​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday, 19 November 2026

சித்தன் அருள் - 2376 - சித்தர் புலம்பல்கள் - 14 !


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

"சித்த மார்கத்தில்" நுழைந்து கவனித்த பொழுது, பல நேரங்களில் சித்தர்கள் உதிர்த்த அறிவுரைகள், உங்கள் அனைவருக்காக!

  1. எவனுக்கு தர்மகாரியங்களில் நாட்டம் அதிகம் உள்ளதோ, அவன் மேலும் அதை அதிகப்படுத்திக் கொள்வதும், நாட்டமே இல்லாதவன் சிறிதளவேனும் தர்ம குணத்தை வளர்த்துக் கொண்டால், கட்டாயம் நவகிரக தோஷங்கள் ஒரு மனிதனை பெருமளவுக்கு பாதிக்காது.
  2. மனிதனின் தீர்மானத்தில் இறைவன் தலையிடுவதில்லை.
  3. மனிதனுக்கு தீர்மானிக்க கொடுக்கப்பட்ட சுதந்திரமே, அழிவுக்கு காரணமாயிற்று.
  4. விரதம் என்றால், ஒருவகையில் வைராக்கியம் என்று கருத வேண்டும்.
  5. அசைவம் உண்ணும் குடும்பத்தில் பிறந்து, சைவனாக இருப்பதுதான் பெருமை.
  6. இறைவனுக்கு நன்றி சொல்லும் எளிய குணத்தை கூட, மனிதர்களுக்கு, சித்தர்கள் வந்து தான் புகட்ட வேண்டியுள்ளது. இதிலிருந்து இன்றைய கல்வி எப்படிப்பட்ட குணத்தை அளிக்கிறது என கவனியுங்கள்.
  7. ஒருவன் தெய்வத்துக்காக செய்கின்ற காரியங்களுக்கு எல்லாம், அவன் மூன்று ஜென்மமாய் குடும்பம் நன்றாக தழைக்கும். அவர்கள் செய்த பாபங்கள் அத்தனையும் தூள் தூளாகும். அவன் குடும்பம் முன்னூறு ஆண்டுகளாய் இன்னும் சீர் பெற்று, சிறப்பு பெற்று வாழும்.
  8. அகத்தியன் யான் விஷ்ணுவாகவும் இருக்கிறேன், பிரம்மாவாகவும் இருக்கிறேன், சிவனாகவும் இருக்கிறேன். ஆகவே, எனக்கு நடமாடும் இடமே இந்த பொதிகை மலை தானடா.
  9. தெய்வங்கள் நடமாடிய இடம். இன்றைக்கும் விண்ணவர்களை நோக்கி வணங்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த புனிதமான இடத்தில் வந்து புரண்டு எழுந்தாலே போதும் உனது தோஷம் போய் விடும், ஏன் என்றால் இந்த மண்ணுக்கு அவ்வளவு வாசனை உண்டு. நதிக்கு அத்தனை சிறப்பு உண்டு - கோடகநல்லூர்!
  10. அகத்தியன் எந்த ஆத்மாவையும் குறை சொல்லி பேசியது கிடையாது. எல்லோரிடமும் பலமுறை சொல்லியிருக்கிறேன். உன் முன் அமர்ந்திருப்பவன் உன்னை விட பாக்கியசாலியாக இருந்திருக்கலாம், உன்னை விட புண்ணியம் செய்தவனாக இருந்திருக்கலாம். அவனது ஏழ்மையின் காரணமாகவோ, சூழ்நிலையின் காரணமாகவோ சற்று கோபப்பட்டு இருக்கலாம். பேசத்தெரியாமல் பேசியிருக்கலாம். அவனை, அவன் பேசியதை மன்னித்துவிடு.
  11. எதுவுமே முன் ஜென்ம தொடர்புதான் என்று புரிந்து கொள்ள வேண்டும். சிலருக்கு யாம் உள்ளே இருந்து சிலவற்றை உணர்த்திக் கொண்டிருக்கிறோம். ஒருவன் முன் அதிகாலை பொழுதிலே, பத்மாசனமிட்டு வட கிழக்கு திசை நோக்கி அமர்ந்து, மன ஒருமைப்பாட்டுடன், தன் புருவ மத்தியில் த்யானத்தை தொடர்ந்து செய்துவர, அவனுள்ளேயே இருந்து யாம் வாக்கை உரைப்போம். அப்படிப்பட்டவன், எமது வாக்கை கேட்டு பலருக்கும் உரைத்திடுவான். 
  12. ஏமாற்றங்களை முன் ஜென்ம பாப கழிவு என்று எடுத்துக்கொண்டுவிட்டால், உலகில் எந்த மனிதரும், ஏமாற்றம் குறித்து எந்த நிலையிலும் வருத்தப்பட தேவை இல்லை.
  13. உலகம் இயங்குவதற்கு எல்லா வகையான குணாதிசயங்கள்  கொண்ட மனிதர்களும் தேவை படுகிறார்கள். கர்ம கழிவிற்கும் தேவை.
  14. பண்ணும் ஓசையும் போல், பழமும் அதன் சுவையும் போல், இறைவன் நிறைந்து நிற்கின்றான்.
  15. ஐந்திலும், எட்டிலும் தன்னை தந்தவன், ஏழெழுத்துக்கு அப்பால் இருப்பவன், இறைவன்.
  16. காலையும் மலையும் பிரணவத்தை ஓதி வர, காமனை வெல்லலாம்.
  17. பிரணவத்தை ஓதி வர பிணிகள் விலகும், பிறவி இல்லா நிலை வரும்.
  18. ஓம் ஐ அறிந்தவன், எது விரும்பினும் பெறுவான்.
  19. வடித்து வைத்த சிலை ரூபமாய் இறையை உள் உருவகப்படுத்தி, கயிலையை அடையின், அறிவில் இறைவனை கண்டு உணரலாம்.
  20. இச்சைக்கு இடமளியாமல், இறை சிந்தனையிலிரு!
  21. திருவைந்தெழுத்துக்கு காரணமானவன், அவனே குரு!
  22. பிரபஞ்ச தகிப்பை சாம்பலாக்கி, தானே திருநீறை அணிந்தவன் சிவன்.
  23. பண வரவின் உற்ற பாதம் - உறங்கி கிடக்கும் குண்டலினி.
  24. பிறை சந்திரனும், திருநீலகண்டமும், கையில் ஏந்திய நெருப்பும், சடை பொருந்திய கங்கையும், பிராணாயாமம் செய்துவர, இடை பிங்களையில் உணரலாம்.
  25. அம்பலக்கூத்தானை சித்தத்தில் நிலைப்படுத்து.
  26. மூல மந்திரமே த்யான மந்திரமாகிட வேண்டும்.
  27. சித்தமே சிவனாடும் மேடை.
  28. உறை ஊற்றிய கலத்தில் பால் தயிராக மாறுவதுபோல், மனம் மாசகற்றி உருமாற வேண்டும்.
  29. ஓட்டுடன் ஒட்டாமல் இருக்கும் புளியம்பழமாய், உலக பற்றை துறக்க வேண்டும். அதுவே பக்குவநிலை.
  30. இறவாமை என்பது சிவம் மன இசைவே!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

No comments:

Post a Comment