வணக்கம் அகத்தியர் அடியவர்களே!
"சித்த மார்கத்தில்" நுழைந்து கவனித்த பொழுது, பல நேரங்களில் சித்தர்கள் உதிர்த்த அறிவுரைகள், உங்கள் அனைவருக்காக!
- இருக்கும் இடத்தில் உருக்கமான வழிபாடும், நல்ல எண்ணங்களும் இருந்தால், மனிதனை தேடி இறைவன் வருவான்.
- வடகிழக்கு திசை/ப்ரம்ம முகூர்த்தம்/பத்மாசனம்/ஏக நாழிகை/எண்ணங்கள் அற்று/இறை நாமாவளி - புருவமத்தி தியானம் நிலைக்கும்.
- சில நேரங்களில் துன்பம் ஒருவனுக்கு சிறப்பாக கற்பிக்கும் பாடம், இன்பம் ஒருபொழுதும் கற்பிப்பதில்லை.
- சிவன் விளையாடும் தெருவே நெற்றி. (திருமூலர்)
- நடப்பதெல்லாம், ஈசன் செயல் என்றறி.
- இரப்பார் முன், கையில் வைத்து இல்லை என்று சொல்லாதே.
- இந்த நிமிடம், எதுவாகினும் நம்மிடம் இருக்க, கேட்பவனிடம் பிறகு தருகிறேன் என்று கூறாதே.
- எதுவும் எனதல்ல, அதை படைத்த இறைவனுடையது என்றிரு.
- புகழும்போது புளாங்கிதமும், துக்கத்தில் துயரடைவதும் கூடாது.
- வாசி நிலை, பழக வேண்டும்.
- பார்வையாளனாக இரு, எதையும் உருவாக்காதே.
- பதற்றம் களைய, பயம் விலகும்.
- ஆசை அறுத்தால், வாசனை விலகும், வாசனை விலகினால் பிறவிகள் இல்லை.
- ஆக்கும், அழிக்கும் உரிமை, இறைக்கு மட்டும்.
- நீர் விரயம், கடனை கூட்டும்.
- அசைவம் உண்பவனுக்கு தாது சுத்தி கிடைக்காது. சித்த மார்க்கம் கைவல்யமாகாது.
- நேர்மையற்ற பக்தியை இறைவன் ஒரு பொழுதும் ஏற்றுக் கொள்வதில்லை.
- மனிதர்களால், பக்தி இன்றி கற்பிக்கப்படும் "கல்வியை", சித்தர்கள், கல்வி என்றே ஏற்றுக் கொள்வதில்லை.
- குலதெய்வத்தை அறியாதவர்கள், தினமும், அருகிலிருக்கும் கோவிலுக்கு சென்று வணங்கி வருவது சிறப்பு.
- மனிதர்கள் பார்வையில் எதெல்லாம் தர்மமாக காணப்படுகிறதோ, அவை எல்லாம் சித்தர்கள் பார்வையில் தர்மமாக இருக்காது.
- வாய்ப்புள்ளவர்கள், தொடர்ந்து தொண்டினை செய்து வர, சித்தர்களை நாடினும், இல்லை எனினும், அவர்கள் கர்மா குறையும், புண்ணியம் பெருகும்.
- ஒரு ஆத்மா, குறிப்பிட்ட பாபத்தை நுகர்ந்து தீர்ப்பதற்கு பல பிறவிகள் எடுக்க வேண்டிவரும். அதுபோல், மொத்த கர்மாவை அனுபவித்து தீர்க்க பல நூறு பிறவிகள் எடுக்க வேண்டிவரும்.
- எண்ணங்கள் அலைகளாக சென்று பிறரை தாக்கி கர்மாவை, ஒருவன் அறியாமல் சேர்க்கும் என்பதால், எண்ணத்தில் கவனமாக இருக்க வேண்டும். உள்ளுக்குள் சுத்தி அடைய, நல் எண்ணங்கள் உருவாகும்.
- பாவ கர்மாவை அனுபவித்து கழிக்கத்தான் பிறவி எடுத்திருக்கிறோம் என்ற விழிப்பு நிலையுடன் வாழக் கற்றுக் கொண்டால், அதன் பின் மேலும் பாவங்கள் செய்வதை தடுத்துக் கொள்ளலாம். பின்னர் அவனுக்கு புண்ணியங்கள் செய்கிற நிலை வந்துவிடும்.
- ஒருவன் எந்த நிலையில் இருக்கிறான் என்பதை விட, எந்த சூழலில் இருக்கிறான் என்பதை விட, எந்த மனோபாவத்தில் இருக்கிறான் என்பதையே சித்தர்கள் நோக்குகின்றார்கள்.
- மனதை அவரவர் உள்நோக்கி பார்த்து தன் மனதில் ஓடுகின்ற எண்ணங்களை கவனிக்க துவங்கினால், மௌனம் என்பது எளிதில் சித்தியாகும்.
- தேவையற்ற எண்ணங்களை தூக்கி எறிந்துவிட்டு, தேவையான எண்ணங்களை எல்லாம் அழகாக அடுக்கி வைத்தால், ஒருவன் மறதியிலிருந்து விடுபடலாம்.
- ஸ்ரீரங்கம் கோவிலில், எந்த சன்னதியில் சென்று வழிபாடு செய்தாலும், அது சுக்கிரனுக்கு ஆன பரிகாரமாக அமையும்.
- உயர்ந்த வாழ்க்கை உலகியலில் கிடைக்கப் பெற்ற மனிதனின் உள்ளமும் உயர்நது இருந்தால் அவன் யோகவான்.
- தொடர்ந்து கடினப்பட்டாலும், மனம் தளராமல் நேர்மையாக வாழ்கின்ற மனிதன், இறையருளை எளிதில் பெற்றுவிடுவான்.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!

🙏
ReplyDelete