​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Saturday, 13 May 2023

சித்தன் அருள் - 1337 - அகத்திய பெருமானின் பொதுவாக்கு - கேள்வி/பதில் 10/05/2023- 3


11.  அய்யனே! சிவராத்திரி அன்று சிவன் கோவிலில் அன்னதானம் செய்யலாமா? அப்படி செய்தால் பக்தர்களின் விரதத்தை முறித்ததாக ஆகாதா?

அறிந்து! அறிந்து! புஜண்டன் பேசுகின்றேன்! இவன் எதை என்று அறியாமல் கேட்கின்றான். ஆனால், பின் இல்லத்தில் வைத்து தன் குழந்தைகளுக்கு உணவு படைக்காமல், பின் நடுத்தெருவில் விடச்சொல், பார்ப்போம். என்ன கேள்விகள் இவை?

12. குருநாதருக்கும் அன்னைக்கும் அடியேனின் பணிவான வணக்கங்கள். ஜீவசமாதி அடைகின்ற சித்தர் பெருமக்களின் ஸ்தூல தேகம் மண்ணில் என்னவாக மாற்றமடையும்? குருவே சரணம்!

நிச்சயம்! இவன் தன் 108 இடங்களுக்கு, அதாவது ஜீவ சமாதிகளுக்கு சென்று வரச்சொல், நிச்சயம் அதன் பின் உரைக்கின்றேன்!

13. அய்யனே! மிக சரியாக கணிக்கப்பட்ட ஜாதகத்தில் கூறப்படும் பலன்கள், அந்தந்த வேளையில், அந்தந்த அளவில் நடக்காமல் போவதேன்?

இதனை ஏற்கனவே எடுத்து உரைத்துவிட்டேன்! முதலில், அக்கிரகங்களின் மந்திரங்களை ஒத்தச்சொல், பிறகு இது பற்றி விரிவாக எடுத்துரைக்கின்றேன். மாய உலகில் அனைத்தும் மாயங்கள் ஆகவே செயல்பாட்டுக்கு கொண்டிருக்கின்றது. உண்மை நிலையை புரிய வைக்கவே, யாங்கள் வந்து, தர்மத்தை நிலை நாட்டுவோம். அதர்மத்தை, ஒழிப்போம், ஒழிப்போம்.

14. அகதியப்பா, தர்மத்தோடும், ஒழுக்கத்தோடும் இந்த  கலியுகத்தில் மீதி  இருக்கும் நாட்களை  வாழ  உபயம்  கூறுங்கள் அப்பா!

கூறுகின்றேன்! எதை என்று, உணர்ந்து! உணர்ந்து! நிச்சயமாய், நமச்சிவாய மந்திரத்தை பின் ஓதிக்கொண்டே இருக்கச்சொல். நிச்சயம், அறிந்து! அறிந்து! அண்ணாமலையை நாடிக்கொண்டே இருக்கச்சொல். நிச்சயம், மாற்றங்கள் உண்டு, எளிதில். மற்றவை அங்கு உரைப்பேன், அண்ணாமலையிலே.

15. அய்யா! குங்குமம். திருநீர் கை தவறுவது, விளக்கு அணைவது, பூனை குறுக்கே செல்வது.. இது போன்ற அபசகுனங்களை நம்பலாமா?

புசுண்டன் பேசுகின்றேன்! இவனை திருமணம் செய்யாமல் இருக்கச்சொல்! வேலைக்கு செல்லாமல் இருக்கச்சொல். கைகளை, கால்களை கட்டி வைக்க சொல். மூடனே! முட்டாளே! உன்னை போன்ற மனிதர்களால் தான் உலகமே கெட்டுக்கொண்டு இருக்கின்றது.

16. அப்பா! மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் வயிற்று வலி குறைய அகத்தியர் ஐயா மருந்து கூற வேண்டுகிறேன்.

எது என்றும், அறிய! அறிய! முதலில் வருவது நெல்லிக்கனியே!  நிச்சயம், இதனை உண்டாலே போதுமானது. பின்பு, வாரத்திற்கு மும்முறை எலுமிச்சை சாற்றினை உட்கொள்வது நன்று. அது மட்டும் அல்லாமல், சோற்று கற்றாழை எனும் மூலிகையையும் உண்ணுவது அதி சிறப்பு! அது மட்டுமல்லாமல் முறுமுகை இலைகளை உட்கொண்டு, கரிசலாங் கண்ணி, பொன்னாங்கண்ணி மணத்தக்காளி கீரை, மாதுளம் இவையெல்லாம் சரியான முறையில் எடுத்து வந்தாலே, சரியாகிவிடும். ஆனால், இன்றைய மாய உலகில் அனைத்தும் கெட்டுவிட்டது! 

17. அப்பா, வேதபுரி என்று அழைக்கப்பட்ட  ஆன்மீக பூமி புதுவையில் 50க்கும் மேற்பட்ட சித்தர் ஜீவசமாதிகள் உள்ளது வில்வ நல்லூர் என்று அழைக்கப்பட்ட வில்லியனூரில் சிறிது சிறிது இடைவெளி விட்டு ஜீவசமாதிகள் நிறைய உள்ளது, ஓழ்க கரை என்று அழைக்கப்பட்ட உழவர் கரை என்னும் இடத்தில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் அங்கு உள்ள அகத்தீஸ்வரர் லிங்கம், அப்பா இந்த ஆன்மீக பூமியின் புனித தன்மை, தனி சிறப்பு  பற்றி தயை கூர்ந்து சொல்லுங்கள், நிறைய ஜீவசமாதிகள் ஒரே இடத்தில் இருப்பதற்கான காரணம் சிறப்பு பற்றி விளக்குங்கள்

வேதபுரி என்று சரியாக கேட்டாய்! எவை என்று அறிய, அறிய, நாயன்மார்கள் இது பற்றி நிறைய விளக்கியுள்ளார்கள். என்றாலும், பொறுத்திருந்தால், சித்தர்கள், இன்னும் விரிவாக இது பற்றி விளக்குவார்கள்.

18. அகத்தீச பகவானே, **ஆவாரை பூத்திருக்க சாவரை கண்டதுண்டோ** தயவு செய்து உண்மையான விளக்கம் அருள வேண்டுகிறேன்.

எதை என்று அறிய! அறிய! சாவும் மனிதனுக்கு, நிச்சயம் சந்தோஷங்களாம்.

19. ஐயா வணக்கம் 🙏 குளோனிங் முறையில் பெறப்படும்  விலங்குகள் மற்றும் குழந்தை களுக்கும் ஆன்மபதிவுகள் செயல் படுகின்றதா???? அவ் உயிர்களுக்கும் கர்மாவின் தாக்கம் உண்டா?

நிச்சயம் இல்லை. இதை யான் விஞ்சானபூர்வமாக விளக்கப்போகின்றேன், பொறுத்திருந்தால்.

20. குருநாதருக்கு வணக்கம் பெருச்சி ஆலயத்தில் (சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி அருகில் அமைந்துள்ளது) அமைந்துள்ள நவபாஷாண பைரவர் குறித்து குருநாதர் அருள வேண்டும்.

எதை என்றும் அறிய! அறிய! மீண்டும், மீண்டும் அங்கே செல்லச்சொல். சென்று, சென்று பார்க்கச்சொல், பைரவனை. பின்பு புரியும், எது உண்மை என்று. பின்பு உரைப்போம்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் பாதங்களில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்..... தொடரும்!

1 comment:

  1. Om Sri LopaMudra Devi Sametha Sree Agastheeswarya Namaha

    ReplyDelete