அஷ்டாவக்கிரர் ஒரு கதையை சொன்னார். ஒரு இளைஞன் இருந்தான். அவனுக்கு தன் செல்வத்தின் மீது மிகுந்த கர்வம் இருந்தது. அவன் மற்றவர்களை கீழ்த்தரமாக நினைத்தான். ஏழைகளை ஏளனம் செய்தான். பிறகு ஒரு நாள் அவனுக்கு வியாபாரத்தில் பெரும் நஷ்டம் ஏற்பட்டது. அவன் எல்லாவற்றையும் இழந்துவிட்டான்.
ஆரம்பத்தில் அவன் தன் வாழ்க்கை முடிந்துவிட்டதாகவே நினைத்தான். ஆனால் அந்த கடினமான நேரத்தில்தான் அவன் முதன்முறையாக மற்றவர்களின் வலியை புரிந்து கொண்டான். முதன்முறையாக பணிவை கற்றுக்கொண்டான். முதன்முறையாக மற்றவர்களுக்கு உதவி செய்தான். பல வருடங்களுக்குப் பிறகு அவன் கூறினான் எந்த சம்பவத்தை என் வாழ்க்கையின் மிகப்பெரிய துரதிருஷ்டமாக நான் நினைத்தேனோ அதுவே என் வாழ்க்கையின் மிகப்பெரிய ஆசானாக மாறியது என்று. அஷ்டாவக்கிரர் கூறினார் பார்த்தீர்களா மன்னா சில நேரங்களில் துன்பம் நம்மை உடைப்பதற்காக அல்ல, நம்மை விழிப்படையச் செய்வதற்காகவே வருகிறது.
சில கணங்கள் வரை அங்கு ஆழ்ந்த மௌனம் நிலவியது.
மன்னர் ஜனகர் அஷ்டாவக்கிரின் வார்த்தைகளை பற்றி சிந்தித்து கொண்டிருந்தார். அவர் மனதில் ஒரு புதிய புரிதல் உருவாகி கொண்டிருந்தது. ஆனால் அதே நேரத்தில் ஒரு புதிய கேள்வியும் எழுந்திருந்தது. அவர் மெதுவாக கேட்டார். குருதேவா! தற்போதைய செயல்கள், கர்மங்கள் இவ்வளவு வலிமையானவை என்றால் மனிதன் தன் வாழ்வின் ஒவ்வொரு துயரத்தையும் முடிவுக்கு கொண்டுவர முடியுமா?
அஷ்டாவக்கிரர் சில கணங்கள் மௌனமாக இருந்தார். பின்னர் கூறினார், இல்லை மன்னா! ஒவ்வொரு துயரத்தையும் உடனடியாக அழித்து விட முடியாது. சில சூழ்நிலைகள் முன்பே செய்யப்பட்ட கர்மங்களின் விளைவாக இருக்கும். அவற்றை விவேகத்துடன் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.
ஜனகர் கேட்டார் அப்படியானால் மனிதன் என்னதான் செய்வது?
அஷ்டாவக்க்கிரர் புன்னகைத்தார். இதுதான் வாழ்க்கையின் மிகப்பெரிய சோதனையே! எதை மாற்ற முடியுமோ அதை மாற்றுங்கள். எதை உடனடியாக மாற்ற முடியாதோ அதை விவேகத்துடன் ஏற்று கொள்ளுங்கள். மேலும் இவை இரண்டிற்கும் இடையிலான வேறுபாட்டை புரிந்து கொள்ளும் அறிவை வளர்த்து கொள்ளுங்கள். பிறகு மகரிஷி கூறினார். மன்னா நான் உங்களுக்கு ஒரு அரசனின் கதையை சொல்கிறேன்.
அந்த அரசன் விதியுடன் போராட முயற்சிக்கவில்லை. ஆனால் அவன் செய்த ஒரு காரியத்தால் அவனது பெயர் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு பிறகும் நினைவு கூறப்படுகிறது. ஜனகர் கவனமாக கேட்கத் தொடங்கினார். சூரிய வம்சத்தில் ஒரு மாபெரும் அரசர் இருந்தார். அரசர் ஹரிச்சந்திரன். அவர் பெயரைக் கேட்டதுமே மக்களின் மனதில் சத்தியத்தின் உருவம் தோன்றும். அவர் நீதியை விரும்புபவர் இரக்கமுள்ளவர். எல்லாவற்றிற்கும் மேலாக சத்தியத்திற்காக எதையும் தியாகம் செய்யக்கூடியவர். அவருடைய ஆட்சியில் மகிழ்ச்சியும் செழிப்பும் மரியாதையும் நிறைந்திருந்தது. ஆனால் வாழ்க்கையில் ஒரு விதி இருக்கிறது. ஒரு மனிதன் ஏதேனும் ஒரு நற்பண்பில் மிகவும் உயரும் போது அதே குணத்திற்கான சோதனையும் நடக்கும். ஒரு நாள், ஒரு மகரிஷி அவரிடம் வந்தார். அவர், மன்னா! உன்னால் எந்த சூழ்நிலையிலும் சத்தியத்தை கடைபிடிக்க முடியுமா? என்று கேட்டார். அரிச்சந்திரன் தயக்கமின்றி, குருதேவா! சத்தியமே எனது தர்மம் என்று பதிலளித்தார். அப்படியானால் உனது நாட்டை எனக்கு தானமாக கொடு! என்று மகரிஷி கூறினார். முழு அரச சபையும் அதிர்ச்சியில் உரைந்தது. ஆனால் அரிச்சந்திரன் ஒரு கணம் கூட தயங்கவில்லை. அவர் தனது நாட்டை தானமாக அளித்தார். அரியணை போனது அரண்மனை போனது, செல்வச் செழிப்பு போனது. அவர் ஒரு சாதாரண மனிதனாக மாறிவிட்டார். ஜனகர் இதை கவனமாக கேட்டு கொண்டிருந்தார்.
அஷ்டாவக்கிரர் கூறினார், மன்னா! இங்குதான் பெரும்பாலான மக்கள் மனமுடைந்து போவார்கள். இவ்வளவு தர்மம் செய்தும் எனக்கு ஏன் இப்படி நடந்தது என்று அவர்கள் கேட்பார்கள். ஆனால் அரிச்சந்திரன் அப்படி சொல்லவில்லை. அவர் சூழ்நிலையை குறை கூறவில்லை. அவர் தனது தர்மத்தை கைவிடவில்லை. சிறிது காலத்திற்கு பிறகு அவர் தனது மனைவி மற்றும் மகனையும் பிரிய நேரிட்டது. அவர் சுடுகாட்டில் வேலை செய்ய தொடங்கினார். ஒரு காலத்தில் ராஜாவாக இருந்தவர் இப்போது இறுதிச் சடங்குகளுக்கு வரி வசூலிக்கும் ஒரு சேவகனாக மாறிவிட்டார். கற்பனை செய்து பாருங்கள் மன்னா எவருடைய கட்டளைக்கு ஆயிரக்கணக்கான வீரர்கள் கீழ்படிந்தார்களோ அதே நபர் இப்போது நாள் முழுவதும் எரியும் சிதைகளுக்கு மத்தியில் நின்று கொண்டிருக்கிறார். புகை, சாம்பல், கண்ணீர் மற்றும் மரணம். இதுவே அவருடைய உலகமாக மாறிவிட்டது. பின்னர் ஒரு நாள் இரவு அவரது வாழ்க்கையின் மிகக் கடுமையான சோதனை வந்தது. பலத்த மழை பெய்து கொண்டிருந்தது. வானத்தில் மின்னல் வெட்டிக் கொண்டிருந்தது. அதே நேரத்தில், அவரது மனைவி தனது இறந்த மகனின் உடலை எடுத்துக்கொண்டு மயானத்தை அடைந்தார். தாய் அழுது கொண்டிருந்தாள். தந்தையின் இதயம் நொருங்கிக் கொண்டிருந்தது. ஆனால் வரி செலுத்தாமல் இறுதிச் சடங்குகளை செய்ய முடியாது என்று விதி கூறியது. அந்த கணத்தில் அரிச்சந்திரனின் முன் இரண்டு வழிகள் இருந்தன. ஒன்று உணர்ச்சிகளுக்கு அடிபணிவது. இரண்டாவது சத்தியத்தில் உறுதியாக இருப்பது. அவர் இரண்டாவது வழியை தேர்ந்தெடுத்தார். அஷ்டாவக்கிரர் ஜனகரை பார்த்தார். பின்னர் கேட்டார். மன்னா! சொல்லுங்கள் அந்த இரவில் அரிச்சந்திரனின் மிகப்பெரிய பலம் என்னவாக இருந்தது?
ஜனகர் சிறிது நேரம் யோசித்துவிட்டு ஆத்மபலம் என்றார். அஷ்டாவக்கிரர் புன்னகைத்து சரியாக் சொன்னீர்கள் என்றார். விதி அவரிடமிருந்து ராஜ்ஜியத்தை பறித்தது, செல்வத்தை பறித்தது, மகிழ்ச்சியை பறித்தது. ஆனால் விதி அவரிடமிருந்து ஆத்ம பலத்தை பறிக்க முடியவில்லை. ஒரு மனிதனின் உண்மையான தகுதி அவன் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் போது அல்ல அவனிடமிருந்து எல்லாமே பறிக்கப்படும் அந்த இருண்ட தருணத்தில் தான் முழுமையாக வெளிப்படுகிறது. இதுதான் வித்தியாசம். விதி வெளி விஷயங்களை மட்டுமே பாதிக்கிறது. ஆனால் மனிதன் தானே அனுமதித்தால் ஒழிய உள்ளே இருக்கும் சக்தியை அதனால் பாதிக்க முடியாது.
சிறிது நேரம் கழித்து ஜனகர் கேட்டார் குருதேவா ஒவ்வொரு துன்பமும் முந்தைய பிறவியின் பலன் என்று இதற்கு அர்த்தமா?
அஷ்டாவக்கிரர் இல்லை என தலை அசைத்தார். இல்லை மன்னா! இங்குதான் மக்கள் மிகப்பெரிய தவறைச் செய்கிறார்கள். ஒவ்வொரு நிகழ்வையும் முந்தைய பிறவியுடன் மட்டுமே இணைப்பது அறியாமையாகும். பல நிகழ்வுகள் தற்போதைய செயல்களால் உருவாகின்றன. பல நிகழ்வுகள் மற்றவர்களின் செயல்களுடன் தொடர்புடையவை. மேலும் சில நிகழ்வுகள் ஆன்மாவை முதிர்ச்சி அடையச் செய்ய வருகின்றன. பின்னர் அவர் ஒரு எளிய உதாரணத்தை கூறினார். ஒரு நபர் தினமும் நள்ளிரவு வரை விழித்திருந்து தன் உடலை சரியாக கவனித்துக் கொள்ளாமல் நோயுற்றால் ஒவ்வொரு முறையும் அதை முந்தைய பிறவியின் பலன் என்று சொல்வீர்களா?
ஜனகர் கூறினார். இல்லை குருதேவா! இது தற்போதைய கர்மாவின் விளைவு!
அஷ்டாவக்கிரர் சிரித்தார். இதைத்தான் மக்கள் புரிந்து கொள்வதில்லை. தற்போதைய காரணம் தெளிவாக இருக்கும் இடத்தில் கூட அவர்கள் விதியையே குறை கூறுகிறார்கள். பின்னர் மகரிஷி தீவிரமாகி மன்னா! கர்மா மூன்று வகைப்படும் அவற்றை புரிந்து கொள்ளாமல் விதியை புரிந்து கொள்வது சாத்தியமில்லை என்றார்.
ஜனகர் ஆர்வத்துடன் தயவுசெய்து விளக்குங்கள் குருதேவா என்றார்.
அஷ்டாவக்கிரர் கூறினார். முதலாவது சஞ்சித கர்மா இது எண்ணற்ற பிறவிகளின் கர்மங்களின் தொகுப்பாகும். ஒரு மாபெரும் களஞ்சியத்தை போன்றது இரண்டாவது பிராரப்த கர்மா அந்த களஞ்சியத்தின் எந்த பகுதி இந்த பிறவியில் பலன் தருவதற்காக வந்துள்ளதோ அதுவாகும். மூன்றாவது வர்த்தமான கர்மா இது நீங்கள் இப்போது செய்து கொண்டிருப்பது. பின்னர் அவர் ஒரு அற்புதமான உதாரணத்தை கூறினார். கற்பனை செய்து பாருங்கள். ஒரு வில்லாளியிடம் அம்புகள் நிறைந்த அம்பராதூளி உள்ளது. முழு அம்பராதூளியும் சஞ்சித கர்மா ஆகும். வில்லிலிருந்து புறப்பட்ட அம்பு பிராரப்த கர்மா ஆகும். அதை உங்களால் திரும்ப பெற முடியாது. ஆனால் இப்போது உங்கள் கையில் உள்ள அம்பு தற்போதைய கர்மா ஆகும். அதை எந்த திசையில் எவ்வளவு கவனத்துடன் செலுத்த வேண்டும் என்ற முழு அதிகாரமும் தற்போதும் உங்களிடமே உள்ளது. தற்போதைய கர்மா ஆகும். இப்போது கையில் இருக்கும் அம்பில் தான் அதிக சக்தி உள்ளது.
ஜனகரின் கண்களில் ஒரு பிரகாசம் ஏற்பட்டது. நிகழ்காலம் ஏன் இவ்வளவு முக்கியமானது என்பதை அவர் முதன்முறையாக புரிந்து கொள்ள தொடங்கினார்.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!

🙏
ReplyDelete