பகவதி கோவில், குமாரநல்லூர், கோட்டயத்திலிருந்து 4 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.
சேரமான் பெருமாள், மன்னனாக கேரளத்தை ஆண்டு வந்த காலத்தில், இரு கோவில்களை ஒரே நேரத்தில் கட்டி, குடமுழுக்கு செய்ய விரும்பினார். ஒன்று உதயனாபுரம் என்கிற இடத்திலும், இன்னொன்று திங்கள்கடவு என்கிற இடத்திலும். திங்கள்கடவில், சுப்பிரமணிய பெருமானை பிரதிஷ்டை செய்ய விரும்பி வேலைகள் ஜரூராக நடந்தது.
அதே நேரத்தில், மதுரையை பாண்டிய மன்னன் ஆண்டு வந்தான். அங்கு உறையும் மீனாக்ஷி அம்மையின், மூக்குத்தி, காணாமல் போனது. இதை அறிந்த மன்னன், தலைமை பூசாரியை விசாரித்த பொழுது, எந்த விதமான பதிலும் கூற முடியவில்லை. அவர் திணறினார்.
பாண்டிய மன்னன், தலைமை பூசாரி 41 நாட்களுக்குள் மீனாக்ஷியின் மூக்குத்தியை கண்டு பிடித்து ஒப்படைக்கவில்லை எனில், 42வது நாள், மரண தண்டனையை ஏற்க வேண்டிவரும் என கட்டளையிட்டான்.
40 நாட்களும் ஒன்றும் கிடைக்கவில்லை. அன்றைய இரவு. உறங்கிக் கிடந்த தலைமை பூசாரியை, ஒரு வெளிச்சம் வந்து தட்டி எழுப்பி, "என்னுடன் வா", என கட்டளையிட்டது.
நடக்கத் தொடங்கிய பூசாரி, வெளிச்சத்துக்குள் நுழைந்தது தான் தெரியும். அடுத்த நொடியில், திங்கள்கடவில், கோவில் வேலை முற்று பெரும் நிலையில் இருந்த கோவில் முன் இருந்தார்.
அழைத்து வந்த வெளிச்சம் அசரீரி வாக்காக பூஜாரிக்கு கட்டளையிட்டது.
"மீனாக்ஷியாக யாம் இங்கு இருக்கப்போகிறோம். பிரதிஷ்டைக்கான நல்ல நேரம் நெருங்கிவிட்டது என மன்னனிடம் கூறுக" என்றது.
இதை கேள்விப்பட்ட அரசன் சேரமான் பெருமாள் குழம்பிப்போனான். எங்கே சுப்ரமண்யரை பிரதிஷ்டை செய்ய விரும்பினோமோ, அங்கே மீனாக்ஷி ப்ரதிஷ்டைக்கு உத்தரவிடுகிறாளே, என நினைத்து, தான் உருவாக்கிய துர்கை அம்பாளின் சிலையை சிலையோடு கோவிலை நெருங்கினான்.
உடனேயே, கோவில் சன்னதியிலிருந்து "குமாரன் அல்லா ஊரில்" இது "குமாரியின் ஊர்! ஆகவே வேதபுரி மலையில் இருக்கும், சிலையை இங்கு கொண்டுவந்து பிரதிஷ்டை செய்க" என்று உத்தரவு வந்தது. மன்னன், ஆட்களை அனுப்பி சிலையை கொண்டு வந்ததும், மீனாட்சியின் உத்தரவின் பேரில், பரசுராமர் ஒரு வயதான பிராமண உருவத்தில் வந்து பிரதிஷ்டை செய்துவிட்டு, பின்னர் மறைந்து போனார். இதனால், திங்கள்கடவு அன்று முதல் "குமாரநல்லூர்" என்றழைக்கப்பட்டது.
மனம் வருந்திய மன்னன், சுப்பிரமணியர் விக்கிரகத்தை, உதயனாபுரத்தில் பிரதிஷ்டை செய்ததுடன், தன் விருப்பப்படி நடக்காததால், குமாரநல்லூர் கோவிலுக்கான உதவிகளை நிறுத்திக் கொண்டான்.
அன்றைய காலகட்டத்தில், மன்னர் படை சூழ நதியில், பயணம் செய்வார்கள். இப்படி ஒருமுறை பயணம் செய்த பொழுது, திடீர் என படகை பனி சூழ்ந்து, யாருக்கும் கண் தெரியாமல் போனது. பயந்து போன மன்னன், மந்திரியாரிடம் வினவ, அவரும் "குமாரநல்லூர் கோவிலுக்கான உதவியை நிறுத்தியதே காரணம் என்றும், அதை செய்வதாக இப்பொழுதே உறுதியளித்தால், அனைவரும் நலமாக கரைசேரலாம்" என்றார்.
சேரமான் பெருமாள், நதியிலிருந்து நீர் எடுத்து, அர்க்கியம் விட்டு சத்தியம் உரைக்க, வளையல் இட்ட கை ஒன்று, நீரிலிருந்து வெளிப்பட்டு அதை ஏற்றுக் கொண்டது.
மதுரையிலிருந்த வந்த பூசாரியையே இந்த கோவிலுக்கு பூஜாரியாக நியமித்தான். அவரின் சந்ததிகளே இன்றும், அம்பாளுக்கு பூசை செய்து வருகின்றனர்.
சரி! நாம் தெரிந்துகொள்ள இங்கு என்ன உள்ளது!
இந்த கோவிலின் பிரகாரமும், சன்னதியும், ஸ்ரீசக்ர வடிவில் கட்டப்பட்டுள்ளது. ஒருமுறை சென்று வந்தாலே, ஸ்ரீ சக்கரத்துக்குள், புகுந்து, அம்பாள் அருளுடன் வெளி வந்ததுபோல், ஒரு உணர்வு ஏற்படும்.
கோவிலின் மதில்களில், இயற்கை செடியால் வரையப்பட்ட ஓவியங்கள், தரிசிப்பவர் அனைவரையும் கவர்ந்திழுக்கும்.
இந்த கோவிலில் கொண்டாடப்படுகிற "கார்த்திகை தீபம்" அனைவரும் காண வேண்டிய ஒன்று.
அம்பாளின் உத்தரவின் பேரில், கல்விக்கூடங்கள் நிறுவி, இன்றும் கல்வி புகட்டி வருகிறார்கள்.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்..............தொடரும்!
ஓம் ஸ்ரீ மாதா லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகள் போற்றி
ReplyDeleteமீனாட்சி அம்மன் தாயே போற்றி போற்றி
ReplyDeleteஓம் நம குமாராய 🙏🙏🙏 ஓம் ஸ்ரீ லோபமுத்ரா தாயார் சமேத அகத்தீசாய நமஹ 🙏🙏🙏
ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை
ReplyDeleteAmme Sharanam......
ReplyDelete