வணக்கம் அகத்தியர் அடியவர்களே!
அகத்தியப்பெருமான் தன் அடியவர்களுக்கு, அவ்வப்பொழுது, தனிப்பட்ட முறையிலோ அல்லது பொதுவாகவோ வாக்குரைக்கும் பொழுது சில உத்தரவுகளை பிறப்பித்து உண்டு. அப்படி சமீபத்தில், அனைவருக்கும் நீர், மோர் வழங்கவும் என்ற உத்தரவை சிரம் மேற்கொண்டு நிறைவேற்றும் பொழுது, அடியவருக்கு ஏற்பட்ட இனிய அனுபவத்தை இங்கு பகிர்ந்துள்ளார். அதை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.
ஓம் ஸ்ரீ லோபாமுத்ரா சமேத அகஸ்திய பெருமான் திருவடிகளே சரணம்🙏🙏🙏🙏
"சித்தன் அருள்" வலைத்தள முன்னாள், இந்நாள் நடத்துநர்கள் அனைவருக்கும் முதற்கண் என் வணக்கத்தையும், மனமார்ந்த நன்றிகளையும் சமர்ப்பிக்கின்றேன்.
உலகெங்கிலும் உள்ள அகத்தியர் அடியவர்கள் அகத்திய பெருமான் அருள் வாக்கினை தெரிந்து கொண்டு அவரருள் பெற்றுய்ய வழி வகுக்கும் இந்த வலைத்தளம் வழி நான் படித்த அகத்திய பெருமான் வாக்கினை செயல்படுத்தி அகத்திய பெருமான் கருணையால் நான் பெற்ற அனுபவத்தை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.
எனக்கு அகத்திய பெருமான் வாக்கினை "நாமும் செயல்படுத்த வேண்டும் " என்ற உத்வேகத்தை கொடுத்த ##மதுரை அகத்தியர் அடியவர் (தொழு நோயால் பாதிக்கப்பட்ட மக்களை பராமரித்து, அகத்திய பெருமான் அவரருகில் பேருந்தில் அமர்ந்து உரையாடிய அனுபவம்)
##மேல்மலையனூரில் நீர்மோர் கைங்கர்யம் செய்து அங்காள பரமேஸ்வரியின் அருள் பெற்ற சிறுவர் அடியார்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளை உரித்தாக்குகின்றேன்.
அகத்திய பெருமான் பொது வாக்கில் கூறிய படி நானும் என் கணவரும் எங்கள் குழந்தையும் 28/05/23 ஞாயிறு அன்று காலை 10.30 மணியளவில் சென்னையில் உள்ள திருநீர்மலை பெருமாள் கோவில் மலைப்பாதையில் அனுமன் சன்னதி முன்னர் நின்று கொண்டு நீர் மோர் கொடுத்து கொண்டிருந்தோம். ஒரு 4-5 பக்தர்களுக்கு கொடுத்த பின் மலையின் மீது இருந்து ஒரு கிராமத்து பெரியவர் (சுமார் 70 வயது இருக்கும்), மிக மிக எளிமையான தோற்றம், வெள்ளை வேட்டி, நெற்றியில் பளிச்சென்று திருமண், கையில் ஒரு துணிப்பை தோளில் ஒரு வெள்ளை துண்டுடன் படியில் இருந்து எங்களை பார்த்து கொண்டே ஒரு அர்த்த புஷ்டியோடு புன்னகைத்தபடி இறங்கி வந்தார். இறங்கி வந்தார் என்று சொல்வதை விட மிதந்து வந்தார் என்று சொன்னால் மிகையாகாது. அவர் இறங்கி வந்தது, எவ்வித பதற்றம் இல்லாமல் மிக தீர்க்கமாக இருந்தது. வானத்து விண்மீன்கள் போல் அவரின் கண்கள் பிரகாசமாக மிளிர்ந்தன. மலையில் இருந்து இறங்கி வந்த களைப்போ, அந்த வயதிற்கு உரிய படபடப்போ, ஒரு துளி வியர்வையோ இல்லை. மூச்சு வாங்கவில்லை அவருக்கு. மலை ஏறி இறங்கிய எவ்வித சிரமமும் அவரிடம் தென்படவில்லை .அவரது முகத்தில் ஒரு ஹாஸ்யமும், மந்தஹாசமும் தெரிந்தது. ஏதோ ஒரு வித்தியாசம் என்னால் உணர முடிந்தது. உடனே நான், "அப்பா வாங்க மோர் சாப்பிடுங்க" என்று ஒரு டம்ளர் மோரை கொடுத்தேன். அவர் உடனடியாக மோரை வாங்காமல், எங்கள் எதிரே வந்து நின்று தன் பையில் கைவிட்டு துழாவி ஒரு மஞ்சள் நிற சாமந்தி மலரை எடுத்தார். எங்களுக்கு இந்த பெரியவர் என்ன செய்ய போகிறார் என்று புரியவில்லை.அந்த சாமந்தி மலரை அவரது தலையில் லேசாக வைத்து விட்டு அவர்தம் கைகளை கூப்பி "குலந்தரும்" என்ற பாசுரத்தை முழுமையாக பாடி விட்டு அவர் தலையில் வைத்திருந்த சாமந்தி மலரை சட்டென்று எடுத்து என் கணவர் கையில் கொடுத்து அதை என்னிடம் கொடுக்குமாறு சமிக்ஞை செய்தார். அவர் சமிக்ஞை செய்த போது என் கணவரும் அந்த பெரியவரின் கட்டுப்பாட்டில் இருப்பது போல், உடனே மலரை பெற்று என் கையில் கொடுக்க நான் வாங்கி கண்களில் ஒற்றி கொண்டு உள்ளங்கையில் வைத்து கொண்டேன். திரும்ப மோர் டம்ளரை அவரிடம் நீட்ட அதை வாங்கி குடித்து கொண்டே என்னிடம், "நீ எந்த ஊரில் இருந்துமா வர?" என்று ஒரு குறும்பு புன்னகையுடன் கேட்டார். அவர் கேட்ட விதம், என்னை ஏற்கனவே நன்றாக தெரிந்த நபர் ஒருவர், ஒன்றுமே தெரியாதது போல் என்னிடம் கேட்டு விளையாடியது போல தோன்றியது. நான் பதிலளித்ததும் பின்னர் மோரை குடித்து கொண்டே என்னையும் என் கணவர் மற்றும் குழந்தையும் கூர்ந்து நோக்கிவிட்டு அதே தீர்க்கமான நிதானமான நடையுடன் ஆஞ்சநேயர் சன்னதியை வலம் வந்து கீழே இறங்கி சென்று விட்டார். இவை அனைத்தும் நடந்தது சில விநாடிகள் மட்டுமே. ஆனால் அந்த சில விநாடிகள் எங்களை தவிர சுற்றி இருந்த அனைவரும் உறைந்து/ ஸ்தம்பித்தது (freeze ஆகியது) போல் இருந்த இடத்தில் அப்படியே நின்று இருந்தனர். நடுவில் எவரும் வரவில்லை/குறுக்கிட வில்லை.
எங்களுக்கும் அந்த பெரியவருக்கும் நடுவில் இந்த நிகழ்ச்சிகள் நடந்து முடியும் வரை எப்படி அங்கிருந்தவர்கள் அமைதியாக உறைந்து போயினர். அந்த பெரியவர் நகர்ந்து செல்லவும் சுற்றி இருந்த நபர்கள் இயல்பாக பரபரப்பாக இயங்க தொடங்கினர். எனக்கு மட்டும் ஒரு சிறு சலனம் மனதில். அந்த பெரியவர் ஏன் மலரை தன் தலையில் சூடி மந்திரம் சொல்லி அதை எடுத்து என் கணவர் கைகளால் எனக்கு கொடுக்க செய்தார். இது வரை யாரும் இப்படி செய்ததில்லை எங்களுக்கு. அந்த பெரியவர் வந்து நின்றதும் நாங்கள் மூவரும் ஏதோ ஒரு சக்திக்கு கட்டுண்டு இயங்கியது போல் இருந்தது. எங்களின் சுய சிந்தனை செயலற்று போய் மனம் எவ்வித சலனமுமின்றி வெறுமையாக இருந்தது. அவர் நகர்ந்து போன சில நிமிடங்களில் இயல்பு நிலைக்கு வந்த பின் என் மனதில் ''அந்த பெரியவரின் கால்களில் நாங்கள் சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரிக்க வேண்டும்'' என்ற உந்துதல் வர அவரை தேடினேன். பக்தர்கள் நீர்மோர் வாங்க சூழ்ந்து நின்று கொண்டிருந்த நிலையில் அந்த பெரியவர் மலையின் கடைசி படியில் இறங்கி மறைந்து போனார். அவர் மலையில் இருந்து இறங்கி வந்த போதும், எங்கள் எதிரே நின்ற போதும், கீழே இறங்கி செல்லும் போதும் சரி அவருடைய திருவடிகள்(பாதங்கள்) மட்டும் எந்தன் கண்களுக்கு தெரியவில்லை.
நடந்தது இறை செயலே என்று என் உள்மனம் உணர்ந்த பின்னர் நாங்கள் நெக்குருகி போய் விட்டோம். அகத்திய பெருமான் கருணை அளவிடமுடியாத கருணை!!!!!!!!!!.
அகத்தியன் உத்தரவை நிறைவேற்ற வந்தாயா? நானே வருகிறேன்! பார்ப்போம், என மலை மேல் இருந்த பெருமாளே இறங்கி வந்தது போல் உணர்வு வந்தது.
இந்த வலைத்தள தொகுப்புகளை வாசிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் அன்னை லோபாமுத்ரையின் அருளாலும், தந்தை அகத்திய பெருமான் அருளாலும் இப்படி ஒரு இறை அனுபவம் கிடைக்க பெற வேண்டும் என்ற பிரார்த்தனையோடு விடை பெறுகிறேன்.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
ஓம் லோபமுத்திரா தாய் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏
ReplyDeleteஅனுபவம் அருளாக வந்துள்ளது எங்கள் அனைவருக்கும்.... நன்றிகள் ஐயா
Annai Lobamudra Sametha Sri Agathiyar Thiruvadigal Saranam
ReplyDeleteOm Sri LopaMudra Devi Sametha Sree Agastheeswaraya Namaha
ReplyDelete