழுந்து கேட்ட பொழுது கொடுக்கவில்லை! இப்பொழுது பார், சாக்கு சாக்காக எனக்கு கொழுந்து வருகிறது" என உரைப்பது போல் அமைந்தது. ஆம்! இரண்டு சாக்குகளில் கொழுந்து வந்து சேர்ந்தது! பின்னர் ஒருநாள், அம்மாவின் கையில் இருந்து சிறிதளவு கொழுந்தை பிரசாதமாக பெற்று, அடியேனின் வீட்டில் பூஜை அறையில் வைத்தேன்.

சரி! அகத்தியர் அடியவர்களிடம் ஒரு வேண்டுதல். முடிந்தால், வேனற்கலாம் முடியும் வரை தினமும் ஒரு பிடி "கொழுந்து" வாங்கி அகத்தியர் கோவிலிலோ, உங்கள் வீட்டில் அகத்தியர் படத்தின் முன்னோ சார்த்துங்கள். என்னென்ன நடக்கிறது, யார் வருகிறார்கள் என்பதை பொறுமையாக பாருங்கள்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.........தொடரும்!

7 comments:

  1. வணக்கம் ஐயா கொழுந்து என்றால் மரிக்கொழுந்தா அல்லது வேப்பங்கொழுந்தா கொஞ்சம் தெளிவாக கூறினால் அனைவருக்கும் நலம் பயக்கும் நன்றி ஐயா

    ReplyDelete
    Replies
    1. தலைப்பை கவனிக்கவும்.

      Delete
  2. அகத்தீசாய நம, நன்றி அய்யா

    ReplyDelete
  3. ஓம் அகத்தீசாய நமஹ.
    அப்படியே செய்கிறோம் அய்யா.

    குருநாதர் இதன்மூலம் எங்களுக்கும் சில குறிப்பைத் உங்கள்மூலம் தந்துள்ளார்.

    "உடல் நல பாதிப்புகளுக்கு தீர்வாகும் மரிக்கொழுந்து. உடலுக்கு கெடுதல் செய்யும் வியாதிக் கிருமிகளை அழிக்கும் மரிக்கொழுந்து, சருமத்தில் ஏற்படும் பூஞ்சைத் தொற்றுகளுக்கு, மருந்தாகிறது. உடல் வீக்கங்கள் கட்டிகள் தரும் வலியைப் போக்கி, அவற்றை சுருங்க வைக்கிறது. மன நல பாதிப்புகளுக்கு ஆற்றல்மிக்க, நிவாரணமாகத் திகழ்கிறது."

    நம் குருநாதரின் இரண்டு அடியவர்களின் உடல் மற்றும் மனத் துன்பத்திற்கான மருந்தாகவும் உள்ளது அய்யா. இப்படி ஒன்றை நான் எதிர்பார்க்கவில்லை. நன்றிகள்.

    ReplyDelete
  4. குருநாதர் அருளால் ஒரு அனுபவ பதிவு.

    http://fireprem.blogspot.com/2022/04/blog-post_10.html?m=1

    ReplyDelete
  5. sir,Namaskaram.pls mention Thiruvonam star details,from Apr22 to match23
    thankyou.

    ReplyDelete
  6. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏

    ReplyDelete