​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Thursday, 27 October 2016

சித்தன் அருள் - 482 - "பெருமாளும் அடியேனும்" - 71 - பெருமாளும் நாரதரும்!


கலிபுருஷனின் கை ஓங்கிவிட்டது என்பதற்கு அடையாளமாக இயற்கை பொய்த்து விட்டது என்பதால் பல ஊர்களில் மக்களின் அவலவாழ்வு அதிகமாயிற்று.

அந்தந்த ஊர்களில் இருந்த நல்லவர்கள் பலர், ஞானிகளையும் முனிவர்களையும் நாடிச் சென்றனர்.

ஞான திருஷ்டியால் என்ன நடந்தது என்பதை அறிந்து கொண்ட ஞானிகள் கலிபுருஷனின் வேலைதான் இது என்பதைத் தெரிந்து கொண்டாலும் ‘அவன் பேச்சைக் கேட்டு தெய்வத்தை இகழலாமா?’ என்று ஒரே ஒரு கேள்வியைக் கேட்டனர்.

“இருந்தாலும் இந்த நிலை மாறி மறுபடியும் பசுமையான சூழ்நிலை உண்டாக வேண்டுமென்றால் திருமலை வேங்கடவனால் மட்டுமே முடியும். எனவே எல்லாரும் சேர்ந்து திருமலைக்குச் சென்று வேங்கடவனை நோக்கித் தவம் செய்யுங்கள்.” என்று அந்த நல்லவர்களுக்கு வழியைக் காட்டினார்கள்.

இதனை ஊராருக்குச் சொல்லி “அனைவரும் திருமலைக்குச் சென்று வேங்கடவனிடம் பிரார்த்தனை செய்வோம்” என்று அழைத்தனர்.

ஆனால்...

நிறையப் பேர் இந்த வார்த்தையைக் கேட்க முன் வரவில்லை. மாறாக வேறு விதமாகப் பேசினார்கள்.

“வேங்கடவனை நோக்கி நாங்கள் ஏன் திருமலைக்கு வரவேண்டும்? அவர் காக்கும் கடவுள் என்றால் அவரே இங்கு வந்து மழை பொழிய வைக்கட்டும். நிலத்தைப் பசுமையாக மாற்றி அமைக்கட்டும்.” என்று வாக்குவாதம் செய்தனர்.

இன்னும் சிலர் “திருமலை தெய்வம் என்றால் அவர் திருமலைக்குத்தான் தெய்வம். எங்களுக்கு அல்ல. இது இயற்கையின் நிலை. நாளைக்கே இந்தச் சூழ்நிலை மாறும். இதற்குப் போய் நாங்கள் ஏன் நடந்து கஷ்டப்பட்டு பகவானைப் பார்க்கப் போக வேண்டும்?” என்று கேட்டனர்.

“நாராயணா” என்று காதைப் பொத்திக்கொண்டார்கள். அந்த நல்ல உள்ளம் கொண்டவர்கள்.

இனிமேல் இந்த ஊர் ஜனங்களைத் திருத்த முடியாது. எனவே வருகிறவர்கள் வரட்டும். வராதவர்கள் போகட்டும் என்று முடிவெடுத்த அந்த ஊரைச் சேர்ந்த பெரியவர்களும் ஆன்மிகவாதிகளும் பாதயாத்திரையாக அங்கிருந்து திருமலைக்குப் புறப்பட்டார்கள்.

போகும் வழியில் வேங்கடவனின் புகழைப் பாடிக்கொண்டும், பஜனை நாமாவளிகளைச் சொல்லி கொண்டும் சென்றனர். இதைக் கண்ட கலிபுருஷன் ‘இப்படி இவர்கள் சென்றால் வேங்கடவன் ஒருவேளை விஸ்வரூபம் எடுத்து தன்னை அழித்தாலும் அழித்துவிடுவான்’ என்று நினைத்தான்.

எனவே-

அந்த ஊர் மக்களை திருமலைக்குச் செல்லவிடாமல் தடுக்க என்ன செய்யலாம் என்று யோசித்தான்.

‘யாரெல்லாம் திருமலைக்குச் செல்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் உடன் ஆரோக்கியத்தைக் கெடுத்துவிட்டால் ஒருவர் கூட திருமலைக்குச் செல்லமுடியாது. வந்தபடி ஊருக்குத் திரும்புவார்கள். பிறகு வேங்கடவனாவது என்னை வந்து தாக்குவதாவது?’ என்று திட்டம் போட்டு அதன்படி செயல்படத் தொடங்கினான்.

மரத்தடியிலும், சத்திரங்களிலும் ஓய்வெடுத்து வேங்கடவனின் நாமாவளியைப் பாடிக்கொண்டு சென்ற வேங்கடவனின் பக்தர்களுக்கு வயிற்றுப் போக்கையும் கடுமையான ஜுரத்தையும் உண்டு பண்ணினான் கலிபுருஷன்.

அதனைத் தாங்க முடியாமல் அவர்கள் அவதிப்பட்டதைக் கண்டு கைதட்டிச் சிரித்து மகிழ்ந்தான். தான் நினைத்தபடி அந்தப் பக்தர்கள் திருமலைக்குச் செல்லாமல் திரும்பி விடுவார்கள் என்று நினைத்த கலிபுருஷனுக்கு கடைசியில் ஏமாற்றமே மிஞ்சியது.

அந்தப் பக்தர்கள் ஆயிரம் கஷ்டப்பட்டாலும் அவர்கள் மனம் தளரவில்லை. எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு திருமலை வேந்தனின் திவ்விய நாமாவளியை - உடல் நலம் கெட்டிருந்தாலும் கூட ஈனஸ்வரத்தில் - சொல்லிக் கொண்டே காட்டிலும் மேட்டிலும் முட்புதரிலும் நடந்தார்கள்.

இதையெல்லாம் அறிந்த நாரதர், நேராக திருமலைவாசனிடம் சென்றார். பொதுமக்களும் பக்தர்களும் படுகிற அவஸ்தையைச் சொன்னார். இந்த நிலைமை ஏன் ஏற்பட்டது என்பதற்கான காரணத்தையும் கலிபுருஷனைத் தான் தூண்டிவிட்ட சம்பவத்தையும் ஒன்று விடாமல் சொல்லி...

திருமலைக்கு வருகிற அந்தப் பக்தர்களைக் காப்பாற்ற வேண்டும் என்று வேங்கடவனிடம் வேண்டுகோள் விடுத்தார்.

வேங்கடவனுக்கு நாரதர் மீது சிறிது கோபம் தான். இருந்தாலும் நாரதர் குணத்தை மாற்றமுடியாது என்பதாலும் எதை நாரதர் செய்தாலும் முடிவில் அது நல்லதாகத் தான் இருக்கும் என்பதாலும் வேங்கடவன் நாரதரை மன்னித்தார்.

‘கலிபுருஷன் கொடுமையால் இயற்கைகூட சிலகாலம் செயலிழந்துவிட்டதைக் கண்டு வருந்திய வேங்கடவன், அந்த ஊர் ஜனங்கள் எதற்காக தன்னைத்தேடி வெகுதூரம் இங்கு வரவேண்டும்? அவர்கள் திருமலைக்கு வராமலேயே அவர்களுக்கு வேண்டியதைச் செய்துவிட்டால் என்ன?’ என்று எண்ணினார்.

உடனே நாரதரை அழைத்து “கஷ்டப்பட்டு என்னைத் தேடி அந்தப் பக்தர்கள் இங்கு வரவேண்டாம். அவர்களை உடனடியாக அவரவர் இருப்பிடத்திற்குத் திரும்பிப் போக ஏற்பாடு செய். அவர்களின் வேண்டுகோளை நிச்சயம் யாம் நிறைவேற்றுவோம்” என்று உத்தரவிட்டார்.

‘நேராக நான் இப்படிச் சென்றால் ஜனங்கள் நம்ப மாட்டார்கள். ஊருக்கும் திரும்பிச் செல்லமாட்டார்கள். அது மட்டுமல்ல. திருமலை வேங்கடவன் சார்பில் நான் அந்தப் பக்தர்களை திருப்பி அனுப்பினால் இந்தச் செய்தி கலிபுருஷனுக்குத் தெரிந்துவிடும்’ என்றெண்ணிய நாரதர் வயதான ஒரு முனிவரைப் போல் மாறுவேஷம் கொண்டார்.

தான் யாரென்று பக்தர்களிடம் காட்டிக் கொள்ளாமல் நேரிடையாகச் சென்று “திருமலைக்குச் சென்று, வேங்கடவனைத் தரிசனம் செய்து உங்கள் பிரார்த்தனையைக் கேட்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இப்படிக் கஷ்டப்பட்டு திருமலைக்குச் செல்ல வேண்டாம். பேசாமல் அவரவர்கள் ஊருக்குத் திரும்பிச் செல்லுங்கள். உங்கள் பிரார்த்தனையை வேங்கடவன் நிறைவேற்றுவார்.” என்றார் நாரதர்.

ஆனால்-

அந்தப் பக்தர்கள் இதனை ஏற்கவில்லை. “இந்த மாதிரி ஒரு மகாமுனி சொன்னதன் பேரில்தான் திருமலை வேங்கடவனிடம் பிரார்த்தனை செய்து எங்கள் கஷ்டங்களைப் போக்க வந்தோம். அப்படியிருக்க நீங்கள் சொன்னதை நாங்கள் ஏற்கமாட்டோம். எங்கள் உயிர் போனாலும் திருமலைக்குச் சென்று வேங்கடவனிடம் பிரார்த்தனை செய்து விட்டுத்தான் வருவோம்.” என்றார்கள்.

நாரதருக்கு இது தர்ம சங்கடமாகப் போயிற்று. எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் அவர்கள் கேட்பதாக இல்லை.

உடனே-

அங்கிருந்தபடியே வேங்கடவனுக்கு மானசீகமாகப் பேசினார். “இவர்கள் என்ன சொன்னாலும் நம்ப மறுக்கிறார்கள். தாங்களே இங்கு நேரில் வந்து வாக்குறுதி அளித்தால் கூட அது கலிபுருஷனுடைய வேலையாக இருக்கும் என்று சந்தேகப்படுவார்கள். இப்போது என்ன செய்ய?”

“சரி! அவர்கள் கஷ்டப்படாமல், ஆரோக்கியமாக திருமலைக்கு வந்து சேரட்டும். அதே சமயம் வருண பகவானிடம் யாம் ஆணையிட்டிருக்கிறோம். இன்னும் இரண்டு நாளில் அவர்கள் ஊரில் பெருமழை பெய்யும். பூமியில் பசும்புல் தழைக்கும். கிணறுகளில், ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுக்கும். விவசாயம் செழிக்கும்.

“வறுமையினால் ஏற்பட்ட வியாதிகள் விலகும். ஆலயங்களில் ஆறு காலமும் பூஜை நடக்கும். அன்னத்திற்கு இனிமேல் பஞ்சம் வராது. இறந்துபோன கறவை மாடுகள் மீண்டும் உயிர்பிழைக்கும். ஒவ்வொரு வீட்டிலும் பூஜைமணி ஒலிக்கும்.

“தெய்வ பக்தி இல்லாதவர்கள் தாங்கள் செய்த பாபத்திற்காக மனம் திருந்தி ஆன்மிகத்தில் அதிகமாக ஈடுபடுவார்கள். மொத்தத்தில் யாரெல்லாம் என்மீது நம்பிக்கை கொண்டு பிரார்த்தனை செய்கிறார்களோ அவர்களுக்கெல்லாம் என் அருள் கிட்டும்.” என்று வேங்கடவன் திருவாய் மலர்ந்து அருளினார்.

நாரதருக்கு இதைக்கேட்டு இரட்டிப்பு மகிழ்ச்சி. கலிபுருஷனைத் தூண்டிவிட்டது, வேங்கடவன் அதற்கு அருள் பாலித்தது இரண்டையும் நினைத்து அகமகிழ்ந்து போனார்.

அதேசமயம் நாரதர் முனிவர் வேடத்திலிருந்து நாரதராக வெளிப்பட்டார். ‘இதுவரை ஒரு முனிவரைப் போல தங்கள் முன்பு வந்து நின்றது நாரதரா?’ என்ற ஆச்சரியத்தில் அந்தப் பக்தர்கள் அனைவரும் நாரதரின் காலில் விழுந்து நமஸ்கரித்தனர்.

“திருமலைக்குச் செல்லுவது உங்கள் விருப்பம். எனினும் உங்கள் வேண்டுகோளை வேங்கடவன் இரண்டே நாளில் நிறைவேற்றுவார்” என்று நாரதர் இப்போது சொன்னதைக் கேட்டு அந்தப் பக்தர்கள் தம்தம் ஊருக்குத் திரும்பலாயினர்.

அவர்களை வழியனுப்பிவிட்டு ‘நாராயணா’ என்று நாரதர் சொல்லி முடிக்கும் முன்பு-

கலிபுருஷன் மிகுந்த கோபத்தோடு பல்லைக் கடித்துக் கொண்டு வந்து நின்றான். அவன் கோபத்தைக் கண்டு நாரதர் பயந்து போனார்.

சித்தன் அருள்................ தொடரும்!

2 comments:

  1. SIR, RECENTLY I HEAR THAT PEOPLE WHO HAVE RAGHU OR KETHU DESHA, SHOULD NOT GO TO TIRUPATHY AS THERE IS RAGHU AND KETHU WAVES IN TEMPLE. IF THEY GO, THEY WILL FACE ILL EFFECT WITHIN A 45 DAYS. IS IT TRUE

    ReplyDelete
  2. There is no such saying. Infront of "God" who can spoil you? Have faith and go.

    ReplyDelete