​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Saturday, 23 March 2024

சித்தன் அருள் - 1571 - இவர்!


உண்மையான குரு-சிஷ்ய உறவினால் கசிந்த அன்பில் இருமுறை சிஷ்யரை சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. இரண்டு ரூபாய் கடன் வைத்துவிட்டு சென்றதால், குருவுக்கு சமாதிநிலை கைவல்யமாகாமல் தள்ளிப்போய் கொண்டிருந்தது. காலம் கனிய காத்திருந்து, அந்த இரண்டு ரூபாய் கடனை அடைத்தபின், ஒரு மண்டலத்துக்குள், அவருடைய குரு வந்து சமாதிநிலையை கொடுத்து இந்த குருவை அழைத்து சென்றார்.

இந்த குரு அஷ்டமா சித்திகளையும் பெற்றவர். ஆனால் வெளிக்காட்டிக் கொள்ள மாட்டார். அவருக்கும், சிஷ்யருக்கும் இடையே, நல்ல ஒரு புரிதல் இருந்தது. சிஷ்யர் தினமும் இரவு 10 மணிக்கு தன் சைக்கிளில், குரு காத்திருக்கும் பாலத்தருகே வந்து, இருவரும் இரவு 12 மணிவரை பேசிக் கொண்டிருப்பார்கள். ஆன்மீகத்தில், அமைதியாய் இருந்து, நடப்பதை கவனித்து ஒருவர் தன்னை உயர்த்திக் கொள்வது எப்படி என அந்த நேரத்தில் கற்பித்துக் கொண்டிருந்தார்.

அன்றைய இரவு இவரை கண்டதும்,

"வாப்பா! நல்லா இரு" என ஆசிர்வதித்துவிட்டு, "இன்று ஒரு முக்கியமான வேலை இருக்கிறது. ஒரு வரை சந்திக்க வேண்டும், நீயும் வருகிறாயா?" என்றார்.

"எங்க சாமி போகணும்? வாங்க இந்த வண்டியில் அமருங்கள், நான் ஒட்டி செல்கிறேன்!" என்றார் சிஷ்யர்.

"அதெல்லாம் வேலைக்காவாது. நான் இப்பொழுது சென்று பார்க்க வேண்டியது மலைமேல் மகாலிங்கத்தை" என்றார்.

"என்ன சாமி சொல்றீங்க! அவரோ ஐம்பது கிலோமீட்டர் தூரத்தில் மலைமேல் உள்ளார். இப்பொழுது நடக்க தொடங்கி மலை ஏறினாலும் நாளை மதியம் ஆகிவிடும். எப்படி இன்று?" என்றார்.

"அது எனக்கு தெரியும்! நீ வருகிறாயா எனத்தான் கேட்டேன்!" என பொடிவைத்து பேசினார். தன் குரு கூறியதிலிருந்து இன்று எதோ அதிசயம் நடக்கப் போகிறது என உணர்ந்த சிஷ்யர் "சரி! ஏறுங்க, வண்டியில் போகலாம்! என்றார்.

"உன் வண்டியை அந்த மரத்தடியில் சாய்த்து வை. அங்கிருக்கும்! நாம் பேசிக்கொண்டே நடக்கலாம்!" என்றார் குருநாதர்.

நடு இரவை நோக்கி செல்கிற நேரம். நல்ல குளிர் வீசியது. இருவரும் நடக்கத் தொடங்கினார்கள். சிறிது தூரம் சென்றதும், குரு "நீ ஏன்ன பண்ணறே! உன் கையக்குடு. கண்ணை மூடிக்கோ. நான் உன்னை அழைத்து செல்கிறேன். உனக்கும் ஓய்வு கிடைத்து போல் இருக்கும். ஆனால், நான் சொல்லும் வரை எந்த காரணம் கொண்டும் கண்ணை திறக்க கூடாது" என்றார்.

"சரி!" என்றுவிட்டு அவர் கூறியபடி தன் வலது கையால் குருவின் இடது கரத்தை பிடித்தபடி நடக்கலானார்.

அந்த இரவில் நடப்பது அத்தனை சுகமாக இருந்தது. 

ஒரு நாழிகை கழிந்திருக்கும்!

சிஷ்யரின் கையை விடுவித்த குருநாதர்,

"சரி! கண்ணை திறந்து பார்" என்றார்.

அவர் கண்ணை அவரால் நம்ப முடியவில்லை. 

இவர் முன் ஒரு அகல் விளக்கு வெளிச்சத்தில், மஹாலிங்கம் சரிந்து அமர்ந்திருந்தார்.

"என்னப்பா! சௌக்கியமா?" என்று கேட்பதுபோல் சிஷ்யருக்குள் ஒலித்தது.

"போறுமா, நம்புகிறாயா?"என்ற குருவிடம் அடுத்த கேள்வியை கேட்பதற்குள்,

"நில்லு! நான் போய் சந்திக்க வேண்டிய நேரம் நெருங்கிவிட்டது. நீ இந்த பாறை மேல் அமர்ந்திரு! இரு சித்தர்கள் வெள்ளை புறா உருவத்தில் வந்து, அந்த ஆகாச கங்கையில் குளித்துவிட்டு மஹாலிங்கம் முன் அமர்ந்து த்யானம் செய்து, பூஜை செய்து விட்டு செல்வார்கள். சத்தம் போடாமல் அமர்ந்து அந்த காட்சியையும் பார்! நான் போய் சந்திக்க வேண்டியவர்களை சந்தித்து விட்டு வருகிறேன்!" என்று புறப்பட்டார். காற்றில் மறைந்து போனார்.

குரு சொல்லிவிட்டு சென்றது எல்லாம் நடந்தது. சற்று நேரத்தில் இரு வெள்ளை புறாக்கள் வந்து, ஆகாச கங்கையில் ஸ்நானம் செய்து, மஹாலிங்கம் முன் அமர்ந்து த்யானம் செய்து, பூஜையும் செய்துவிட்டு பறந்து போயின.

மஹாலிங்கம் முன் வந்தது முதல், நடந்த அத்தனையும் சிஷ்யருக்கு ஒரே குழப்பமாக இருந்தது. மறுநாள், மலை இறங்கும் பொழுது அத்தனை கேள்விகளையும் குருவிடம் சமர்ப்பித்தார்.

"இத்தனை நாட்கள் என்னுடன் இருந்து பல விஷயங்களை செய்த உன்னை, இறைவன் அருளால் நானே "ககன மார்கமாக" இங்கு அழைத்து வந்தேன். கண் விழித்திருந்தால் உடல் பதறிவிடும் என்பதால், மூடிக்கொள்ள சொன்னேன். உனக்கு அந்த இரு சித்தர்களும் ஒரு நாள் வந்து துணை புரிவார்கள். இத்தனை மட்டும் இப்போதைக்கு போதும்!" என முடித்துக் கொண்டார்.

இவை நடந்த இரு மாதத்தில், குருவானவர் சமாதியில் அமர்ந்தார்.

சிஷ்யரை சந்திக்கிற வாய்ப்பு அடியேனுக்கு கிடைத்த பொழுது, அவர் அனுமதியுடன், அவர் காலில் சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்காரம் செய்து, குரு பிடித்து அழைத்து சென்ற சிஷ்யரின் வலது கையை பற்றி, கண்களில் ஒற்றிக் கொண்டேன்.

சிஷ்யரும் இன்று இல்லை என்பதே உண்மை!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

3 comments:

  1. ஐயா, இது எல்லாம் படிக்கும் போது நாம் என்ன வாழ்க்கை நகரத்தில் வாழ்கிறோம் என்று யோசிக்க வைக்கிறது, இவர்களின் பாதையை நினைத்து பிரமிப்பாக இருக்கிறது, பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  2. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete