வணக்கம் அகத்தியர் அடியவர்களே!
"சித்த மார்கத்தில்" நுழைந்து கவனித்த பொழுது, பல நேரங்களில் சித்தர்கள் உதிர்த்த அறிவுரைகள், உங்கள் அனைவருக்காக!
- உண்மையான பூஜை இறைவனிடம் அழைத்து செல்லும்.
- சத்தியமும், தர்மமும், சிறிதளவு பக்தியும் கலந்தால் இறையை உணரலாம்.
- உடலுக்குள் மருந்து எப்படி வேலை செய்கிறதோ, அப்படியே, இறைவனும், நீ நம்பினாலும், இல்லையென்றாலும், நவகிரகங்கள் வழி பரிபாலனம் செய்கிறார்.
- வாசியை திருப்பி திருப்பி வாசித்தால், அதுவே பிராணாயாமம்.
- ஒருவனின் பூர்வீக பாபங்கள் குறைந்தால் ஒழிய, வாசியோ, சாகாக்கலையோ சித்திக்காது.
- பற்றற்ற தன்மையும், பெருந்தன்மை குணமும், என் வீடு, என் மக்கள், என் மனைவி, என் ஆஸ்தி என்கிற எண்ணம் விட்டு போகாத வரை, வாசி யோகம் யாருக்கும் சித்திக்காதப்பா!
- அதோ வருகிறாள் என் தாய் (காரைக்கால் அம்மையார்), அதோ வருகிறான் என் தோழன் (சுந்தரர்) என சிவம் கூறியதுபோல், இறையே சுட்டிக்காட்ட வாழ்வதே சிறப்பான வாழ்க்கை.
- வெற்று பாத்திரமாய் மனதை வைத்திருந்தால், எது சரி, எது தவறு, எது கூட வேண்டியது, எது கூடக்கூடாதது என்று இறையே உணர்த்தும்.
- ஆன்மா லயிக்கும் இடம் ஆலயம்.
- யார் இருளை நீக்குகிறாரோ அவர் குரு.
- கனவிலே இறை ரூபத்தை பார்ப்பதும், எதிர்பாராத நேரத்தில் இறை ஊர்வலத்தை பார்ப்பதும், சுபசகுனம் மட்டுமல்ல, தோஷங்கள் குறைவதற்கும் நல்லதொரு வாய்ப்பை இறைவன் தந்திருக்கிறார் என்று பொருள்.
- மந்திரங்கள் தெரியாத நிலையிலே, தவறாக உச்சரித்தாலும் இறைவன் ஒன்றும் சினம் கொள்ளமாட்டார்.
- மௌனத்தில் ஒருவனுக்கு அனைத்துமே கிடைக்கும் என்பதால் தான், மௌனம் பழகு என்கிறோம்.
- மனம் பேசாமல் இருப்பதே மௌனம்.
- தினம் ஒரு ஆலயம் சென்று, மனம் ஒன்றி பிரார்த்திப்பது ஒருவன் செய்த பாபம் குறைய, நலம் செய்யும்.
- ஏழை நோயாளிகளுக்கு மருத்துவ உதவி செய்து வந்தால், ஒருவன் இயல்பாகவே, தனக்கு வருகிற பிணியை தவிர்த்துக் கொள்ளலாம்.
- ஆலயம் சென்று வேறெங்கோ கவனம் கொள்வதை விட, வேறெங்கோ இருந்து இறைவனை நினைப்பது சிறந்த வழிபாடு.
- ஒருவன்/ஒருவள், கடந்தகால கவலையிலும், எதிர்கால பயத்திலும் வாழ்ந்துகொண்டு நிகழ்கால வாழ்வை இழக்க கூடாது.
- மனம் வாக்கு காயத்தால் பிறருக்கு விளைவிக்கிற துன்பம் தான், என்றோ செய்த வினையாக எதிர்காலத்தில் மாறுகிறது.
- மெய்யான செல்வம் என்பது புண்ணியம்தான். அதனால் தான் புண்ணியத்தை சேர்த்துக்கொள் என சித்தர்கள் உரைக்கிறார்கள்.
- முடிந்தவரை தினமும் பைரவரை வழிபாடு செய்து, பைரவ மந்திரத்தை உருவேற்றி வந்தால் நியாயமான முறையில் கிடைக்க வேண்டிய செல்வம் ஒருவனை வந்து சேரும்.
- பார்க்குமிடமெங்கும் நீக்கமற இறையை காண்பவன் சித்தன்.
- யார் யார் எந்தப்பிறப்பில் எந்தெந்த மொழிகளை உச்சரிக்க வேண்டும் என்பது கூட கர்மா கணக்கில், இறைவனின் தீர்ப்பில் உள்ளதப்பா.
- முருகனுக்கு கோபம் வந்தால் என்ன நடக்கும் என்பதை இவ்வுலகம் கண்டுள்ளது; அதே நேரத்தில் முருகன் வருத்தப்பட்டால் என்ன நடக்கும் என்று சித்தர்களுக்கே தெரியாது.
- கலிகாலத்தில் சித்தர்களே தங்களை நிரூபித்துக் கொள்ள வேண்டி வரும், மனிதனிடம். நட்டம் சித்தர்களுக்கல்ல.
- 100 வயதுக்கு மேற்பட்ட வேம்பு/வன்னி மரத்தின் இயல்பாக கீழே விழுந்த இலைகளை, உலர்த்தி, பொடித்து கஷாயம் செய்து அதிகாலை வெறும் வயிற்றில் அருந்த குடல் நோய்கள் விலகும்.
- ரசாயன உணவுகளை தவிர்க்க, அல்லேல், கசப்பான மூலிகைகளை அதிகம் உண்டு, அதன் தீய பின்விளைவுகளை விலக்குக.
- எண்ணங்கள் அற்ற நிலை என்பது, மிக மிக உயர்ந்த உன்னத நிலை ஆகும். அதுதான் மனிதனுக்கு அமைதியை தருகின்ற, மெய்யான சுகத்தை தருகின்ற ஒரு நிலை.
- அஷ்டமி, நவமி திதி அன்று ஒரு மனிதனின் கடுமையான தோஷங்கள் வெளிப்படுமென்பதால் அந்த திதிகளில் லோகாய விஷயங்களை தவிர்த்து பைரவரை வழிபட கூறுகிறோம். இதுவே சந்திராஷ்டமத்துக்கும் பொருந்தும்.
- இறைவனை வணங்க, காலம் தேவை இல்லை, மனப்பக்குவம் இருந்தாலே போதும்.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!

No comments:
Post a Comment