இன்று கோடகநல்லூர் ப்ரஹன்மாதாவப் பெருமாள் கோவிலில் நடை பெற்ற நம் குருநாதர் அகத்தியப்பெருமான் நடத்திய அபிஷேக பூசைகளின் சில காட்சிகள்.
அகத்தியர் அறிவுரை!
அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்கப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!
Thursday, 29 October 2020
Sunday, 25 October 2020
சித்தன் அருள் - 953 - அந்தநாள் >> இந்த வருடம் - 2020 - ஸ்ரீ நீளா பூமி சமேத ப்ரஹன்மாதாவப் பெருமாள் கோவில், கோடகநல்லூர்!
வணக்கம் அகத்தியர் அடியவர்களே!
எல்லா வருடமும் ஐப்பசி மாதம் உத்திரட்டாதி நட்சத்திரமும், திரயோதசி திதியும் ஒன்று சேருகிற நாளில் கோடகநல்லூர் பிரஹன்மாதாவப் பெருமாள் கோவிலில், அகத்தியர் உத்தரவின் பேரில், அடியவர்கள் ஒன்று சேர்ந்து பெருமாளுக்கும், தாயாருக்கும் அபிஷேக பூஜைகளை ஏற்பாடு செய்து வருவதை அறிவீர்கள். அகத்தியர் அடியவர்கள் ஒரு கருவியாகத்தான் செயல்படினும், உண்மையிலேயே, அகத்தியர் பெருமான்தான் இந்த பூசையை நடத்துகிறார் என்பது, முன்பு நடந்த பூஜைகள் சாட்சி.
சித்தன் அருள் 850வது தொகுப்பில், கீழ் வருமாறு உரைக்கப்பட்டிருந்தது.
"29/10/2020 - வியாழக் கிழமை - ஐப்பசி மாதம் சுக்லபக்ஷ த்ரயோதசி திதி- உத்திரட்டாதி நட்சத்திரம்.
கோடகநல்லூர்:- எல்லா தெய்வங்களும், சித்தர்களும், முனிவர்களும், தேவர்களும் ஒன்று கூடி இருந்து, அகத்தியருக்கு தங்கள் உரிமையை பகிர்ந்து கொடுத்த நாள். தாமிரபரணியின் பெருமையை அகத்தியப் பெருமான் உலகுக்கு உணர்த்திய நாள். அன்று அங்கு வரும் பக்தர்களுக்கு அவர்கள் வேண்டுதலை, குறைந்தது, திருப்தியை பெருமாள் அருளுகிற நாள்."
"இன்றைக்கும் விண்ணவர்களை நோக்கி வணங்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த புனிதமான இடத்தில் வந்து புரண்டு எழுந்தாலே போதும் உனது தோஷம் போய் விடும், ஏன் என்றால் இந்த மண்ணுக்கு அவ்வளவு வாசனை உண்டு. நதிக்கு அத்தனை சிறப்பு உண்டு. இந்த தாமிரபரணி நதியை அத்தனை சாதாரணமாக நினைக்கக் கூடாது."
நம் குருநாதர், அகத்தியப்பெருமான் பூசை செய்ய, பெருமாள் ஆனந்தமாக அமர்ந்து அதை ஏற்று வாங்கிக்கொள்கிற முகூர்த்தம் அது. அந்த நாளில், கோடகநல்லூர் கோவிலில் இருக்கவே கொடுத்து வைக்க வேண்டும்.
தமிழக எல்லை கடந்து வருவதில் பிரச்சினை உள்ளதால், இந்த முறை அடியேனால் பங்கு பெற முடியாது என்பதில் சற்று விசனம் இருப்பினும், அகத்தியப்பெருமான், பூஜை சிறப்பாக நடக்க ஏற்பாடு செய்கிறார்.
ஆம்! திருமதி. லட்சுமி என்கிற அகத்தியர் அடியவர், அகத்தியர் ஆணையை சிரம் மேற்கொண்டு, அன்றைய தினம் பூஜைக்காக ஏற்பாடுகளை செய்து வருகிறார்.
தமிழ்நாட்டுக்குள் இருக்கும் அகத்தியர் அடியவர்களுக்கு, அதிக சிரமமின்றி கோடகநல்லூர் வந்து போக முடியும். ஆகையினால், அன்று அங்கு வரும் பக்தர்களுக்கு ஒரு வேண்டுதலை வைக்கிறேன்.
பூஜைக்கு முன்னரும், பூஜை முடிந்த பின்னரும், கோவிலை சுத்தப்படுத்தி கொடுத்துவிட்டு செல்லுங்கள். இந்த உழவாரப்பணியை யாரும் செய்யலாம். யாரேனும் மேலும் பங்கு பெற விரும்பினால், திருமதி.லட்சுமியை அங்கேயே தொடர்பு கொண்டு உதவலாம்.
உங்கள் பிரார்த்தனையை, மனதை அகத்தியப்பெருமானிடம் கொடுத்துவிட்டு, அன்றையதினம் உழவாரப்பணியை மேற்கொள்ளுங்கள்.
எல்லோரின் வாழ்க்கையும் சிறப்பாக மாறும்.
அபிஷேக/பூஜைக்கான பொருட்களை வாங்கி செல்லலாம். மறக்காமல் பச்சை கற்பூரம் பெருமாளுக்கு வாங்கிக்கொடுங்கள்.
மற்றவை அகத்தியர் அருளால்!
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
Friday, 23 October 2020
சித்தன் அருள் - 952 - ஆலயங்களும் விநோதமும் - ஸ்ரீ அனந்தபுரா கோவில், காசர்கோடு, கேரளா!
திவாகர முனிவர் பல காலம் ஸ்ரீமன் நாராயணனை குறித்து தவமிருந்தார். அவரின் தவத்தில் மனமிரங்கி, நாராயணர் ஆதிசேஷன் மேல் பள்ளிகொண்டு காட்சியளித்து என்ன வரம் வேண்டும் என்றார்.
"தங்களின் இந்த அனந்தசயன உருவத்தில் ஒரு விக்கிரகம் செய்து நித்திய பூசைகள் செய்துவர அருளவேண்டும்" என்றார்.
"அப்படியே ஆகட்டும்" என அருளிய இறைவன், அனந்தசயன ரூபத்தில் ஒரு விக்கிரகத்தை அளித்தார்.
அதை வைத்து நித்ய பூசைகள் செய்து வந்தார். ஒரு சிறுவன் அவருக்கு பூசைகளுக்கு பூ பறிக்க, உதவி செய்ய என வந்தான். நித்ய பூசைகள் நல்லபடியாக நடந்து அந்த இடம் செழிப்புறவே, விதியின் வலிமையால், திவாகர முனிவர் இறுமாப்புற்றார்.
இதை அறிந்த இறைவன் அவரின் மனநிலையை மாற்றும் எண்ணத்துடன் திருவிளையாடல் புரிய எண்ணம் கொண்டார்.
ஒருநாள் பூசையின் பொழுது, அவர் ஜபத்திற்காக நீர் எடுத்துவைத்த பாத்திரத்தை, சிறுவன் விளையாட்டாக தட்டிவிடவே, இறுமாப்பில் இருந்த முனிவருக்கு கோபம் வந்தது.
வேகமாக எழுந்து வந்து அந்த சிறுவனை அடிக்கப் போகவே, அவன் ஓடிச்சென்று, மண்மேட்டில் தோன்றிய ஒரு குகைக்குள் பூப்பிளந்து மறைந்து போனான். திடீரென்று தோன்றிய குகையை கண்டதும், அதிசயித்த முனிவர் ஒரு அசரீரியால் நிறுத்தப்பட்டார்.
"முனிவரே! யாமே சிறுவனாக உம்மிடம் வந்தோம். உம் செருக்கை சுட்டிக்காட்டி திருத்திட எண்ணினோம். இனி என்னை தரிசிக்க வேண்டுமாயின் "அனந்தன் காட்டிற்கு" வருக" என்றார் இறைவன்.
நடந்த விஷயங்களை உணர்ந்து மிக வருந்திய முனிவர், அனந்தன் காடு எங்கிருக்கிறது என்றறியாமல், அந்த குகைக்குள் புகுவதுதான் சரி என தீர்மானித்து, உள்ளே புகுந்தார்.
குகையை விட்டு வெளியே வந்தது, அனந்தன்காடு என்கிற இடத்தில்.
அந்த அனந்தன் காடு என்கிற இடம்தான் இன்றைய "திருவனந்தபுரம்".
சரி! இங்கு நாம் தெரிந்துகொள்ள என்ன இருக்கிறது.
- அனந்தபுரா கோவில், இன்றைய திருவனந்தபுர அனந்த பத்மநாபா சுவாமி கோவிலின் மூலஸ்தானம்.
- சிறுவனும், முனிவரும் புகுந்து மறைந்த குகை இன்றளவும் அங்கு உள்ளது.
- முனிவர் குகைக்குள் மறைந்த உடன், அவர் பூசித்து வந்த அனந்தசயன நாராயணர் விக்கிரகத்தை, நீர் சூழ்ந்து குளம் உருவானது. பின்னர் அங்கு ஒரு கோவில் உருவாக்கப்பட்டது.
- இந்த கோவில் குளத்தில் 70 ஆண்டுகளுக்கு முன் ஒரு முதலை வந்தது. அது இன்றளவும் அங்குள்ளது.
- அந்த முதலை, சுத்த சைவம்.
- கோவிலிலிருந்து இரண்டு நேரம் கொடுக்கப்படும் சோற்று உருண்டையை மட்டும்தான் உண்ணும்.
- யாரையும் தொந்தரவு செய்வதோ, அராஜகம் பண்ணுவதோ கிடையாது.
- மிகுந்த சாந்த ஸ்வரூபம். அது உறையும் குளத்தில் நிறைய மீன்கள் இருக்கிறது. ஆனால் அது ஒரு மீனைக்கூட தின்றதில்லை என்கிறார்கள்.
- அந்த கோவிலில் பூஜை செய்யும் பூஜாரியின் வார்த்தைக்கு மிகவும் கட்டுப்பட்டது என்பது ஆச்சரியமான விஷயம்.
- கோவில் பூஜாரி, அந்த குளத்தில்தான் தினமும் இருவேளை ஸ்நானம் செய்கிறார்.
- பூஜாரி கொடுக்கும் உணவை உண்டுவிட்டு, அந்த குகைக்குள் புகுந்து காவல் காக்கிறது.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்...............தொடரும்!
Thursday, 22 October 2020
சித்தன் அருள் - 951 - ஆலயங்களும் விநோதமும் - உச்சிப்பிள்ளையார் கோவில், திருச்சிராப்பள்ளி!
உச்சிப்பிள்ளையார் கோயில் தென்னிந்திய மாநிலமான தமிழகத்தின் திருச்சி நகரத்தில் உள்ள பிள்ளையார் கோயில் ஆகும். 3400 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாறையின் உச்சியில் இந்த கோயில் அமைந்துள்ளதால் உச்சிப்பிள்ளையார் கோயில் என்று இதற்கு பெயர் வந்தது. (இப்பாறைக்கு மலைக் கோட்டை எனவும் பெயர் உண்டு.)
இராவணனுடன் நடந்த போரில் வெற்றி பெற்று அயோத்தியா திரும்பிய இராமருக்கு பட்டாபிஷேகம் நடந்தது. அதில் விபீசணனும் கலந்து கொண்டார். போரில் தனக்கு உதவியதற்காக இராமர், விபீசணனுக்கு இரங்கநாதர் சிலை ஒன்றை பரிசளித்தார். விபீசணன் இராமருக்கு உதவிய போதிலும், அவர் அசுரன் என்ற காரணத்தால் அச்சிலையை அவர் கொண்டு செல்வதில் விருப்பமில்லாத தேவர்கள், அதை தடுக்க வேண்டுமென விநாயகரிடம் வேண்டுகோள் விடுத்தனர். அவர்களது வேண்டுகோளை விநாயகரும் ஏற்றார்.
விபீசணன் இலங்கைக்கு திருச்சி வழியே செல்லும் போது, அங்கு ஓடும் காவிரி ஆற்றில் குளிக்க விரும்பினார். ஆனால், இரங்கநாதர் சிலையை ஒரு முறை தரையில் வைத்து விட்டால் அதை அங்கிருந்து நகர்த்த முடியாது என்ற காரணத்தால் செய்வதறியாமல் திகைத்தார். அப்போது அங்கு இருந்த ஒரு சிறுவனிடம் அச்சிலையைக் கொடுத்து, தான் குளித்து விட்டு வரும் வரையில் அதைத் தாங்கி பிடித்துக் கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்து குளிக்கச் சென்று விட்டார்.
சிறுவன் வேடத்தில் இருந்த விநாயகர், இரங்கநாதர் சிலையை தரையில் வைத்து விட்டார். இதைக் கண்ட விபீசணன் கோபங்கொண்டு அச்சிறுவனைத் துரத்தி மலை உச்சியில் பிடித்து, கோபத்தில் அவனது தலையில் கொட்டினார். அப்பொழுது விநாயகர் தன் சுயரூபத்தை வெளிப்படுத்தினார். பின்பு, அவ்விடத்திலேயே உச்சிப்பிள்ளையார் கோயில் எழுப்பப்பட்டது.
சரி! இங்கு நாம் தெரிந்துகொள்ள என்ன உள்ளது!
விபீசணன் இலங்கைக்கு திருச்சி வழியே செல்லும் போது, அங்கு ஓடும் காவிரி ஆற்றில் குளிக்க விரும்பினார். ஆனால், இரங்கநாதர் சிலையை ஒரு முறை தரையில் வைத்து விட்டால் அதை அங்கிருந்து நகர்த்த முடியாது என்ற காரணத்தால் செய்வதறியாமல் திகைத்தார். அப்போது அங்கு இருந்த ஒரு சிறுவனிடம் அச்சிலையைக் கொடுத்து, தான் குளித்து விட்டு வரும் வரையில் அதைத் தாங்கி பிடித்துக் கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்து குளிக்கச் சென்று விட்டார்.
சிறுவன் வேடத்தில் இருந்த விநாயகர், இரங்கநாதர் சிலையை தரையில் வைத்து விட்டார். இதைக் கண்ட விபீசணன் கோபங்கொண்டு அச்சிறுவனைத் துரத்தி மலை உச்சியில் பிடித்து, கோபத்தில் அவனது தலையில் கொட்டினார். அப்பொழுது விநாயகர் தன் சுயரூபத்தை வெளிப்படுத்தினார். பின்பு, அவ்விடத்திலேயே உச்சிப்பிள்ளையார் கோயில் எழுப்பப்பட்டது.
சரி! இங்கு நாம் தெரிந்துகொள்ள என்ன உள்ளது!
- இங்குள்ள விநாயகர் சிலையின் தலையில் ஒரு வீக்கம் இருப்பதைக் இப்பொழுதும் காணலாம்.
- இக்கோயில் மலைக்கோட்டையின் உச்சியில் 273 அடி உயரத்தில் உள்ளது. பிள்ளையார் சன்னதியை அடைய தரையில் இருந்து 437 படிகளை ஏற வேண்டும்.
- இக்குன்றின் மீதுள்ள மூன்று சிகரங்களில் சிவன், பார்வதி மற்றும் விநாயகர் வீற்றிருந்ததாகவும், ஆதிசேஷனுக்கும் வாயுவிற்கும் இடையில் ஏற்பட்ட பெரும்போரின் விளைவாக, இமயமலைத் தொடரிலிருந்து இந்தியாவின் பல பாகங்களுக்கும் பறந்து சென்ற மலைத் தொகுதிகளில் இது ஒன்று எனவும் கூறுவர்.
- இம்மலையின் இடைக்கோயிலின் மூலவரான செவ்வந்திநாதர் தாயுமானவர் என்றழைக்கப்படுவதற்கு ஒரு கதை கூறப்படுவதுண்டு. அந்நாளில் திருவரங்கத்திற்கும் திருச்சிராப்பள்ளிக்கும் இடையில் காவிரியாறு புரண்டோடிக் கொண்டிருக்கையில், நிறைமாத கர்ப்பிணியான தன் மகளை திருவரங்கத்தில் விட்டு விட்டுத் திருச்சிக்கு வந்த ஒரு தாயால், காவிரியின் வெள்ளம் காரணமாக திரும்பச் செல்ல இயலாதபோது, இறைவனே அத்தாய் வடிவில் அவள் மகளுக்கு மகப்பேறு செய்வித்து, அதன் காரணமாகத் தாயும் ஆனவன் எனப் பெயர் பெற்றான் எனக் கூறுவர்.
- இந்த மலை உச்சியிலிருந்து ஸ்ரீரங்கம் கோவில், காவேரி ஆறு, கொள்ளிடம் ஆறு, திருவானைக்காவல் கோவில் ஆகியவை நன்கு புலப்படும்.
- தமிழ்நாட்டின் தென் கைலாயம் என்ற பெயரும் இதற்கு உண்டு.
- தாயுமான சுவாமியை வழிபட்டால் கர்ப்பிணிகளுக்கு சுகப்பிரசவம் ஆகும்.
- ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.................தொடரும்!
Wednesday, 21 October 2020
சித்தன் அருள் - 950 - ஆலயங்களும் விநோதமும் - ஸ்ரீ பரசுராமர் கோவில், திருவல்லம், திருவனந்தபுரம்!
பாரத கண்டத்தில், பரசுராமருக்கென அமைந்த ஒரே கோவில் இங்குதான் உள்ளது. திருவனந்தபுரத்திலிருந்து கோவளம் செல்கிற பாதையில் 5 கிலோமீட்டர் தூரத்தில் இந்த கோவில் அமைந்துள்ளது.
அவரின் தந்தை ஜமதக்னியின் உத்தரவின் பேரிலும், தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்கிற கருத்துக்கு ஏற்பவும், தன தாயின் தலையை கொய்து, பின்னர் தந்தையின் தபோ பலத்தால் தாயை உயிர்ப்பித்து எழச்செய்தாலும், பரசுராமரை ப்ரம்மஹத்தி தோஷம் பிடித்துக்கொண்டது. இறைவன் சிவபெருமானை நினைத்து தவமிருந்த அவருக்கு, இறைவனே ப்ரத்யக்ஷமாகி, லிங்கத்தை கொடுத்து, அவர் அதை பிரதிஷ்டை செய்து, தன் பாபத்தை போக்கிக்கொண்டார்.
சரி! இங்கு நாம் தெரிந்துகொள்ள என்ன உள்ளது!
- இந்த கோவிலில் பிரம்மா விஷ்ணு சிவன் என மூன்று தெய்வங்களும் இருந்து அருள் பாலிக்கிறார்கள்.
- சிவலிங்கத்தை இறைவனிடமிருந்து பெற்று, பரசுராமர் இங்கு பிரதிஷ்டை செய்துள்ளார்.
- அப்படி பிரதிஷ்டை செய்து பூசை செய்யும் பொழுது பதிந்த, பரசுராமரின் கால் சுவடுகள் இன்றும் அந்த கோவிலில் பாதுகாக்கப்பட்டு பூசை செய்யப்படுகிறது.
- பரசுராமர் தன் தாய் தந்தையருக்கு இங்கு தர்ப்பணம் கொடுத்ததால், பிதுர் தர்பணத்துக்கும், பிதுர் தோஷங்களுக்கும் மிக சிறந்த பரிகார ஸ்தலமாக விளங்குகிறது.
- "வல்லம்" என்றால் தலை. அனந்தசயனத்தில் இருக்கும் பத்மநாபரின் தலை முதலில் திருவல்லத்தில் இருந்ததாகவும், பின்னர் திவாகர முனிவரின் வேண்டுகோளுக்கிணங்க தனது உடலின் நீளத்தை தற்போதைய கோவிலின் வீதிக்கு பெருமாள் சுருக்கிக்கொண்டதாகவும் புராண வரலாறு.
- பரசுராமர் சிவபெருமானையும், விபாகரண மகரிஷி விஷ்ணுவையும், வேதவ்யாஸரையும், ஆதி சங்கரர் பிரம்மாவையும் பிரதிஷ்டை செய்து வழிபட்டதாக புராணங்கள் கூறுகிறது.
- பத்மனாபாரின் தலை திருவல்லத்திலும், உடல் அனந்தசயனத்திலும், பாதம் திருப்பாதபுரம் என்கிற இடத்திலும் இருந்ததாக நம்பப்படுவதால், அனந்த பத்மநாபரை தரிசிக்க வருபவர்கள், திருவல்லத்தில் தொடங்கி, அனந்தசயனம் தரிசித்து பின்னர் திருப்பாதபுரத்தில் பாத தரிசனத்துடன் முடிக்க வேண்டும் என்றும் ஒரு முறை உள்ளது.
- இதை ஒரு தவணை கோவில் என்று கூறலாம். இன்று பூசை செய்கிற பூசாரி, மறுநாள் விட்டு அதற்கு அடுத்த நாள்தான் பூசை செய்யலாம் என்கிற முறை இருக்கிறது.
- உள்ளே காண்கிற ரகசியத்தை வெளியே கூறவும் கூடாது என்கிற கட்டுப்பாடும், பரசுராமர் விதித்திருக்கிறார்.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.......................தொடரும்!
Tuesday, 20 October 2020
சித்தன் அருள் - 949 - ஆலயங்களும் விநோதமும் - பெருமாள் கோவில், கூடல்மாணிக்கம்,இரிஞ்ஞாலகுடா, திரிச்சூர், கேரளா!
கூடல்மாணிக்கம் கோயில், கேரள மாநிலத்தின், திரிசூர் மாவட்டத்தில், இரிஞ்ஞாலகுடா,அருகேயுள்ள மனவளச்சேரி என்ற கிராமத்தில் அமைந்துள்ளது. கோயிலில் பிரதான கட்டமைப்பு, கோட்டைகளுடன் கூடிய சுவர்களுடன் அமைந்துள்ளது. பிரதான கட்டமைப்பைச் சுற்றி நான்கு குளங்கள் உள்ளன. அதில் ஒரு குளம் சுவர் கட்டமைப்பிற்குள் அமைந்துள்ளது. இராமரின் மூன்றாவது சகோதரரான பரத வழிபாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்தியாவின் ஒரே பழங்கால கோயில் கூடல்மாணிக்கம் கோயிலாகும். இருப்பினும் கோயிலின் முக்கியச் சிலை விஷ்ணுவாகும்.
ஒருநாள், இங்கு பிரதிஷ்டை செய்துள்ள, மஹாவிஷ்ணுவின் சிலையின் சுழுமுனையிலிருந்து ஒரு வெளிச்சம் வந்து கொண்டே இருந்தது. இது எப்படி நடக்கிறது, என்ன செய்வது எனத்தெரியாமல், காயம்குளம் என்கிற பகுதியை ஆண்டு வந்த மகாராஜாவின் கைவசம் இருந்த நவரத்தினங்களை கொண்டு வந்து, அந்த ஒளியின் உறைவிடத்தை கண்டுபிடிக்க முயற்சி செய்தனர். எனினும் அந்த ஒளியின் ஆரம்பத்தை கண்டுபிடிக்க முடியாமல் போகவே, பூசாரியின் கையிலிருந்த மாணிக்கக்கல், சிலையின் ஆகர்ஷண சக்தியால் இழுக்கப்பட்டு, சிலையின் சுழுமுனை வழி, உள்ளே சென்று விட்டது. இரண்டு மாணிக்கங்கள் ஒன்று கூடியதால், "கூடல் மாணிக்கம்" என அழைக்கப்பட்டது. 1907இல் மீண்டும் ஒரு ஒளி கடைசியாக தோன்றியது என்கிறார்கள்.
சரி! இங்கு நாம் தெரிந்துகொள்ள என்ன உள்ளது!
- கேரளாவின் பெரும்பாலான கோயில்களில் ஒரு நாளைக்கு ஐந்து வேளை பூஜைகள் மற்றும் மூன்று சீவேலிகள் (சுவாமி புறப்பாடு) இருப்பது வழக்கம். ஆனால் கூடல்மாணிக்கத்தில் மூன்று வேளை பூஜைகள் மட்டுமே உள்ளன. சீவேலியும் இல்லை. இந்த சன்னதியில் மதிய பூஜை மற்றும் பந்தீரடி பூஜை இல்லை.
- வருடாந்த திருவிழாவின் போது மட்டுமே தெய்வம் ஊர்வலத்திற்கு வெளியே கொண்டு செல்லப்படுகிறது.
- எந்த தீபாராதானையும் இல்லை. தீபாராதானை இல்லாத ஒரே கோயில் இதுவாகும்.
- பூஜைக்கு ஊதுபத்திகள் மற்றும் கற்பூரம் பயன்படுத்தப் படுவதில்லை.
- தெய்வத்திற்கான மலர் பிரசாதம் தாமரை, துளசி மற்றும் அரளி ஆகியவை மட்டுமே.
- ஆனால் அவை கோயில் வளாகத்தில் வளர்க்கப்படுவதில்லை.
- பூசைக்காகவோ அல்லது மாலைகளை தயாரிப்பதற்காகவோ வேறு எந்த பூவும் எடுக்கப்படுவதில்லை.
- தாமரை மாலை தெய்வத்திற்கு ஒரு முக்கியமான பிரசாதமாகும்.
- 101 தாமரை பூக்களுக்கு குறையாத ஒரு மாலை தெய்வத்திற்கு அணிவிக்கப்படும்.
- கட்டிடக்கலைக்கு, மிகவும் பிரசித்தி பெற்ற கோவில். ஆகையினால், பழங்கால கட்டிடக்கலையை படிப்பவர்கள், ஆராய்ச்சி செய்பவர்கள், இன்றும் இந்த கோவிலை ஒரு முன்மாதிரியாக வைத்து கற்று வருகிறார்கள்.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....................தொடரும்!
Monday, 19 October 2020
சித்தன் அருள் - 948 - ஆலயங்களும் விநோதமும் - அய்யர் மலை இரத்தினகிரீஸ்வரர், கரூர்!
ஆரிய மன்னன் ஒருவன் மாணிக்கக் கற்கள் வேண்டி இறைவனிடம் வந்தான். “மாணிக்கக் கற்களை நீ பெற வேண்டுமென்றால் இந்த தொட்டியை காவிரி நீரால் நிரப்ப வேண்டும்” என்று ஒரு தொட்டியை இறைவன், அரசனிடம் காண்பித்தார். அந்த தொட்டியில் எவ்வளவு தான் நீரினை ஊற்றினாலும் நிரம்பவில்லை. இதனால் கோபமடைந்த மன்னன் அவனது வாளை எடுத்து இறைவனிடத்தில் வீசினான். அந்த சமயம் இறைவன் மாணிக்கக் கற்களை மன்னனுக்கு தந்து அருள் பாவித்தார். இறைவனை காயப்படுத்தியதில் வருத்தமடைந்த மன்னன், அந்த கோவிலிலேயே இறைவனுக்கு சேவை செய்து முக்தி பெற்றான் என்கிறது வரலாறு.
- அந்த மன்னனால், இறைவன் வெட்டு பட்டதால், இத்தலத்தில் சிவனுக்கு ‘முடித்தழும்பர்’ எனும் பெயரும் உண்டு. இன்றளவும் சிவலிங்கத்தின் மேல் பகுதியில் இந்த வடு காணப்படுகிறது.
- சிவலிங்கத்தின் முன்பு அந்த மன்னனால் நிரப்பப்படாத தொட்டி தற்போதும் பொய்வாசிக் கொப்பரை என்னும் நீர் தொட்டியாக இருக்கின்றது.
- சிவனுக்கு நாள்தோறும் அருகிலுள்ள காவிரியிலிருந்து 10 குடம் நீர் கொண்டு வரப்பட்டு, அந்த தொட்டியில் நிரப்பி, காவிரி நீரால் உச்சிப்பொழுதில் அபிஷேகம் செய்யப்படுகிறது.
- இரத்தினகிரீஸ்வரர் கோவிலில் சிவன் சுயம்புவாக காட்சி அளிக்கின்றார்.
- இங்கு காட்சியளிக்கும் சிவபெருமான் இரத்தினங்களாக இருப்பதால் இம்மலையைச் சுற்றிலும் உள்ள பகுதிகளில் பூமிக்கு அடியில் பச்சை, சிவப்பு போன்ற கற்கள் நிறைய கிடைக்கின்றன.
- 8 பாறைகளுக்கு நடுவே உள்ள ஒன்பதாவது பாறையில் மேலுள்ள மலையின் மீது சிவபெருமான் சுயம்புவாக அருள்பாவிக்கின்றார்.
- சித்திரை மாதத்தில் சூரியனின் கதிர்கள், சுவாமி சன்னிதிக்கு நேரே உள்ள துவாரங்களின் வழியே சிவலிங்கத்தின் மீது விழுகின்றது.ரத்தினங்களின் எண்ணிக்கை 9. அதாவது நவரத்தினம் என்போம்.
- இந்த அய்யர் மலையில் உள்ள சிறப்புகள் எல்லாம் 9ஐ குறிப்பதால் இங்குள்ள சிவன் ரத்தினகிரீஸ்வரர் என்று பெயர்.
- இம்மலையில் உள்ள பாம்புகள் கடித்தால் விஷம் ஏறுவதில்லை.
- இந்த மலை தற்போது மக்கள் பேச்சு வழக்கில் அய்யர்மலை என்று அழைக்கப்பட்டு வருகிறது.
- முதலில் காலையில் காவிரிக்கரையில் வீற்றிருக்கும் கடம்பரை தரிசித்து விட்டு, இரண்டாவதாக நடுப்பகலில் இரத்தினகிரீஸ்வரர் தரிசித்து வணங்கி, மூன்றாவதாக மாலையில் திரு ஈங்கோய்மலை நாதரையும் ஒரே நாளில் தரிசித்தால் நல்ல பலன் என்பது ஐதீகம்.
- குலதெய்வம் தெரியாதவர்கள் இரத்தினகிரீஸ்வரர் குலதெய்வமாக வழிபடலாம்.
- திருமண தடை நீங்க, குழந்தை பாக்கியம் பெற, தொழிலில் முன்னேற்றம் அடைய இந்தக் கோவிலில் வேண்டிக் கொண்டால் நிச்சயம் பலன் உண்டு.
- இதுதவிர மூட்டு வலி, இதய நோய், ரத்த கொதிப்பு, ரத்த அழுத்தம் உள்ளவர்கள் இந்த கோவிலின் மலையை ஒருமுறை ஏறி வந்தால் மாற்றத்தை உணர முடியும் என்று கூறுகின்றனர்.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்..................தொடரும்!
Sunday, 18 October 2020
சித்தன் அருள் - 947 - ஆலயங்களும் விநோதமும் - திருநோக்கிய அழகியநாதர் கோயில், திருப்பாச்சேத்தி, சிவகங்கை மாவட்டம்!
திருநோக்கிய அழகியநாதர் கோயில், தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பாச்சேத்தி கிராமத்தில் அமைந்த சிவன் கோயிலாகும்.
பிரம்மா சிவனின் கோபத்தை அனலாகத் திரட்டி கடலுக்குள் செலுத்தினார். கடலுக்குள் புகுந்த அனல் குழந்தையாகப் பிறக்கவே, அதற்கு ஜலந்தரன் என பெயரிட்டனர். ஜலந்தரன் முனிவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் தொந்தரவு கொடுத்தான். அவனை அழிப்பதற்கு அவனுடைய மனைவியான பிருந்தையின் பதிவிரதத்தை அழிக்கவேண்டும் என்று திருமால் அறிந்தார். அதனை அறிந்த அவள் தீயில் புகுந்து தன் உயிரை மாய்த்துக்கொண்டாள். ஜலந்திரனும் தன் வலிமையை இழந்து சிவனிடம் தோற்றான். சிவன் பூமியில் ஒரு வட்டத்தை வரைந்து ஜலந்திரனை எடுக்கக் கூறியபோது அது சக்கரமாகி அழித்தது. பிருந்தையின் சாம்பலில் திருமால் கலந்தார். வைகுண்டம் இருண்டது. அப்போது பார்வதி, லட்சுமியிடம் திருப்பாச்சேத்தி இறைவனை வழிபட்டால் அவளுடைய கணவனை அடையலாம் என்று கூறவே திருமகளும் அவ்வாறே செய்தார். சிவன் சில விதைகளை கொடுத்து பிருந்தையில் சாம்பலில் தூவச் சொல்ல அதிலிருந்து துளசி தோன்றவே, திருமால் சிவனை அர்ச்சித்துவிட்டு மீதியை மாலையாக்கி அணிந்தார். அதனால் சோம வாரத்தில் இறைவனுக்கு துளசியால் அர்ச்சனை செய்யப்படுகிறது.
- 1300 ஆண்டுகள் பழமையான கோவில்.இங்கு வந்து இறைவனை தரிசித்தால், செல்வம் பெருகும்.
- திருமணத்திற்கு பின் கருத்து வேறுபாட்டால் தம்பதியர் பிரிந்திருந்தால், இங்கு வந்து அழகியநாதரை தரிசித்தால் போதும், ஒன்று சேருவர்.
- இசைக்கு அதிபதியான நடராஜர், இங்கு ஒலி வடிவாக இசைக்கல் நடராஜராக இருக்கிறார்.
- இங்கு திங்கட்கிழமை அன்று மட்டும், சிவபெருமானுக்கு, துளசியால் அர்ச்சனை செய்யப்படுகிறது.
- துளசியை சிவபெருமான் உருவாக்கிய இடம்.
- உச்சிகால பூசையின் பொழுது, இரண்டு மரகத லிங்கங்களுக்கு அபிஷேகம் நடைபெறுகிறது.
- இரண்டு மரகத லிங்கங்களை ஒரே நேரத்தில் பார்ப்பது அபூர்வம்.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
Saturday, 17 October 2020
சித்தன் அருள் - 946 - ஆலயங்களும் விநோதமும் - ஸ்ரீதிரிநேத்ர தசபுஜ வீர ஆஞ்சநேயர் திருக்கோவில், அனந்தமங்கலம், நாகப்பட்டினம்!
திருக்கடவூர் - தரங்கம் பாடிக்கு இடையே தேசிய நெடுஞ்சாலையிலிருந்து ஒரு கிலோமீட்டர் கிழக்கில் அனந்தமங்கலம் அமைந்துள்ளது. சிதம்பரம், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சீர்காழி ஆகிய ஊர்களில் இருந்து நேரடி பேருந்து வசதி உள்ளது. அருகாமை ரெயில் நிலையங்கள் மயிலாடுதுறை மற்றும் காரைக்கால்.
சிரஞ்சீவிகள் எழுவரில் ஒருவரான அனுமனுக்கு, அனந்தமங்கலம் நிரந்தர வாசஸ்தலம். ஆதலால் இங்கு இவரை வழிபட கால நேரம் வரையறை இல்லை. எனினும் அவர் அவதரித்த மார்கழி மாத மூல நட்சத்திரம் கூடிய அமாவாசை தினத்திலும், பிரதிமாதம் அமாவாசை தினத்திலும், புதன், வியாழன், சனிக்கிழமைகளில் கேட்டை நட்சத்திரத்திலும், மற்றும் ராகுகாலம், எமகண்டம், அஷ்டமி திதி ஆகிய நேரங்களிலும் அனுமனை வழிபட்டு தீமைகளை விலக்கிக் கொள்ளலாம்.
நாடெங்கும் அனுமனுக்கு பல்லாயிரக்கணக்கான ஆலயங்கள் கட்டப்பட்டுள்ளன. அனுமன் மீதான பக்தியாலும், அவரை வழிபடுவதற்காகவும் சிலை வடித்து மக்களால் கட்டப்பட்ட ஆலயங்கள் இவை. ஆனால் அனுமனே நேரில் வந்து எழுந்தருளியதாக கூறப்படும் ஒரே ஆலயம், நாகப்பட்டினம் மாவட்டம் அனந்தமங்கலத்தில் உள்ள ஸ்ரீதிரிநேத்ர தசபுஜ வீர ஆஞ்சநேயர் திருக்கோவில் ஆகும். ராமாயண வரலாற்றுடன் நேரடி தொடர்பு கொண்ட ஆலயம் என்ற சிறப்பை இந்தத் தலம் பெற்றுள்ளது.
இலங்கையில் யுத்தம் செய்து, சீதையை மீட்ட பின்னர், புஷ்பக விமானம் ஏறி ராமன், சீதை, லட்சுமணன், அனுமன் முதலியோர் அயோத்திக்கு திரும்பினர். வழியில் பரத்வாஜ மகரிஷியின் ஆசிரமத்தில் இறங்கி அனைவரும் விருந்து உண்டனர். அப்போது அங்கு வந்த நாரதர் ராமபிரானை வாழ்த்தினார். பின்னர் அவர் ராமபிரானிடம் ‘ராவணன் அழிந்த பின்னரும் அரக்கர்கள் சிலர் ஆங்காங்கு இருக்கவே செய்கின்றனர். அவர்களில் ரக்தபிந்து, ரக்தராட்சகன் ஆகிய இருவரும் மிகவும் கொடியவர்கள். அவர்கள் தற்சமயம் கடலுக்கடியில் கடுந்தவம் செய்து கொண்டிருக்கின்றனர். அவர்களின் தவம் நிறைவடையுமானால் ராவணன் போல வரமும் உரமும் பெற்று உலகை அழித்துவிடுவர். ஆதலால் உலக நன்மையின் பொருட்டு அவர்களை தாங்கள் அழிக்க வேண்டும்’ என்று வேண்டிக் கொண்டார்.
ராமபிரான், ‘நாரதரே! தாங்கள் சொன்னபடி அந்த அரக்கர்களும் அழிக்கப்பட வேண்டியவர்களே. ஆனால் நான் பரதனுக்கு கொடுத்த வாக்குப்படி உடனே அயோத்திக்கு திரும்ப வேண்டும். லட்சுமணனும் என்னை பிரிந்து செல்ல மாட்டான். எனவே அந்த அரக்கர்களை அழிக்க ஆற்ற லுடைய மாவீரன் அனுமனை அனுப்புவோம்’ என்றார்.
அனைவரும் இதை ஆமோதிக்க அனுமனும் பணிவுடன் தன் ஒப்புதலைத் தெரிவித்தார். அனுமன் சிரஞ்சீவி வரம் பெற்றவர். அளவிலா ஆற்றல் கொண்டவர். அட்டமா சித்திகளும் கற்றவர். எனினும் மாயாவிகளான அரக்கர்களை வெல்ல இது போதாது. ஒவ்வொரு இறை வடிவமும் அனுமனுக்கு ஒவ்வொரு விஷயத்தை அருளியது. கடலுக்கு கீழே தவம் செய்த அசுரர்களையும் அவர் களது படையினரையும் அழித்து துவம்சம் செய்த அனுமன், தனக்கு தரப்பட்ட கடமையை செவ்வனே செய்து முடித்து, ஆனந்தத்துடனும் ராமனை சந்திக்கப் பயணமானார். அப்படி வரும் வழியில் கடற்கரை ஓரத்தில் இயற்கை அழகு நிரம்பிய இத்தலத்தில் ஆனந்தத்துடன் தங்கினார். அப்படி அவர் தங்கிய இடம் ‘ஆனந்தமங்கலம்’ என பெயர் பெற்றது. தற்போது வழக்கில் அனந்தமங்கலம் என்று அழைக்கப்படுகிறது.
சரி! இங்கு நாம் தெரிந்து கொள்ள என்ன உள்ளது!
- அனுமன் தான் விரும்பி அமர்ந்த இடம்.
- திருமால் தன்னுடைய சங்கு, சக்கரத்தையும்,
- பிரம்மா தனது பிரம்ம கபாலத்தையும்,
- ருத்ரன் மழுவையும்
- ராமபிரான் வில்லையும், அம்பையும்
- கருடாழ்வார் தம் சிறகுகளையும் அளித்தார்.
- கடைசியாக அங்குவந்த சிவபெருமான், பத்து கரங்களிலும் ஆயுதங்கள் தரித்து நின்றிருந்த அனுமனைப் பார்த்தார். தாம் என்ன தருவது என்று சிந்தித்தார். தம்முடைய சிறப்புக்குரிய மூன்றாவது கண்ணையே அனுமனுக்கு அளித்தார். மூன்று கண்களும் (திரிநேத்ரம்), பத்து கைகளும் (தசபுஜம்) கொண்டு வீரக்கோலத்தில் இருந்த அனுமன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
இப்படி தெய்வங்கள் வழங்கிய ஆயுதங்களைத் தாங்கி தசபுஜங்களுடன் அனுமன் காட்சியளித்தார்.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்................தொடரும்!
Friday, 16 October 2020
சித்தன் அருள் - 945 - ஆலயங்களும் விநோதமும் - முருகர் கோவில், வில்லுடையான்பட்டி, நெய்வேலி!
தமிழகத்தில் அறுபடை வீடுகள் மட்டுமல்லாமல், எண்ணற்ற பல தலங்களிலும் முருகன் கோயில் கொண்டிருக்கிறார்.
முருகப் பெருமான் பெரும்பாலும் வேலுடன் வேலாயுதபாணியாகவும், தண்டத்துடன் தண்டாயுதபாணியாகவும் திருக்காட்சி தருவார். ஆனால், ஒரு தலத்தில் முருகப் பெருமான், வேடுவக் கோலத்தில் ஜடாமுடியுடனும், திருக்கரங்களில் வில்லும் அம்பும் ஏந்தியவராகத் திருக்காட்சி தருகிறார்.
கடலூர் மாவட்டம், வடலூர் ரயில் நிலையத்துக்கு வடக்கில் சுமார் 4 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கும் வேலுடையான்பட்டு என்ற தலத்தில் கோயில் கொண்டருளும் முருகக் கடவுள், வில்லேந்திய கோலத்தில், வள்ளி, தெய்வானையுடன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். மூவரின் திருவுருவங்களும் ஒரே கல்லில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
புராணக் காலத்தில் இந்தப் பகுதி அடர்ந்த வனமாக இருந்துள்ளது. முருகப் பெருமானின் தரிசனம் வேண்டி, முனிவர்களும் தேவர்களும் இந்தப் பகுதியில் நீண்ட தவம் மேற்கொண்டனர். அவர்களுடைய தவத்துக்கு இரங்கிய முருகப்பெருமான், முதலில் ஜோதியாகவும், பின்னர் வில்லும் அம்பும் ஏந்திய வேடுவராகவும் திருக்காட்சி அளித்தார். தரிசனம் தந்த முருகப் பெருமானுக்கு சிறப்பான ஆலயம் அமைத்து வழிபட்டனர். காலப் போக்கில் ஆலயம் மண்மேடிட்டு மறைந்துவிட்டது.
கி.பி. 13-ம் நூற்றாண்டில் வாழ்ந்த சித்ரகாடவன் என்ற பல்லவ வம்சத்து மன்னரின் பசுக்கள், இந்தப் பகுதியில் இருந்த காட்டுப் பகுதிக்கு மேயச் செல்வது வழக்கம். ஆனால், அரண்மனைக்குத் திரும்பியதும் பால் கொடுப்பதில்லை. மன்னருக்கு ஒன்றும் விளங்கவில்லை. ஒருநாள் மேயச் செல்லும் பசுக்களைத் தொடர்ந்து சென்றார். வனத்தில் ஒரு புதருக்கு அருகில் பசுக்கள் தானாக பாலைச் சொரிந்துகொண்டிருந்தது. மன்னன் வியப்புற்ற வனாக, அந்த இடத்தை மண்வெட்டியால் வெட்டினான். அப்போது ரத்தம் பெருகி வரவே திடுக்கிட்ட மன்னர், அந்த இடத்திலிருந்த புதரை மெள்ள மெள்ள அப்புறப்படுத்திவிட்டுப் பார்த்தபோது, மண்வெட்டி பட்டதால் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டு, ரத்தம் பெருகிய நிலையில் காட்சி தந்தார் முருகப் பெருமான். அன்றிரவு மன்னரின் கனவில் தோன்றிய முருகப் பெருமான், தமக்கு அந்த இடத்தில் ஒரு கோயில் கட்டும்படி உத்தரவிட்டார். அப்படி உருவானதுதான் வேலுடையான்பட்டு வில்லேந்திய வேலவனின் திருக்கோயில்.
- மூலவர் மண்ணிலிருந்து சுயம்புவாகத் தோன்றியவர்.
- உற்சவர் கடலில் கிடைத்தவர். இங்குள்ள உற்சவர் சிலை, கடலில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களால் கண்டெடுக்கப்பட்டு, கோயிலில் வழிபாட்டுக்கு வைக்கப் பட்டது.
- சுற்றிலுமுள்ள 18 கிராமங்களுக்கும் வேலுடையான்பட்டு வேலவன் குலதெய்வமாக இருந்து அருள்புரிந்து வருகிறார்.
- கந்த சஷ்டியின்போது குழந்தைப் பேறு இல்லாதவர்கள், இந்தக் கோயிலுக்கு வந்து வேண்டிக் கொண்டால், குழந்தை பாக்கியம் கிடைப்பதாக பக்தர்கள் நம்பிக்கையுடன் சொல்கிறார்கள்.
- கடன், நோய் போன்ற பல பிரச்னைகளையும் தீர்க்கும் பிரார்த்தனைக் கடவுளாக பக்தர்கள் போற்றுகிறார்கள்.
- இந்த ஊரை சுற்றியுள்ள அனைத்து கோவில்/கிராமங்களில் இருந்தும். பங்குனி உத்திரத்தின் பொழுது, 108, 1008 என காவடி ஏந்திய பக்தர்கள், இந்த கோவிலுக்கு வருவது, பிரமிக்க வைக்கும் நிகழ்ச்சி.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்................தொடரும்!
Thursday, 15 October 2020
சித்தன் அருள் - 944 - ஆலயங்களும் விநோதமும் - ஸ்ரீ சரநாராயண பெருமாள், திருவதிகை, பண்ருட்டி, தமிழ்நாடு!
பண்ரூட்டியின் அருகில் சுமார் 3 km தொலைவில் உள்ளது, இந்த கோவில். பண்ருட்டியில் இருந்து பாலூர் வழியாக திருவந்திபுரம் பேருந்தில் ஏறினால் திருவதிகை அடையலாம் .
ஸ்ரீமந் நாராயணர் அவரிடம் சிவபெருமான் திரிபுரா அசுரர்களை அழிக்க உதவி செய்யுமாறு கேட்கிறார் அதற்கு நாராயணர் சிவபெருமானிடம் தேவர்களின் உதவியுடன் தேரை அமைத்து பிரம்மாவை தேரோட்டியாகவும், பூமியை ரதமாகவும், சூரியன் சந்திரரை சக்கரங்களாகவும், நான்கு வேதங்களை குதிரையாகவும் வைத்துக்கொண்டு, மேருமலையை வில்லாகவும் ஆதிசேஷனை நாணாகவும் செய்து யுத்தத்தை தொடங்குமாறு கூறினார். வில்லிற்கு தான் அம்பாக விளங்கி திரிபுரர்களை சம்ஹாரம் செய்வதாக கூறினார். ஆதலால் இத்திருத்தலத்தில் அவர் சரநாராயண பெருமாள் என்று அழைக்கப்படுகிறது. இன்றும் வீரட்டேஸ்வரர் கோயில் வைகாசி மாத திரிபுரர் எரிக்கும் விழாவில் நாராயணர் கருட வாகனத்தில் சரத்துடன் எழுந்தருளி சரம் கொடுக்கும் நிகழ்ச்சை நடைபெறுகிறது.
சரி! ங்கு நாம் தெரிந்து கொள்ள என்ன உள்ளது!
- 2000 வருட பழமையான கோயில்மற்ற கோயில்களில் கை கூப்பி நிற்கும் கருடாழ்வார் இந்தக்கோயிலில் கைகட்டி சேவகம் செய்யும் நிலையில் காட்சிதருகிறார்.
- உப்பிலியப்பன் ஸ்ரீனிவாசனை போல் இங்குள்ள சரநாராயண பெருமாள் ஸ்ரீதேவியை திருமணம் செய்து கொண்டு நின்ற கோலத்தில் காட்சிதருகிறார்.
- மூலவர் சரநாராயண பெருமாள் முழுவதும் சாளக்ராமத்தால் ஆனவர்.
- திரிபுர சம்ஹாரத்தில் சிவபெருமானுக்கு சரம் கொடுத்து உதவியதால் சரநாராயண பெருமாள் என்று அழைக்கப்படுகிறார்.
- இக்கோயிலில் சயன கோலத்தில் (படுத்திருக்கும்) நரசிம்மர் தாயாருடன் காட்சி தருகிறார்.
- திருமாலின் திருக்கோயில்களில் இந்தக் கோயிலில் தான் நரசிம்மர் சயன கோலத்தில் தெற்கு நோக்கி சயனத்திருக்கிறார்.
- 700 ஆண்டுகளுக்கு முன்பு வேதாந்த தேசிகர் இவரை வழிபட்டதாக கூறுகிறார்கள்.
- இந்த சயனநரசிம்மர் திருவக்கரையில் வக்ரா சூரனை அழித்து விட்டு அதன் பரிகாரத்துக்காக இத்தலத்தில் வந்து சயனித்துளார்.
- தாயாருடன் எழுந்தருளியதால் இது போகசயனம் ஆகும்.
- சிவனுக்கு பிரதோஷம் நடைபெறுவது போல் இவருக்கும் பிரதோஷம் அன்று சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.
சித்தன் அருள்.............தொடரும்!
Wednesday, 14 October 2020
சித்தன் அருள் - 943 - ஆலயங்களும் விநோதமும் - ஸ்ரீ சிவசைலநாதர் கோவில், சிவசைலம், அம்பாசமுத்திரம், தமிழ்நாடு!
சிவசைலநாதர் கோவில், சிவசைலம், அம்பாசமுத்திரம் ஊருக்கு பக்கத்தில் அமைந்துள்ளது. இங்கு அமர்ந்துள்ள சிவபெருமானுக்கு, சிவசைலம் சொந்த ஊர். அவரது துணைவி பரமகல்யாணிக்கு பக்கத்தில் அமைந்துள்ள கீழ்ஆம்பூர், தாய் வீடு.
சரி இங்கு தெரிந்துகொள்ள என்ன உள்ளது!
பொதுவாக எல்லா கோவில்களிலும் ஸ்வாமிக்கும் அம்பாளுக்கும் திருமண வைபவம் நடக்கும். ஆனால் இந்த கோவிலில் மட்டும், மனிதர்களுக்கு நடப்பதுபோல், மறுவீடு சடங்கு நடத்தப்படுகிறது. திருமணம் முடிந்த பிறகு, ஸ்வாமியும் அம்பாளும், கீழ் ஆம்பூருக்கு பல்லக்கில் எழுந்தருளி, மூன்று நாட்கள் இருந்து, அனைவரையும் அருளியபின், சிவசைலத்துக்கு, ஊர்க்காரர்கள் செய்யும், சீர் மரியாதையை வாங்கிக்கொண்டு திரும்பி செல்வர். இதுபோல், இறை மூர்த்தங்கள், வேறு எங்கும் மறுவீடு செல்வதோ, ஊர்காரர்கள் சீர் மரியாதை செய்வதோ கிடையாது. அம்பாளை தங்கள் வீட்டு பெண்ணாகவும், சிவபெருமானை தங்கள் வீட்டு மாப்பிளையாகவும் ஊர்காரகள் பார்ப்பது வேறு எங்கும் கிடையாது.
அங்கு வசித்த அக்னிஹோத்ரி என்கிற தம்பதிகளுக்கு, சந்ததி இல்லாமல் போகவே, அம்பாள் கனவில் வந்து "கிணறு வெட்டுங்கள். அதில் கல்யாணியாக நான் கிடைப்பேன். அதை வைத்து பிரதிஷ்டை செய்யுங்கள்" என அம்பாள் கூறியதற்கு ஏற்ப, சிலை கிடைக்கவே, அதுவே கீழாம்பூரில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
சிவசைலம் கோவிலில் 11 வது நாள் நடக்கும் தேரோட்டத்தில், அம்பாளின் தேரை பெண்கள் மட்டுமே இழுப்பர்.
இந்த கோவிலில், சிவன் சன்னதிக்கு முன்பில், ஒரு உரலும், உலக்கையும் வைக்கப்பட்டுள்ளது. திருமணம் ஆகாதவர்கள் அதில் போடப்பட்டிருக்கும் மஞ்சளை இடித்து, பொடியாக்கி கொஞ்சம் பூசிக்கொண்டால் திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை.
இப்பகுதியை ஆண்ட சுதர்சன பாண்டியன் என்கிற மன்னன், தினமும் இறைவனை தரிசிக்க வருவான். ஒருநாள் மன்னர் வராததை கண்ட, பூஜாரி, மன்னருக்கு அணிவிக்க வைத்திருந்த மாலையை அங்கு வந்து வேண்டிக்கொண்ட ஒரு பெண்மணிக்கு கொடுக்க, அவரும் கழுத்தில் அணிந்துகொண்டார். சோதனையாக அதன் பின்னர் மன்னர் தரிசனத்துக்கு வந்தார். அந்த பெண்மணியிடம் மன்றாடி அந்த மாலையை திருப்பி வாங்கி, மன்னர் வந்ததும் அவருக்கு அணிவித்தார் பூஜாரி. மன்னர் உற்று பார்த்த பொழுது, ஒரு நீண்ட முடி அந்த மாலையில் இருந்தது. இதைக்கண்ட மன்னர் கோபமுற்று பூஜாரியை வினவ, அவரும் அது சிவபெருமானின் சடையில் உள்ள முடி என்றுவிட்டார்.
அவ்வாறாயின் அதை உறுதி செய்ய கர்பகிரகத்துக்கு வெளியே நின்று பார்க்க தீர்மானித்து, எல்லா பக்கத்திலிருந்தும், சுவரில் ஓட்டை போடச்சொன்னான். நேர்மையான பூஜாரியை காப்பாற்ற எண்ணிய சிவபெருமான், மன்னன் எந்த பக்கத்திலிருந்து நோக்கினும், சடை முடி தெரிய அமர்ந்திருந்தார். மன்னரும் அமைதியுற்றார். இன்றும் அந்த துவாரங்கள் வழியாக பார்த்தால், சன்னிதானத்தில் இறைவன் சடை முடியுடன் அமர்ந்திருப்பதை காணலாம்.
இன்றும் லிங்கம் ஜடாமுடியுடன் காட்சி தருவது மிகச் சிறப்பாக கருதப்படுகிறது.
இந்த கோவிலில் கிழக்கு நோக்கி அமர்ந்திருக்கும் நந்தியானது, எழுந்து செல்ல தயாராக நிற்கும் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. முதலில், மிகுந்த உயிரோட்டமாக நந்தியின் சிலையை செய்த உடன், அது உயிர் பெற்று கிளம்ப முயற்சித்தது எனவும், உலகின் முதல் சிற்பியான மாயன் இதைக்கண்டு, தன கையிலிருந்த உளியை அதன் மீது எறிந்தார். முதுகில் உளிபட்டு, குறை ஏற்பட்டதால், அங்கு சிலையாகவே அமர்ந்ததாக கூறப்படுகிறது. இன்றும் நந்தியின் முதுகில் உளி பட்ட தழும்பை காணலாம்.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்......................தொ டரும்!
Tuesday, 13 October 2020
சித்தன் அருள் - 942 - ஆலயங்களும் விநோதமும் - ஸ்ரீ கிருஷ்ணர் கோவில், உடுப்பி, கர்நாடகா!
உடுப்பி கிருஷ்ணர் கோயில் கர்நாடக மாநிலம் உடுப்பி எனும் நகரில் அமைந்துள்ளது. இத்தலத்தின் மூலவர் கிருஷ்ணர். இக்கோயிலில் மத்வ புஷ்கரிணி எனும் தீர்த்தமுள்ளது. சந்திரக் கடவுள் தனது மனைவிகளான இருபத்து ஏழு நட்சத்திரங்களுடன் கிருஷ்ணரை வழிபட்ட தலம். இங்கு நாள்தோறும் அன்னதானம் அளிக்கின்றனர்.
விஸ்வகர்மாவால் செய்யப்பட்டு துவாரகையில் ருக்மிணி தேவியால் வழிபடப்பட்டு துவாரகை கடலில் மூழ்கிய போது மூழ்கி பல ஆயிரம் ஆண்டுகள் கழித்து மத்வருக்குக் கிடைத்து, மத்வராலேயே பிரதிஷ்டை செய்யப்பட்ட பாலகிருஷ்ணரின் திருவுருவமே உடுப்பி கிருஷ்ணரின் கோயிலில் உள்ளது.
தட்சனின் சாபத்தால் தனது ஒளியையும் அழகையும் இழந்து வருந்திய சந்திரன், சிவபெருமானை நோக்கி உடுப்பியில் கடும் தவம் செய்து இழந்த ஒளியையும் அழகையும் திரும்பப் பெற்றார். அப்போது சந்திரன் நிர்மாணித்த திருக்குளம் ’சந்திர புஷ்கரணி’. நட்சத்திரங்களின் அதிபதியான சந்திரன் தவம் புரிந்ததால் (உடு=சந்திரன்;பா=அதிபதி) உடுபா என்றும் பின்னர் அது மருவி உடுப்பி என்றும் ஆனது.
உடுப்பி கிருஷ்ணனுக்கு வழிபாடு செய்வதற்காக எட்டு சீடர்களைத் தேர்ந்தெடுத்து கணியூர் மடம், சோதே மடம், புதிகே மடம், அத்மார் மடம், பேஜாவர் மடம், பாலிமார் மடம், கிருஷ்ணாபுரம் மடம், சிரூர் மடம் என எட்டு மடங்களையும் நிர்மாணித்து ஒவ்வொரு மடமும் இரண்டு மாதங்கள் நிர்வகிக்க வேண்டும் என்ற நடைமுறையை மத்வர் ஏற்படுத்தினார்.
புதிய சுவாமி மடத்தின் பொறுப்பை ஏற்கும் விழா பர்யாய வைபவம் என்று கொண்டாடப்படுகின்றது. உடுப்பியில் மிகச் சிறப்பாகக்கொண்டாடப்படும் விழாவாக இது அமைகிறது. இவ்விழாவின் போது விறகுத்தேர் அமைக்கப்படுகின்றது. இத்தேர் விறகுதான் கோயில் சமையலுக்குப் பயன்படுகின்றது.
முன்பு கனகதாசர் என்ற மகான் தாழ்த்தப்பட்டிருந்த குலத்தில் பிறந்திருந்ததால் உடுப்பி கோவிலில் நுழைய அனுமதிக்கப்படவில்லை. அவர் தினமும் உடுப்பி கிருஷ்ணனின் கருவறைக்குப் பின்னால் நின்று ஏகதாரி வீணை எனும் ஒரு கம்பி மட்டும் கொண்ட வாத்தியக் கருவியை மீட்டி வழிபட்டுவந்தார். ஒருநாள் கருவறையின் பின்பக்கச் சுவரின் கற்கள் தாமாகவே விழுந்து உடுப்பி கிருஷ்ணரும் பின்புறச்சுவர் நோக்கித் திரும்பி கனகதாசருக்கு காட்சியளித்தார்.கனகதாசர் கண்ணனை வழிபட வழிவகுத்த ஒன்பது துவாரங்கள் கொண்ட பலகணி கனகதண்டி என அழைக்கப்படுகிறது. பக்தர்கள் அனைவரும் கனகதாசர் கிருஷ்ணரை தரிசித்த பலகணி வழியாகவே மூலவரை தரிசனம் செய்யும் வழக்கமும் இந்நிகழ்வுக்குப் பின்னர் ஏற்பட்டது.
இந்த ஒன்பது துவாரங்கள் கொண்ட ஜன்னலில் தான் நவகிரகங்கள் இருப்பதாக ஐதீகம். ஆகவே வேறு தனி சன்னதி, நவகிரகங்களுக்கு கிடையாது.
கிருஷ்ணர் விக்ரகம், சாலிகிராமக்கல்லில், விஸ்வகர்மாவால் உருவாக்கப்பட்டு, ருக்மணி தேவியின் பூசையை ஏற்றுக்கொண்டது.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்............... தொடரும்!
Monday, 12 October 2020
சித்தன் அருள் - 941 - ஆலயங்களும் விநோதமும் - பச்சோட்டு ஆவுடையார் கோயில், மடவிளாகம், காங்கேயம், தமிழ்நாடு!
அருள்மிகு பச்சோட்டு ஆவுடையார் கோவில், ஈரோடு மாவட்டம் காங்கேயத்திற்கு அருகில், மடவிளாகம் என்னும் ஊரில் அமைந்துள்ளது.
முன்னொரு காலத்தில் அன்னை பார்வதி ஈசனை நோக்கி கடும் தவம் மேற்கொண்டாள். சிவபெருமான், பச்சை மண்ணால் செய்யப்பட்ட திருவோட்டுடன், பிச்சையேற்பவராக அன்னைக்கு காட்சி கொடுத்தார். அடியவர்களுக்கு அன்னமிடுவதை தனது முதல் கடமையாக கொண்ட பார்வதி, சிவனுக்கு அன்னமிட்டார். இதனால் மகிழ்ந்த சிவன் பார்வதிக்கு காட்சி கொடுத்து தன்னுடன் அழைத்து சென்றார் என்பது இத்தல புராண வரலாறு.
1000 ஆண்டுகளுக்கு முன் பழமை வாய்ந்தது.
பச்சை ஓட்டுடன் சிவன் எழுந்தருளியதால் இத்தல இறைவன் 'பச்சோட்டு ஆவுடையார்" என அழைக்கப்படுகிறார். ஆனால், கல்வெட்டுக்களில் 'பச்சோட்டு ஆளுடையார்" என காணப்படுகிறது. தலத்தின் நாயகி பச்சை நாயகி, பெரியநாயகி என்ற திருப்பெயர் தாங்கியுள்ளாள்.
சரி! இங்கு நாம் தெரிந்துகொள்ள என்ன உள்ளது?
- இரண்டு சுயம்பு மூர்த்திகள் உள்ள மிகப்பெரிய சிவன் தலம் இதுவாகும். இந்த பகுதியிலேயே மிகப்பெரிய தீபஸ்தம்பம் உள்ள திருத்தலம்.
- கோயிலின் பின்புறம் சிவன், தனது நகத்தால் நிலத்தில் கீறின பொழுது உருவான அற்புத சுனை உள்ளது. 'நிகபுஷ்கரணி" என்ற பெயர் பெற்ற இத்தலம் கங்கைக்கு சமமானது.
- 12 ஆண்டுக்கொரு முறை இங்குள்ள சுனையில், விபூதி நிரம்பிய மண் கலயம் மிதந்து வரும் அற்புத நிகழ்ச்சி நடந்து வருகிறது. சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் 'குடம்" அளவுக்கு இருந்த இந்த மண் கலயம் நாளடைவில் சுருங்கி தற்போது 'சிறிய செம்பு" அளவில் மிதந்து வருகிறது. இந்த மண் கலய விபூதி கிடைப்பதற்கரிய மாபெரும் மருந்தாகும். இதை உடலில் பூசினாலும், சிறிதளவு சாப்பிட்டாலும் தீராத நோய்கள் நீங்கும் என்பது ஐதீகம்.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்...........தொடரும்!
Sunday, 11 October 2020
சித்தன் அருள் - 940 - மாப்பிள்ளை சுவாமி கோவில், திருவீழிமிழலை, திருவாரூர்!
இத்தலத்தில் சிவபெருமான் மாப்பிள்ளை சுவாமி என்று அழைக்கப்படுகிறார். இறைவன், மாப்பிள்ளை கோலத்தில் காசியாத்திரைக்கு செல்வதுபோல் உள்ளதால், மாப்பிள்ளை சுவாமி என்று அழைக்கப்படுகிறார்.
சரி! இங்கு நாம் தெரிந்துகொள்ள என்ன உள்ளது!
சிவபெருமான் இங்கு ஸ்வயம்பு மூர்த்தியாக உரைகின்றார்.
இங்கு உள்ள பாதாள நந்தி பிரசித்தமானது. நந்தியம்பெருமானே முழு கோவிலையும் தங்குவதாக ஐதீகம்.
பெருமாள் சக்ராயுதத்தை திரும்ப பெற வேண்டி, சிவபெருமானுக்கு பூசை செய்ய, சரியாக ஒரு பூ குறைந்ததால், தன் ஒரு கண்ணை எடுத்து பூசையை நிறைவேற்றினார்.
சிவபெருமானுக்கு முன்பாக, நந்தியம்பெருமானுக்கு பதில், பெருமாள், ஒரு கையில் பூவுடன், ஒரு கையில் கண்ணுடன் நிற்பது வித்யாசமாக இருக்கும்.
கொடிமரம் அருகே சிவலிங்கம் அமைந்திருப்பது வித்யாசமாக இருக்கும்.
இங்கு உற்சவ மூர்த்தி, சக்கரத்தை கையில் ஏந்தி நிற்பது போன்று அமைக்கப்பட்டுள்ளது.
திருவலஞ்சுழி பலகணி, திருவீழிமழலை வௌவால்நத்தி மண்டபம், ஆவுடையார்கோயில் ஆத்மநாதசுவாமி கோயில் கொடுங்கை போன்ற கட்டிடப்பணி தவிர்த்து பிற வகையிலான கட்டட அமைப்புகளை கட்டித்தருவதாக கட்டிடக்கலைஞர்கள் உறுதி கூறுவதாகக் கூறுவதுண்டு. இதன்மூலமாக இத்திருக்கோயிலின் கட்டிடக்கலை நுட்பத்தை உணர முடியும். திருவலஞ்சுழி பலகணி (சன்னல்) மிகவும் நேர்த்தியாகவும் நுட்பமானதாகவும் அமைக்கப்பட்டிருக்கும். திருவீழிமிழலை வௌவால்நத்தி மண்டபத்தில் வௌவால்களால் தொங்க முடியாது. ஆவுடையார்கோயில் கொடுங்கை மிகவும் மெல்லியதாக இருக்கும்.
இவ்வூரில் பஞ்சம் நிலவிய காலத்தில் அப்பரும், சம்பந்தரும் இவ்வூர்க் கோயிலில் படிக்காசு பெற்று மக்களின் பசியைப் போக்கிவந்ததாகப் பெரியபுராணம் குறிப்பிடுகிறது.
இறைவனாரிடமிருந்து பெற்ற படிக்காசுகளை மாற்றிப் பொருள் பெற்ற கடைத்தெரு ஐயன்பேட்டை என்று இக்காலத்தில் வழங்கப்படுகிறது. இங்கே படியளந்த நாயகி உடனாய செட்டியப்பர் திருக்கோயில் அமைந்துள்ளது.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்...............தொடரும்!
Saturday, 10 October 2020
சித்தன் அருள் - 939 - ஆலயங்களும் விநோதமும் - வடக்கும்நாதர் கோவில், திருசிவப்பேரூர் (திருச்சூர்), கேரளா!
மலைநாட்டில் "தென்கயிலாயம்" என அழைக்கப்பட்டதும், சிவபெருமானுக்கென்று, அவரே விரும்பி அமர்ந்த முதற்கோவில், வடக்கும்நாதர் க்ஷேத்ரம். இது, கேரளா மாநிலத்தில், திருச்சூர் என்கிற ஊரில் அமைந்துள்ளது. கேரளா மாநிலத்தில் அமைந்துள்ள அனைத்து சிவன் கோவில்களின் தலைமை பீடம் என்பார்கள். வடக்கும்நாதர் என்பது "விடை குன்று நாதர்" என்ற தமிழ்ப் பெயரிலிருந்து மருவியது என்பார்கள். இந்த கோவிலை, பரசுராமர் நிறுவினார்.
பரசுராமர், கர்த்த வீரியன் மகன்களை அழித்ததுடன் நிற்காமல் அரச குலத்தவர்கள் பலரையும் அழித்தார். அதனால் ஏற்பட்ட பாவத்தைப் போக்க நினைத்த பரசுராமர், சிவபெருமானுக்குப் பல கோவில்களை நிறுவ விரும்பினார். அதற்காகக் கடல் அரசனிடம் சென்ற அவர், சிவபெருமான் கோவில்களுக்காகப் புதிய இடத்தை உருவாக்க உதவும்படி வேண்டினார். கடல் அரசனும் அவர் வேண்டுகோளை ஏற்று, பரசுராமரின் கையிலிருந்து வீசியெறிந்த வேள்விக்கான அகப்பை விழுந்த இடம் வரைப் பின் வாங்கிப் புதிய நிலப்பரப்பை உருவாக்கிக் கொடுத்தார்.
புதிய நிலப்பரப்பில் ஒரு மேடான இடத்தில், சிவபெருமானுக்கு முதல் கோவில் அமைக்க விரும்பினார் பரசுராமர். அதன்படி வடக்குப் பகுதியில் இருந்த நிலத்தை சிறிய குன்று போல் உயர்த்தி கோவில் அமைத்தார். சிவபெருமான், தன்னுடைய சிவ கணங்களில் ஒன்றான சிம்மோதரன் என்பவனை, கோவிலுக்குள் நடைபெற்று வரும் பணிகளை கவனித்து வரும்படி அனுப்பினார்.
ஆனால் போனவன் வரவில்லை. நீண்ட நேரமாகியும் சிம்மோதரன் வராததால், உள்ளே சென்றார் சிவபெருமான். தன்னிலை மறைந்திருந்த சிம்மோதரனை தன் காலால் உதைத்தார். அதன் பிறகு அங்கிருந்த தூணில் ஒளிமயமாகி நின்றார்.
கோவில் பணி நிறைவடையாத நிலையில், இறைவன் கோவிலுக்குள் வந்து விட்டதை உணர்ந்த பரசுராமர், இறைவனின் கோபத்தைக் குறைப்பதற்காக அவரை நெய் கொண்டு குளிர்வித்தார். இதனால், இறைவனின் உருவம் நெய்லிங்கமாக மாறியது. 12 அடி உயரம், 25 அடி அகலம் எனும் அளவில் அமைந்த இந்த லிங்கம் முழுவதும் நெய்யால் பொதிந்திருக்கும். ஆதலால், இந்தக் கோவில் இறைவனை ‘நெய்லிங்கம்’ என்று சிறப்புப் பெயரால் அழைக்கின்றனர்.
சரி! இங்கு நாம் தெரிந்துகொள்ள என்ன உள்ளது!
- மூலவருக்கு நெய் கொண்டுதான் அபிஷேகம் செய்கின்றனர். சில வேளைகளில் பன்னீர், சந்தனம் அபிஷேகங்கள் செய்யப்படுவதுண்டு. கோடைக்காலத்தின் வெப்பமோ, மூலவருக்குக் காட்டப்படும் தீப ஆராதனையில் இருந்து வரும் வெப்பமோ இந்த நெய்யை உருகச் செய்வதில்லை. இருப்பினும், இந்த நெய் லிங்கத்தைப் பாதுகாப்பதற்காகப் பெரிய கவசம் சாத்தப்பட்டுள்ளது.
- சிவபெருமான் மேற்கு நோக்கிய நிலையில் இருக்கிறார். பின்புறம் அமைந்திருக்கும் சன்னிதியில் பார்வதிதேவி கிழக்கு நோக்கியபடி வீற்றிருக்கிறார். கோவில் வளாகத்தில் ஆதிசங்கரரால் நிறுவப்பட்ட ராமர், சங்கரநாராயணர், கணபதி ஆகியோருக்கு தனிச் சன்னிதிகள் உள்ளன. இந்த ஐந்து தெய்வங்களுக்கும் ஒரே நேரத்தில், ஒரே மாதிரியாக பூஜை நடத்தப்படுகிறது என்பது தனிச்சிறப்பாகும்.
- இங்கு மூலவராக இருக்கும் லிங்கத்தின் மேல் அபிஷேகம் செய்யப்பட்ட நெய்யை வாங்கிச் சாப்பிட்டால், நாள்பட்ட நோய்கள் தீரும். குழந்தை பேறு இல்லாதவர்களுக்கு குழந்தைப் பேறு கிடைக்கும். மாணவர்களுக்கு நினைவுத்திறன் அதிகரிக்கும்.
- சிவபெருமான் கோவில்களில் பொதுவாக நந்தி எதிர்புறம் மூலவரை நோக்கியபடி அமைந்திருக்கும். ஆனால், திருச்சூர் வடக்குநாதர் கோவிலில் நந்தி எதிர்புறம் இல்லாமல், விலகி தனி மண்டபத்தில் இருக்கிறது. பிரதோஷக் காலங்களில் மட்டும் சிவபெருமான் இந்த மண்டபத்தில் எழுந்தருளி, நந்தியுடன் பக்தர்களுக்கு அருளும் நிகழ்வுகள் நடத்தப்பெறுகின்றன.
- வடக்குநாதர் கோவில் அமைந்திருக்கும் தேக்கின்காடு பகுதியில், ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் வரும் பூரம் நட்சத்திர நாளில் ‘திருச்சூர் பூரம் திருவிழா’ நடத்தப்படுகிறது. இந்தக் கோவிலுக்கு எதிரில் உள்ள பாரமேக்காவு பகவதி, திருவெம்பாடி பகவதி ஆகியோர் வடக்குநாதரைப் பார்க்கும் பூரம் நாள் தான் ‘திருச்சூர் பூரம் திருவிழா’ என்கின்றனர். இந்தத் திருவிழாவின் போது, இந்த ஊரிலுள்ள நான்கு அம்மன் கோவில்களில் இருந்து ஊர்வலமாகக் கொண்டு வரப்படும் யானைகள், அணிவகுத்து நிற்பது சிறப்பாக இருக்கும். இவ் விழாவில் அலங்கரிக்கப்பட்ட யானைகளில் எதிர் எதிர் திசைகளில் நின்று முத்துக்குடை பரிமாற்றம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறும்.
- இந்தக் கோவிலுக்கு முதன் முதலாக வழிபாட்டுக்கு வரும் பக்தர்கள், இங்குள்ள வியாசமலையில் ‘ஹரி ஸ்ரீகணபதியே நமஹ’ என்று தங்களது விரல்களால் எழுதி வேண்டிக் கொண்டால், அடுத்த முறை இந்த ஆலயத்திற்கு வரும்போது, தன்னுடைய வாழ்வில் உயர்ந்த நிலையை பெற்றிருப்பார் என்பது நம்பிக்கையாக உள்ளது.
- குழந்தைப்பேறு இல்லாமலிருந்த சிவகுரு, ஆர்யாம்பாள் தம்பதியர் இங்கிருக்கும் இறைவனை வேண்டித்தான், ஆதிசங்கரரைத் தங்களது மகனாகப் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- மேற்கு திசையில் கோபுரத்திற்கு அருகில் இருக்கும் சதுர வடிவ கல்லின் பெயர் கலிக்கல். அதை நான்கு புறமும் மேடைகட்டி காத்து வருகிறார்கள். கோவில் தரிசனம் முடிந்த பிறகு பிரசாதம் சிறிது எறிந்து கலி முற்ற முற்ற இந்தக்கல், கொடிக்கம்பம் வரை வளர்ந்து விடாமல் தடுக்கிறார்கள் என்பது ஐதீகம்.
- ஆதிசங்கரரின் அதிஷ்டான இடமும் அதற்கான் ஆலயமும் இருக்கும் இடத்திற்கு சங்கு சக்கரம் என்று பெயர். அனுமன் சஞ்சீவிமலையை எடுத்துவரும்போது சில மூலிகைகள் வெளிப்பிரகாரத்தில் விழுந்து சிதறியதாம். ஆதலால்,
- இந்த இடத்திலிருந்து சிறு புல்லாவது பிடுங்கி கொண்டு போய் பக்தர்கள் தங்கள் இலத்தில் பத்திரப் படுத்துகிறார்கள்.
- ஈரேழு பதினான்கு லோகத்தின் அதிபதி "வடக்கும்நாதர்" என்பதால் எது வேண்டினாலும் நடக்கிறது.
- வடக்கும்நாதரை தரிசித்தால் காசிக்கு சென்ற பலன் கிட்டும் என்பது ஐதீகம்
- இவரது கோபத்தைத் தணிக்கவே நெய்யினாலேயே அபிஷேகம் செய்கிறார்கள். சலவைக்கல் போல் காணப்படும் லிங்கம் எத்தன டிகிரி வெப்பமானாலும் உருகுவதில்லை.
- மூலவருக்கு இரவு 8.00 மணிக்கு நடைபெறும் திருப்புகா பூஜை தொடர்ந்து 41 நாட்கள் பார்த்தால் தாம் நினைத்த காரியம் கை கூடும் என்பது நம்பிக்கை. இந்த பூஜையின் போது பல தேவர்கள் வருவதால் பக்தர்கள் நடுவில் வெளியேற அனுமதி இல்லை. பூஜை முடிந்தபிறகே வெளியில் வர முடியும்.
- 12 அடி உயரம், 25 அடி அகலம் உள்ள மிகப்பழமையான நெய்லிங்கம் எப்போதும் உருகாமல், பாறை போல் இறுகி உள்ளது.
- எப்போதாவது நெய் வெளிப்பட்டால், உடனே உருகி காணாமல் போய்விடுகிறது.
- மூலவருக்கு நெய்யினால் அபிஷேகம் செய்து வருகின்றனர். நெய் கட்டியாக உறைந்து வரும்.
- கோடையின் வெப்பமோ, ஆரத்தி வெப்பமோ, சூடோ இந்த நெய்யை உருகி விழச்செய்யாது.
- பூச்சிகள் மூலவரை தாக்காது.
- மூலவர் மீது உள்ள நெய் மணம் கிடையாது.
- நெய் லிங்கத்திற்கு நெய் அபிஷேகம் , பன்னீர், சந்தன அபிஷேகம் செய்தாலும் பாதிப்பு ஏற்படுவதில்லை.
- லிங்கத்தைப் பாதுகாக்கும் வகையில் பெரிய கவசம் சாத்தப்பட்டுள்ளது.
- தேவர்களும், அசுரர்களும் அமிர்தம் கிடைக்க பாற்கடலை வாசுகி என்ற பாம்பைக் கொண்டு கடைந்தார்கள்.
- அந்த பாம்பு கர்ப்பகிரகத்தின் வாசலில் மணியாக இருப்பதாக ஐதீகம். பிரதோஷ காலங்களில் இந்த மணியை தலைமை நம்பூதிரி மட்டுமே அடிப்பார். மற்றவர்கள் தொட அனுமதியில்லை.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.................தொடரும்!
Friday, 9 October 2020
சித்தன் அருள் - 938 - ஆலயங்களும் விநோதமும் - கற்பக விநாயகர் கோவில், பிள்ளையார்பட்டி, சிவகங்கை, தமிழ்நாடு!
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் இந்தியாவிலுள்ள தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் பிள்ளையார்பட்டி எனும் ஊரில் அமைந்துள்ளது.
இந்த பழமையான குடைவரைக் கோயில் அமைந்துள்ள பிள்ளையார்பட்டி என்ற கிராமம், திருப்பத்தூர்- குன்றக்குடிச் சாலையில் திருப்பத்தூரில் இருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ளது. மேலும், குன்றக்குடி முருகன் கோயிலிருந்து 3 கி.மீ. தொலைவிலும், காரைக்குடியிலிருந்து 16 கி.மீ. தொலைவிலும், மற்றும் சிவகங்கை மாவட்டத்திலிருந்து 47 கி.மீ. தொலைவிலும் உள்ளது.
இங்குள்ள சிறிய மலையின் அடிவாரத்தில் கோவில் குடையப் பெற்றுள்ளது. இக்கோவில் சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன் தோன்றியதாகக் கருதப்படுகிறது. இக் கோயிலின் பிரதான தெய்வமாக கற்பக விநாயகர் இருக்கிறார். மலையைக் குடைந்து அமைக்கப்பெற்ற சுமார் 6 மீட்டர் உயரமுள்ள கற்பகப் பிள்ளையாரின் திருவுருவம் வடக்குத் திசை பார்த்துக் காணப்படுகிறது.
சரி! இங்கு நாம் தெரிந்து கொள்ள என்ன உள்ளது!
- இங்கு பெருமானின் துதிக்கை வலம் சுழித்ததாக அமைந்திருப்பது.
- சாதாரணமாக மற்ற இடங்களில் இருப்பதைப்போல நான்கு கைகள் இல்லாமல் இரண்டு கரங்களை கொண்டு விளங்குவது.
- அங்குச பாசங்கள் இல்லாமல் விளங்குவது.
- வயிறு, ஆசனத்தில் படியாமல் "அர்த்தபத்ம" ஆசனம், போன்று கால்கள் மடித்திருக்க அமர்ந்தருள்வது.
- இடக்கரத்தை கடி ஹஸ்தமாக இடையில் நாட்டிப் பெருமிதக் கோலம் தோன்றப் பொலிவது.
- வலக்கரத்தில் மோதகம் தாங்கியருள்வது.
- ஆண், பெண் இணைப்பை புலப்படுத்தும் முறையில் வலத்தந்தம் நீண்டும், இடத்தந்தம் குருகியும் காணப்படுவது.
- ஆறு அடி உயரமுள்ள கற்பக விநாயகரின் சன்னதி மலையைக் குடைந்து அமையப்பெற்றுள்ளதால், இங்கு சன்னதியை வலம் வர இயலாது.பிள்ளையாரின் திரு உருவம் வடக்கு நோக்கியும், அவரின் தும்பிக்கை வலது புறமாக சுழித்தும் (வலம்புரி விநாயகர்) இருப்பது இக் கோயிலின் தனிச் சிறப்பாக உள்ளது.
- ஒரு குடும்பம் உருவாகத் தேவையான, தடை விலகலை பிள்ளையார் பார்த்துக் கொள்கிறார். திருமணம் நடைபெற வைக்க "கார்த்தியாயினி" அம்மன் சன்னதியும், பிள்ளை வரமளிக்க "நாகலிங்கம்" சுவாமி சன்னதியும், அனைத்து செல்வ வளங்களை அளிக்கும் "பசுபதீசுவரர்" சன்னதியும் உள்ளது. இவர்கள் அனைவரையும் மேற்பார்வையிட்டபடி வடக்கு நோக்கி பிள்ளையார் அமர்ந்திருக்கிறார்.
- எல்லா கோவில்களுக்கும் புஷ்கரணி இருக்கும். இங்கு இருக்கும் குளம், கோவிலுக்கு முன்புறத்தில், பிள்ளையார் பார்வை படும் விதத்தில் அமைந்துள்ளது. பக்தர்களின் திருஷ்டி தோஷங்களை தன் நயனத்தினாலேயே விலக்கி, இக்குளத்தில் கரைப்பதாக ஐதீகம். தரிசனம், கைமேல், உடன் பலன்.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.................தொடரும்!
Thursday, 8 October 2020
சித்தன் அருள் - 937 - ஆலயங்களும் விநோதமும் - வசிஷ்டேஸ்வர் கோவில், தென்குடித்திட்டை, தஞ்சாவூர்!
வசிஷ்டேஸ்வர் கோயில், தென்குடித்திட்டை, தஞ்சாவூருக்கு வட மேற்கே 9 கி.மீ. தூரத்தில் திட்டை அல்லது தென்குடித்திட்டை என அழைக்கப்படும் கிராமத்தில் இந்த கோயில் அமைந்துள்ளது.
திட்டை எனும் சொல் மேடு எனவும் பொருள்படும். பிரளய காலத்தில் இவ்வுலகம் நீரால் சூழப்பட்ட போது, திட்டை மற்றும் சீர்காழி ஆகிய சிவதலங்கள் பாதிக்கப்படவில்லை. உலகப் பிரளய காலத்தில் இப்பகுதிகள் திட்டாகத் தோன்றியபடியால் சீர்காழியை வட திட்டை எனவும், வசிஷ்டேஸ்வரர் கோயில் பகுதியை தென் திட்டை அல்லது தென்குடித்திட்டை எனவும் அழைக்கலானார்கள். இறைவன் சுயமாக வெளிப்பட்டு அருள் புரிந்தார்.
சரி! இங்கு நாம் தெரிந்துகொள்ள என்ன உள்ளது!
- அம்மன் சந்நிதிக்கு முன்பாக மேல் கூரையில் 12 ராசிகளுக்கும், ராசி சக்கரம் சிற்ப வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.
- குரு பகவானிற்கு தெற்கு நோக்கி தனி கோயில் அமைக்கப்பட்டுள்ளது. ராஜ குருவாக நின்ற நிலையில் அபய ஹஸ்த முத்திரையுடன் பக்தர்களுக்கு அருள் புரிகிறார்.கிரகங்களில் வியாழ பகவானுக்கு சிறந்த பரிகார ஸ்தலம்.
- இக்கோவிலின் நான்கு மூலைகளிலும் நான்கு லிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. மூலவர் வசிஷ்டேஸ்வரர் ஐந்தாவதுவாக சுயம்பு லிங்கமாக காணப்படுகின்றார். ஐந்து லிங்கங்கள் இருப்பதால் இத்தலத்தை பஞ்சலிங்க ஷேத்திரம் என்று கூறுவர். இந்த ஒரு தலத்தை வழிபட்டால் சிதம்பரம், காளஹஸ்தி, திருவண்ணாமலை, திருஆனைக்கா மற்றும் காஞ்சீபுரம் ஆகிய பஞ்சபூத தலங்களுக்கு சென்று வந்த புண்ணியம் கிட்டிவிடும்.
- ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் 15, 16, 17 தேதிகளில் காலையில் சூரியபகவான் ஒளி இந்த இறைவன் மீதுபடுகிறது.
- இறைவன் மீது 24 நிமிடத்திற்கு ஒரு முறை ஒரு சொட்டு நீர் விழுகிறது. இக்கோயிலில் சிவலிங்க வடிவில் உள்ள இறைவன் வசிஷ்டேஸ்வரர் சன்னதியில் உள்ள உட்புற கோபுரத்தில் சந்திர காந்தக் கல் வைத்து கட்டப்பட்டுள்ளத நம்பப்படுகின்றது. 24 நிமிடத்திற்கு ஒரு முறை இந்த சந்திர காந்தக் கல்லால் காற்றில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி கல்லிலிருந்து ஒரு சொட்டு நீராய் இறைவன் வசிஷ்டேஸ்வரர் மீது விழுகிறதாக கூறப்படுகின்றது. சந்திரனுக்கு ஏற்பட்ட சாபத்தை நீக்கிய சிவபெருமான் தன்னுடைய தலையில் சந்திரனை வைத்துக்கொண்டார். அதற்கு நன்றிக் கடனாக சந்திரன் இவ்வாறு 24 நிமிடத்திற்கு ஒரு முறை ஒரு சொட்டு நீரை இந்த இறைவன் மீது விழுமாறு செய்கிறார் என தொன்றுதொட்டு வரும் நம்பிக்கை.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
Wednesday, 7 October 2020
சித்தன் அருள் - 936 - ஆலயங்களும் விநோதமும் - காமாக்ஷி கோவில், காஞ்சிபுரம்!
காமாட்சி அம்மன் கோயில் காஞ்சிபுரத்தில் அமைத்துள்ள புகழ்பெற்ற சக்தி தலமாகும். "காஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி, காசி விசாலாட்சி" என்ற சொல்லாடல், இம்முப்பெரும் சக்தி வடிவங்களைக் குறிப்பிட்டுச் சொல்லும். அதிலும் காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள சக்திக்கான தனிப்பட்ட கோயிலாகும். இக்கோயிலில் காமாட்சி அம்மன், இரண்டு காலையும் மடித்து, பத்மாசன யோக நிலையில் அமர்ந்திருப்பது மிகச் சிறப்பானதொரு அம்சமாகும். அவரது ஒரு கையில் கரும்பு வில்லினையும், தாமரை மற்றும் கிளியினை இன்னொரு கையிலும் கொண்டுள்ளார். தந்திர சூடாமணியின்படி இது 51 சக்தி பீடங்களில் தேவியின் முதுகு எலும்பு விழுந்த சக்தி பீடமாகும். இக்கோவில் மகா சக்தி பீடங்களிலும் ஒன்றாகத் திகழ்கிறது.
முன்னொரு காலத்தில் கயிலை மலையில், தன் அன்புக்கு உரிய உமாதேவி ஒரு பாகத்தில் இருக்க, வேதங்களின் தலைவனான சிவபெருமான் வீற்றிருந்தார். அப்போது தேவி விளையாட்டாக ஈசன் பின்புறம் வந்து அவருடைய கண்களை, தன் இரு கரங்களால் பொத்தினார். இதனால் உலகம் இருண்டது. இருளையே அறியாத தேவலோகம் ஒளி இழந்தது. எங்கும் இருள் சூழ்ந்ததால் படைப்புத் தொழில் நின்றது. யாகங்கள் தடைப்பட்டன. தவங்கள், தானங்களும் கைவிடப்பட்டன. தெய்வ வழிபாடு அறவே ஒழிந்தது. உயிர்கள் மகிழ்ச்சி இல்லாமல் வருந்தின. அறிவு வளர்ச்சித் தடைப்பட்டது. மறை நூல்கள் மறைந்தன. இருளின் வயப்பட்டு உலகமெல்லாம் மயங்கி நின்றன.
தேவர்களும் முனிவர்களும் தம் காரியங்கள் தடைப்படவே, என்ன ஆகியதோ? என்ன ஆபத்து சூழ்ந்ததோ? எனப் பதை பதைத்து சப்தமிட்டனர். இக்குரல் அன்னையின் திருச்செவியில் ஒலித்தது. உடன் அன்னை தன் திருக்கரங்களை இறைவன் திருக்கண்களிலிருந்து எடுத்தார். உடனே இறைவன் திருக்கண்கள் இரண்டும் ஒளிவீசின, மீண்டும் உலகம் புத்தொளிப் பெற்றது.
சிவபெருமான் தேவியை நோக்கி, நீ எமது கண்களை மூடிய நொடிப் பொழுதில், உயிர்கள் வருந்தி அறங்கள் தடைப்பட்டு பாவம் சூழ்ந்தது. அந்தப் பாவம் நீங்க, நீ பிராயச்சித்தம் செய்தாக வேண்டும் என்றார். அதற்கு வழியையும் கூறினார். தேவி, யாம் எழுந்தருளியிருக்கும் இடத்திலாவது, நம் அடியார் சிறப்புடன் வீற்றிருக்கும் இடத்திலாவது எம்மை வழிபடுவாயாக என்று அருளச் செய்தார். இறைவன் கூறியபடி அன்னை பிராயச்சித்தம் செய்வதற்குப் புறப்பட்டார்.
பாவம் சூழ்ந்த அன்னை, உக்கிர ரூபிணியாக பல இடங்களுக்கு சென்று இறைவனை தரிசித்து உத்தரவு கேட்டும் கிடைக்காமல், காஞ்சிபுரத்தில் ஏகாந்தமாய் அமர்ந்திருக்கும் "ஏகாம்பரேஸ்வரரை" தரிசித்ததும் அங்கேயே உத்தரவு கிடைத்தது. அங்கேயே தவநிலையில் அமர்ந்து, இறைவன் அருள மறுபடியும், சிவபெருமானை வந்தடைந்தார்.
சரி இங்கு நாம் தெரிந்துகொள்ள என்ன உள்ளது!
காஞ்சிபுரத்தில் உள்ள அனைத்து சிவன் கோயில்களையும் மையமாகக் கொண்ட ஒரே சக்தி ஆலயம், காமாட்சி அம்மன் கோயில் ஆகும், இது போல வேறிடங்களில் அம்மனுக்கு தனி ஆலயங்கள் இல்லை.
காமாட்சி இங்கு "பரப்ரஹ்ம ஸ்வரூபினி" என்று வணங்கப்படுகிறார். ஆரம்பத்தில் மிகவும் உக்கிரமாக இருந்ததால், 'உக்ர ஸ்வரூபினி' என அழைக்கப்பட்டார். ஆதி சங்கரரால், எட்டாம் நூற்றாண்டில், இக்கோயிலில் ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. மிகவும் உக்கிரமாக இருந்த காளியன்னையை, சௌம்யமான காமாட்சியாக ஆதிசங்கரர் சாந்தப்படுத்தினார்.
ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை செய்த ஆதி சங்கரர், தன்னிடம் கூறாமல் அன்னை வெளியே சென்று விடக்கூடாது என சத்தியம் வாங்கினார். ஆதலால், இன்றும் அன்னை கோவிலை விட்டு வெளியே வரும் முன், ஆதி சங்கரர் அமர்ந்து தவம் செய்த அறைக்கு முன் சில நொடிகள் நின்று விட்டுத்தான், வெளியே வருவாள்.
தசரத சக்ரவர்த்தி இத்திருக்கோயிலில் ’புத்திர காமேஷ்டி’ யாகம் செய்தார்.
காமாட்சியின் அம்மனின் பிரகாசமான முகத்தை தீர்கமாக தரிசிப்பவர்களுக்கு, அன்னை கண்கள் சிமிட்டுவது போன்றதான உணர்வினை உருவாக்கும்.
காஞ்சிபுரத்தில் உள்ள எந்த கோயிலில் திருவிழா நடந்தாலும் உற்சவர்கள் தங்கள் கோயிலை சுற்றுவதை தவிர்த்து, காமாட்சியம்மன் கோயிலை சுற்றி வரும் பழக்கம் காலம் காலமாக இருந்து வருகிறது.
காஞ்சியில் எவ்வளவோ சிவாலயங்கள் இருந்தும், அவற்றில் அம்மன் சன்னதி கிடையாது. காமாட்சியே அனைத்து சிவாலயங்களுக்கும் ஒரே சக்தியாக திகழுகிறாள்.
அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது காமகோடி சக்தி பீடம் ஆகும்.
அம்மனுக்கு முன்னால் ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த ஸ்ரீசக்கரம் உள்ளது. அது காணவேண்டிய ஒரு காட்சி.
இத்தலத்தில் தான் ஆதிசங்கரர் ஆனந்தலஹரி பாடினார்.
ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
Tuesday, 6 October 2020
சித்தன் அருள் - 935 - ஆலயங்களும் விநோதமும் - ஸ்ரீ பகவதி கோவில், குமாரநல்லூர், கோட்டயம், கேரளா!
பகவதி கோவில், குமாரநல்லூர், கோட்டயத்திலிருந்து 4 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.
சேரமான் பெருமாள், மன்னனாக கேரளத்தை ஆண்டு வந்த காலத்தில், இரு கோவில்களை ஒரே நேரத்தில் கட்டி, குடமுழுக்கு செய்ய விரும்பினார். ஒன்று உதயனாபுரம் என்கிற இடத்திலும், இன்னொன்று திங்கள்கடவு என்கிற இடத்திலும். திங்கள்கடவில், சுப்பிரமணிய பெருமானை பிரதிஷ்டை செய்ய விரும்பி வேலைகள் ஜரூராக நடந்தது.
அதே நேரத்தில், மதுரையை பாண்டிய மன்னன் ஆண்டு வந்தான். அங்கு உறையும் மீனாக்ஷி அம்மையின், மூக்குத்தி, காணாமல் போனது. இதை அறிந்த மன்னன், தலைமை பூசாரியை விசாரித்த பொழுது, எந்த விதமான பதிலும் கூற முடியவில்லை. அவர் திணறினார்.
பாண்டிய மன்னன், தலைமை பூசாரி 41 நாட்களுக்குள் மீனாக்ஷியின் மூக்குத்தியை கண்டு பிடித்து ஒப்படைக்கவில்லை எனில், 42வது நாள், மரண தண்டனையை ஏற்க வேண்டிவரும் என கட்டளையிட்டான்.
40 நாட்களும் ஒன்றும் கிடைக்கவில்லை. அன்றைய இரவு. உறங்கிக் கிடந்த தலைமை பூசாரியை, ஒரு வெளிச்சம் வந்து தட்டி எழுப்பி, "என்னுடன் வா", என கட்டளையிட்டது.
நடக்கத் தொடங்கிய பூசாரி, வெளிச்சத்துக்குள் நுழைந்தது தான் தெரியும். அடுத்த நொடியில், திங்கள்கடவில், கோவில் வேலை முற்று பெரும் நிலையில் இருந்த கோவில் முன் இருந்தார்.
அழைத்து வந்த வெளிச்சம் அசரீரி வாக்காக பூஜாரிக்கு கட்டளையிட்டது.
"மீனாக்ஷியாக யாம் இங்கு இருக்கப்போகிறோம். பிரதிஷ்டைக்கான நல்ல நேரம் நெருங்கிவிட்டது என மன்னனிடம் கூறுக" என்றது.
இதை கேள்விப்பட்ட அரசன் சேரமான் பெருமாள் குழம்பிப்போனான். எங்கே சுப்ரமண்யரை பிரதிஷ்டை செய்ய விரும்பினோமோ, அங்கே மீனாக்ஷி ப்ரதிஷ்டைக்கு உத்தரவிடுகிறாளே, என நினைத்து, தான் உருவாக்கிய துர்கை அம்பாளின் சிலையை சிலையோடு கோவிலை நெருங்கினான்.
உடனேயே, கோவில் சன்னதியிலிருந்து "குமாரன் அல்லா ஊரில்" இது "குமாரியின் ஊர்! ஆகவே வேதபுரி மலையில் இருக்கும், சிலையை இங்கு கொண்டுவந்து பிரதிஷ்டை செய்க" என்று உத்தரவு வந்தது. மன்னன், ஆட்களை அனுப்பி சிலையை கொண்டு வந்ததும், மீனாட்சியின் உத்தரவின் பேரில், பரசுராமர் ஒரு வயதான பிராமண உருவத்தில் வந்து பிரதிஷ்டை செய்துவிட்டு, பின்னர் மறைந்து போனார். இதனால், திங்கள்கடவு அன்று முதல் "குமாரநல்லூர்" என்றழைக்கப்பட்டது.
மனம் வருந்திய மன்னன், சுப்பிரமணியர் விக்கிரகத்தை, உதயனாபுரத்தில் பிரதிஷ்டை செய்ததுடன், தன் விருப்பப்படி நடக்காததால், குமாரநல்லூர் கோவிலுக்கான உதவிகளை நிறுத்திக் கொண்டான்.
அன்றைய காலகட்டத்தில், மன்னர் படை சூழ நதியில், பயணம் செய்வார்கள். இப்படி ஒருமுறை பயணம் செய்த பொழுது, திடீர் என படகை பனி சூழ்ந்து, யாருக்கும் கண் தெரியாமல் போனது. பயந்து போன மன்னன், மந்திரியாரிடம் வினவ, அவரும் "குமாரநல்லூர் கோவிலுக்கான உதவியை நிறுத்தியதே காரணம் என்றும், அதை செய்வதாக இப்பொழுதே உறுதியளித்தால், அனைவரும் நலமாக கரைசேரலாம்" என்றார்.
சேரமான் பெருமாள், நதியிலிருந்து நீர் எடுத்து, அர்க்கியம் விட்டு சத்தியம் உரைக்க, வளையல் இட்ட கை ஒன்று, நீரிலிருந்து வெளிப்பட்டு அதை ஏற்றுக் கொண்டது.
மதுரையிலிருந்த வந்த பூசாரியையே இந்த கோவிலுக்கு பூஜாரியாக நியமித்தான். அவரின் சந்ததிகளே இன்றும், அம்பாளுக்கு பூசை செய்து வருகின்றனர்.
சரி! நாம் தெரிந்துகொள்ள இங்கு என்ன உள்ளது!
இந்த கோவிலின் பிரகாரமும், சன்னதியும், ஸ்ரீசக்ர வடிவில் கட்டப்பட்டுள்ளது. ஒருமுறை சென்று வந்தாலே, ஸ்ரீ சக்கரத்துக்குள், புகுந்து, அம்பாள் அருளுடன் வெளி வந்ததுபோல், ஒரு உணர்வு ஏற்படும்.
கோவிலின் மதில்களில், இயற்கை செடியால் வரையப்பட்ட ஓவியங்கள், தரிசிப்பவர் அனைவரையும் கவர்ந்திழுக்கும்.
இந்த கோவிலில் கொண்டாடப்படுகிற "கார்த்திகை தீபம்" அனைவரும் காண வேண்டிய ஒன்று.
அம்பாளின் உத்தரவின் பேரில், கல்விக்கூடங்கள் நிறுவி, இன்றும் கல்வி புகட்டி வருகிறார்கள்.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்..............தொடரும்!
Monday, 5 October 2020
சித்தன் அருள் - 934 - ஆலயங்களும் விநோதமும் - ஜகந்நாதர் கோவில், பூரி, ஒடிசா மாநிலம்!
ஜெகன்நாதர் கோயில் அல்லது ஜெகந்நாதர் கோயில், இந்தியாவின், கிழக்கு கடற்கரையில், ஒடிசா மாநிலத்தில், புரி அல்லது பூரி கடற்கரை நகரத்தில் அமைந்த வைணவத் திருக்கோயில் ஆகும். இக்கோயில் ஜெகன்நாதர், பலபத்திரர் மற்றும் சுபத்திரைக்கு அர்பணிக்கப்பட்ட கோயிலாகும். முகம் மற்றும் கைகள் மட்டுமே காணும் வகையில் அமைந்த இக்கோயிலின் மூலவர்களான ஜெகன்நாதர், பலபத்திரர் மற்றும் சுபத்திரையின் திருமேனிகள் மரத்தால் ஆனவை. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை இம்மூலத் திருமேனிகள் உரிய சடங்குகளுடன், புதிய மரத்தால் செதுக்கி அமைக்கப்படும்.
ஜரா என்ற வேடன் எய்த அம்பு பட்டு கிருஷ்ணர் தன் பூத உடலை விட்டு விலகினார். புரியை ஆண்டு வந்த இந்திரத்துய்மன் எனும் அரசனின் கனவில் கிருஷ்ணன் கூறியவாறு, புரி கடலில் மிதந்து வரும் ஒரு பொருளைக் கொண்டு சிலையை செதுக்குமாறு பெருமாள் கூறினார். ஒரு பெரிய மரக்கட்டை கடலில் மிதந்து வந்தது. அதை காவலர்கள் எடுத்துச் சென்று அரசனிடம் ஒப்படைத்தனர். அரசன் அந்த மரக்கட்டைக்கு பெரிய பூஜைகள் நடத்தி தச்சர்களை அழைத்து பெருமாள் சிலை செய்யும்படி கூறினார். தச்சர்களின் தலைவர் சிலை செய்வதற்காக அந்த மரத்தில் உளியை வைத்தவுடன் உளி உடைந்துவிட்டது. அப்போது அவர் முன்பு பெருமாள் ஒரு முதிய தச்சனைப் போல வேடமணிந்து தோன்றினார். அரசனிடம் 21 நாட்களில் இந்த வேலையை முடித்து தருவதாகவும், அதுவரை தான் வேலை செய்யும் அறை கதவை யாரும் திறக்கக் கூடாது என்றும் கூறினார். அதற்கு அரசனும் ஒப்புக்கொண்டார். 15 நாட்கள் அந்த அறையின் உள்ளிருந்து உளிச் சத்தம் கேட்டது. எனவே அரசன் வேலை மும்முரமாக நடக்கிறது என எண்ணி அந்த அறைப்பக்கம் போகவில்லை. அதையடுத்து மூன்று நாட்கள் சத்தமே இல்லை. இதனால் தச்சர் தூங்கிவிட்டாரோ என எண்ணி, அரசன் அவசரப்பட்டு கதவைத் திறந்து விட்டான். உள்ளே அமர்ந்திருந்த தச்சர் கோபமடைந்தார்.
"மூன்று நாட்கள் சத்தம் வரவில்லை என்றதும் எனது அறைக்கதவை திறந்துவிட்டாய். எனவே, இந்தக் கோயிலில் நீ ஸ்தாபிக்கும் சிலைகள் அரை குறையாகவே இருக்கும். அப்படி இருந்தாலும் பரவாயில்லை. அப்படியே பிரதிஷ்டை செய்துவிடு. இந்த கோயிலுக்கு வருபவர்கள் சிலையைப் பார்த்துவிட்டு பொறுமையை கடைபிடிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் செல்வார்கள்" என்று அருள்பாலித்தார். அந்த அறையில் வேலை முடியாத நிலையில் ஜெகந்நாதர், பலராமன், சுபத்திரா ஆகியோரின் சிலைகள் இருந்தன. அந்த சிலைகளையே அரசர் பிரதிஷ்டை செய்தார்.
சரி! நாம் இங்கு தெரிந்து கொள்ள என்ன உள்ளது!
பகவான் கிருஷ்ணரின் உடலுக்கான இறுதி சடங்கை செய்தபின், அவரின் குலத்தவர்கள், உடலை ஒரு கட்டையில் கிடத்தி, நதியில் விட்டனர். இதை கவனித்துக் கொண்டிருந்த போகர் சித்தர், "பகவான் கிருஷ்ணர் இறைவனின் மறு அவதாரமாயினும், ஒரு சிறந்த வாசி யோகி. ஆதலால், சித்தமார்க்க முறைப்படி அவருக்கு சமாதி அமைக்க வேண்டும்" என தீர்மானித்து, அனைவரும் சென்றபின், உடலை கைப்பற்றி, கிருஷ்ணருக்கு சமாதியை அமைத்தார். பகவான் உடலை கிடத்தியிருக்கும் சந்நிதானத்தை, ஒரு சங்கின் வடிவில் அமைத்தார். ஆகவே பகவான் கிருஷ்ணரின் பூத உடல், இன்றும் பூரி ஜெகந்நாதர் சன்னதிக்கு கீழே உள்ளது.
"நாராயணீயம்" கற்று முடித்த/தேர்ந்த பக்தர்கள், ஒருமுறையேனும், இங்கு சென்று ஒரு தசகமாவது அவர் சன்னதியில் வாசித்தால்தான், பகவான் கிருஷ்ணருக்கு "குருதக்ஷிணை" கொடுத்த பலன் கிடைக்கும்.
உலகப் புகழ் வாய்ந்த பூரி ஜெகநாதர் கோயில் தேரோட்டத் திருவிழா ஆண்டு தோறும் 9 நாட்கள் நடைபெறும். தேரோட்டத் திருவிழாவில், இலட்சத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் நாடு முழுவதிலிருந்து கலந்து கொள்கிறார்கள். தேரோட்டத்திற்காக ஆண்டுதோறும் 45 அடி உயரமும் 35 அடி அகலமும் கொண்ட புதிய தேர் மரத்தால் கட்டப்படுகிறது.
இந்த கோவிலின் கோபுரத்தில் கட்டப்பட்டிருக்கும் கொடியானது, காற்றடிக்கும் திசைக்கு எதிர் திசையில்தான் எப்பொழுதும் பறக்கும்.
கோவில் பூஜாரி தினமும் கோபுரத்தின் மேலே ஏறி (45 மாடி கட்டிடத்தின் உயரம் இருக்கும்) கொடியை ஏற்றுவார். ஒரு நாள் கூட தவறாமல் கொடி ஏற்றவேண்டும் என்பது விதி. ஒரு நாள் தவறினால், 18 வருடங்களுக்கு கோவிலை மூடி வைக்க வேண்டும் என்பதும் இந்த கோவிலின் விதியாக உள்ளது.
இக்கோவிலின் கோபுரத்தில் பதிக்கப்பட்டிருக்கும் "சுதர்சன சக்ரம்" கோவிலை சுற்றி எங்கிருந்து பார்த்தாலும், பார்ப்பவரை நோக்கியே நிற்கும். அது 1000 கிலோ எடையுள்ளது.
இக்கோவிலின் கோபுரத்துக்கு மேலே, எந்த பறவைகளும் பறப்பதில்லை.
பொதுவாக, கடற்கரையில் அமைந்துள்ள இடங்களில், பகல் நேரத்தில், காற்று கடலிலிருந்து, ஊரை நோக்கியும், மாலை முதல் கரையிலிருந்து கடலை நோக்கியும் வீசும். இங்கு, பகல் நேரத்தில் கரையிலிருந்து கடலையும், மாலையில், கடலிலிருந்து கரையையும் நோக்கி வீசும்.
கோவிலின் கோபுர நிழல், பூமியில் விழுவதில்லை.
பகவான் கிருஷ்ணருக்கு இரவு நிவேதிக்கப்படும் உணவு, ஒரு நாள் கூட விரயமாவதில்லை/மிச்சம் வருவதில்லை.
சிம்ம வாசல் வழி உள்ளே நுழைந்தவுடன், கடல் சப்தம் கேட்பதில்லை. மிகுந்த அமைதியாக இருக்கும். வெளியே கால் வைத்த அடுத்த நொடி கடலின் இரைச்சலை உணரலாம்.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
Subscribe to:
Posts (Atom)