​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Tuesday 13 October 2020

சித்தன் அருள் - 942 - ஆலயங்களும் விநோதமும் - ஸ்ரீ கிருஷ்ணர் கோவில், உடுப்பி, கர்நாடகா!


உடுப்பி கிருஷ்ணர் கோயில் கர்நாடக மாநிலம் உடுப்பி எனும் நகரில் அமைந்துள்ளது. இத்தலத்தின் மூலவர் கிருஷ்ணர். இக்கோயிலில் மத்வ புஷ்கரிணி எனும் தீர்த்தமுள்ளது. சந்திரக் கடவுள் தனது மனைவிகளான இருபத்து ஏழு நட்சத்திரங்களுடன் கிருஷ்ணரை வழிபட்ட தலம். இங்கு நாள்தோறும் அன்னதானம் அளிக்கின்றனர்.

விஸ்வகர்மாவால் செய்யப்பட்டு துவாரகையில் ருக்மிணி தேவியால் வழிபடப்பட்டு துவாரகை கடலில் மூழ்கிய போது மூழ்கி பல ஆயிரம் ஆண்டுகள் கழித்து மத்வருக்குக் கிடைத்து, மத்வராலேயே பிரதிஷ்டை செய்யப்பட்ட பாலகிருஷ்ணரின் திருவுருவமே உடுப்பி கிருஷ்ணரின் கோயிலில் உள்ளது.

தட்சனின் சாபத்தால் தனது ஒளியையும் அழகையும் இழந்து வருந்திய சந்திரன், சிவபெருமானை நோக்கி உடுப்பியில் கடும் தவம் செய்து இழந்த ஒளியையும் அழகையும் திரும்பப் பெற்றார். அப்போது சந்திரன் நிர்மாணித்த திருக்குளம் ’சந்திர புஷ்கரணி’. நட்சத்திரங்களின் அதிபதியான சந்திரன் தவம் புரிந்ததால் (உடு=சந்திரன்;பா=அதிபதி) உடுபா என்றும் பின்னர் அது மருவி உடுப்பி என்றும் ஆனது.

உடுப்பி கிருஷ்ணனுக்கு வழிபாடு செய்வதற்காக எட்டு சீடர்களைத் தேர்ந்தெடுத்து கணியூர் மடம், சோதே மடம், புதிகே மடம், அத்மார் மடம், பேஜாவர் மடம், பாலிமார் மடம், கிருஷ்ணாபுரம் மடம், சிரூர் மடம் என எட்டு மடங்களையும் நிர்மாணித்து ஒவ்வொரு மடமும் இரண்டு மாதங்கள் நிர்வகிக்க வேண்டும் என்ற நடைமுறையை மத்வர் ஏற்படுத்தினார்.

புதிய சுவாமி மடத்தின் பொறுப்பை ஏற்கும் விழா பர்யாய வைபவம் என்று கொண்டாடப்படுகின்றது. உடுப்பியில் மிகச் சிறப்பாகக்கொண்டாடப்படும் விழாவாக இது அமைகிறது. இவ்விழாவின் போது விறகுத்தேர் அமைக்கப்படுகின்றது. இத்தேர் விறகுதான் கோயில் சமையலுக்குப் பயன்படுகின்றது.

முன்பு கனகதாசர் என்ற மகான் தாழ்த்தப்பட்டிருந்த குலத்தில் பிறந்திருந்ததால் உடுப்பி கோவிலில் நுழைய அனுமதிக்கப்படவில்லை. அவர் தினமும் உடுப்பி கிருஷ்ணனின் கருவறைக்குப் பின்னால் நின்று ஏகதாரி வீணை எனும் ஒரு கம்பி மட்டும் கொண்ட வாத்தியக் கருவியை மீட்டி வழிபட்டுவந்தார். ஒருநாள் கருவறையின் பின்பக்கச் சுவரின் கற்கள் தாமாகவே விழுந்து உடுப்பி கிருஷ்ணரும் பின்புறச்சுவர் நோக்கித் திரும்பி கனகதாசருக்கு காட்சியளித்தார்.கனகதாசர் கண்ணனை வழிபட வழிவகுத்த ஒன்பது துவாரங்கள் கொண்ட பலகணி கனகதண்டி என அழைக்கப்படுகிறது. பக்தர்கள் அனைவரும் கனகதாசர் கிருஷ்ணரை தரிசித்த பலகணி வழியாகவே மூலவரை தரிசனம் செய்யும் வழக்கமும் இந்நிகழ்வுக்குப் பின்னர் ஏற்பட்டது.

இந்த ஒன்பது துவாரங்கள் கொண்ட ஜன்னலில் தான் நவகிரகங்கள் இருப்பதாக ஐதீகம். ஆகவே வேறு தனி சன்னதி, நவகிரகங்களுக்கு கிடையாது.

கிருஷ்ணர் விக்ரகம், சாலிகிராமக்கல்லில், விஸ்வகர்மாவால் உருவாக்கப்பட்டு, ருக்மணி தேவியின் பூசையை ஏற்றுக்கொண்டது.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்............... தொடரும்!

7 comments:

  1. அருமை ஐயா
    ஓம் அகதியர் திருவடி
    சரணம் 🙏🙏🙏🙏

    ReplyDelete
  2. ஓம் ஸ்ரீ மாதா லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகள் போற்றி

    ReplyDelete
  3. கார்முகில்வர்ணா கருணை கண்ணா போற்றி போற்றி ஓம் ஸ்ரீ லோபமுத்ரா தாயார் சமேத அகத்தீசாய நமஹ

    ReplyDelete
  4. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை
    ஓம் கிருஷ்ணா துணை

    ReplyDelete
  5. ஐயா அன்பு வணக்கங்கள். ஜெய் கிருஷ்ணா! ஐயா கிருஷ்ணனின் கதை கேட்க எப்போதும் சுகமே! உடுப்பி எனக்கு மிகவும் பிடித்த கோயில் ஐயா. எல்லோரும் படித்து பயன் பெற க்ரிஷ்ணாஷ்டகம் அனுப்பி உள்ளேன் ஐயா.

    ஸ்ரீராமஜெயம் 🙏

    ஸ்ரீ கிருஷ்ணா அஷ்டகம்

    அஷ்டகம் என்ற எட்டு ஸ்லோகத்தால் தெய்வங்களைத் துதித்து வணங்குதல் சிறப்பு. அந்த வகையில் *ஸ்ரீகிருஷ்ணனைத் துதிக்க உதவும் எட்டு ஸ்லோகங்களின் தொகுப்பு – கிருஷ்ணாஷ்டகம்.* ‘நினைத்துப் பார்க்க முடியாத நல்ல பலன்களை எல்லாம் கொடுக்கக் கூடியது இந்த கிருஷ்ணாஷ்டகம்‘ என்பதை இதன் கடைசி ஸ்லோகமான பலஸ்ருதி சொல்கிறது. கோகுலாஷ்டமியில், தமிழ்ப் பொருளோடு இந்த அஷ்டகத்தைச் சொல்லி சகல பலன்களையும் பெறுவோம்!
    ஸ்ரீகிருஷ்ணாஷ்டகம்
    *வசுதேவ ஸூதம் தேவம் கம்ஸ சாணூர மர்த்தனம் தேவகீ பரமானந்தம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்*
    *பொருள்:* வசுதேவரின் குமாரன்; கம்சன் சாணூரன் உள்ளிட்டவர்களைக் கொன்றவன்; தேவகியின் பரம ஆனந்த ஸ்வரூபியாக விளங்குபவன்; உலகுக்கு குருவாகத் திகழும் கிருஷ்ணனை வணங்குகிறேன்.
    *அதஸீ புஷ்ப ஸங்காசம், ஹாரநூபுர சோபிதம் ரத்ன கங்கண கேயூரம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்*
    *பொருள்:* காயாம்பூ வண்ணத்தைப் போன்றவன்; மாலை, தண்டை, சலங்கை இவற்றால் அழகாகத் திகழ்பவன்; ரத்தினம் இழைத்த கைவளைகள் தோள் அணிகள் அணிந்தவன்; உலகுக்கு குருவாகத் திகழும் கிருஷ்ணனை வணங்குகிறேன்.
    *குடிலாலக ஸம்யுக்தம் பூர்ண சந்த்ர நிபானனம் விலஸத் குண்டல தரம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்*
    *பொருள்:* சுருட்டைத் தலைமுடியுடன் கூடிய அழகு பொருந்தியவன்; முழு நிலவு போன்ற அழகு முகம் கொண்டவன்; பளீர் என ஒளி விடும் குண்டலங்கள் அணிந்தவன்; உலகுக்கு குருவாகத் திகழும் கிருஷ்ணனை வணங்குகிறேன்.
    *மந்தார கந்த ஸம்யுக்தம் சாருஹாஸம் சதுர்ப்புஜம் பர்ஹிபிஞ்சாவ சூடாங்கம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்*
    *பொருள்:* மந்தாரப் பூக்களின் நறுமணத்துடன் கூடியவன்; அழகான புன்னகை கொண்டவன்; நான்கு கைகள் உடையவன்; மயில் தோகையை தலையில் அணிகலனாகச் சூடியவன்; உலகுக்கு குருவாகத் திகழும் கிருஷ்ணனை வணங்குகிறேன்.
    *உத்புல்ல பத்ம பத்ராக்ஷம் நீல ஜீமூத ஸந்நிபம் யாதவானாம் சிரோ ரத்னம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்*
    *பொருள்:* மலர்ந்த தாமரை இதழ் போன்ற கண்களை உடையவன்; நீருண்ட மேகத்தைப் போன்றவன்; யாதவர்களின் ரத்னமாக முடிசூடா மன்னனாகத் திகழ்பவன்; உலகுக்கு குருவாகத் திகழும் கிருஷ்ணனை வணங்குகிறேன்.
    *ருக்மிணீ கேளீ ஸம்யுக்தம் பீதாம்பர ஸூசோபிதம் அவாப்த துளசீ கந்தம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்*
    *பொருள்:* ருக்மிணி தேவியுடன் கேளிக்கைகளில் கலந்து கொள்பவன்; பீதாம்பரத்துடன் ஒளி பொருந்தியவனாகத் திகழ்பவன்; துளசியின் பரிமளத்தை உடையவன்; உலகுக்கு குருவாகத் திகழும் கிருஷ்ணனை வணங்குகிறேன்.
    *கோபிகாநாம் குசத்வந்த்வ குங்குமாங்கித வக்ஷஸம் ஸ்ரீநிகேதம் மஹேஷ்வாஸம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்*
    *பொருள்:* கோபிகை கொங்கைகளின் குங்குமக்குழம்பு அடையாளத்தை மார்பில் கொண்டவன்; ஸ்ரீமகாலட்சுமிக்கு இருப்பிடமானவன். மிகப் பெரிய வில்லாளியாக விளங்குபவன்; உலகுக்கு குருவாகத் திகழும் கிருஷ்ணனை வணங்குகிறேன்.
    *ஸ்ரீவத்ஸாங்கம் மஹோரஸ்கம் வநமாலா விராஜிதம் சங்க சக்ரதரம் தேவம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்*
    *பொருள்:* ஸ்ரீவத்ஸம் எனும் மறுவை அடையாளமாகக் கொண்டவன்; அகன்ற மார்பை உடையவன்; வனமாலை சூடியிருப்பவன்; சங்கு சக்கரங்களைத் தரித்திருப்பவன்; உலகுக்கு குருவாகத் திகழும் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவை வணங்குகிறேன்.
    *க்ருஷ்ணாஷ்டகம் இதம் புண்யம் ப்ராதருத்தாய ய படேத் கோடி ஜந்ம க்ருதம் பாபம் ஸ்மரணேன விநச்யதி*
    *பொருள்:* எவன் ஒருவன் புண்ணியம் மிகுந்த இந்த கிருஷ்ணாஷ்டகம் என்னும் இந்த எட்டு சுலோகங்களைப் பற்றி எண்ணுகிறானோ அவன், கோடிப் பிறவிகளில் செய்த பாவம் அடியுடன் நாசமடையும். அப்படியிருக்க, இவற்றை காலை நேரத்தில் ஆத்மார்த்தமாக, முழு ஈடுபாட்டுடன் படித்து வணங்கினால், அவர்களுக்கு சகல சந்தோஷங்களும் கிடைக்கும். ஐஸ்வர்யம் பெருகும்! மிக்க நன்றி ஐயா. வாழ்க வளமுடன் ஐயா, அம்மா. ஓம் அகத்து ஈசா போற்றி! ஓம் லூபா மாதா போற்றி!

    ReplyDelete