​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Monday, 25 March 2024

சித்தன் அருள் - 1573 - இவர்!


இறைவனை தேடி செல்லும் பொழுதே, சித்தர்கள் அருகாமை தானே வந்துவிடும். இவர் அடியேனின் சிறந்த நண்பர்களில் ஒருவர். மிக அமைதியானவர், யாரிடமும் அதிகம் பேசமாட்டார். இளம் பருவத்திலேயே இறை தேடல் இவருள் புகுந்தது. பல புண்ணிய தலங்களுக்கு இருவரும் சென்று வருவோம். அவரிடம் இருந்த புண்ணியத்தால், எங்கு சென்றாலும் தரிசனத்துக்கு/அனுபவத்துக்கு குறைவில்லை.

ஒருமுறை, இருவரும் திருவண்ணாமலைக்கு தரிசனத்துக்கு சென்றிருந்தோம். நல்ல தரிசனம், மனம் மிக அமைதியாகிவிட்டது. மலையை நிமிர்ந்து பார்த்தவர், "வாங்க! ரமணர் வசித்த குகைக்கும், வீட்டிற்கும் போய் வருவோம்!" என அழைத்தார். இருவரும் ரமணாஸ்ரமம் வந்து தரிசனம் செய்துவிட்டு, பின்பக்க வாசல் வழியாக புகுந்து மலை ஏறினோம். 

நடந்து செல்கிற வழியில், சிறு சிறு லிங்கம், நந்தி, பிள்ளையார், அம்பாள், முருகர் என பல விக்ரகங்களை, நம் கண் முன்னே, சொன்னால் செய்து கொடுத்தார்கள். ஒரு சிறிய சிவலிங்கத்தை கையிலெடுத்தவர், நந்தியையும் சேர்த்து செய்து கொடுங்கள் என காத்திருக்கலானார். ஐந்தே நிமிடத்தில் நந்தியம்பெருமானார் உருவானார். செய்தவர் கேட்ட தொகையை கொடுத்துவிட்டு இரண்டையும் ஒரு செய்தி தாளில் மடக்கி வைத்துக் கொண்டார். இருவரும் புறப்பட்டோம்.

ஊருக்கு வந்து சேர்ந்ததும், இருவரும் அவரவர் வழியில் பிரிந்து சென்றோம். அடியேனின் வேலை பளு காரணமாக ஒரு மாதத்திற்கு ஒருவருக்கு ஒருவர் பார்த்துக் கொள்ள முடியவில்லை. இருபது நாட்களுக்கு பின் ஒரு நாள் வீட்டில் தேடி வந்தார். அன்று பார்த்து அடியேன் வீட்டிற்கு வந்த பொழுது இரவு மணி பத்து ஆகிவிட்டது. அன்றும் சந்திக்க முடியவில்லை. மறுநாள் அவரை அடியேன் தேடி சென்ற பொழுது மூன்று நாட்களும் அவரை காணவில்லை. எங்கோ சென்றுவிட்டார்.

45 நாட்களுக்கு பின் ஒருநாள் அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

"நான் உங்களை தேடி வந்தேன். பார்க்க முடியவில்லை. ரொம்ப வேலை பளு காரணமாக இரவு வரும் பொழுது தாமதமாகி விடுகிறது. பார்த்து பேச வேண்டும் என்றீர்களாமே! என்ன விஷயம்?" என்றேன்.

"அண்ணாமலையில் ஒரு சிவலிங்கமும் நந்தியும் வாங்கினோமே! நினைவிருக்கிறதா?" என்றார்.

"ஆம்! நீங்கள் வாங்கினீர்கள்! நித்ய பூஜை ஆரம்பம் ஆகிவிட்டதா?" என்றேன்.

"நித்ய பூஜை உச்சிக்காலம் வரை விமர்சையாக அடுத்தநாளே தொடங்கிவிட்டேன்! அதுதான் பிரச்சினையானது."

"என்னது பிரச்சினையா? என்னய்யா சொல்றே?" என்றேன்.

நாம் இருவரும் திருச்செந்தூர் சென்ற பொழுது ஒரு குறி சொல்கிறவன் வந்து என்னை பார்த்து ஒரு விஷயத்தை கூறினான், ஞாபகம் இருக்கிறதா? அது அப்படியே நடந்து விட்டது|" என்றார்.

ஒரு நிமிடம் அதிர்ந்து போன நான், சுதாகரித்துக்கொண்டு "இவர் இறைவனையே மயக்குபவர்" என்று கூறினானே, அதுவா?" என்றேன்.

சிரித்துக் கொண்டே அமைதியாக இருந்தார்!

"சரி! சொல்லுங்க! என்ன நடந்தது?" என்றேன்.

இவர் கூற தொடங்கினார், எனக்கு வியப்பினால் வேர்த்து கொட்டத் தொடங்கியது.

இவர் வீட்டில் வயதான அம்மா, இவர், இவரது தம்பி! மொத்தம் மூன்று பேர் தான். பெண்கள் யாரும் இல்லா வீடு. இவர் வீடு இருக்கும் தெருவில், ஒரு சிவன் கோவில். லிங்கம் மட்டும் சன்னதியில் அமர்ந்திருக்கும். அம்பாள், தனியாக தெற்கு திசை நோக்கி அமர்ந்திருப்பாள். சிவபெருமான் "யாம் தனியாக அமர்ந்திருக்க, விரும்புகிறோம்" என்று கூறி வந்து அமர்ந்ததாக அங்கு வசிக்கும் முன்னோர்கள் கூறுவர்.

தினமும், வியாபாரத்துக்கு செல்லும் முன், சிவன் கோவில் முன் நின்று, "ஓம் நமச்சிவாய!" என மார்பை தொட்டு கூறிவிட்டு செல்வது இவர் வழக்கம்.

"லிங்கத்துக்கும் நந்திக்கும் பூசை செய்து தொடங்கி நாள் முதல், என் வியாபாரம் நன்றாக வளர்ந்தது. ஆதலால். ஐந்து மணி நேரம் வரை எடுத்து நிதானமாக அபிஷேக/பூசை செய்து, அவருக்கு நிவேதனமும் கொடுத்துவிட்டு, பின்னர் நான் உணவருந்தி செல்லத் தொடங்கினேன். மிக நிம்மதியாக இருந்தது.

இரு வாரங்களுக்கு முன் அர்த்தஜாமத்தில், வீட்டில் உறங்க கிடக்கும் பொழுது, கொலுசு சத்தம், மாடிப்படி ஏறி வந்து பூஜை சன்னதி முன் நின்றது. வீட்டில் பெண்கள் யாரும் இல்லாததால், உடனேயே விளக்கை போட்டு பார்க்க அங்கு யாரும் இல்லை. ஒருவேளை, தெருவில் நடந்து சென்ற பசு மாட்டின் கழுத்தில் கட்டிய சிறு மணியின் ஓசையாக இருக்கும் என தீர்மானித்து, உறங்கச் சென்றேன்.

மறுநாளும், பூசை செய்து பின் உணவருந்தும் போது அம்மாவிடம் கூறினேன். இன்று கவனிக்கலாம் என்று தீர்மானித்தோம். 

அன்று இரவு அர்த்தஜாமத்தில், ஊரே உறங்கி கிடக்கும் பொழுது, தெருவின் கொடியிலிருந்து கொலுசு சத்தம் வந்தது. வீட்டின் முன் வந்து நின்று, மாடிப்படி ஏறி பூசை அறையில் வந்து அமர்ந்தது. பின்னர் நின்று போனது. அம்மா, அவசரமாக எழுந்து விளக்கை போட்டு பார்த்தாள். யாரும் அங்கு இல்லை. மாடியிலிருந்து கீழே தெருவை எட்டி பார்க்க, எதுவுமே இல்லை.

தொடர்ந்து எல்லா நாளும் இப்படி நடந்த பொழுது, ரொம்ப டென்ஷன் ஆன அம்மா " எங்கேனும் போய் ப்ரச்னம் வைத்து பார், என்ன வென்று தெரிந்து விடும்" என்றாள்.

மதியம் வியாபாரத்துக்காக போகும் பொழுது, ப்ரச்னம் பார்ப்பவரின் வீட்டு முன் நின்று பார்த்தால், அத்தனை கூட்டம். சரி! மாலை வருவோம் என்று திரும்பி நடக்கத் தொடங்க,

"என்ன சிவா! வந்து வெளியே நின்று விட்டு செல்கிறாய்? உள்ளே வர வேண்டியது தானே என்று ஒரு குரல் கேட்டு திரும்பினான்.

ப்ரச்னம் பார்ப்பவர், அத்தனை கூட்டத்தையும் விலக்கி கொண்டு, கைகூப்பியபடி நின்றார்.

உள்ளே வா! சிவா! என்று அவரே வழி அமைத்தார்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

4 comments:

  1. அகத்தீசாய நம நன்றி ஐயா 🙇‍♂️🙏

    ReplyDelete
  2. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete
  3. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை

    ஐயா... தங்களுக்கு சித்தனருள் பதிவிற்கு உதவி எதாவது தேவையானால் கூறுங்கள் உடல் நலம் பாத்துக்கோங்க

    நன்றாக தூங்கி எந்திரீங்க...
    ஏதேனும் தவறா இருந்தா மன்னிச்சுக்கோங்க

    நன்றி

    ReplyDelete
  4. Om Agatheesaya Namaha! Ayya, the Ivar series is too good. We are blessed to know these incidents.

    ReplyDelete