​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday, 12 November 2026

சித்தன் அருள் - 2370 - சித்தர் புலம்பல்கள் - 13 !


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

"சித்த மார்கத்தில்" நுழைந்து கவனித்த பொழுது, பல நேரங்களில் சித்தர்கள் உதிர்த்த அறிவுரைகள், உங்கள் அனைவருக்காக!

  1. இருக்கும் இடத்தில் உருக்கமான வழிபாடும், நல்ல எண்ணங்களும் இருந்தால், மனிதனை தேடி இறைவன் வருவான்.
  2. வடகிழக்கு திசை/ப்ரம்ம முகூர்த்தம்/பத்மாசனம்/ஏக நாழிகை/எண்ணங்கள் அற்று/இறை நாமாவளி - புருவமத்தி தியானம் நிலைக்கும்.
  3. சில நேரங்களில் துன்பம் ஒருவனுக்கு சிறப்பாக  கற்பிக்கும் பாடம், இன்பம் ஒருபொழுதும் கற்பிப்பதில்லை.
  4. சிவன் விளையாடும் தெருவே நெற்றி. (திருமூலர்)
  5. நடப்பதெல்லாம், ஈசன் செயல் என்றறி.
  6. இரப்பார் முன், கையில் வைத்து இல்லை என்று சொல்லாதே.
  7. இந்த நிமிடம், எதுவாகினும் நம்மிடம் இருக்க, கேட்பவனிடம்  பிறகு தருகிறேன் என்று கூறாதே.
  8. எதுவும் எனதல்ல, அதை படைத்த இறைவனுடையது என்றிரு.
  9. புகழும்போது புளாங்கிதமும், துக்கத்தில் துயரடைவதும் கூடாது.
  10. வாசி நிலை, பழக வேண்டும்.
  11. பார்வையாளனாக இரு, எதையும் உருவாக்காதே.
  12. பதற்றம் களைய, பயம் விலகும்.
  13. ஆசை அறுத்தால், வாசனை விலகும், வாசனை விலகினால் பிறவிகள் இல்லை.
  14. ஆக்கும், அழிக்கும் உரிமை, இறைக்கு மட்டும்.
  15. நீர் விரயம், கடனை கூட்டும்.
  16. அசைவம் உண்பவனுக்கு தாது சுத்தி கிடைக்காது. சித்த மார்க்கம் கைவல்யமாகாது.
  17. நேர்மையற்ற பக்தியை இறைவன் ஒரு பொழுதும் ஏற்றுக் கொள்வதில்லை.
  18. மனிதர்களால், பக்தி இன்றி கற்பிக்கப்படும் "கல்வியை", சித்தர்கள், கல்வி என்றே ஏற்றுக் கொள்வதில்லை.
  19. குலதெய்வத்தை அறியாதவர்கள், தினமும், அருகிலிருக்கும் கோவிலுக்கு சென்று வணங்கி வருவது சிறப்பு.
  20. மனிதர்கள் பார்வையில் எதெல்லாம் தர்மமாக காணப்படுகிறதோ, அவை எல்லாம் சித்தர்கள் பார்வையில் தர்மமாக இருக்காது.
  21. வாய்ப்புள்ளவர்கள், தொடர்ந்து தொண்டினை செய்து வர, சித்தர்களை நாடினும், இல்லை எனினும், அவர்கள் கர்மா குறையும், புண்ணியம் பெருகும்.
  22. ஒரு ஆத்மா, குறிப்பிட்ட பாபத்தை நுகர்ந்து தீர்ப்பதற்கு பல பிறவிகள் எடுக்க வேண்டிவரும். அதுபோல், மொத்த கர்மாவை அனுபவித்து தீர்க்க பல நூறு பிறவிகள் எடுக்க வேண்டிவரும்.
  23. எண்ணங்கள் அலைகளாக சென்று பிறரை தாக்கி கர்மாவை, ஒருவன் அறியாமல் சேர்க்கும் என்பதால், எண்ணத்தில் கவனமாக இருக்க வேண்டும். உள்ளுக்குள் சுத்தி அடைய, நல் எண்ணங்கள் உருவாகும்.
  24. பாவ கர்மாவை அனுபவித்து கழிக்கத்தான் பிறவி எடுத்திருக்கிறோம் என்ற விழிப்பு நிலையுடன் வாழக் கற்றுக் கொண்டால், அதன் பின் மேலும் பாவங்கள் செய்வதை தடுத்துக் கொள்ளலாம். பின்னர் அவனுக்கு புண்ணியங்கள் செய்கிற நிலை வந்துவிடும்.
  25. ஒருவன் எந்த நிலையில் இருக்கிறான் என்பதை விட, எந்த சூழலில் இருக்கிறான் என்பதை விட, எந்த மனோபாவத்தில் இருக்கிறான் என்பதையே சித்தர்கள் நோக்குகின்றார்கள்.
  26. மனதை அவரவர் உள்நோக்கி பார்த்து தன் மனதில் ஓடுகின்ற எண்ணங்களை கவனிக்க துவங்கினால், மௌனம் என்பது எளிதில் சித்தியாகும்.
  27. தேவையற்ற எண்ணங்களை தூக்கி எறிந்துவிட்டு, தேவையான எண்ணங்களை எல்லாம் அழகாக அடுக்கி வைத்தால், ஒருவன் மறதியிலிருந்து விடுபடலாம்.
  28. ஸ்ரீரங்கம் கோவிலில், எந்த சன்னதியில் சென்று வழிபாடு செய்தாலும், அது சுக்கிரனுக்கு ஆன பரிகாரமாக அமையும்.
  29. உயர்ந்த வாழ்க்கை உலகியலில் கிடைக்கப் பெற்ற மனிதனின் உள்ளமும் உயர்நது இருந்தால் அவன் யோகவான்.
  30. தொடர்ந்து கடினப்பட்டாலும், மனம் தளராமல் நேர்மையாக வாழ்கின்ற மனிதன், இறையருளை எளிதில் பெற்றுவிடுவான்.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

1 comment: