​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday, 7 April 2022

சித்தன் அருள் - 1108 - கருட பகவானுக்கு நாராயணர் உரைத்த உண்மைகள்!


பகவான் அவ்வாறு பிதுர்க் கர்மம் செய்வதற்கு உரிமையுடையவன் யார் என்பதைக் கூறிய பிறகு, கருடன் அச்சுதபிரானைத் தொழுது வணங்கி,  " ஓ சர்வ ஜெகந்நாதா! இறந்தவனைக் குறித்து சபிண்டீகரணம் என்ற சடங்கை எப்போது செய்ய  வேண்டும்?  சபிண்டீகரணம் செய்வதனால் இறந்தவன் அடையும் பயன் என்ன? அவன்  எக்கதியை அடைவான்?  எப்போதோ மரித்தவனுக்கும் அண்மையில் மரித்தவனுக்கும் பிண்டம் ஒன்று சேர்ப்பது எவ்விதம்?  ஒன்று சேர்த்தால் அவர்கள் எக்கதியடைவார்கள்? அகமுடையான் உயிரோடு இருந்து அகமுடையாள் இறந்தால் அவளுக்குச் சபிண்டீகரணம் செய்வது எப்படி? இவற்றையெல்லாம் உலக நன்மையைக் கருதி அடியேனுக்குக் கூறியருள வேண்டும்"  என்று வேண்டினான்.

அதற்கு, ஆதிமத்யாந்த ரஹிதரான ஸ்ரீகேசவபிரான் கருடனை நோக்கி கூறலானார்.

"ஓ விநதையின் மகனே! உலக வாழ்வை விட்டு, உடலையும் விட்டு மாண்டவனுக்கு வருஷம் முடியும்வரை சகலமும் சாஸ்திரப்படிச் செய்து, சபிண்டீகரணமும் செய்து, அவன் குலத்தில் முன்னமே மாண்டவருடைய பிண்டத்தோடு, இறந்தவனுக்குரிய பிண்டத்தையும் சேர்த்தல் வேண்டும். அவ்வாறு செய்தால், இறந்தவன்  பிரேதத்துவம் நீங்கி, பிதுர்த் தேவர்களோடு சேர்ந்து கொள்வான். இறந்தவன் இறந்த பன்னிரண்டாம் நாளிலும் மூன்றாவது பக்ஷத்திலும் ஆறாவது மாதத்திலும் சபிண்டீகரணம் செய்யலாம். தந்தை இறக்க, அவன் புத்திரன் தந்தைக்குரிய கருமங்கள் எல்லாவற்றையுஞ் செய்து சபிண்டீகரணம் மட்டுமே செய்யாமல் நிறுத்தி வைத்திருக்குஞ்  சமயத்தில் கர்மஞ் செய்த புத்திரனுக்குக் கல்யாணஞ் செய்ய நேரிட்டால் உடனடியாகச் சபிண்டீகரணத்தைச் செய்த பிறகுதான், மணவினையைச் செய்தல் வேண்டும். சபிண்டீகரணம் செய்யும் வரையிலும் மாய்ந்தவன் பிரேதத்துவத்துடனேயே இருப்பான். ஆகையால் அவன் சுபகாரியங்களில் ஒன்றைக் கூடச் செய்யலாகாது. சந்நியாசிகளுக்குக் கூடப் பிக்ஷையிடலாகாது.  பிண்டம் சேர்த்த பிறகு, இறந்தவன் பிரேதத்துவம் நீங்கி பிதிர்த்துவம் பெற்று மகிழ்வான். ஆதலாலும் தேகம் அந்நித்தியமாதலாலும், கிருத கிருத்தியம் பலவிதமாதலாலும், பன்னிரண்டாம் நாளிலேயே சபிண்டீகரணம் செய்வது மிகவும் உத்தமமாகும். ஒளபாஸனம் செய்வதற்கு, விக்கினம் நேரிட்டாலுங் கூடப் பன்னிரண்டாம் நாளில் சபிண்டீகரணத்தைச்  செய்யலாம். சபிண்டீகரணம் செய்த பிறகு தாய் தந்தையர் குலத்தில் மூன்று தலைமுறையிலுள்ளவருக்கும் சிரார்த்தம் செய்ய வேண்டும். ஒருவருக்கு மட்டுமே சிரார்த்தம் செய்யக்கூடாது. சோடசம், சபிண்டீகரணம் முதலியவற்றைச் செய்தால் இறந்தவன் பிரேதத்துவம் நீங்கி பிதுர்களோடு சேர்ந்து மகிழ்ந்து இன்பமடைவான்.  பெண்ணைப் பெற்றவன் பொருள் சிறிதும் வாங்காமல், அந்தப் பெண்ணைக் கன்னிகாதானம் செய்திருந்தால், பின்பு அவன் இறந்தால் அவளுடைய அகமுடையான் கோத்திரத்தைச் சொல்லி, சமஸ்த கிரியைகளையுஞ் செய்தல் வேண்டும். இறைச்சியை விற்பவனைப் போலப் பெண்ணைப் பெற்றவன், விலைபெற்றுப் பெண்ணைக் கொடுத்திருந்தால் அவள் மாண்டு போனால் அவளுக்கு அவளுடைய பிதாவின் கோத்திரத்தைச் சொல்லிக் கிரியைகளைச் செய்ய வேண்டும்.   பிதாவுக்கு புத்திரன் மட்டுமே கர்மம் செய்தல் வேண்டும்.  புத்திரன் இல்லாவிட்டால் இறந்தவனுடைய கனிஷ்டனாயினும் ஜேஷ்டனாயினும் அவர்களில் ஒருவனுடைய புத்திரனாயினும் கர்மம் செய்ய வேண்டும்.   மாய்ந்தவனுடைய  சகோதரர்கள் பங்கு பிரித்துக் கொண்டு, தனித்  தனியாக வாழ்வாராயின், அவனுடைய அகமுடையாள் கர்மம் செய்ய வேண்டும்.  இறந்தவனுக்கு அவனுடைய புத்திரனும் சகோதரரும், அவர்களுடைய புத்திரரும், மனைவியும் இல்லாவிட்டால், மரித்தவனுடைய தாயாதி செய்ய வேண்டும்.  தாயாதியும் இல்லாவிட்டால், அவனுக்கு மாணாக்கன் இருந்தால் அவன் கர்மம் செய்ய வேண்டும்.  மேற் சொன்னவர்களில் ஒருவருமே இல்லாவிட்டால் புரோகிதனே இறந்தவர்க்குரிய கர்மங்களைச் செய்யலாம்.  நாலைந்து பேர் சகோதரர்கள் இருந்து, அச்சகோதரர்களில் ஒருவருக்கு மட்டுமே புத்திரன் இருந்தால், மற்ற சகோதரர்களும் புத்தினுடையவரேயாவர்.  அவ்விதமாகவே, ஒருவனுக்கு நாலைந்து மனைவியர் இருந்து அவர்களில் ஒருத்திக்கு மட்டுமே புத்திரன் இருந்தால் மற்ற மனைவியரும் புத்திரனுடையாரேயாவர்.  புத்திரன் பூணுல் அணிவதற்கு முன்னமே தந்தை இறந்தால், அந்தப் புத்திரனே கர்மம் செய்ய வேண்டும். புத்திரனைப் பெறாதவள் இறந்தால்,  அவளுக்கு அவளுடைய கணவனே கர்மஞ் செய்ய வேண்டும். சபிண்டீகரணம் செய்த பிறகு, தெரியாமையினாலாவது பிதுர்த்தேவர்கள் அனைவரையும் குறித்தல்லாமல் இறந்தவனை மட்டுமே குறித்துச் சிரார்த்தம் செய்தால், இறந்தவனும், சிரார்த்தம் செய்பவனும், சிரார்த்தத்தைச் செய்விக்கின்ற புரோகிதனும் நரகம் அடைவார்கள்.   இறந்தவனுக்குப் பலர் இருந்தாலும் ஓராண்டு வரையிலும் ஒருவனே கிரியைகள் அனைத்தையும்ஞ் செய்ய வேண்டும்.  வருஷம் முடியும் வரை, நித்திய சிரார்த்தத்தோடு  ஒரு குடத்தில் புனல் நிறைந்து  "உதக கும்ப தானத்தைச் செய்தல் வேண்டும்.  கர்மங்களைத் தவறாமல் செய்தால், இறந்தவன் விமானம் ஏறி நல்லுலகை அடைவான்.  பாட்டன் உயிரோடு இருக்கும்போது தகப்பன் இறந்தால் அவனுக்கு சபிண்டீகரணம் செய்யலாகாது.  பாட்டன் இறந்த பிறகு அந்தப் பாட்டனுக்குச் சபிண்டீகரணம் செய்து, பின்பு இறந்த தந்தைக்குச் செய்ய வேண்டும். பிதாவும் பிதாவைப் பெற்ற பாட்டியும்  உயிரோடு இருக்கும் போது,  தயார் இறந்தால், அவளுக்கு சபிண்டீகரணம் செய்யக்கூடாது.  அவர்கள் இருவரும் இறந்த பிறகு, அவர்களுக்குச் சபிண்டீகரணஞ் செய்த பிறகுதான் தாய்க்குச் செய்ய வேண்டும்.  

ஓ, வைனதேயா! இந்த விதியே உறுதியானதல்ல. இது ஒரு பக்ஷம் என்க.  எவள் ஒருத்தி, தன் கணவனையே தெய்வம் என்று பதிபக்தியோடு வாழ்ந்தும், அவன் இறந்த பிறகு, அவனுடைய சரீரத்தோடு, சிதைத் தீயில் தன்னுயிரையும் விடுகிறாளோ, அவள் எல்லோரையும் விட நற்கதியை அடைவாள்.   அவள் மகா பாவங்களை செய்தவளேயானாலும் தன் கணவன் இறந்தும் அவனுடன் உயிர் மாய்த்துக் கொண்டதால், அவள் மகா புண்ணியவாதியாகிக் கணவன் பாபியாக இருந்தாலும் அவனையும் புண்ணியவானாக்கிச் சுவர்க்கலோகத்தில் அவனோடு சுகமாக வாழ்வாள். அவ்வாறு இறந்த தாய்க்கும் தந்தைக்கும் அவர்களுடைய புத்திரன் ஒரே சபிண்டீகரணம் செய்தல் வேண்டும். விருஷோற்சர்க்கமும் தானங்களையும் தனித்தனியாகச் செய்தல் வேண்டும்.  அவர்கள் இருவருக்கும் தனித்தனியாகச் பிராமணர்களை வரித்துச் சிரார்த்தம் செய்ய வேண்டும். ஓராண்டு வரையில் யாவற்றையும் தனித் தனியாகச் செய்தால் அவர்களிருவருமே திருப்தியடைவார்கள். புண்ணிய க்ஷேத்திரங்களிலும் கிரகணம், மாளைய அமாவாசை முதலிய புண்ணிய காலங்களிலும் அவ்விருவருக்கும் சிரார்த்தஞ் செய்து வேறு வேறாகப் பிண்டம் போட வேண்டும்.  மாசு மூடிய பொன்னை அக்கினியிலிட்டால், அவ்வக்கினியானது அந்த மாசை மட்டுமே போக்கடித்து பொன்னைக் கெடுக்காததுபோல கணவனோடு உயிர்விடும் புண்ணியவதியின் மேனியை அவ்வக்கினியானது தகிக்குமேயல்லாது, அவளை சிறிதும் வருத்தாது.  தாய், தந்தை, மகன், மக்கள், பெயரன், அண்ணன்,  தம்பி முதலியோரையும் மற்றுமுள்ள சுற்றத்தாரையும் மனை முதலிய பொருள்களையும் உயிரையும் துறந்து, தன் கணவனையே தெய்வம் என்று உறுதியாகக் கருதி, அவனைப்   பிரிந்து வாழக்கூடாது என்று அகமுடையானொடு உயிர் துறக்கும் உத்தமிக்கு ஒப்பானவர் உலகில் யார் உள்ளனர்? சக்கமனஞ் செய்த புண்ணியவதியானவள், மூன்றரைக் கோடி தேவ வருஷம் வரையில் சுவர்க்கலோகத்தில் தன் கணவனுடன் இன்புற்றிருப்பாள்.  பிறகு ஒரு மகாயோகினியின் குலத்தில் கணவனும், மற்றோரு மகாயோகினியின் குலத்தில் தானும் பிறந்து, அவனையே மீண்டும் தன் கணவனாக அடைந்து, தன் யோகச் சிறப்பினால் மேன்மையடைவாள்.

நாயகனுடன் இறவாத மங்கை, எந்த ஜன்மத்திலும் துக்கத்தையும் துன்பத்தையுமே அடைவாள். பிறனுக்கு உடன்பட்டு, அவன் விருப்பப்படியே நடந்து, அவன் ஏவலால் தன் கணவனை இகழ்ந்து, பிறந்த குலத்துக்கும் தோஷம் உண்டாகும் பெண் பேயானவள் என்றுமே மீளாத நரகத்தையே அடைவாள்.  கணவன் நல்லவனாயினும் கெட்டவனாயினும்,  அறிஞனாயினும், அறிவிலியாயினும் அவன் உயிரோடிருக்கும் போதும் அவன் இறந்த பிறகும் கணவனையே தெய்வம் என்று பக்திசெய்து கற்பு ஒழுக்கத்தில் நிலைநிற்பவளே, உத்தமியாவாள்.    கொண்ட கணவனை மதிக்காமல் அலக்ஷியம் செய்து, தன் இஷ்டம்போல அலைபவள் , "சீ  சீ ! இவளும் ஒரு பெண்ணா?" என்று பலராலும் ஏசப்பட்டு மறு ஜன்மத்தில் ஒரு பரமதுஷ்டனைக்  கணவனாக அடைந்து,  அவனால் அடுத்தடுத்துக் கண்டிக்கப்பட்டும் தண்டிக்கப்பட்டும் வருந்தி மிகவும் துன்பமடைவாள்.

கணவன் தெய்வ வழிபாடு, அதிதி ஆராதனை, விரதானுஷ்டானம் முதலியவற்றைச் செய்வானாகில், அவன் மனைவியும் அவனுக்கு அனுகூலமாக யாவையுஞ் செய்ய வேண்டும்.  பிராமண குலத்தாருக்கு எப்படி நான்காவது வருணத்தார் ஏவல் செய்வதே அவர்களுடைய குலத்திற்குரிய தர்மமாகுமோ, அதுபோலவே, கணவனுக்குப் பணி செய்வதே தர்ம பத்தினியின் தர்மமாகும்.  இந்தத் தருமம், எல்லாச் சாதியாருக்கும் பொதுவாகும் .   கணவனே தெய்வம் என்று எண்ணி நடப்பவள் , இறந்த பிறகு உயர்ந்த குலத்தில் பிறந்து, உத்தமனான ஒருவனைத் தனது கணவனாக அடைந்து,  நல்ல மக்களை பெற்றுக் குலவிருத்தி செய்து,  தன்னைப் பெற்ற தந்தைக்கும், மணந்த கணவனுக்கும் புகழை உண்டாக்கி, சுமங்கலியாகவே மரித்து உத்தம லோகத்தை அடைவாள்.

"ஓ! காசிப புத்திரனே!  இறந்தவன் இறந்த பிறகும் துன்பப்படாமல் இன்பமடையும் பொருட்டு, இன்னும் ஒரு விஷயத்தையுஞ்  சொல்லுகிறேன்.  கேட்பாயாக.  

"பன்னிரண்டாம் நாள்  சாஸ்திர விதிப்படி சபிண்டீகரணம் செய்து, ஒரு வருஷம் வரையிலும் நித்திய சிரார்த்தம் செய்ய வேண்டும்.  எவனைக் குறித்து நித்திய சிரார்த்தம் செய்யப்படுகிறதோ அவன் மட்டுமின்றி, அந்தச் சிரார்த்தத்தைச் செய்பவனும் நன்மைகளை அடைவான்!" என்று திருமால் திருவாய் மலர்ந்தருளினார்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்...........தொடரும்!

1 comment:

  1. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏

    ReplyDelete